என் மலர்
திருவள்ளூர்
- கூவம் சாலையில் வந்து கொண்டிருந்த போது எதிரே வேகமாக வந்த பதிவு எண் இல்லாத டிராக்டர் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
- மனோஜ் குமாரும், அவரது தாயார் சாகர் தேவியும், கீழே விழுந்தனர்.அவர்களுக்கு பின்னால் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்து டில்லி பாபு என்பவருக்கும் காயம் ஏற்பட்டது.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த பேரம்பாக்கம் கவரை தெருவை சேர்ந்தவர் விஷ்ணு. இவரது மனைவி சாகர் தேவி (வயது 41). மகன் மனோஜ் குமார் (19). இவர் தனது தாயார் சாகர் தேவியுடன் பேரம்பாக்கம் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்தார்.
திருவள்ளூர் அடுத்த கூவம் சாலையில் வந்து கொண்டிருந்த போது எதிரே வேகமாக வந்த பதிவு எண் இல்லாத டிராக்டர் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது. மீண்டும் அந்த டிராக்டர் அந்த மோட்டார் சைக்கிள் பின்னால் வந்த 2 மோட்டார் சைக்கிள்களையும் இடித்து விட்டு நிற்காமல் மின்னல் வேகத்தில் சென்றது.
இதில் நிலைதடுமாறி மனோஜ் குமாரும், அவரது தாயார் சாகர் தேவியும், கீழே விழுந்தனர்.அவர்களுக்கு பின்னால் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்து டில்லி பாபு என்பவருக்கும் காயம் ஏற்பட்டது.
இதை கண்ட அந்த வழியாக வந்து வாகன ஓட்டிகள் காயம் அடைந்த மனோஜ் குமார் அவரது தாயார் சாகர் தேவி ஆகிய 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவர்கள் சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனில்லாமல் மனோஜ் குமார் பரிதாபமாக இறந்து போனார்.
- லட்சிவாக்கம் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட பழங்குடி இனத்தவர்கள் வசித்து வருகிறார்கள்.
- ஊத்துக்கோட்டை தாசில்தார் அருண்குமார் அவர்களிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தினார்.
ஊத்துக்கோட்டை:
ஊத்துக்கோட்டை அருகே உள்ள லட்சிவாக்கம் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட பழங்குடி இனத்தவர்கள் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு வீட்டுமனை பட்டா கிடையாது.
வீட்டுமனை பட்டா கேட்டு இவர்கள் ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகம், எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சுமார் 30 வருடங்களாக கோரிக்கை மனு அளித்தனர்.
ஆனால் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனை கண்டித்தும், உடனடியாக வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் அவர்கள் கிராமத்தின் அருகே உள்ள செங்காளம்மன் கோவில் அருகே கடந்த மாதம் 26-ந்தேதி திறந்த வெளியில் சமைத்து உண்ணும் போராட்டம் நடத்தினர்.
ஊத்துக்கோட்டை தாசில்தார் அருண்குமார் அவர்களிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தினார். பட்டா வழங்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததன் பேரில் திறந்த வெளியில் சமைத்து சாப்பிடும் போராட்டத்தை கைவிட்டனர்.
இந்த நிலையில் ஊத்துக்கோட்டை அடுத்துள்ள பெரம்பூர் கிராம எல்லையில் சுமார் 5 ஏக்கர் நிலப்பரப்பில் தோப்பு புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த நிலத்தில் வருவாய்த்துறை அதிகாரிகள் நேற்று அளவீடு பணிகளில் ஈடுபட்டனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெரம்பூர் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் முரளி தலைமையில் பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு பள்ளி மற்றும் அரசு ஆஸ்பத்திரி அல்லது அரசு அலுவலகம் கட்ட அனுமதி அளிப்போம். ஆனால் வீட்டுமனை பட்டா வழங்கு வதை எதிர்ப்போம் என்று கோஷங்கள் எழுப்பினர். தகவல் அறிந்த தாசில்தார் அருண்குமார் விரைந்து சென்று சமரச பேச்சு வார்த்தை நடத்தினார். உங்களின் எதிர்ப்பு குறித்து மாவட்ட கலெக்டரிடம் தெரிவிப்பேன் என்று உறுதி அளித்ததின் பேரில் பெரம்பூர் கிராம பொது மக்கள் கலைந்து சென்றனர்.
