என் மலர்
திருவள்ளூர்
- இறந்த ஆடுகளின் கழுத்து பகுதியில் மர்ம விலங்கு கடித்து இருந்தது.
- சிறுத்தைப்புலி நடமாட்டத்துக்கு வனத்துறையினர் மறுப்பு தெரிவித்து உள்ளனர்.
திருவள்ளூர்:
பூண்டி ஏரிக்கரை அருகே காட்டுப்பகுதி உள்ளது. இப்பகுதியில் உள்ள மோவூர் கிராமத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். பெரும்பாலானோர் வீடுகளில் ஆடு, மாடுகள் வளர்த்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று இரவு கிராமத்தைச் சேர்ந்த ரஜினி என்வரின் 8 ஆடுகளை மர்ம விலங்கு கடித்து கொன்றுவிட்டு சென்று விட்டது. இன்று காலை ஆடுகள் இறந்து கிடப்பதை கண்டு ரஜினி அதிர்ச்சி அடைந்தார்.
இறந்த ஆடுகளின் கழுத்து பகுதியில் மர்ம விலங்கு கடித்து இருந்தது. எனவே ஆடுகளை சிறுத்தைப்புலி கடித்து கொன்றுவிட்டு சென்றதாக அப்பகுதியில் தகவல் பரவியது. இதனால் கிராம மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டு உள்ளது. தகவல் அறிந்ததும் வன அலுவலர் விஜயசாரதி தலைமையிலான வனத்துறை அதிகாரிகள் மற்றும் பீமன் தோப்பு கால்நடை மருத்துவர் சரவணகுமார், கால்நடை ஆய்வாளர் பாபு ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்து கிடந்த ஆடுகளின் உடல்களை ஆய்வு செய்தனர்.
சிறுத்தைப்புலி நடமாட்டத்துக்கு வனத்துறையினர் மறுப்பு தெரிவித்து உள்ளனர். எனினும் சிறுத்தைப்புலி நடமாட்டம் குறித்து வனத்துறை ஊழியர்கள் காட்டுப்பகுதிக்குள் சென்று கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர். சிறுத்தைப்புலி கால் தடம் பதிவாகி உள்ளதா என்று பார்வையிட்டு வருகின்றனர். பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். எனினும் மோவூர் கிராம மக்கள் சிறுத்தை புலி பீதியால் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.
- பொன்னேரி, பாடியநல்லூர், திருவொற்றியூர் பணிமனைகளில் இருந்து பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
- பஸ்சுக்காக காத்திருந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் ஆத்திரம் அடைந்தனர்.
பொன்னேரி:
பழவேற்காடு பகுதியை சுற்றிலும் 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இப்பகுதி மக்கள் பெரும்பாலும் அத்தியாவசிய பணி மற்றும் பல்வேறு வேலைகளுக்கு மெதூர், பழவேற்காடு, திருப்பாலைவனம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வது வழக்கம். இதற்கு பெரும்பாலும் பொதுமக்கள் அரசு பஸ்களை பயன்படுத்தி வருகிறார்கள். தினமும் பழவேற்காடை சுற்றி உள்ள கிராமங்களை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் உள்பட சுமார் ஆயிரத்துக்கும் மேற்படா்டோர் பஸ்களில் பயணம் செய்து வருகின்றனர்.
பொன்னேரி, பாடியநல்லூர், திருவொற்றியூர் பணிமனைகளில் இருந்து பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பொன்னேரியில் இருந்து பழவேற்காடு வரை செல்லும் மாநகர பஸ் (எண்558பி) தினமும் இரவு 8 மணிக்கு இயக்கப்பட்டு வந்தது. கடந்த சில நாட்களாக இந்த பஸ் சரிவர இயக்கப்படவில்லை. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்து வந்தனர்.
நேற்று இரவும் 8 மணிக்கு வரவேண்டிய பஸ் இரவு 9 மணியளவில் தாமதமாக வந்தது. இதனால் பஸ்சுக்காக காத்திருந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் ஆத்திரம் அடைந்தனர். அவர்கள் பஸ்சை மறித்து திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் பொன்னேரி பஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்ததும் விரைந்து வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் பஸ்சை இயக்க ஏற்பாடு செய்தனர். இதைத்தொடர்ந்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.
- ஆவின் ஆரஞ்சு பால் பாக்கெட்டில் இன்றைய தேதி 5 என இல்லாமல் 4-ந் தேதி அச்சிடப்பட்டு இருந்தது.
