என் மலர்tooltip icon

    திருவள்ளூர்

    • புதுப்பாளையம், மங்களம் ஆகிய கிராமங்களில் உள்ள தரைபாலம் மற்றும் மண் சாலைகளில் பல அடி உயரத்துக்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
    • பொதுமக்கள் சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்திற்கு மாற்றுப்பாதையில் சுற்றிக்கொண்டு பெரியபாளையம் சென்று அங்கிருந்து தங்களது பயணத்தை தொடங்க வேண்டிய அவல நிலையில் உள்ளனர்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஒன்றியம், புதுப்பாளையம் ஊராட்சியைச் சேர்ந்த புதுப்பாளையம்-அஞ்சாத்தம்மன் கோவில் இடையே ஆரணி ஆற்றில் தரைப்பாலம் ஒன்று உள்ளது. இதேபோல், கும்மிடிப்பூண்டி ஒன்றியம் மங்களம் ஊராட்சியில் மங்களம்-ஆரணி இடையே ஆரணி ஆற்றில் பொதுமக்கள் சார்பில் அமைக்கப்பட்ட மண் சாலை ஒன்று உள்ளது.

    கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பெய்ததால் ஆரணி ஆற்றில் பெரியபாளையம் அருகே பாலேஸ்வரம் அணைக்கட்டு நிரம்பியது. அணைக்கட்டில் இருந்து உபரி நீர் தண்ணீர் ஆரணி ஆற்றில் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும், சுண்ணாம்பு கால்வாயில் இருந்து அதிக அளவு தண்ணீர் ஆரணி ஆற்றில் பெருக்கெடுத்து ஓடுகின்றது.

    புதுப்பாளையம், மங்களம் ஆகிய கிராமங்களில் உள்ள தரைபாலம் மற்றும் மண் சாலைகளில் பல அடி உயரத்துக்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பள்ளி, கல்லூரிகள் செல்லும் மாணவர்களும், தனியார் மற்றும் அரசு துறை பணியாளர்கள், விவசாயிகள், வியாபாரிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஆபத்தை உணராமல் இப்பகுதியில் பொதுமக்கள் குளிப்பதும், வாகனங்களை கழுவுவதும், செல்பி எடுப்பதுமாக இருந்தனர்.

    இதையடுத்து ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சாரதி உத்தரவின் பேரில் ஆரணி மற்றும் பெரியபாளையம் காவல் நிலைய போலீசார் இப்பகுதியில் தடுப்புகளை அமைத்து போக்குவரத்தை தடை செய்தனர். இதனால் 25-க்கும் மேற்பட்ட கிராமங்கள் போக்குவரத்து இன்றி துண்டிக்கப்பட்டது.

    இதனால் இப்பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்திற்கு மாற்றுப்பாதையில் சுற்றிக்கொண்டு பெரியபாளையம் சென்று அங்கிருந்து தங்களது பயணத்தை தொடங்க வேண்டிய அவல நிலையில் உள்ளனர்.

    எனவே, ரூ.20 கோடி செலவில் புதுப்பாளையம்-அஞ்சாத்தம்மன் கோவில் இடையே இப்பகுதியில் உயர்மட்ட மேம்பாலம் ஒன்று கட்ட இம்மாதம் தமிழக அரசு உத்தரவிட்டது. இப்பணியை தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் இப்பணியை முடித்து தர வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கொசஸ்தலை ஆற்றின் கரை கடந்த ஆண்டு பெய்த மழையின் போது உடைப்பு ஏற்பட்டது.
    • திருவள்ளூர் மாவட்டத்தில் 3 நாட்களாக அதிக அளவு மழை பெய்து உள்ளது.

