என் மலர்
திருவள்ளூர்
- பொன்னேரி பகுதியில் ஆரணி ஆற்றின் கரையில் கடந்த ஆண்டு கனமழையினால் உடைப்பு ஏற்பட்டது.
- கரை உடைப்பு ஏற்படாமல் நிரந்தர தீர்வு காணும் வகையில் கரைகள் பலவீனமாக உள்ள பகுதிகளில் கான்கிரீட் சுவர் அமைக்கும் பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.
பொன்னேரி:
பொன்னேரி பகுதியில் ஆரணி ஆற்றின் கரையில் கடந்த ஆண்டு கனமழையினால் உடைப்பு ஏற்பட்டது. அந்த பகுதிகளில் தற்போது கன மழை பெய்து வருகிறது.
இதனை சிறப்பு அதிகாரி மோகனசுந்தரம், சார் ஆட்சியர் ஐஸ்வர்யா ராமநாதன், வட்டாட்சியர் செல்வகுமார், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் வெற்றிவேலன் மற்றும் அதிகாரிகள் பெரும்பேடு குப்பம்ரெட்டிபாளையம், சோமஞ்சேரி, வஞ்சிவாக்கம், ஆண்டார் மடம் பகுதிகளில் ஆய்வு செய்தனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கரைகள் பலப்படுத்தும் பணிகள் நடைபெற்றுள்ளதாகவும், மழையினால் ஆங்காங்கே ஆற்றின் கரை பகுதி கரைந்து காணப்பட்டுள்ளதால் அதனை மணல் மூட்டைகளை அடுக்கி பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தர விட்டனர்.
கரை உடைப்பு ஏற்படாமல் நிரந்தர தீர்வு காணும் வகையில் கரைகள் பலவீனமாக உள்ள பகுதிகளில் கான்கிரீட் சுவர் அமைக்கும் பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
கடந்த ஆண்டை போன்று இந்த ஆண்டு ஆரணி ஆற்றின் கரைகளில் உடைப்பு ஏற்படாமல் இருக்க பொதுப்பணித் துறையின் மூலம் 20 ஆயிரம் மணல் மூட்டைகள் தயாராக இருப்பதாகவும் மீஞ்சூர் ஒன்றியத்தின் மூலம் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
- செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டத்தை 21 அடியில் வைத்து கண்காணிக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
- மழையின் அளவையும், ஏரிக்கு வந்து கொண்டிருக்கும் நீர்வரத்தையும் 3 மணி நேரத்திற்கு ஒருமுறை அதிகாரிகள் கணக்கீடு செய்து தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
பூந்தமல்லி:
சென்னை புறநகர் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக குடிநீர் ஆதாரமாக உள்ள செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.
இந்த நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியில் இன்று காலை நிலவரப்படி மொத்த நீர்மட்ட உயரமான 24 அடியில், தற்போது 20.15 அடி தண்ணீர் உள்ளது. நீர் வரத்து 1510 கன அடியும், நீர் வெளியேற்றம் 500 கன அடியாகவும் உள்ளது.
மொத்த கொள்ளளவான 3645 மில்லியன் கனஅடியில் தற்போது 2641 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறப்பது அதிகரிக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டத்தை 21 அடியில் வைத்து கண்காணிக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
இதனால் மழையின் அளவையும், ஏரிக்கு வந்து கொண்டிருக்கும் நீர்வரத்தையும் 3 மணி நேரத்திற்கு ஒருமுறை அதிகாரிகள் கணக்கீடு செய்து தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
- பொன்னேரி அடுத்த வேண்பாக்கம் பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார்.
- காட்டன் சூதாட்டம் எழுதி விற்பனை செய்வதாக பொன்னேரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
பொன்னேரி:
பொன்னேரி அடுத்த வேண்பாக்கம் பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார் (32). இவர் பொன்னேரி அடுத்த வேண்பாக்கம் மாதா சிலை அருகில் காய்கறி கடை நடத்தி வருகிறார். காய்கறி கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட காட்டன் சூதாட்டம் எழுதி விற்பனை செய்வதாக பொன்னேரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் ஆய்வு செய்ததில் அவரிடமிருந்து 2500 ரூபாய் பணம் மற்றும் துண்டு சீட்டு எழுதப்பட்ட நம்பர்கள் ஆகியவற்றை கைப்பற்றினர். பின்னர் சிவகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- பருவ மழையால் கூவம் ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தரைப்பாலம் மீண்டும் நேற்று சேத மடைந்தது.