- நாளை திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு
- 15 மாவட்டங்களில் கனமழை முதல் மிக கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:
வங்கக் கடலில் உருவாகி உள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைய உள்ளதால், தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 14-ந்தேதி வரை 5 நாட்களுக்கு பெரும்பாலான இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாளை திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கனமழை முதல் மிக கன மழையும் பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அந்தந்த மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. கனமழை எச்சரிக்கை காரணமாக விடுமுறை தொடர்பான அறிவிப்பை கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்டுள்ளார்.
- உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் அன்று ஒரு லட்சம் மரக்கன்றுகள் நட முடிவு செய்யப்பட்டது
- சிறப்பு அழைப்பாளராக எம்எல்ஏக்கள் எஸ்.சந்திரன், வி.ஜி.ராஜேந்திரன் கலந்துகொண்டனர்
திருவள்ளூர்:
திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக இளைஞரணி ஆலோசனை கூட்டம் திருவள்ளூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
மாவட்ட இளைஞரணி செயலாளர்கள் மோதிலால், சுகுமார் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளரும் திருத்தணி தொகுதி எம்எல்ஏவுமான எஸ்.சந்திரன், திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கினர்
.திருவள்ளூர் மேற்கு மாவட்டத்திற்கு உள்ள திருவள்ளூர், திருத்தணி சட்டமன்றத் தொகுதியில் புதிய உறுப்பினர் சேர்க்கை, சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவது என முடிவு செய்யப்பட்டது.
திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் அன்று ஒரு லட்சம் மரக்கன்றுகள் நட வேண்டும், விளையாட்டுப் போட்டிகள், அன்னதானம் வழங்குவது, மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் வழங்குவது, ரத்ததான முகாம் நடத்துவது, ஏழைகளுக்கு வேட்டி சேலை வழங்குவது, கண் சிகிச்சை முகாம் நடத்துவது, அன்றைய தினம் அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளுக்கு நல உதவிகள் வழங்குவது, கட்சி கொடியேற்றுதல் உள்ளிட்ட திட்டங்களை மேற்கொள்வது என ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் அவைத் தலைவர் திராவிடபக்தன், மாநில விவசாய அணி துணைச் செயலாளர் ஆர்.டி. இ.ஆதிசேஷன், துணை செயலாளர் டாக்டர் குமரன், பொருளாளர் மிதுன் சக்கரவர்த்தி, ஒன்றிய செயலாளர்கள் கிறிஸ்டி (ஏ) அன்பரசு, மோ.ரமேஷ், மகாலிங்கம், கூளூர் ராஜேந்திரன், ஹரி கிருஷ்ணன், ரவி, இளைஞரணி நிர்வாகிகள், மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, பேருர் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
- வேனை எடுத்துக் கொண்டு அருண் திருவள்ளூர் அடுத்த புதுப்பட்டு கிராமத்திற்கு வந்தார்.
- அருணை பின்தொடர்ந்து வந்த 10 பேர் கொண்ட கும்பல் அவரை தகாத வார்த்தையால் பேசி இரும்பு கம்பியால் பலமாக தாக்கி விட்டு அவரது வேனை கடத்திச் சென்றனர்.
திருவள்ளூர்:
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் அருண் (33). தொழிலாளி. அருண் காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் பைனான்ஸ் மூலம் பறிமுதல் செய்த ஒருவேனை ஏலத்தில் எடுத்து அதனை ஓட்டி வந்தார். நேற்று முன்தினம் அவர் அந்த வேனை எடுத்துக் கொண்டு திருவள்ளூர் அடுத்த புதுப்பட்டு கிராமத்திற்கு வந்தார். அப்போது அங்கு அவரை பின்தொடர்ந்து வந்த 10 பேர் கொண்ட கும்பல் அவரை தகாத வார்த்தையால் பேசி இரும்பு கம்பியால் பலமாக தாக்கி விட்டு அவரது வேனை கடத்திச் சென்றனர்.
இதில் காயமடைந்த அவர் திருவள்ளூர் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து அருண் மப்பேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அருணை தாக்கி வேனை பறித்து சென்ற 10 பேர் கொண்ட கும்பலை தேடி வருகிறார்கள்.
