என் மலர்
திருவள்ளூர்
- திடீரென பிரதீப்குமாரிடம் தகராறில் ஈடுபட்டு சரமாரியாக கத்தியால் வெட்டினர்.
- கடம்பத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் வெண்மனம்புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரதீப்குமார். சென்னையில் உள்ள தனியார் வங்கியில் மேலாளராக உள்ளார். இவர் நண்பர்களுடன் ஸ்ரீதேவிகுப்பம் பெட்ரோல் பங்க் அருகில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் கும்பல் திடீரென பிரதீப்குமாரிடம் தகராறில் ஈடுபட்டு சரமாரியாக கத்தியால் வெட்டினர்.
பின்னர் மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதில் பலத்த காயம் அடைந்த பிரதீப்குமாருக்கு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கடம்பத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- இந்தியா கூட்டணி கட்சிகளைக் கண்டு மோடி, அமித்ஷா மிகுந்த அச்சத்திற்கும் பதற்றத்திற்கும் ஆளாகி உள்ளார்கள்.
- ஒரே நாடு ஒரே தேர்தலை கடுமையாக எதிர்க்கிறோம்.
பொன்னேரி:
சோழவரம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் 200 பேர் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டார். பின்னர் திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது:-
மத்திய அரசின் ஊழலை அம்பலப்படுத்தும் வகையில் இந்தியா கூட்டணி தலைவர்கள் நாடு தழுவிய பிரச்சாரத்தில் ஈடுபடுவார்கள். இந்தியா கூட்டணியில் ஒருங்கிணைப்பு குழு, பரப்புரை குழு, சமூக ஊடகப் பணிக்குழு. ஊடகப் பணிக்குழு. மற்றும் ஆய்வுக் குழு என 5 பணி குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் பரப்புரை குழுவில் விடுதலை சிறுத்தை கட்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இந்தியா கூட்டணி கட்சிகளைக் கண்டு மோடி, அமித்ஷா மிகுந்த அச்சத்திற்கும் பதற்றத்திற்கும் ஆளாகி உள்ளார்கள்.
நடைபெற உள்ள பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் கேள்வி நேரமில்லை. ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கூடிய வகையில் புதிய சட்ட மசோதாவை கொண்டு வரலாம் என்று எதிர்பார்ப்பு உள்ளது. இது சர்வாதிகாரத்தை நோக்கி தேசம் செல்லும் வகையில் உள்ளது. இது மாநில உரிமைகளை பறிப்பதாக அமையும். அதிபர் ஆட்சி முறைக்கு வழிவகுக்கும்.
முன்கூட்டியே பாராளுமன்ற தேர்தலை நடத்த பா.ஜ.க.விற்கு வியூகம் உள்ளது. டிசம்பர் அல்லது ஜனவரியில் தேர்தல் வந்தால் அதனை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து இந்தியா கூட்டணி கட்சிகள் தீவிரமாக ஆலோசித்து வருகிறது.
இந்தியா கூட்டணிக்கு சீமான் ஆதரவு தெரிவித்தால் மகிழ்ச்சியாக வரவேற்போம். ஒரே நாடு ஒரே தேர்தலை கடுமையாக எதிர்க்கிறோம். பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் இடங்கள் குறித்து கூட்டணியில் முடிவு செய்த பிறகு அறிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கடந்த ஆண்டு டெண்டர் கோரி இருப்பதாக சொல்லப்படுகிறது.
- ஒதுக்கப்பட்ட இடத்தை, பொதுமக்கள் பயன்பெறும் வகையில் விளையாட்டு திடலாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்து உள்ளது.
திருநின்றவூர்:
ஆவடியில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு 116 ஏக்கர் பரப்பளவில் கடந்த 1993-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இங்கு சுமார் 6 ஆயிரத் துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள்.