- தவறுக்கு காரணமான ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
திருவள்ளூர் மாவட்டம் காக்களூர் ஆவின் பால் பண்ணையில் இருந்து இன்று வினியோகம் செய்த ஆரஞ்சு பால் பாக்கெட்டில் நேற்றைய தேதி இருந்ததால் சலசலப்பு ஏற்பட்டது.
பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, பழவேற்காடு ஆகிய பகுதிகளில் வினியோகம் செய்த ஆவின் ஆரஞ்சு பால் பாக்கெட்டில் இன்றைய தேதி 5 என இல்லாமல் 4-ந் தேதி அச்சிடப்பட்டு இருந்தது. இதனால் பழைய பால் பாக்கெட்டை விற்பனை செய்ததாக முகவர்கள், விற்பனையாளர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
பால் பாக்கெட்டை வாங்கிய சிலர் திருப்பி கொடுத்துவிட்டு சென்றனர். இதுபற்றி காக்களூர் பால் பண்ணை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஆய்வு செய்ததில் 4-ந் தேதி என தவறுதலாக அச்சடித்து வினியோகம் செய்துள்ளது தெரியவந்தது.
இதுகுறித்து ஆவின் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
ஆவின் ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டில் இன்றைய தேதியை எந்திரத்தில் மாற்றம் செய்யாமல் நேற்றைய தேதியில் அச்சிடப்பட்டு வினியோகம் செய்யப்பட்டுள்ளது. அவை பழைய பால் அல்ல. இன்று வழங்கக்கூடிய பால் தான் ஆனால் தேதி தவறுதலாக அச்சிடப்பட்டுள்ளது. ஒரு எந்திரத்தில் தான் இந்த தவறு நடந்துள்ளது. 400 லிட்டர் பால் தவறுதலாக அச்சிடப் பட்டு வழங்கப்பட்டுள்ளது. இந்த தவறுக்கு காரணமான ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- தனியார் பஸ் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
- பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே விஷ்வா இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
ஊத்துக்கோட்டை அடுத்த அம்மாம்பாக்கம், பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் துரைதாஸ். இவரது மகன் விஷ்வா (வயது20). இவருக்கும் கூனிபாளையத்தைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் அவர்களுக்கு திருமணம் நடைபெற இருந்தது. திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட இளம்பெண் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள தண்டலம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.
இந்த நிலையில் விஷ்வா இன்று காலை தனது மோட்டார் சைக்கிளில் மாணவியை ஏற்றிக்கொண்டு திருவள்ளூர் பஸ் நிலையம் நோக்கி வந்து கொண்டு இருந்தார். ஒதப்பையில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே திருவள்ளூர் - ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையில் வந்தபோது எதிரே வந்த தனியார் பஸ் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் விஷ்வாவும், மாணவியும் படுகாயம் அடைந்தனர். அவர்களை அவ்வழியே சென்றவர்கள் மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே விஷ்வா இறந்துவிட்டதாக தெரிவித்தனர். உடன் வந்த மாணவிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- மாணவர் ஒருவர் கடந்த 10 நாட்களாக பள்ளிக்கு வரவில்லை. தேர்வும் எழுதாமல் இருந்தார்.
- தேர்வு அறையில் ஆசிரியரை மாணவர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவொற்றியூர்:
திருவொற்றியூர், விம்கோ நகர் பகுதியில் ஜெய்கோபால் கரோடியா அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு அதே பகுதியை சேர்ந்த சேகர் (46) என்பவர் ஆசிரியராக வேலைபார்த்து வருகிறார். இவர் பிளஸ் - 2 வகுப்புக்கு பாடம் எடுத்து வந்தார். தற்போது பள்ளியில் 2-ம் கட்ட பருவ தேர்வு கடந்த 30-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் பள்ளியில் பிளஸ்- 2 படித்து வரும் மாணவர் ஒருவர் கடந்த 10 நாட்களாக பள்ளிக்கு வரவில்லை. தேர்வும் எழுதாமல் இருந்தார்.
இதையடுத்து மாணவரை அவரது தந்தை பள்ளிக்கு அழைத்து வந்து ஆசிரியரிடம் வருத்தம் தெரிவித்தார். பின்னர் அந்த மாணவரை வணிகவியல் தேர்வு எழுத அனுமதித்து உள்ளனர். அந்த தேர்வு அறையில் ஆசிரியர் சேகர் கண்காணிப்பாளாராக இருந்தார்.