- போலீசார் பாலத்தில் இரு புறமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் சத்தரை ஊராட்சியில் சத்தரை கண்டிகை வழியாக கொண்டஞ்சேரி செல்லும் நெடுஞ்சாலையில் கூவம் ஆற்றின் குறுக்கே பாலம் உள்ளது.
இந்த பாலத்தை பயன் படுத்தி, கொண்டஞ்சேரி, மப்பேடு வழியாக சுங்கு வார்சத்திரம், காஞ்சிபுரம், பூந்தமல்லி, ஸ்ரீபெரும்புதுார், தண்டலம், அரக்கோணம் சென்று வருகின்றனர்.
கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வடகிழக்கு பருவமழையில் பாலம் சேதமடைந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து நெடுஞ்சாலைத் துறையினர் 4.5 லட்சம் ரூபாய் மதிப்பில், சேதமடைந்த தரைப்பாலத்தை தற்காலிகமாக சீரமைத்தனர்.
இந்நிலையில் தற்போது பெய்து வரும் பருவ மழையால் கூவம் ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தரைப்பாலம் மீண்டும் நேற்று சேத மடைந்தது.
இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பொது மக்கள் பாதுகாப்பு கருதி மப்பேடு சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் தலைமையில் போலீசார் பாலத்தில் இரு புறமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- அம்மன் கோவிலின் பூட்டை உடைத்து ஐம்பொன் சிலை, நகை கொள்ளை போன சம்பவம் திருவாலங்காடு பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- திருவாலங்காடு போலீசார் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.
திருத்தணி:
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அடுத்த பழையனூர் கிராமத்தில் மருக்கரை சின்னம்மன் ஆலயம் உள்ளது. இந்த கோயிலில் தினமும் 100-க்கும் மேற்பட்டோர் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.
நேற்றிரவு கோவிலில் புகுந்த கொள்ளையர்கள் கோவில் பூட்டை உடைத்து கோவிலில் இருந்த ஐம்பொன்னாலான 2½ அடி உயரமுள்ள 2 அம்மன் சிலைகள், அம்மனுக்கு அணிவிக்கப்பட்டிருந்த 6 கிராம் தாலியையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
காலையில் கோவில் பூசாரி கோவிலை திறக்க வந்த போது பூட்டு உடைத்து கொள்ளை நடந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இந்த கொள்ளை சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவாலங்காடு போலீசார் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.
மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் பகுதியில் அம்மன் கோவிலின் பூட்டை உடைத்து ஐம்பொன் சிலை, நகை கொள்ளை போன சம்பவம் திருவாலங்காடு பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- பல்லடத்தில் இருந்த சைபர் கிரைம் ஏட்டு சிவா மற்றும் மாதவன் ஆகியோர் செல்போனில் பேசிய நபரை கையும் களவுமாக கைது செய்தனர்.
- விசாரணையில் சிதம்பரத்தைச் சேர்ந்த சிவா என்பது தெரியவந்தது.
திருவள்ளூர்:
திருவள்ளூர் ஜெயா நகரைச் சேர்ந்தவர் தினேஷ். இவரது மனைவி கல்பனா (32). இவருக்கு அடையாளம் தெரியாத நபரிடமிருந்து வந்த செல்போன் அழைப்பு வந்தது. அதை எடுத்து பேசியுள்ளார்.
அப்போது அந்த நபர் ஆபாசமான வார்த்தைகளால் பேசியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த கல்பனா திருவள்ளூர் டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அதனைத் தொடர்ந்து திருவள்ளூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சைபர் கிரைம் போலீசிலும் புகார் கொடுத்தார்.
விசாரணையில் ஆபாசமாக பேசியவர் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இருந்து பேசியது தெரியவந்தது. சைபர் கிரைம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மனோஜ்பிரபாகர் தாஸ் ஏற்பாட்டில் வேறொரு எண்ணில் இருந்து கல்பனாவை அவரது சகோதரி போல் பேச வைத்துள்ளனர்.