இந்த பகுதியில் உள்ள காலிஇடத்தில் பஸ்நிலையம் அமைக்க 1.54 ஏக்கர் நிலம், நூலத்துக்காக 3625 சதுர அடி நிலம், ஆஸ்பத்திரி கட்ட 4368 சதுர அடி நிலம், தபால் நிலையம் அமைக்க 3675 சதுர அடி நிலம் ஒதுக்கப்பட்டது. இந்நிலையில், மக்கள் நலத் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட இந்த இடத்தில் முதல்கட்டமாக 6920 சதுர மீட்டர் இடத்தில் 43 மனைகளும் 2 கடைகளும் உருவாக்கி விற்பனை செய்ய தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக கடந்த ஆண்டு டெண்டர் கோரி இருப்பதாக சொல்லப்படுகிறது. இது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு வீட்டு வசதி நிர்வாகம் பொது பயன்பாட்டுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை விற்பனை செய்ய முயல்வதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். இதற்காக ஒதுக்கப்பட்ட இடத்தை, பொதுமக்கள் பயன்பெறும் வகையில் விளையாட்டு திடலாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்து உள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, வீட்டுவசதி வாரிய இடத்தினை விற்பனை செய்ய முயற்சி நடக்கிறது. இதனை கண்டித்து பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் எந்த நடவடிக்கையையும் எடுக்கப்படவில்லை. இது குறித்து பல்வேறு புகார்கள் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்கு சென்று உள்ளது. பஸ்நிலையம், நூலகம், தபால் நிலையம், ஆஸ்பத்திரி அமைக்க ஒதுக்கப்பட்ட இடத்தை இதுவரை அந்தந்த துறையிடம் ஒப்படைக்கவில்லை. இது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது என்றனர்.
- இன்று காலை சிலா ஸ்தாபனம், அஷ்டபந்தனம், கோ பூஜை, கோ தர்ஷணம், சர்வ தரிசனம் உள்ளிட்டவை நடைபெற்றது.
- மூலவருக்கு பால், தயிர், பன்னீர், இளநீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணி, பஜார் வீதியில், அத்திக்குளம் பகுதியில் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மல்லிகார்ஜுன சுவாமி திருக்கோவில் உள்ளது. சிதிலமடைந்து காணப்பட்ட இக்கோவிலை பக்தர்கள் புனரமைத்து இன்று காலை 10 மணிக்கு மகா கும்பாபிஷேகம் செய்தனர்.
இதை முன்னிட்டு சனிக்கிழமை மாலை புண்யாவசனம், வாஸ்து பூஜை, வாஸ்து ஹோமம், பிரவேச பலி பூஜை உள்ளிட்டவை நடைபெற்றது.
ஞாயிற்றுக்கிழமை காலை அங்குரார்ப்பணம், யாகசாலை பூஜை, கலச ஸ்தாபனம், முதல் கால பூஜை உள்ளிட்டவை நடைபெற்றது. மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை இரண்டாம் கால பூஜை, சுவாமி கரிக்கோலம், சயனவாசம் உள்ளிட்டவை நடைபெற்றது.
இன்று காலை சிலா ஸ்தாபனம், அஷ்டபந்தனம், கோ பூஜை, கோ தர்ஷணம், சர்வ தரிசனம் உள்ளிட்டவை நடைபெற்றது. இதன் பின்னர், மூன்றாம் கால பூஜை, மகா பூர்ணாகுதி உள்ளிட்டவை நடைபெற்றது. இதன் பின்னர், மங்கள வாத்தியம் முழங்க புனித நீர் அடங்கிய கலசங்களை சிவாச்சாரியார்கள் ஊர்வலமாக கொண்டு வந்தனர்.
காலை 10 மணிக்கு விமான கோபுரம், மூலவர் உள்ளிட்டவைகளுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் செய்தனர். இதன் பின்னர், மூலவருக்கு பால், தயிர், பன்னீர், இளநீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
இதன் பின்னர், மகா அலங்காரம், மகாதீப ஆராதனை நடைபெற்றது. திருக்கோவிலுக்கு வந்திருந்த அனைத்து பக்தர்களுக்கும் கோவில் அருகே அன்னதான பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழா குழுவினர்களும், பக்தர்களும் சிறப்பாக செய்திருந்தனர்.
- கோவில் பிரகாரத்தை சுற்றிலும் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கருங்கற்கள் தரை அமைக்கப்பட்டுள்ளது.