    பொன்னேரி:

    கொசஸ்தலை ஆற்றின் கரை கடந்த ஆண்டு பெய்த மழையின் போது உடைப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து தற்போது தேவையான முன் எச்சரிக்கை பணிகள் மேற் கொள்ளப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் சோழவரம் ஒன்றியம் ஆங்காடு பாடியநல்லூர் விச்சூர் வெள்ளிவாயல் பகுதியில் தாழ்வான இடங்களில் மழைநீர் சூழ்ந்த பகுதிகளை மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், பால்வளத் துறை அமைச்சர் சா.மு. நாசர், சட்டமன்ற உறுப்பினர்கள் மாதவரம் சுதர்சனம், துரை சந்திரசேகர் உள்ளிட்டோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    அவர்கள் கொசஸ்தலை ஆற்றில் வெள்ள பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கும் வகையில் கரைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை பார்வையிட்டனர். பின்னர் அமைச்சர் சா.மு. நாசர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கடந்த ஆண்டு 20 சென்டி மீட்டர் மழை ஒரே நாளில் பெய்தது. தற்போது திருவள்ளூர் மாவட்டத்தில் 3 நாட்களாக அதிக அளவு மழை பெய்து உள்ளது. முன் எச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை காரணமாக பாதிப்புகள் குறைவாக உள்ளது.

    கொசஸ்தலை ஆற்றின் கரைகளில் உடைப்பு ஏற்படாமல் தடுக்கவும் வெள்ள நீர் ஊருக்குள் புகாதவாறு தேவையான நடவடிக்கைகள், பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது சார் ஆட்சியர் ஐஸ்வர்யா ராமநாதன், வட்டாட்சியர் செல்வகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர் குலசேகரன் உட்பட பலர் உடன் இருந்தனர்.

    • அம்சவல்லியின் வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்லும் கள்ளக்காதலன் ராஜு சம்பவத்தன்று தனியாக இருந்த சங்கீதாவை கொன்று நகை-பணத்தை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரியவந்தது.
    • சங்கீதாவுக்கு அடுத்த மாதம் திருமணம் செய்ய நிச்சயித்து இருந்தனர். இந்த நிலையில் அவர் கொலை செய்யப்பட்டு உள்ளார்.

    பூந்தமல்லி:

    பூந்தமல்லியை அடுத்த சென்னீர்குப்பம், மேட்டுத்தெருவை சேர்ந்தவர் அம்சவல்லி. கணவரை பிரிந்து வாழும் இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மகள் சங்கீதா (வயது18).

    நேற்று காலை அம்சவல்லி வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டு இரவு வீட்டிற்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டில் உள்ள அறையில் மகள் சங்கீதா கொலை செய்யப்பட்டு கிடந்தார். மேலும் அவர் அணிந்திருந்த கம்மல், கொலுசு, மற்றும் வீட்டில் இருந்த பணம் கொள்ளை போய் இருந்தது.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் பூந்தமல்லி உதவி கமிஷனர் முத்துவேல் பாண்டி, இன்ஸ்பெக்டர் சிதம்பரம் முருகேசன் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    இதில் அம்சவல்லிக்கும் அதே பகுதியை சேர்ந்த ராஜூ(38) என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளாக கள்ளக்காதல் இருந்து வந்தது தெரிந்தது.

    மேலும் அம்சவல்லியின் வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்லும் கள்ளக்காதலன் ராஜு சம்பவத்தன்று தனியாக இருந்த சங்கீதாவை கொன்று நகை-பணத்தை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரியவந்தது.

    சங்கீதாவுக்கு அடுத்த மாதம் திருமணம் செய்ய நிச்சயித்து இருந்தனர். இந்த நிலையில் அவர் கொலை செய்யப்பட்டு உள்ளார்.

    வீட்டில் சங்கீதா தனியாக இருப்பதை அறிந்து வந்த ராஜு அவரிடம் தவறாக நடக்க முயன்றபோது ஏற்பட்ட தகராறில் இந்த கொலை நடந்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    இதையடுத்து தலைமறைவாக உள்ள ராஜுவை தனிப்படை போலீசார் தேடிவருகிறார்கள். அவர் சிக்கினால் தான் கொலைக்கான காரணம் என்ன? மற்றும் கொலை எப்படி நடந்தது? என்பது தெரியவரும்.

    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே விட்டு விட்டு மழை பெய்து கொண்டே இருக்கிறது.
    • பல்வேறு ஊராட்சிகளில் இருந்து வரக்கூடிய மழைநீர் அனைத்தும் மாங்காட்டில் ஒன்று சேர்ந்து கலப்பதால் இந்த பகுதி முழுவதும் மழை நீர் தேங்கி உள்ளது.

