என் மலர்
உள்ளூர் செய்திகள்

மீஞ்சூர் அருகே கிராம எல்லையில் கழிவுகள் கொட்டுவதை எதிர்த்து பொதுமக்கள் போராட்டம்
- கழிவுகளை நாய்கள் இழுத்துக் கொண்டு சாலை மீது வரும்போது இருசக்கர வாகனங்களில் செல்வோர் நாய்கள் மீது மோதி பல்வேறு விபத்துக்கள் அடிக்கடி நடந்து வருகிறது.
- குப்பை கழிவுகளால் நோய் தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது.
பொன்னேரி:
மீஞ்சூர் அருகே உள்ள நெய்த வாயல் ஊராட்சியில் கிராம எல்லை மற்றும் ஏரியின் அருகே மீஞ்சூர் பேரூராட்சிக்குட்பட்ட அரியன் வாயல் பகுதியில் இருந்து மாடு, ஆடு, கோழி இறைச்சி கழிவுகள், குப்பைகள் குவியலாக கொட்டப் படுவதாக கூறப்படுகிறது.
இந்த இறைச்சி கழிவுகளை நாய்கள் இழுத்துக் கொண்டு சாலை மீது வரும்போது இருசக்கர வாகனங்களில் செல்வோர் நாய்கள் மீது மோதி பல்வேறு விபத்துக்கள் அடிக்கடி நடந்து வருகிறது.
மேலும் குப்பை கழிவுகளால் நோய் தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது. இதனால் கிராம எல்லையில் குப்பை கழிவுகளை கொட்டுவதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். எனினும் தொடர்ந்து கழிவுகள் கொட்டப்பட்டு வந்தன.
இதுகுறித்து கிராமமக்கள் மீஞ்சூர் பேரூராட்சி நிர்வாகம் மற்றும் சுகாதார துறையிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து கடந்த உள்ளாட்சி சிறப்பு கிராம சபையின் போது குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் செய்ய வேண்டும் என்று முடி வெடுத்தனர்.
இந்த நிலையில் குப்பை கொட்டுவதை கண்டித்து நெய்த வாயல் கிராம மக்கள் ஏராளமானோர் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களை மீஞ்சூர் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து கிராமமக்கள் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு மீஞ்சூர் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பேரூராட்சி நிர்வாகத்திடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து கிராமமக்கள் அங்கிருந்து கலைந்துசென்றனர்.