- வெள்ளீஸ்வரர் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள உப சன்னதிகளில் உள்ள கலசங்களிலும் புனித நீர் ஊற்றப்பட்டது.
பூந்தமல்லி:
மாங்காட்டில் உள்ள காமாட்சி அம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலின் உப கோவிலான வெள்ளீஸ்வரர் கோவிலும் இதே பகுதியில் அமைந்துள்ளது. தொண்டை மண்டல நவகிரக தலங்களில் சுக்கிரன் பரிகார தலமாக இந்த கோவில் உள்ளது. கோவிலில் கும்பாபிஷேக விழா நடத்த முடிவு செய்யப்பட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவிலில் பாலாலயம் நடைபெற்றது.
கோவில் பிரகாரத்தை சுற்றிலும் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கருங்கற்கள் தரை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கோவிலில் உள்ள அனைத்து விமானங்களும் பரிவார சன்னதிகளும் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் புதிய வண்ணம் தீட்டப்பட்டு திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து இன்று கும்பாபிஷேக விழா நடந்த முடிவு செய்யப்பட்டு கோவில் வளாகத்தில் யாகசாலைகள் அமைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. கும்பாபிஷேகத்தையொட்டி இன்று அதிகாலை நான்கு கால பூஜைகளுடன் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் கலசங்களில் புனித நீர் எடுத்து வரப்பட்டு கோவில் கோபுரத்தின் மேல் விமானத்தின் மீது அமைக்கப்பட்டிருந்த கலசத்தின் மீது ஊற்றி கும்பாபிஷேக விழா நடந்தது. மேலும் வெள்ளீஸ்வரர் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள உப சன்னதிகளில் உள்ள கலசங்களிலும் புனித நீர் ஊற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவள்ளூர் ஜெயாநகர் பகுதியில் அமைந்துள்ள மகா வல்லப கணபதி கோவிலில் கும்பாபிஷேகம் நடை பெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்ட னர். தொடர்ந்து விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபா ராதனை காண்பிக்கப்பட்டது.
- கூட்டத்துக்கு பூந்தமல்லி ஒன்றியக்குழு தலைவர் பூவை எம்.ஜெயக்குமார் தலைமை தாங்கினார்.
- பல்வேறு அடிப்படை பணிகளை நிறைவேற்றுவது குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பூந்தமல்லி:
பூந்தமல்லி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவகத்தில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு பூந்தமல்லி ஒன்றியக்குழு தலைவர் பூவை எம்.ஜெயக்குமார் தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு துணை தலைவர் பரமேஸ்வரி கந்தன், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆர்.ஸ்டாலின், வட்டார வளர்ச்சி அலுவலர் சீ.காந்திமதி நாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் வழக்கறிஞர் என்.பி.மாரிமுத்து, வி.கன்னியப்பன், பி.டில்லிகுமார், கே.சுரேஷ்குமார், யமுனா ரமேஷ், உமாமகேஸ்வரி சங்கர், பிரியா செல்வம், ஜெயஸ்ரீ லோகநாதன், பத்மாவதி கண்ணன், சத்ய பிரியா முரளி கிருஷ்ணன், சிவகாமி சுரேஷ், கே.ஜி.டி.கௌதமன், எம்.கண்ணன் மற்றும் அலு வலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பூந்தமல்லி ஒன்றியத்துக்குட்பட்ட நசரத்பேட்டை, அகரமேல், காட்டுப்பாக்கம், செம்பரம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளில் ரூ.1 கோடியே 65 லட்சம் மதிப்பீட்டில் மழை நீர் கால்வாய், சிமெண்ட் சாலைகள், தார் சாலைகள் அமைப்பது. பழுதடைந்த அரசு கட்டடங்களை சீரமைப்பது என்பது உள்ளிட்ட பல்வேறு அடிப்படை பணிகளை நிறைவேற்றுவது குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- ஆகாஷ் கோவளத்தில் உள்ள தனியார் ஓட்டலில் பணிபுரிந்து வந்ததும், சஞ்சய் குறும்படங்களை இயக்கியிருப்பதும் தெரிந்தது.
