என் மலர்
திருவள்ளூர்
- பொன்னேரி நகராட்சி பகுதிகளில் தெரு நாய்கள் அதிகமாக காணப்படுகிறது.
- வெறி நாய் கடித்ததில் பலத்த காயம் அடைந்த 6 பேர் பொன்னேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பொன்னேரி:
பொன்னேரி நகராட்சி பகுதிகளில் தெரு நாய்கள் அதிகமாக காணப்படுகிறது. அவை அவ்வப்போது வாகனங்கள் மற்றும் தெருக்களில் நடந்து செல்பவர்களை விரட்டி, விரட்டி கடித்து வருகிறது. வெறி நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என்ற பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில் தேவமா நகர் பகுதியில் சுற்றி வந்த வெறி நாய்கள் நேற்று ஒரே நாளில் ஒரு குழந்தை உட்பட 12 பேரை விரட்டி, விரட்டி கடித்தது. இதனால் அச்சம் அடைந்த பொதுமக்கள் தப்பிக்க ஓட்டம் பிடித்தனர்.
வெறி நாய் கடித்ததில் பலத்த காயம் அடைந்த 6 பேர் பொன்னேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வெறிநாய்களை பிடிக்க உடனடியாக பொன்னேரி நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- 2 வாலிபர்களும் காயத்ரி கையில் ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் இருந்த பணப்பையை பறித்து தப்பி சென்று விட்டனர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரியபாளையம்:
பெரியபாளையம் அருகே உள்ள கல்பட்டு ஊராட்சி ஆவாஜிப்பேட்டை எம்.ஜி.எம் நகரில் வசித்து வருபவர் காயத்ரி. மகளிர் சுய உதவி குழு உறுப்பினர். இவர் மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த ஜோதிமா என்பவருடன் பெரியபாளையத்தில் உள்ள நிதி நிறுவனத்தில் ரூ.1.70 லட்சம் கடன் வாங்கினார்.
பின்னர் இதற்கான காசோலையை வெங்கல் கிராமத்தில் உள்ள கனரா வங்கியில் பணமாக பெற்றனர். இதையடுத்து இருவரும் பஸ் மூலம் வெங்கல்- சீதஞ்சேரி நெடுஞ்சாலையில் கல்பட்டு கூட்டுச் சாலையில் இறங்கினர்.
அங்கிருந்து தங்களது வீடு நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது மின்னல் வேகத்தில் வந்த மோட்டார் சைக்கிள் திடீரென காயத்ரி, ஜோதிமா மீது மோதியது. இதில் அவர்கள் நிலைதடு மாறி கீழே விழுந்தனர். உடனே மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களும் காயத்ரி கையில் ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் இருந்த பணப்பையை பறித்து தப்பி சென்று விட்டனர்.
இது குறித்து ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சாரதி தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மோட்டார் சைக்கிளில் மோதி சுய உதவி குழு பெண்களிடம் இருந்து பணப்பையை பறித்துச் சென்ற சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- மோட்டார் சைக்கிள் திடீரென ஜிம் பயிற்சியாளர் சரவணன் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியது.
- போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் அடுத்த தண்ணீர் குளம் பகுதியை சேர்ந்தவர் அன்பு. இவரது மகன் சரவணன்(வயது31). இவர் திருவள்ளூரில் உள்ள தனியார் உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சியாளராக பணிபுரிந்து வந்தார்.
நேற்று இரவு அவர் மோட்டார் சைக்கிள் திருவள்ளூரில் இருந்து தண்ணீர் குளம் நோக்கி சென்று கொண்டிருந்தார். திருவள்ளூர் அடுத்த ராமாபுரம் பஸ் நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே திருவள்ளூர் நோக்கி வேகமாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் திடீரென ஜிம் பயிற்சியாளர் சரவணன் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியது.
இதில் சரவணன் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சரவணன் பரிதாபமாக இறந்து போனார்.
இந்த விபத்தில் மற்றொரு மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த திருவள்ளூர் அடுத்த ஒதிக்காடு எம்.ஜி.ஆர் தெருவை சேர்ந்த நாகராஜ் (26) என்பவரும் படுகாயம் அடைந்தார்.