    பூந்தமல்லி:

    தமிழகத்தில் கடந்த 10-ந் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக மழை விட்டு விட்டு பெய்து கொண்டே இருக்கிறது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே விட்டு விட்டு மழை பெய்து கொண்டே இருக்கிறது. இதனால் மழைநீர் தேங்குவதும், பின்னர் வடிவதுமாக காட்சி அளித்துக் கொண்டே உள்ளது.

    இந்த நிலையில் இடி மின்னலுடன் நேற்று இரவு கொட்டி தீர்த்த கனமழையால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மீண்டும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. குறிப்பாக பூந்தமல்லி, மாங்காடு அதன் சுற்று வாட்டார பகுதிகளில் பெய்த கனமழையால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடிங்கியுள்ளது.

    மாங்காடு ஓம்சக்தி நகர், சக்கரா நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. குன்றத்தூர்-மாங்காடு சாலை வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.

    ஓம் சக்தி நகர் பகுதியில் கீழ்தளத்தில் உள்ள 1000-க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்து வீட்டில் இருந்த பொருட்களும் நாசமாகி இருக்கிறது.

    இதனால் மக்கள் தங்களது வீட்டில் இருந்து மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு மழைக்காலத்திலும் இது போன்ற பாதிப்புகளை சந்தித்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

    ஓம்சக்தி நகர் சந்திப்பில் உள்ள கால்வாய் வழியாக தண்ணீர் வெளியேற முடியாத அளவுக்கு வெள்ளம் தேங்கியுள்ளது. இதனால் ஜே.சி.பி. எந்திரம் மூலம் கால்வாயை உடைத்து தண்ணீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது.

    குன்றத்தூர்-மாங்காடு சாலையில் இடுப்பளவுக்கு தண்ணீர் ஓடுவதால் வாகன ஓட்டிகளும் அந்த வழியாக நடந்து சென்றவர்களும் கடும் பாதிப்பை சந்தித்தனர். இன்று காலையில் இந்த சாலையை கடந்து சென்றவர்கள் உயிரை கையில் பிடித்த படியே நடந்து சென்றனர்.


    இதனால் மாங்காடு பகுதி தனி தீவு போல காட்சி அளிக்கிறது. இந்த பகுதியில் மழை நீர் தேங்குவது ஒவ்வொரு மழைகாலத்திலும் வாடிக்கையாகவே உள்ளது என்றும், இதனால் மழைகாலம் தொடங்கி விட்டாலே நிம்மதி இழந்து தவிக்கும் நிலை ஏற்பட்டு விடுகிறது என்று அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர்.

    மாங்காடு நகராட்சிக்கு உட்பட்ட ஓம் சக்தி நகர், ஜனனி நகர், சாதிக் நகர், சக்கரா நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை நீர் குளம் போல் தேங்கியுள்ளது.

    மேலும் மழை நீரை அகற்ற நகராட்சி அதிகாரிகள் ஆங்காங்கே மின்மோட்டார்கள் வைத்து மழை நீரை அகற்றினாலும் மழை நீர் சற்றும் குறைந்த பாடில்லை இந்த நிலையில் குன்றத்தூர் - குமணன்சாவடி சாலை, ஓம் சக்தி நகர் பகுதியில் கட்டப்பட்ட கால்வாயின் ஒரு பகுதியை ஜேசிபி எந்திரம் கொண்டு உடைத்து மழை நீரை அதிக அளவில் வெளியேற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.

    இதனால் அந்த சாலையில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. பல்வேறு ஊராட்சிகளில் இருந்து வரக்கூடிய மழைநீர் அனைத்தும் மாங்காட்டில் ஒன்று சேர்ந்து கலப்பதால் இந்த பகுதி முழுவதும் மழை நீர் தேங்கி உள்ளது.

    பூந்தமல்லி நகராட்சி மற்றும் நான்கு ஊராட்சிகளிலிருந்து வெளியேறும் மழை நீரை வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலை வழியாக கால்வாய் அமைத்து வெளியேற்றினால் மாங்காட்டில் அதிக அளவில் மழைநீர் தேங்குவது சற்று தவிர்க்கப்படும் என்றும் இதன் காரணமாகவே ஆண்டுதோறும் பெய்யும் மழையால் மாங்காடு பகுதி கடும் பாதிப்பை சந்திப்பதாகவும் பொது மக்களும், அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.