ஆனால் அந்தமாணவர் மட்டும் தேர்வு எழுதாமல் மேஜை மீது படுத்து ஹாயாக தூங்கத்தொடங்கினார். இதனை கவனித்த ஆசிரியர் சேகர் மாணவரை தட்டி தேர்வு எழுதுமாறு அறிவுரை கூறினார். இதனை மாணவன் கண்டு கொள்ளாமல் மீண்டும் தூங்கத்தொடங்கினார். அப்போது அருகில் புகையிலை பாக்கெட் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனை கவனித்த ஆசிரியர் சேகர், மாணவரை கண்டித்து கேள்விகள் கேட்டுக்கொண்டு இருந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த மாணவர் திடீரென ஆசிரியர் சேகரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு முகத்தில் ஓங்கி குத்துவிட்டார். இதில் அவரது மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது. மேலும் அவரை மாணவர் விடாமல் சரமாரியாக தாக்கினார். இதில் ஆசிரியர் சேகரின் முகம் முழுவதும் வீங்கி ரத்தம் கொட்டியது.
இதனை பார்த்து தேர்வு அறையில் இருந்த மற்ற மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்ததும் மற்ற வகுப்பறையில் இருந்த ஆசிரியர்கள் விரைந்து வந்து மாணவரை சமாதானப்படுத்தி ஆசிரியர் சேகரை மீட்டனர். ரத்தம் சொட்ட,சொட்ட நின்ற சேகரை சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக ஆசிரியர் சேகர் திருவொற்றியூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் மாணவரிடம் விசாரணை நடத்த முடிவு செய்து உள்ளனர். தேர்வு அறையில் ஆசிரியரை மாணவர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற ரேவதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
- விரைந்து வந்த போக்குவரத்து போலீசார் ரேவதியை மீட்டு சிகிச்சைக்காக கீழ்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பூந்தமல்லி:
பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டை யமுனா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரேவதி (வயது 53). இவர் பூந்தமல்லி -பாரிவாக்கம் சந்திப்பு, பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக கட்டுமான பொருட்களை ஏற்றிவந்த லாரி திடீரென சாலையோரம் நடந்து சென்ற ரேவதி மீது மோதியது. இதில் லாரியின் சக்கரத்தில் சிக்கிய ரேவதியின் கால்கள் இரண்டும் நசுங்கியது. இதில் அவர் அலறி துடித்தார்.
விரைந்து வந்த போக்குவரத்து போலீசார் ரேவதியை மீட்டு சிகிச்சைக்காக கீழ்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இதுபற்றி அறிந்ததும் ரேவதியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் அங்கு குவிந்தனர். அவர்கள் விபத்து ஏற்படுத்திய லாரியை சிறை பிடித்து திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச்செய்தனர்.
இதற்கிடையே ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற ரேவதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஆவடி போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
- எர்ணாவூர், ராமநாதபுரத்தில் உள்ள சுமார் 10 தெருக்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.
- குடிநீர் குழாய்களில் தண்ணீர் வழக்கத்துக்கு மாறாக மஞ்சள் நிறத்தில் வருகிறது.
திருவொற்றியூர்:
சென்னை நகரில் குடிநீர் தேவை பைப்புகள் மூலமும், சில இடங்களில் லாரிகள் மூலமும் சப்ளை செய்யப்படுகிறது. தற்போது ஏரிகளில் போதுமான அளவு தண்ணீர் உள்ளதால் அனைத்து இடங்களுக்கும் தட்டுப்பாடு இன்றி குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் எர்ணாவூர் பகுதியில் குடிநீர் மஞ்சள் நிறத்தில் வருவதால் அதனை பயன்படுத்த முடியாமல் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.
எர்ணாவூர், ராமநாதபுரத்தில் உள்ள சுமார் 10 தெருக்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இப்பகுதி நகராட்சியாக இருந்த போது அடிபம்பு மூலம் குடிநீர் எடுத்து பயன்படுத்தி வந்தனர். பின்னர் மாநகராட்சியானதும் மெட்ரோ வாட்டர் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் குடிநீர் குழாய்களில் தண்ணீர் வழக்கத்துக்கு மாறாக மஞ்சள் நிறத்தில் வருகிறது. இதனால் இதனை பயன்படுத்த முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகிறார்கள். அந்த தண்ணீரில் கழிவு நீரும் கலந்து வருவதாக கூறப்படுகிறது.
இதனால் அப்பகுதி மக்கள் கூடுதல் விலை கொடுத்து கடைகளில் கேன் தண்ணீரை வாங்கி குடிப்பதற்கும் சமைப்பதற்கும் பயன்படுத்தி வருகிறார்கள். குடிநீர் மஞ்சள் நிறத்தில் வருவது தொடர்பாக அப்பகுதி மக்கள் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது. சிலர் மோசமான இந்த தண்ணீரை பயன்படுத்துவதால் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு மெட்ரோ வாட்டர் அதிகாரிகள் கழிவுநீர் கலந்த இந்த குடிநீரின் மாதிரியை சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பி உள்ளனர். ஆனால் இதுவரை மெட்ரோ வாட்டர் துறையினரிடம் இதற்கான முடிவு வரவில்லை. மேலும் சுத்தமான தண்ணீரை வழங்க அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள்.
