என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    சென்னை-புறநகர் பகுதிகளில் கனமழை: 1000 வீடுகளில் தண்ணீர் புகுந்தது
    X

    சென்னை-புறநகர் பகுதிகளில் கனமழை: 1000 வீடுகளில் தண்ணீர் புகுந்தது

    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே விட்டு விட்டு மழை பெய்து கொண்டே இருக்கிறது.
    • பல்வேறு ஊராட்சிகளில் இருந்து வரக்கூடிய மழைநீர் அனைத்தும் மாங்காட்டில் ஒன்று சேர்ந்து கலப்பதால் இந்த பகுதி முழுவதும் மழை நீர் தேங்கி உள்ளது.

    பூந்தமல்லி:

    தமிழகத்தில் கடந்த 10-ந் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக மழை விட்டு விட்டு பெய்து கொண்டே இருக்கிறது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே விட்டு விட்டு மழை பெய்து கொண்டே இருக்கிறது. இதனால் மழைநீர் தேங்குவதும், பின்னர் வடிவதுமாக காட்சி அளித்துக் கொண்டே உள்ளது.

    இந்த நிலையில் இடி மின்னலுடன் நேற்று இரவு கொட்டி தீர்த்த கனமழையால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மீண்டும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. குறிப்பாக பூந்தமல்லி, மாங்காடு அதன் சுற்று வாட்டார பகுதிகளில் பெய்த கனமழையால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடிங்கியுள்ளது.

    மாங்காடு ஓம்சக்தி நகர், சக்கரா நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. குன்றத்தூர்-மாங்காடு சாலை வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.

    ஓம் சக்தி நகர் பகுதியில் கீழ்தளத்தில் உள்ள 1000-க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்து வீட்டில் இருந்த பொருட்களும் நாசமாகி இருக்கிறது.

    இதனால் மக்கள் தங்களது வீட்டில் இருந்து மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு மழைக்காலத்திலும் இது போன்ற பாதிப்புகளை சந்தித்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

    ஓம்சக்தி நகர் சந்திப்பில் உள்ள கால்வாய் வழியாக தண்ணீர் வெளியேற முடியாத அளவுக்கு வெள்ளம் தேங்கியுள்ளது. இதனால் ஜே.சி.பி. எந்திரம் மூலம் கால்வாயை உடைத்து தண்ணீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது.

    குன்றத்தூர்-மாங்காடு சாலையில் இடுப்பளவுக்கு தண்ணீர் ஓடுவதால் வாகன ஓட்டிகளும் அந்த வழியாக நடந்து சென்றவர்களும் கடும் பாதிப்பை சந்தித்தனர். இன்று காலையில் இந்த சாலையை கடந்து சென்றவர்கள் உயிரை கையில் பிடித்த படியே நடந்து சென்றனர்.


    இதனால் மாங்காடு பகுதி தனி தீவு போல காட்சி அளிக்கிறது. இந்த பகுதியில் மழை நீர் தேங்குவது ஒவ்வொரு மழைகாலத்திலும் வாடிக்கையாகவே உள்ளது என்றும், இதனால் மழைகாலம் தொடங்கி விட்டாலே நிம்மதி இழந்து தவிக்கும் நிலை ஏற்பட்டு விடுகிறது என்று அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர்.

    மாங்காடு நகராட்சிக்கு உட்பட்ட ஓம் சக்தி நகர், ஜனனி நகர், சாதிக் நகர், சக்கரா நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை நீர் குளம் போல் தேங்கியுள்ளது.

    மேலும் மழை நீரை அகற்ற நகராட்சி அதிகாரிகள் ஆங்காங்கே மின்மோட்டார்கள் வைத்து மழை நீரை அகற்றினாலும் மழை நீர் சற்றும் குறைந்த பாடில்லை இந்த நிலையில் குன்றத்தூர் - குமணன்சாவடி சாலை, ஓம் சக்தி நகர் பகுதியில் கட்டப்பட்ட கால்வாயின் ஒரு பகுதியை ஜேசிபி எந்திரம் கொண்டு உடைத்து மழை நீரை அதிக அளவில் வெளியேற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.