- விக்னேஷ் கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிசியோதெரபி மருத்துவராக பணிபுரிந்து வருகிறார்.
- விக்னேஷ் இரவு வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் அடுத்த மொன்னவேடு, சீயன்சேரி பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ் (25). இவர் கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிசியோதெரபி மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் 12 மணிக்கு விக்னேஷ் தனது குடும்பத்தாருடன் வீட்டை பூட்டிவிட்டு வழக்கம்போல வேலைக்கு சென்றார். இரவு வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து 2 சவரன் தங்க நகை, 2 கிலோ வெள்ளி பொருட்கள், ரொக்கப்பணம் ரூபாய் 10 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றிருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து விக்னேஷ் புல்லரம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
- மின்சாரம் தாக்கி மேகலா தூக்கி வீசப்பட்டார். இதில் அவர் பரிதாபமாக இறந்தார்.
- திருநின்றவூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருநின்றவூர்:
திருநின்றவூர், பள்ளக் கழனி, பால முருகன் நகரை சேர்ந்தவர் சத்யா. இவரது மனைவி மேகலா(வயது38).இன்று காலை அவர் துணியை காயவைக்க வீட்டின் மாடிக்கு சென்றார்.
அங்கு வீட்டுக்கு வரும் மின்வயருக்காக வைக்கப்பட்டு இருந்த கம்பியில் கயிறு கட்டப்பட்டு இருந்தது. அதில் துணியை காயவைத்த போது மின்சாரம் தாக்கி மேகலா தூக்கி வீசப்பட்டார். இதில் அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து திருநின்றவூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- நிர்வாக காரணங்களால் மின் நுகர்வோர் குறை தீர்ப்பு முகாம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
- முகாம் மீண்டும் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என திருத்தணி கோட்ட செயற்பொறியாளர் மு.சி.பாரிராஜ் தெரிவித்து உள்ளார்.
திருத்தணி கோட்டத்திற்குட்பட்ட மின் நுகர்வோர் குறைதீர்ப்பு கூட்டம் மாதந்தோறும் 2-வது வியாழக்கிழமை அன்று அரக்கோணம் சாலையில் உள்ள கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெறுவது வழக்கம்.
இந்த மாதத்திற்கான குறை தீர்ப்பு கூட்டம் நாளை (வியாழக்கிழமை) நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நிர்வாக காரணங்களால் இந்த முகாம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. முகாம் மீண்டும் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என திருத்தணி கோட்ட செயற்பொறியாளர் மு.சி.பாரிராஜ் தெரிவித்து உள்ளார்.
- கழிவுகளை நாய்கள் இழுத்துக் கொண்டு சாலை மீது வரும்போது இருசக்கர வாகனங்களில் செல்வோர் நாய்கள் மீது மோதி பல்வேறு விபத்துக்கள் அடிக்கடி நடந்து வருகிறது.
- குப்பை கழிவுகளால் நோய் தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது.
பொன்னேரி:
மீஞ்சூர் அருகே உள்ள நெய்த வாயல் ஊராட்சியில் கிராம எல்லை மற்றும் ஏரியின் அருகே மீஞ்சூர் பேரூராட்சிக்குட்பட்ட அரியன் வாயல் பகுதியில் இருந்து மாடு, ஆடு, கோழி இறைச்சி கழிவுகள், குப்பைகள் குவியலாக கொட்டப் படுவதாக கூறப்படுகிறது.
இந்த இறைச்சி கழிவுகளை நாய்கள் இழுத்துக் கொண்டு சாலை மீது வரும்போது இருசக்கர வாகனங்களில் செல்வோர் நாய்கள் மீது மோதி பல்வேறு விபத்துக்கள் அடிக்கடி நடந்து வருகிறது.
மேலும் குப்பை கழிவுகளால் நோய் தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது. இதனால் கிராம எல்லையில் குப்பை கழிவுகளை கொட்டுவதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். எனினும் தொடர்ந்து கழிவுகள் கொட்டப்பட்டு வந்தன.
இதுகுறித்து கிராமமக்கள் மீஞ்சூர் பேரூராட்சி நிர்வாகம் மற்றும் சுகாதார துறையிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து கடந்த உள்ளாட்சி சிறப்பு கிராம சபையின் போது குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் செய்ய வேண்டும் என்று முடி வெடுத்தனர்.