    தற்போது இந்த பகுதியில் சூழ்ந்துள்ள மழை நீர் இங்கு கட்டப்பட்டுள்ள மழைநீர் கால்வாய்களை மூழ்கடித்த படி செல்லும் நிலை உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி நகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து குயிடிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.

    கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழையால் பூந்தமல்லி நகராட்சிக்குட்பட்ட திருவேங்கடம் நகர், சாய்நகர், சுந்தர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.

    தொடர்ந்து பெய்து வரும் மழையால் இந்த குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்துள்ளது. மழை நீருடன் கழிவு நீரூம் கலந்து வருவதால் துர்நாற்றம் வீசுவதுடன், நோய் தொற்று ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

    மேலும் விஷப் பூச்சிகளின் நடமாட்டமும் இருப்பதால் அப்பகுதி மக்களிடையே அச்சம் ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்தில் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்து உள்ளனர்.

    மேலும் உடனடியாக மழைநீருடன் கலந்துள்ள கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலுயிறுத்தியுள்ளனர்.

    பூந்தமல்லி பகுதியில் பல இடங்களில் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்ற மின் மோட்டார்கள் மூலம் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இருப்பினும் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்ற முடியாமல் திணறி வருகின்றனர்.

    அம்பத்தூர் பட்டரவாக்கம், மேனாம்பேடு, மாதனங்குப்பம் பகுதிகளிலும், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. பட்டரவாக்கம் சர்வீஸ் சாலையையொட்டியுள்ள பாலம் அருகில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியுள்ளதால் அந்த வழியாக செல்லும் பொது மக்கள் மிகவும் பாதிப்பை சந்தித்து வருகிறார்கள்.

    இதேபோன்று சென்னை புறநகர் பகுதிகளான புழல், செங்குன்றம், மாதவரம் உள்ளிட்ட இடங்களிலும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. போரூர் முகலிவாக்கம், திருவள்ளுவர் நகர் பகுதியிலும் ஆயிரக்கணக்கான வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்களை தீயணைப்பு வீரர்கள் படகுகள் மூலமாக மீட்டு வெளியேற்றி வருகிறார்கள்.

    சென்னை மாநகராட்சிக்குட்பட்ட சூளைமேடு எம்.எம்.டி.ஏ. காலனி காமராஜ் நகர் வினோபா தெரு, ராஜேஸ்வரி தெரு, என்.ஜி.ஓ. காலனி பகுதிகளிலும் தண்ணீர் தேங்கியுள்ளது. வியாசர்பாடி, புளியந்தோப்பு, கொளத்தூர், ஜவகர் நகர், பெரியார் நகர், ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலை, மயிலாப்பூர் பகுதிகளிலும் மழைநீர் தேங்கி இருப்பதால் மக்கள் கடும் பாதிப்பை சந்தித்தனர்.

    • திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர்ந்து மழை வெளுத்து வாங்கி வருகிறது
    • ஊத்துக்கோட்டை, சோழவரம், திருத்தணி, பொன்னேரியில் விடிய விடிய மழை கொட்டியது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர்ந்து மழை வெளுத்து வாங்கி வருகிறது. நேற்று இரவு கனமழை கொட்டித்தீர்த்தது.

    ஊத்துக்கோட்டை, சோழவரம், திருத்தணி, பொன்னேரியில் விடிய விடிய மழை கொட்டியது. இதனால் தாழ்வான இடங்களில் தண்ணீர் நிற்கிறது.

    மாவட்டத்தில் அதிகபட்சமாக திருத்தணியில் 13 செ.மீ மழை பெய்துள்ளது. மற்ற இடங்களில் பெய்த மழை அளவு (மி.மீட்டரில்) வருமாறு:-

    கும்மிடிப்பூண்டி- 32

    பள்ளிப்பட்டு- 15

    ஆர்.கே.பேட்டை- 21

    சோழவரம்- 80

    பொன்னேரி- 60

    செங்குன்றம்- 33

    ஜமீன்கொரட்டூர்- 36

    பூந்தமல்லி- 49

    திருவாலங்காடு- 6

    பூண்டி- 36

    தாமரைப்பாக்கம்- 59

    திருவள்ளூர்- 21

    ஊத்துக்கோட்டை- 95

    ஆவடி- 43

    • வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்து கனமழை கொட்டி வருகிறது.
    • பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    பெரியபாளையம:

    வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்து கனமழை கொட்டி வருகிறது. பெரியபாளையம் மற்றும் சுற்றுப் புற பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கியது.