- குன்றத்தூர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யவும், கஞ்சாவை புகைக்கவும் தனியாக ஒரு அறையை வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தது தெரியவந்தது.
பூந்தமல்லி:
குன்றத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் சந்துரு, சப்-இன்ஸ்பெக்டர் அந்தோணி சகாயபாரத் தலைமையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகத்திற்கிடமாக வந்த 3 வாலிபர்களை பிடித்து விசாரித்தனர். அவர்கள் மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த ஆகாஷ்(24), சஞ்சீவ்(25), சஞ்சய்(24), என்பதும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதும் தெரிந்தது.
இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
இவர்களில் ஆகாஷ் கோவளத்தில் உள்ள தனியார் ஓட்டலில் பணிபுரிந்து வந்ததும், சஞ்சய் குறும்படங்களை இயக்கியிருப்பதும் தெரிந்தது. நண்பர்களான 3 பேரும் கல்லூரியில் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு அதிகம் பணம் சம்பாதிக்கும் ஆசையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு உள்ளனர். குன்றத்தூர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யவும், கஞ்சாவை புகைக்கவும் தனியாக ஒரு அறையை வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தது தெரியவந்தது.
அவர்கள் வடமாநிலங்களில் இருந்து கஞ்சாவை மொத்தமாக வாங்கி வந்து இந்த பகுதியில் உள்ள கல்லூரி மாணவர்கள் மற்றும் பல்வேறு நட்சத்திர ஓட்டல்களில் விற்பனை செய்து வந்துள்ளனர். அவர்களிடம் இருந்த 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கஞ்சா விற்பனையில் அவர்களுடன் தொடர்புடையவர்கள் குறித்து போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர்.
- சில இடங்களில் இடி, மின்னலுடன் மழை வெளுத்து வாங்கியது.
- திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை கொட்டியது.
பூந்தமல்லி:
வடதமிழகம் மற்றும் குமரிக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகம் முழுவதும் விட்டு, விட்டு மழை பெய்து வருகிறது.
நேற்று மாலை 5 மணியளவில் திடீரென சென்னை மற்றும் புறநகர் பகுதியில் பலத்த மழை கொட்டியது. சில இடங்களில் இடி, மின்னலுடன் மழை வெளுத்து வாங்கியது. இதனால் தாழ்வான இடங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி தேங்கியது.
பூந்தமல்லி பகுதியில் சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக கன மழை கொட்டி தீர்த்தது. தாழ்வான இடமான அகரமேல் ஊராட்சிக்கு உட்பட்ட சன்னதி தெரு, கோபால் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தண்ணீர் செல்ல வழியில்லாததால் சாலையில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டது.
குறிப்பாக சன்னதி தெருவில் சுமார் 50 மீட்டர் தூரத்துக்கு முழங்கால் அளவு தேங்கிய மழைநீரில் செல்ல அப்பகுதி மக்கள் கடுமையாக அவதி அடைந்தனர். அப்பகுதியில் மழை நீர் தேங்காதவாறும், எரியாத மின் விளக்கை சரி செய்ய வேண்டும் என்றும் அப்பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பூந்தமல்லியில் அதிகபட்சமாக 11 செ.மீட்டர் மழை பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை கொட்டியது. ஆர்.கே.பேட்டை, ஜமீன்கொரட்டூர், திருவாலங்காடு, திருத்தணி, பூண்டி, தாமரைப்பாக்கம், திருவள்ளூர், ஊத்துக்கோட்டை, ஆவடி உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை கொட்டியது.
மாவட்டத்தில் பெய்த மழை அளவு(மி.மீட்டரில் வருமாறு:-
ஆர்.கே.பேட்டை- 95
திருத்தணி - 41
திருவாலங்காடு - 40
ஊத்துக்கோட்டை - 33
ஆவடி -29
திருவள்ளூர் -27
பள்ளிப்பட்டு -18
ஜமீன் கொரட்டூர் -17
தாமரைப்பாக்கம் - 13
பூண்டி - 8
சோழவரம் - 3.