அவருக்கு சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து திருவள்ளூர் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
- பாலிடெக்னிக் மாணவன் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டான்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர்:
ஆவடி ரெயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரெயில் முன் பாய்ந்து மாணவன் தற்கொலை செய்து சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த வந்த போலீசார் தற்கொலைசெய்து கொண்ட மாணவனின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டார்.
விசாரணையில், வகுப்பறையில் செல்போன் பயன்படுத்தியதற்காக ஆசிரியர் திட்டியதால் மனஉளைச்சல் அடைந்த பாலிடெக்னிக் மாணவன் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
- இந்தியாவில் பொறியியல் படிப்புக்கு நல்ல வாய்ப்பு உள்ளது.
- மாணவர்கள் திறமையுடன் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
பொன்னேரி:
பொன்னேரியை அடுத்த பஞ்செட்டியில் உள்ள தனியார் தொழில்நுட்பக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
இதில் தெலுங்கானா மற்றும் புதுவை மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்தியாவில் பொறியியல் படிப்புக்கு நல்ல வாய்ப்பு உள்ளது. இதனை மாணவர்கள் திறமையுடன் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எனது மகிழ்ச்சிக்கும், பணிக்கும் எல்லை இல்லை. திமிங்கலங்கள் இடையூறு செய்தாலும் எனக்கு கவலை இல்லை. நான் தமிழச்சி, தமிழ் குடிமகள், தமிழ்நாட்டைச் சேர்ந்தவள். அதனால்தான் தமிழகத்தில் கருத்து சொல்வதற்கு முழு உரிமை இருக்கிறது. கருத்து சுதந்திரம் எனக்கும் இருக்கிறது என்பதை அனைத்து கட்சி சகோதரர்களும் புரிந்து கொள்ள வேண்டும்.
ஏழு பேர் விடுதலை என்பது நீதிமன்றத்தில் கிடைத்த தீர்ப்பு. இது குறித்து விமர்சனம் செய்ய விரும்பவில்லை.
நீட் தேர்வு, 10 சதவீத இட ஒதுக்கீடு போன்ற நீதிமன்ற தீர்ப்புகளை தமிழகத்தில் சிலர் ஏற்றுக்கொள்ளாத நிலையில் தங்களுக்கு சாதகமான நீதிமன்ற தீர்ப்புகளை மட்டும் கொண்டாடுகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மழை நீர் தேங்கி உள்ளதால் மாணவ-மாணவிகள் அவதி அடைந்து வருகிறார்கள்.
- ஆக்கிரமிப்பு சாலையை மீட்க கோரி அப்பகுதி மக்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மீஞ்சூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 15-வது வார்டு மகேஷ் குமார் நகர் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பதிக்குச் செல்லும் சாலை ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதால் அப்பகுதி மக்கள் ஒரு கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்லும் நிலை உள்ளது. தற்போது அப்பகுதியில் மழை நீர் தேங்கி உள்ளதால் மாணவ-மாணவிகள் அவதி அடைந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் ஆக்கிரமிப்பு சாலையை மீட்க கோரி அப்பகுதி மக்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் கவுன்சிலர் பரிமளா அருண்குமார் பேச்சுவார்த்தை நடத்தினார். இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
- பொன்னேரி அடுத்த சிறுவாக்கம் மூலதாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன்.
- பொன்னேரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பொன்னேரி:
பொன்னேரி அடுத்த சிறுவாக்கம் மூலதாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் (வயது55). கூலித் தொழிலாளி. இவர் அருகில் உள்ள மேட்டுப்பாளையம் டீக் கடையில் டீ குடிப்பதற்காக வந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே சீனிவாசன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பொன்னேரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- பொன்னேரி லட்சுமிபுரம் அணைக்கட்டு முழுவதும் நிரம்பி வழிகிறது.
- மேம்பால பணியை மழை காலம் முடிந்ததும் தொடங்கி விரைவில் முடிக்க வேண்டும் என்று கிராமமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
பெரியபாளையம்:
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் கர்னீத் மலைப் பகுதியில் தொடங்கும் ஆரணி ஆறு பிச்சாட்டூர் அணையின் முனைப்பை கடந்து தமிழக பகுதியான ஊத்துக்கோட்டை, பெரிய பாளையம், ஆரணி, பொன்னேரி வழியாக லட்சுமிபுரம் அணைக்கட்டை கடந்து பழவேற்காடு முகத்துவாரம் வழியாக கடலில் கலக்கின்றது.
