என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருவள்ளூர் அருகே பஸ் மோதி புதுமாப்பிள்ளை பலி
- தனியார் பஸ் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
- பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே விஷ்வா இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
ஊத்துக்கோட்டை அடுத்த அம்மாம்பாக்கம், பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் துரைதாஸ். இவரது மகன் விஷ்வா (வயது20). இவருக்கும் கூனிபாளையத்தைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் அவர்களுக்கு திருமணம் நடைபெற இருந்தது. திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட இளம்பெண் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள தண்டலம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.
இந்த நிலையில் விஷ்வா இன்று காலை தனது மோட்டார் சைக்கிளில் மாணவியை ஏற்றிக்கொண்டு திருவள்ளூர் பஸ் நிலையம் நோக்கி வந்து கொண்டு இருந்தார். ஒதப்பையில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே திருவள்ளூர் - ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையில் வந்தபோது எதிரே வந்த தனியார் பஸ் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் விஷ்வாவும், மாணவியும் படுகாயம் அடைந்தனர். அவர்களை அவ்வழியே சென்றவர்கள் மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே விஷ்வா இறந்துவிட்டதாக தெரிவித்தனர். உடன் வந்த மாணவிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.