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த காமராஜ் என்பவர் கூறியதாவது:-
குடிநீர் குழாய்களில் தண்ணீர் மஞ்சள் நிறத்தில் வருகிறது. இதுபற்றி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வட சென்னை வளர்ச்சித் திட்டத்திற்கு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதி ஏன் ஒதுக்கப்பட்டது என்று எங்களுக்குத் தெரிய வில்லை. எங்களுக்கு நல்ல குடிநீர் கிடைக்கவில்லை. குடிநீருக்காக 2நாட்கள் காத்திருக்கும் நிலை இருந்து வருகிறது. அதுவும் 2மணி நேரம் மட்டுமே வருகிறது.கேன் தண்ணீரை வாங்கி பயன்படுத்துவதால் ஒரு மாதத்திற்கு சுமார் ரூ. 2000 முதல் ரூ. 2500 வரை பணம் செலவாகிறது. ஒரு சில குடும்பத்தார்கள் பணத்தை கொடுத்து கேன் தண்ணீரை வாங்க முடியாமல் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர்.
கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த 4-வது வார்டு கவுன்சிலர் ஜெயராமன்:-
மீஞ்சூரில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தின் கீழ் காட்டுப்பள்ளியில் இருந்து குழாய் மூலம் மணலியில் உள்ள குடிநீர் தொட்டியில் தண்ணீர் ஏற்றப்படுகிறது.
இங்கிருந்து ஏற்றி அங்கு இருந்து எண்ணூர், திருவொற்றியூர் மேற்கு பகுதிகள் அடங்கிய 1,2,4,6 ஆகிய வார்டுகளில் உள்ள பொது மக்களுக்கு குடிநீர் 2 நாட்கள்களுக்கு ஒரு முறை என சுழற்சி முறையில் 2 மணி நேரம் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.
ஆனால் இந்த 2 மணி நேரத்தில் முதல் அரை மணி நேரம் குடிநீர் மஞ்சள் நிறமாக மாறி வருகிறது. இதற்குக் காரணம் தாழ்வான பகுதிகளில் குடிநீர் தேங்கி நிற்பதாலும் பின்னர் குழாய்கள் துருப்பிடித்து இருப்பதும் காரணம்.ஒரு சில வீடுகளில் தண்ணீரை சுத்திகரிக்கும் கருவியை அமைத்து பயன்படுத்தி வருகின்றனர். அந்த கருவியும் மாதத்துக்கு ஒரு முறை பழுதாகி விடுகிறது அதை சரி செய்வதற்கு அதிக பணம் செலவாகிறது. மாசுஅடைந்த தண்ணீரை பயன்படுத்துவதால் உடலில் தோல் பிரச்சினைகள், தலை முடி கொட்டுவது போன்ற பிரச்சினைகளால் அவதிப்பட்டு வருகின்றனர். குடிநீருக்காக கையேந்தும் நிலையில் உள்ள மக்களின் நிலையை மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் அதிகாரிகளிடம் கேட்டபோது, சம்பந்தப்பட்ட பகுதியில் சுத்தமான குடிநீர் வழங்க தற்காலிக நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக ஆய்வு செய்து வருகிறோம் என்றனர்.
- சப்-இன்ஸ்பெக்டருக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது.
- சிகிச்சை பலனின்றி இன்று காலை விஜயகுமார் இறந்தார்.
பொன்னேரி:
மீஞ்சூர் அடுத்த மேலூர் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார்(வயது50). இவர் மீஞ்சூர் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் சப்-இன்ஸ்பெக்டருக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது.
அவரை சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை விஜயகுமார் இறந்தார்.
- மரத்தில் இருந்த தேன்கூட்டை சிலர் கல்லால் தாக்கி கலைத்ததாக தெரிகிறது.
- வெங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரியபாளையம்:
திருவள்ளூர், வீரன் நகர், ஜெகனி கோட்டை தெருவை சேர்ந்தவர் சரவணன்(வயது35). சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வந்தார்.
