என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பூந்தமல்லியில் 11 செ.மீட்டர் மழை கொட்டித் தீர்த்தது
- சில இடங்களில் இடி, மின்னலுடன் மழை வெளுத்து வாங்கியது.
- திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை கொட்டியது.
பூந்தமல்லி:
வடதமிழகம் மற்றும் குமரிக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகம் முழுவதும் விட்டு, விட்டு மழை பெய்து வருகிறது.
நேற்று மாலை 5 மணியளவில் திடீரென சென்னை மற்றும் புறநகர் பகுதியில் பலத்த மழை கொட்டியது. சில இடங்களில் இடி, மின்னலுடன் மழை வெளுத்து வாங்கியது. இதனால் தாழ்வான இடங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி தேங்கியது.
பூந்தமல்லி பகுதியில் சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக கன மழை கொட்டி தீர்த்தது. தாழ்வான இடமான அகரமேல் ஊராட்சிக்கு உட்பட்ட சன்னதி தெரு, கோபால் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தண்ணீர் செல்ல வழியில்லாததால் சாலையில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டது.
குறிப்பாக சன்னதி தெருவில் சுமார் 50 மீட்டர் தூரத்துக்கு முழங்கால் அளவு தேங்கிய மழைநீரில் செல்ல அப்பகுதி மக்கள் கடுமையாக அவதி அடைந்தனர். அப்பகுதியில் மழை நீர் தேங்காதவாறும், எரியாத மின் விளக்கை சரி செய்ய வேண்டும் என்றும் அப்பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பூந்தமல்லியில் அதிகபட்சமாக 11 செ.மீட்டர் மழை பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை கொட்டியது. ஆர்.கே.பேட்டை, ஜமீன்கொரட்டூர், திருவாலங்காடு, திருத்தணி, பூண்டி, தாமரைப்பாக்கம், திருவள்ளூர், ஊத்துக்கோட்டை, ஆவடி உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை கொட்டியது.
மாவட்டத்தில் பெய்த மழை அளவு(மி.மீட்டரில் வருமாறு:-
ஆர்.கே.பேட்டை- 95
திருத்தணி - 41
திருவாலங்காடு - 40
ஊத்துக்கோட்டை - 33
ஆவடி -29
திருவள்ளூர் -27
பள்ளிப்பட்டு -18
ஜமீன் கொரட்டூர் -17
தாமரைப்பாக்கம் - 13
பூண்டி - 8
சோழவரம் - 3.