அரை மணி நேரத்திற்கும் மேலாக பேச்சு கொடுத்துக் கொண்டே அவர் இருக்கும் இடத்தை போலீசார் கண்டறிந்தனர். அப்போது பல்லடத்தில் இருந்த சைபர் கிரைம் ஏட்டு சிவா மற்றும் மாதவன் ஆகியோர் செல்போனில் பேசிய நபரை கையும் களவுமாக கைது செய்தனர்.
விசாரணையில் அவர் சிதம்பரத்தைச் சேர்ந்த சிவா (42) என்பது தெரியவந்தது. இவர் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் சுவீட் கடையில் வேலை பார்ப்பதும், உறவினர் வாங்கிக் கொடுத்த செல்போன் மூலம் ஏதாவது ஒரு எண்ணில் பேசுவதும், அதில் பெண் குரல் கேட்டால் அவர்களிடம் ஆபாசமாக பேசுவதும் வாடிக்கையாக வைத்திருந்ததும் தெரியவந்தது.
இதனையடுத்து செல்போனை பறிமுதல் செய்த சைபர் கிரைம் போலீசார் சிவாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- கிரேன் ரோப் அறுந்து ரஷிய கப்பல் ஊழியரான கான்ஸ் டன்ட்டைன் மீது விழுந்தது.
- மீஞ்சூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொன்னேரி:
மீஞ்சூர் அடுத்த காட்டுப்பள்ளி காமராஜர் துறை முகத்தில் கடந்த 9ந் தேதி மாலை 5 மணிக்கு ரஷியாவில் இருந்து யூ.எச்.எல். பார்ச்சூன் கப்பல், வாகன உதிரி பாகங்கள் ஏற்றுவதற்காக காமராஜர் துறைமுகத்திற்கு வந்தது.
நேற்று மாலை தனியார் நிறுவன கம்பெனி மூலம் வாகன உதிரி பாகங்களை கிரேன் மூலம் சீனிவாசன் என்பவர் இயக்கி வந்தார். திடீரென கிரேன் ரோப் அறுந்து ரஷிய கப்பல் ஊழியரான கான்ஸ் டன்ட்டைன் மீது விழுந்தது. தலையில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். மற்றொரு ஊழியரான ரோமல் கேசசுக்கு வலது கால் தொடையிலிருந்து முழங்கால் வரை பலத்த காயம் ஏற்பட்டது. அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து தகவல் அறிந்த மீஞ்சூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக ரஷிய தூதரகத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டு உள்ளது.
- மினி வேனில் செம்மரக்கட்டைகள் கடத்தி வரப்படுவதாக செங்குன்றம் உதவி கமிஷனர் முருகேசனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- செம்மரக்கட்டைகளை எங்கிருந்து, எங்கு கடத்தி செல்லப்படுகிறது? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்குன்றம்:
செங்குன்றத்தை அடுத்த அலமாதியில் இருந்து செங்குன்றம் நோக்கி மினி வேனில் செம்மரக்கட்டைகள் கடத்தி வரப்படுவதாக செங்குன்றம் உதவி கமிஷனர் முருகேசனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில் சோழவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் மற்றும் போலீசார் எடப்பாளையம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக செங்குன்றம் நோக்கி வந்த மினிவேனை மறித்து சோதனை செய்தனர். அதில் 200 கிலோ செம்மரக்கட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இது சம்பந்தமாக சென்னை கொளத்தூர் திருமால் நகர் 6-வது தெருவைச் சேர்ந்த சந்திரசேகர்(வயது 39) என்பவரை போலீசார் கைது செய்தனர். கடத்தி வரப்பட்ட செம்மரக்கட்டைகளுடன், மினி வேனையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
அந்த செம்மரக்கட்டைகளை எங்கிருந்து, எங்கு கடத்தி செல்லப்படுகிறது? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகளின் மொத்த மதிப்பு ரூ.5 லட்சம் என கூறப்படுகிறது.
- கால்நடைகள் புல் திண்ணாமல் தண்ணீர் குடிக்காமல், கண்களில் நீர் வடிந்து, நோயினால் பாதிக்கப்பட்டிருப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
- பொன்னேரி கால்நடை பராமரிப்புதுறை சார்பில் கால்நடை மருத்துவ குழுவினர் சார்பில் கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது.