இவர் மனைவி நளினி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் பெரியபாளையம் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய ஆட்டோவில் வந்தார். பின்னர் அவர்கள் வீடு நோக்கி திரும்பி சென்று கொண்டு இருந்தனர். அப்போது வெங்கல் அணைக்கட்டு பகுதிக்கு சென்ற அவர்கள் ஒரு மரத்தின் கீழ் சமைத்து சாப்பிட்டனர். அந்த நேரத்தில் அருகே உள்ள மரத்தில் இருந்த தேன்கூட்டை சிலர் கல்லால் தாக்கி கலைத்ததாக தெரிகிறது.
இதனால் பறந்து வந்த தேனீக்கள் மொத்தமாக சரவணன், அவரது மனைவி நளினி மற்றும் அவர்களது குழந்தைகளையும் விரட்டி, விரட்டி கொட்டியது. இதில் ஏராளமான தேனீக்கள் கொட்டியதால் சரவணனின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. அவரை உடனடியாக மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி சரவணன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வெங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மூதாட்டி இறந்து கிடந்தார். அவரது தலை, காலில் பலத்த காயம் ஏற்பட்டு இருந்தது.
- ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பொன்னேரி:
பொன்னேரி ரெயில் நிலையம் அருகில் தண்டவாளத்தில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி இறந்து கிடந்தார். அவரது தலை, காலில் பலத்த காயம் ஏற்பட்டு இருந்தது. அவர் ரெயிலில் இருந்து தவறி விழுந்து இறந்து இருக்கலாம் என்று ரெயில்வே போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
பலியான மூதாட்டி யார்? எந்த ரெயிலில் பயணம் செய்தார்? என்று தெரியவில்லை. இதுகுறித்து கொருக்குப்பேட்டை ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- 2வது நிலை 2வது அலகில் ஜெனரேட்டர் டிரான்ஸ்பார்மரில் தீ பற்றியுள்ளது.
- 2வது அலகில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டில் உள்ள வடசென்னை அனல் மின் நிலையத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில், 2வது நிலை 2வது அலகில் ஜெனரேட்டர் டிரான்ஸ்பார்மரில் தீ பற்றியுள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், கொழுந்துவிட்டு எரியும் தீயை, ரசாயன நுரை, தண்ணீரை பீய்ச்சி அடித்து கட்டுப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
தீ விபத்தால், 2வது அலகில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- மழைவிட்டும் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டதால் தண்ணீர் தேங்கி நின்றது.
- கால்வாய் அடைப்பை சரிசெய்யும் பணியில் நகராட்சி தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.
திருவள்ளூர்:
தமிழகத்தின் மேல் பகுதியில் மேற்குதிசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதியில் நேற்று மாலை சுமார் ஒரு மணி நேரம் பலத்த மழையாக கொட்டியது. பின்னர் இரவிலும் விட்டு,விட்டு மழை நீடித்தது.
இதேபோல் திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்திலும் மாலை முதல் அதிகாலை வரை மழை பெய்தது. இதனால் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது.
திருவள்ளூரில் நேற்று மாலை 5 மணி அளவில் திடீரென கருமேகங்கள் திரண்டு கனமழையாக கொட்டி தீர்த்தது. சுமார் ஒரு மணிநேரத்துக்கும் மேல் நீடித்த பலத்த மழையால் திருவள்ளூர் நகரம் முழுவதும் தெருக்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
கனமழை காரணமாக திருவள்ளூர் வீரராகவர் கோவில் சன்னதி தெரு, பஜார் வீதி, ஆசூரி தெரு, விநாயகர் கோவில் தெரு, உள்ளிட்ட பகுதியில் கழிவு நீருடன் மழை நீர் கலந்து தேங்கி நின்றது. தண்ணீர் செல்ல வழியில்லாததால் வீரராகவர் கோவில் முன்பு குளம் போல் தண்ணீர் தேங்கியது. மழைவிட்டும் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டதால் இன்று காலை வரை தண்ணீர் தேங்கி நின்றது.
இதனால் பக்தர்கள் கடும் அவதி அடைந்தனர். அவர்கள் மழைநீருடன் கலந்து கழிவுநீரில் நடந்து சென்று கோவிலுக்குள் செல்லும் நிலை ஏற்பட்டது. கால்வாய் அடைப்பை சரிசெய்யும் பணியில் நகராட்சி தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.
இதேபோல் ஆவடி, திருத்தணி, பூண்டி, திருவாலங்காடு உள்ளிட்ட அனைத்து பகுதியிலும் மழை வெளுத்துவாங்கியது. மாவட்டத்தில் அதிக பட்சமாக பூந்தமல்லியில் 11 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது. மற்ற இடங்களில் பெய்த மழை அளவு(மி.மீட்டரில்)வருமாறு:-
திருவள்ளூர் -25
கும்மிடிப்பூண்டி - 4.