- காலை 11 மணிக்கு ஆனந்தன் குருக்கள் தலைமையில் திருக்கல்யான நிகழ்ச்சி விமரிசையாக நடந்தது.
- திருமண தடை நீங்க ஏராளமானோர் திருக்கல்யாண உற்சவத்தில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.s
பெரியபாளையம்:
பெரியபாளையம் அருகே சின்னம்பேடு என்று அழைக்கப்படும் சிறுவாபுரியில் புகழ்பெற்ற ஸ்ரீபாலசுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள். செவ்வாய்க் கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் இருக்கும்.
இந்நிலையில் சென்னை அண்ணாமலையார் ஆன்மீக வழிபாட்டு குழு சார்பில் சிறுவாபுரி முருகன் கோவிலில் இன்று வள்ளி மணவாள பெருமானுக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதையொட்டி இன்று காலை 6 மணிக்கு விநாயகர், ஆதிமூலவர், அண்ணாமலையார், உண்ணாமலை அம்மனுக்கு அபிஷேகமும், பின்னர் மூலவருக்கு அபிஷேகமும், அலங்காரமும் நடைபெற்றது.
இயைடுத்து காலை 11 மணிக்கு ஆனந்தன் குருக்கள் தலைமையில் திருக்கல்யான நிகழ்ச்சி விமரிசையாக நடந்தது. இதில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பல்லாயிரக்காணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதனால் கோவில் வளாகம் முழுவதும் பக்தர்கள் கூட்டமாக காணப்பட்டது. அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். திருமண தடை நீங்க ஏராளமானோர் திருக்கல்யாண உற்சவத்தில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதைத்தொடர்ந்து மதியம் 12 மணிக்கு சுவாமி பிரகார புறப்பாடு நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் செந்தில்குமார் மற்றும் வழிபாட்டு குழுவினர் செய்து இருந்தனர்.
- வட சென்னை பகுதியில் இருந்து பட்டாபிராம் பகுதிக்கு செல்லும் மக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள்.
- பஸ்களின் சேவையும் குறைக்கப்பட்டு பயணிகள் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள்.
ஆவடி பகுதியில் மாநகர பேருந்து சேவை பாதியாக குறைக்கப்பட்டிருப்பதால் கடும் சிரமத்தை சந்தித்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
சென்னை மாநகரத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆவடி, பட்டாபிராம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வந்த பஸ் போக்குவரத்து பாதியாக குறைக்கப்பட்டு உள்ளதாக குற்றம்சாட்டி உள்ளனர்.
பயணிகள் இதனால் பஸ்சை பிடித்து வீட்டுக்கு போய் சேர்வதற்குள் போதும் போதும் என்றாகி விடுகிறது என்றும் புகார் தெரிவித்துள்னர். பட்டாபிராமில் இருந்து பூந்தமல்லி வரை இயக்கப்படும் 54 சி பேருந்தை அப்பகுதி மக்கள் பலர் அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள்.
இந்த பேருந்தை மக்கள் முழுமையாக பயன்படுத்தி வந்த போதிலும் இதன் சேவை குறைக்கப்பட்டு உள்ளதாக குற்றம் சாட்டும் பயணிகள் இதுபோன்று மேலும் பல பஸ்களையும் பட்டியலிடுகிறார்கள்.
சென்னை கோயம்பேட்டில் இருந்து பந்தூர் செல்லும் '153 பி' பஸ்கள் சேவையும் குறைக்கப்பட்டு உள்ளதால் இந்த வழித்தடத்தில் பயணிக்கும் பொது மக்களும் கடும் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள்.
121 இ எண் கொண்ட பஸ் எம்.கே.பி. நகரில் இருந்து பட்டாபிராமுக்கு இயக்கப்பட்டு வருகிறது. இதன் சேவையும் குறைக்கப்பட்டுள்ளதால் வட சென்னை பகுதியில் இருந்து பட்டாபிராம் பகுதிக்கு செல்லும் மக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள்.