பொன்னேரி:
பொன்னேரி அடுத்த பெரிய கரும்பூர் கிராமத்தில் விவசாயிகள் ஏராளமான பேர் ஆடு, மாடுகளை வளர்த்து வருகின்றனர். அப்பகுதியில் உள்ள கால்நடைகள் புல் திண்ணாமல் தண்ணீர் குடிக்காமல், கண்களில் நீர் வடிந்து, நோயினால் பாதிக்கப்பட்டிருப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
இதனை அடுத்து பொன்னேரி கால்நடை பராமரிப்புதுறை சார்பில் கால்நடை மருத்துவ குழுவினர் சார்பில் கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் மாடுகளை பரிசோதித்த போது, முன் கழுத்து கழலை நோய், பெரியம்மை நோயினால் பாதிக்கப்பட்டிருப்பதாக கண்டறியப்பட்டு மாடுகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
- திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் பாப்பரம்பாக்கம் கிராமத்தில் தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது.
- சந்தோஷ் மணவாள நகர் போலீசில் புகார் செய்தார்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் பாப்பரம்பாக்கம் கிராமத்தில் தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு சென்னை கொரட்டூர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த சந்தோஷ் (36) என்பவர் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். நேற்று தொழிற்சாலையில் உள்ள இருப்புகளை சரி செய்து பார்த்தபோது அந்த தொழிற்சாலையில் இருந்த காப்பர் வயர்கள், தளவாடப் பொருட்கள் என ரூபாய் 1 லட்சத்து 80 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் திருட்டு போனது தெரிய வந்தது.
இது குறித்து சந்தோஷ் மணவாள நகர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின் வழக்கு பதிவு செய்து தனியார் மர்ம நபர்களை தேடி வருகிறார்.
- பழவேற்காடு பகுதியில் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர்.
- பலத்த காற்று மற்றும் கடல் அதிகமாக சீற்றம் காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம்.
பொன்னேரி:
வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக பொன்னேரி, மீஞ்சூர் பழவேற்காடு, திருப்பாலைவனம், மணலி, புதுநகர், சோழவரம், பஞ்செட்டி, காரனோடை, காட்டூர் உள்ளிட்ட பல இடங்களில் நேற்று இரவு முதல் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.
இந்நிலையில் பழவேற்காடு பகுதியில் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர்.
பலத்த காற்று மற்றும் கடல் அதிகமாக சீற்றம் காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் எனவும் படகுகளை மீனவர்கள் கரையில் பாதுகாப்பாக கட்டி வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் வெளியில் யாரும் செல்ல வேண்டாம் எனவும் மறு அறிவிப்பு வரும் வரை யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என மீன்வளத் துறை உதவி இயக்குனர் வேலன் தெரிவித்துள்ளார்.
- செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது.
- நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் உபரி நீர் திறப்பு அதிகரிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
பூந்தமல்லி:
திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று இரவில் இருந்து கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த நீர்மட்டமான 24 அடியில் தற்போது 19.87 அடியும் மொத்த கொள்ளளவான 3465 மில்லியன் கனஅடியில் தற்போது 2571 மில்லியன் கன அடியும் தண்ணீர் உள்ளது. மேலும் நீர்வரத்து 330 கன அடியாகவும், நீர் வெளியேற்றம் தொடர்ந்து 500 கன அடியாக உள்ளது. தொடர்ந்து கனமழை நீடிக்கும் என்பதால் தொடர்ந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் ஏரியின் நீர்மட்டம் வழக்கத்திற்கு மாறாக 20 அடிக்கு கீழ் சென்றுள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்ட உயரத்தை 18 அடியில் இருந்து 19 அடி வரை வைத்து கண்காணிக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். கனமழை நீடித்து நீர் வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் உபநீர் அதிகமாக திறந்தால் அடையார் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு விடக்கூடாது என்பதால் தொடர்ந்து செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீரானது 500 கன அடியாக சீராக வெளியேற்றப்பட்டு வருகிறது. நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் உபரி நீர் திறப்பு அதிகரிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.