    இதனால் அந்த சாலையில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. பல்வேறு ஊராட்சிகளில் இருந்து வரக்கூடிய மழைநீர் அனைத்தும் மாங்காட்டில் ஒன்று சேர்ந்து கலப்பதால் இந்த பகுதி முழுவதும் மழை நீர் தேங்கி உள்ளது.

    பூந்தமல்லி நகராட்சி மற்றும் நான்கு ஊராட்சிகளிலிருந்து வெளியேறும் மழை நீரை வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலை வழியாக கால்வாய் அமைத்து வெளியேற்றினால் மாங்காட்டில் அதிக அளவில் மழைநீர் தேங்குவது சற்று தவிர்க்கப்படும் என்றும் இதன் காரணமாகவே ஆண்டுதோறும் பெய்யும் மழையால் மாங்காடு பகுதி கடும் பாதிப்பை சந்திப்பதாகவும் பொது மக்களும், அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.

    தற்போது இந்த பகுதியில் சூழ்ந்துள்ள மழை நீர் இங்கு கட்டப்பட்டுள்ள மழைநீர் கால்வாய்களை மூழ்கடித்த படி செல்லும் நிலை உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி நகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து குயிடிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.

    கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழையால் பூந்தமல்லி நகராட்சிக்குட்பட்ட திருவேங்கடம் நகர், சாய்நகர், சுந்தர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.

    தொடர்ந்து பெய்து வரும் மழையால் இந்த குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்துள்ளது. மழை நீருடன் கழிவு நீரூம் கலந்து வருவதால் துர்நாற்றம் வீசுவதுடன், நோய் தொற்று ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

    மேலும் விஷப் பூச்சிகளின் நடமாட்டமும் இருப்பதால் அப்பகுதி மக்களிடையே அச்சம் ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்தில் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்து உள்ளனர்.

    மேலும் உடனடியாக மழைநீருடன் கலந்துள்ள கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலுயிறுத்தியுள்ளனர்.

    பூந்தமல்லி பகுதியில் பல இடங்களில் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்ற மின் மோட்டார்கள் மூலம் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இருப்பினும் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்ற முடியாமல் திணறி வருகின்றனர்.

    அம்பத்தூர் பட்டரவாக்கம், மேனாம்பேடு, மாதனங்குப்பம் பகுதிகளிலும், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. பட்டரவாக்கம் சர்வீஸ் சாலையையொட்டியுள்ள பாலம் அருகில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியுள்ளதால் அந்த வழியாக செல்லும் பொது மக்கள் மிகவும் பாதிப்பை சந்தித்து வருகிறார்கள்.

    இதேபோன்று சென்னை புறநகர் பகுதிகளான புழல், செங்குன்றம், மாதவரம் உள்ளிட்ட இடங்களிலும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. போரூர் முகலிவாக்கம், திருவள்ளுவர் நகர் பகுதியிலும் ஆயிரக்கணக்கான வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்களை தீயணைப்பு வீரர்கள் படகுகள் மூலமாக மீட்டு வெளியேற்றி வருகிறார்கள்.

    சென்னை மாநகராட்சிக்குட்பட்ட சூளைமேடு எம்.எம்.டி.ஏ. காலனி காமராஜ் நகர் வினோபா தெரு, ராஜேஸ்வரி தெரு, என்.ஜி.ஓ. காலனி பகுதிகளிலும் தண்ணீர் தேங்கியுள்ளது. வியாசர்பாடி, புளியந்தோப்பு, கொளத்தூர், ஜவகர் நகர், பெரியார் நகர், ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலை, மயிலாப்பூர் பகுதிகளிலும் மழைநீர் தேங்கி இருப்பதால் மக்கள் கடும் பாதிப்பை சந்தித்தனர்.

    Next Story
    ×