இதே போன்று திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் இருந்து 536 எண் கொண்ட பேருந்து பட்டாபிராமுக்கு இயக்கப்பட்டு வருகிறது. இதே போன்று 65 பி எண் பேருந்து அம்பத்தூரில் இருந்து ஆவடிக்கு இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ்களின் சேவையும் குறைக்கப்பட்டு பயணிகள் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள்.
இப்படி வழித் தடங்களில் பஸ்கள் குறைக்கப்பட்டதால் அதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ஷேர் ஆட்டோ டிரைவர்கள் இந்த வழித் தடங்களில் கூடுதல் கட்டணங்களுடன் அதிக அளவிலான ஷேர் ஆட்டோக்களை பயன்படுத்தி வருகிறார்கள்.
எனவே மேற்கண்ட வழித்தடங்களில் தேவையான அளவு பஸ்களை சீரான இடைவெளியில் இயக்க வேண்டும் என்று ஆவடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- நமக்கும் அ.தி.மு.க.வுக்கும் தொடர்பு இல்லைன்னு நாமே ஒதுக்கியதுபோல் ஆகிவிடும்.
- அடுத்து என்ன செய்யலாம் என்று ஆலோசித்தபோது தனிக்கட்சி தொடங்கலாம் என்று சிலர் ஐடியா கொடுத்து இருக்கிறார்கள்.
ஓ.பன்னீர்செல்வம் நம்பி இருந்த கடைசி ஆயுதமும் கைநழுவி போனது. அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான வழக்கையும் ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துவிட்டது. இதன்மூலம் இனி அ.தி.மு.க. என்ற பேச்சுக்கே வாய்ப்பில்லாமல் ஆகிவிட்டது.
அடுத்து என்ன செய்யலாம் என்று ஆலோசித்தபோது தனிக்கட்சி தொடங்கலாம் என்று சிலர் ஐடியா கொடுத்து இருக்கிறார்கள்.
தனிக்கட்சியா? அப்படி ஆரம்பித்தால் நமக்கும் அ.தி.மு.க.வுக்கும் தொடர்பு இல்லைன்னு நாமே ஒதுக்கியதுபோல் ஆகிவிடும். இந்த மாதிரி தெருவுக்கு போகும் வழிகளை சொல்லாதீங்க... என்று விரக்தியுடன் கூறி இருக்கிறார்.
- திருவள்ளூர் தீயணைப்புத் துறையினர் கடைக்குள் கொழுந்து விட்டு எழுந்திருந்த தீயை அணைத்தனர்.
- தீ விபத்தால் கடைக்குள் இருந்த சுமார் 30 லட்சம் மதிப்பிலான சைக்கிள்கள் தீயில் எரிந்து நாசமானது.
திருவள்ளூர்:
திருவள்ளூர் அடுத்த என்.ஜி.ஓ. காலனி பகுதியைச் சேர்ந்தவர் லிங்கேஸ்வரன் (45). இவர் திருவள்ளூர் ஜே.என். சாலையில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக சைக்கிள் கடை நடத்தி வருகிறார். இந்த சைக்கிள் கடையில் பிரபல நிறுவனங்களின் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பயன்படுத்தும் சுமார் 30 லட்சத்துக்கு மேலான புதிய சைக்கிள்கள் மற்றும் உதிரி பாகங்கள் இருந்ததாக கூறப்படுகிறது.
கடையின் உரிமையாளர் லிங்கேஸ்வரன் வழக்கம்போல் நேற்று இரவு சுமார் 9 மணி அளவில் சைக்கிள் கடையை பூட்டிக்கொண்டு வீட்டுக்கு சென்று விட்டார்.
இந்த நிலையில் சுமார் 12 மணி அளவில் திடீரென கடைக்குள் இருந்து புகை வருவதை கண்ட அவ்வழியாக சென்ற பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்த திருவள்ளூர் தீயணைப்புத் துறையினர் கடைக்குள் கொழுந்து விட்டு எழுந்திருந்த தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தால் கடைக்குள் இருந்த சுமார் 30 லட்சம் மதிப்பிலான சைக்கிள்கள் தீயில் எரிந்து நாசமானது.
இதுகுறித்து திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து தீ விபத்துக்கு மின் கசிவு காரணமா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