    இதனால் தாழ்வான இடங்களில் மழை நீர் வெளியேற வழி இல்லாததால் தேங்கி நிற்கிறது. பொது மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.மேலும், மழை நீருடன்,கழிவு நீரும் கலப்பதால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    இந்தநிலையில் பெரியபாளையம் அருகே உள்ள காக்கவாக்கம் ஊராட்சியில் கண்ணன் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை நீர் 100 வீடுகளை சூழ்ந்து நிற்கிறது. இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்து நிற்கும் மழை நீரை வெளியேற்ற ஊராட்சி நிர்வாகமும், வருவாய் துறை அதிகாரிகளும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கிராமமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • மாணவர்களின் சட்டங்கள் குறித்தான கேள்விகளுக்கு வழக்கறிஞர்கள் பதில் கூறி எடுத்துரைத்தனர்.
    • மாணவர்கள் இலவச சட்ட ஆலோசனைக்கு தொடர்பு கொண்டால் வழக்கறிஞர்களை ஏற்படுத்தி ஆலோசனை வழங்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

    பொன்னேரி:

    பொன்னேரி வட்ட இலவச சட்ட உதவி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொன்னேரி அரசு மீன்வளத்துறை கல்லூரியில் விழிப்புணர்வு முகாம் பொன்னேரி வட்ட இலவச சட்ட உதவி மைய சேர்மன் மற்றும் முதன்மை சார்பு நீதிபதி பிரேமாவதி தலைமையில் நடைபெற்றது.

    இதில் மாணவர்களின் சட்டங்கள் குறித்தான கேள்விகளுக்கு வழக்கறிஞர்கள் பதில் கூறி எடுத்துரைத்தனர். மேலும் மாணவர்கள் இலவச சட்ட ஆலோசனைக்கு தொடர்பு கொண்டால் வழக்கறிஞர்களை ஏற்படுத்தி ஆலோசனை வழங்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

    இதில் கூடுதல் சார்பு நீதிபதி பாஸ்கர், முதன்மை சார்பு நீதிமன்ற அரசு கூடுதல் வழக்கறிஞர் தேவேந்திரன் பார் அசோசியேஷன் செயலாளர் வெங்கடேலு, வழக்கறிஞர் ஸ்ரீதர் பாபு மற்றும் கல்லூரி முதல்வர் ஜேஜே.ஷகிலா, மாணவர்கள் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    • அந்த வீட்டில் வசிப்பவர்கள் அருகில் உள்ள வீட்டில் இருந்ததால் அவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை
    • தீயணைப்பு நிலைய அலுவலர் சம்பத் தீயணைப்பு படையினர் மரத்தை அறுத்து அப்புறப்படுத்தினர்.

    பொன்னேரி:

    கடந்த சில நாட்களாக பொன்னேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கனத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில் பொன்னேரி அடுத்த தத்தை மஞ்சி கிராமம் பெருமாள் கோயில் தெருவில் வசிக்கும் செல்வி என்பவர் வீட்டில் சுமார் 30 ஆண்டு பழமையான மரம், வீட்டின் மேற்கூரையில் விழுந்தது. இதில் வீடு முழுவதும் சேதமானது. அந்த வீட்டில் வசிப்பவர்கள் அருகில் உள்ள வீட்டில் இருந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    இதனை அடுத்து பொன்னேரி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்ததின் பெயரில் தீயணைப்பு நிலைய அலுவலர் சம்பத் தலைமையில் வந்த தீயணைப்பு படையினர், 8 மணி நேரமாக மரத்தை அறுத்து அப்புறப்படுத்தினர். மீட்பு பணியின் போது சார் ஆட்சியர் ஐஸ்வர்யா ராமநாதன், வட்டாட்சியர் செல்வகுமார், மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி, ராமகிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • பொதுமக்கள் மின் சம்பந்தமான குறைகள் மற்றும் மின்வாரிய சட்ட விதிகளுக்கு புறம்பாக மின்சாரம் பயன்படுத்தி வருவதாக மனுவாக அளித்தனர்.
    • மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.