இந்தநிலையில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் பொன்னேரி லட்சுமிபுரம் அணைக்கட்டு முழுவதும் நிரம்பி வழிகிறது. அணைக்கட்டில் இருந்து 4300 கன அடி மழைநீர் வெளியேறி ஏ.ரெட்டிபாளையம் தடுப்பணைக்கு சென்று அங்கிருந்து 3800 கன அடி நீர் முகத்துவாரம் வழியாக பழவேற்காடு கடலில் கலக்கிறது. லட்சுமிபுரம் அணைக்கட்டில் இருந்து செல்லும் உபரி நீரால் பெரும்பேடு மற்றும் காட்டூர் தத்தை மஞ்சி ஏரிகள் முழுகொள்ளவை எட்டி உள்ளது.
பொன்னேரி, மீஞ்சூர், சோழவரம், காட்டூர், தத்தை மஞ்சி, கல்பாக்கம், கோளூர், திருப்பாலைவனம், வஞ்சி வாக்கம், மெதுர், காட்டூர், வேலூர், தேவம்பட்டு, மடிமை கண்டிகை, அத்தமஞ்சேரி பெரும்பேடுக்குப்பம், உள்ளிட்ட பகுதிகளில் நெற்பயிர்களில் மழை நீர் வெளியேற முடியாமல் தேங்கி காணப்படுகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இதற்கிடையே ஆரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பெரியபாளையம் அருகே உள்ள புதுப்பாளையம்-அஞ்சாத்தம்மன் கோவில் இடையே உள்ள தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கி உள்ளது. இதேபோல், கும்மிடிப்பூண்டி ஒன்றியம் மங்களம் ஊராட்சியில் மங்களம்-ஆரணி இடையே ஆரணி ஆற்றில் பொது மக்கள் சார்பில் அமைக்கப்பட்ட சிறிய தரைப்பாலத்தையும் மூழ்கடித்து தண்ணீர் செல்கிறது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் ஆற்று வெள்ளத்தை கடந்து செல்வததை தடுக்கும் வகையில் தரைப்பாலங்கள் உள்ள இடத்தில் ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சாரதி உத்தரவின் பேரில் தடுப்புகளை அமைத்து போக்கு வரத்தை தடை செய்தனர்.
இதனால் 25-க்கும் மேற்பட்ட கிராமங்கள் போக்குவரத்து இன்றி துண்டிக்கப்பட்டது. இப்பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்திற்கு மாற்றுப் பாதையில் சுற்றிக் கொண்டு பெரியபாளையம் சென்று அங்கிருந்து மற்ற இடங்களுக்கு செல்கிறார்கள். ஏற்கனவே ரூ.20 கோடி செலவில் புதுப்பாளையம்-அஞ்சாத்தம்மன் கோவில் இடையே உயர் மட்ட மேம்பாலம் கட்ட இந்த மாதம் அரசு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. இந்த மேம்பால பணியை மழை காலம் முடிந்ததும் தொடங்கி விரைவில் முடிக்க வேண்டும் என்று கிராமமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து மழை வெளுத்து வாங்கி வருகிறது.
- பலத்த மழை காரணமாக தற்போது கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம் பாய்கிறது.
திருத்தணி:
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து மழை வெளுத்து வாங்கி வருகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து கன மழை கொட்டி தீர்த்தது. இதனால் ஏரி,குளங்களுக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது. மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஏரிகள் முழுகொள்ளவை எட்டி உள்ளன.
பலத்த மழை காரணமாக தற்போது கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம் பாய்கிறது. மேலும் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே பாயும் பாலாறு திருவாலங்காடு அருகே கொசஸ்தலை ஆற்றில் கலக்கிறது. இதனால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
இதன் காரணமாக திருவாலங்காடு அடுத்த குப்பம் கண்டிகையில் கொசஸ்தலை ஆற்றில் அமைக்கப்பட்ட தரைப்பாலம் மூழ்கியது. ஏற்கனவே தண்ணீர் அதிக அளவு சென்றதால் கடந்த வாரம் தரைப்பாலம் சேதமடைந்து இருந்தது.