இந்த நிலையில் குப்பை கொட்டுவதை கண்டித்து நெய்த வாயல் கிராம மக்கள் ஏராளமானோர் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களை மீஞ்சூர் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து கிராமமக்கள் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு மீஞ்சூர் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பேரூராட்சி நிர்வாகத்திடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து கிராமமக்கள் அங்கிருந்து கலைந்துசென்றனர்.
- திருத்தணி அருகே படாசெட்டி குளம் உள்ளது. இதில் ஆண் ஒருவர் பிணமாக மிதந்தார்.
- திருத்தணி கோவிலுக்கு வந்தபோது குளத்தில் மூழ்கி அவர் இறந்து இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.
திருத்தணி அருகே படாசெட்டி குளம் உள்ளது. இதில் ஆண் ஒருவர் பிணமாக மிதந்தார். தகவல் அறிந்ததும் திருத்தணி போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
குளத்தின் அருகே கிடந்த அவரது ஆடையில் உள்ள அடையாள அட்டையை வைத்து பலியானது அம்பத்தூர் பகுதியை சேர்ந்த மயில்சாமி (50) என்பது தெரியவந்தது. திருத்தணி கோவிலுக்கு வந்தபோது குளத்தில் மூழ்கி அவர் இறந்து இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். இது பற்றி மேலும் விசாரணை நடந்து வருகிறது.
- கடந்த சில நாட்களாக பலத்த மழை இல்லாததால் ஏரிகளுக்கு நீர்வரத்து குறைந்து இருந்தது.
- புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
திருவள்ளூர்:
சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளாக செம்பரம்பாக்கம், புழல் ஏரிகள் உள்ளன. கடந்த வாரத்தில் பெய்த பலத்த மழை காரணமாக இந்த 2 ஏரிகளுக்கும் நீர்வரத்து அதிகரித்தது. நீர்மட்டம் கிடுகிடு வென உயர்ந்ததால் 2 ஏரிகளில் இருந்தும் 100 கன அடி வீதம் உபரி நீர் திறக்கப்பட்டது.
கடந்த சில நாட்களாக பலத்த மழை இல்லாததால் ஏரிகளுக்கு நீர்வரத்து குறைந்து இருந்தது. இந்த நிலையில் 2 நாட்களாக அவ்வப்போது பெய்து வரும் கனமழை காரணமாக குடிநீர் ஏரிகளுக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது.
புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3,300 மி.கன அடி. இதில் 2,730 மி.கன. அடி தண்ணீர் உள்ளது. நேற்று 84 கன அடியாக இருந்த நீர் வரத்து இன்று 141 கன அடியாக அதிகரித்து இருக்கிறது.
ஏரியின் நீர்மட்டம் மொத்தம் உள்ள 21 அடியில் 18.60 அடிக்கு தண்ணீர் உள்ளது. ஏரியில் இருந்து 292 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3231 மி.கன அடி. இதில் 2,668 மி.கன அடி தண்ணீர் உள்ளன. நேற்று 33 கன அடி ஆக இருந்த நீர்வரத்து தற்போது 219 கன அடியாக உயர்ந்துள்ளது. ஏரியின் நீர்மட்டம் மொத்தம் உள்ள 24 அடியில் 20.26 அடிக்கு தண்ணீர் நிரம்பி கடல் போல் காட்சி அளிக்கிறது.
ஏரியில் இருந்து 70 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
வரும் நாட்களில் கன மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதால் குடிநீர் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- பலத்த காயம் அடைந்த அன்பு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர்:
கடம்பத்தூர் அருகே உள்ள செஞ்சிபனம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் அன்பு. முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர்.இவர் தி.மு.க.வில் கிளை செயலாளராகவும் இருந்தார்.
இந்த நிலையில் நேற்று அவர் மடத்துக்குப்பம் பகுதியில் துக்க நிகழ்ச்சிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். பின்னர் இரவு அன்பு மீண்டும் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். ராமன்கோவில் ரெயில்வே கேட் அருகே வந்து கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் அப்பகுதியில் இருந்த மின் கம்பத்தின் மீது வேகமாக மோதியது.
இதில் பலத்த காயம் அடைந்த அன்பு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் கடம்பத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