    பொன்னேரி:

    பொன்னேரி கோட்டத்திற்கு உட்பட்ட துணை மின் நிலையத்தில் செயற்பொறியாளர் தலைமையில் மின் நுகர்வோர் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் கலந்துகொண்ட பொதுமக்கள் மின் சம்பந்தமான குறைகள் மற்றும் மின்வாரிய சட்ட விதிகளுக்கு புறம்பாக மின்சாரம் பயன்படுத்தி வருவதாக மனுவாக அளித்தனர்.

    மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.

    • செம்பரம்பாக்கம் ஏரியில் இன்று காலை நிலவரப்படி மொத்த நீர்மட்ட உயரமான 24 அடியில், தற்போது 20.15 அடி தண்ணீர் உள்ளது.
    • செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டத்தை 21 அடியில் வைத்து கண்காணிக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

    பூந்தமல்லி:

    சென்னை புறநகர் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக குடிநீர் ஆதாரமாக உள்ள செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

    இந்த நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியில் இன்று காலை நிலவரப்படி மொத்த நீர்மட்ட உயரமான 24 அடியில், தற்போது 20.15 அடி தண்ணீர் உள்ளது. நீர் வரத்து 1510 கன அடியும், நீர் வெளியேற்றம் 500 கன அடியாகவும் உள்ளது.

    மொத்த கொள்ளளவான 3645 மில்லியன் கனஅடியில் தற்போது 2641 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறப்பது அதிகரிக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மேலும் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டத்தை 21 அடியில் வைத்து கண்காணிக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

    இதனால் மழையின் அளவையும், ஏரிக்கு வந்து கொண்டிருக்கும் நீர்வரத்தையும் 3 மணி நேரத்திற்கு ஒருமுறை அதிகாரிகள் கணக்கீடு செய்து தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    • ரேஷன் கடையில் இருந்து புகை வருவதை கண்ட பொது மக்கள் அதிர்ச்சி அடைந்து தீயணைப்பு போலீசாருக்கு தகவல்.
    • மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    பூந்தமல்லி:

    மாங்காடு அடுத்த கொளுத்தவான்சேரி பகுதியில் அரசு ரேஷன் கடை இயங்கி வருகிறது.

    இன்று காலை ரேஷன் கடையில் இருந்து புகை வருவதை கண்ட பொது மக்கள் அதிர்ச்சி அடைந்து தீயணைப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    பூந்தமல்லி, மதுரவாயல் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது தீ கொழுந்து விட்டு எரிந்தது கொண்டிருந்தது.

    இதையடுத்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் ரேஷன் கடையில் இருந்த 300 க்கும் மேற்பட்ட மூட்டைகளில் அரிசி, சர்க்கரை, பருப்பு உள்ளிட்டவை தீயில் எரிந்து நாசமானது. மேலும் காலி கோணிகளும் தீயில் எரிந்தது.

    இது குறித்து மாங்காடு போலீசார் விசாரணை மேற் கொண்டனர். கடைக்கு பின் பகுதியில் அமர்ந்து மது அருந்திய மர்ம நபர்கள் சிகரெட்டை பற்ற வைத்து விட்டு நெருப்பை ரேஷன் கடைக்குள் போட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    மேலும் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • ஆவடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நேற்று இரவு பலத்த மழை பெய்து நீர் நிலைகள் நிரம்பி உள்ளன.
    • ஏரி நிரம்பி உபரி நீரானது குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்து உள்ளது.

    ஆவடி:

    ஆவடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நேற்று இரவு பலத்த மழை பெய்து நீர் நிலைகள் நிரம்பி உள்ளன.இந்த நிலையில் ஆவடியிலுள்ள கோவில்பதாகை ஏரி 570 ஏக்கர் பரப்பளவில் நீர் நிறைந்து காணப்படுகிறது.

    இந்த ஏரி நிரம்பி உபரி நீரானது குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்து உள்ளது.இரு தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம் வடியாததால் பொதுமக்கள் வெளியே வர முடியாமல் அவர்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

    கணபதி நகர் பகுதி வழியாக உபரி நீரானது வெளியேறுவதால் அங்குள்ள 100-க்கும் மேற்பட்ட வீடுகளை சுற்றி முழங்கால் அளவு நீர் தேங்கியுள்ளது.

    ×