இந்த நிலையில் வெள்ளப்பெருக்கு காரணமாக தற்போது இந்த தரைப்பாலம் உடைந்தது. இதனால் சுற்றி உள்ள 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தவிப்பில் உள்ளனர். அவர்கள் திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல முடியாமல் தவிக்கிறார்கள்.
சேதமடைந்த தரைப்பாலத்திற்கு பதிலாக அப்பகுதியில் புதிய பாலம் அமைக்க வேண்டும் என்று கிராமமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- பலத்த மழை காரணமாக குடிசை வீடு இடிந்து விழுந்ததில் தொழிலாளி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- உயிருக்கு போராடிய முனியம்மாள் மற்றும் சுமித்தை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் அருகே உள்ள சிற்றம்பாக்கம் கிராமம், பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் தேவன்(வயது67), கூலித்தொழிலாளி. இவரது மனைவி முனியம்மாள்(60). இவர்கள், பேரன் சுமித்துடன்(14) குடிசை வீட்டில் வசித்து வந்தனர். நேற்று இரவு வழக்கம் போல் சாப்பிட்டுவிட்டு 3 பேரும் வீட்டில் தூங்கினர்.
கடந்த 3 நாட்களாக திருவள்ளூர் மற்றும் சுற்று வட்டார பகுதியில் தொடர்ந்து கனமழை கொட்டியது. பலத்த மழை காரணமாக தேவனின் குடிசைவீட்டின் மண் சுவர் முழுவதும் நனைந்து இருந்தது. இந்த நிலையில் இன்று அதிகாலை பலத்த சத்தத்துடன் குடிசை வீடு திடீரென இடிந்து தூங்கிக் கொண்டிருந்த தேவன், அவரது மனைவி முனியம்மாள் மற்றும் பேரன் சுமித் மீது விழுந்தது.
இதில் பலத்த காயம் அடைந்த தேவன் சம்பவ இடத்திலேயே பலியானார். முனியம்மாள் மற்றும் பேரன் சுமித் ஆகியோர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தனர்.
அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்த போது குடிசை வீடு இடிந்து தேவன் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் உயிருக்கு போராடிய முனியம்மாள் மற்றும் சுமித்தை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் கடம்பத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பலியான தேவனின் உடல் பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது. பலத்த மழை காரணமாக குடிசை வீடு இடிந்து விழுந்ததில் தொழிலாளி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- சிறுவனூர் அருகே ஊத்துக்கோட்டை- திருவள்ளூர் நெடுஞ்சாலையில் வந்தபோது திடீரென நிலை தடுமாறிய தேவி மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தார்.
- பலத்த காயமடைந்த தேவியை மீட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூர், நேதாஜி சாலையை சேர்ந்தவர் தேவி (வயது44). இவர் அ.தி.மு.க.வில் திருவள்ளூர் நகர இணை செயலாளராக இருந்தார். கடந்த 8-ந்தேதி தேவி, உறவினரான அறிவு செல்வன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் பூண்டியில் இருந்து திருவள்ளூர் நோக்கி வந்து கொண்டிருந்தார்.
சிறுவனூர் அருகே ஊத்துக்கோட்டை- திருவள்ளூர் நெடுஞ்சாலையில் வந்தபோது திடீரென நிலை தடுமாறிய தேவி மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த தேவியை மீட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி தேவி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து புல்லரம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- அச்சரவாக்கம் ஏரியில் மீனாட்சி பிணமாக கிடந்தார்.
- திருக்கழுகுன்றம் போலீசிலும் புகார் செய்யப்பட்டது.
திருக்கழுகுன்றம் அடுத்த ரத்தினாபுரம் பகுதியை சேர்ந்தவர் மீனாட்சி (வயது85). கடந்த மாதம் 31-ந்தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரை உறவினர்கள் தேடி வந்தனர். இது குறித்து திருக்கழுகுன்றம் போலீசிலும் புகார் செய்யப்பட்டது.
இந்தநிலையில் அச்சரவாக்கம் ஏரியில் மீனாட்சி பிணமாக கிடந்தார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.






