என் மலர்
திருவள்ளூர்
- பல்வேறு பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட முகவர்களை நியமித்து தீபாவளி பண்டு சீட்டுக்கு பணத்தை வசூலித்தார்.
- தீபாவளி நெருங்கியும் பணம் கட்டியவர்களுக்கு உரிய பொருட்கள் வழங்காமல் இருந்தார்.
திருவள்ளூர்:
வெங்கல் அடுத்த மாலந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜே.பி.ஜோதி. இவர் தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலையில் தீபாவளி சீட்டு நடத்திவந்தார்.
மாதம் ரூ.1000 செலுத்தினால் 4 கிராம் தங்கம் மற்றும் 40 கிராம் வெள்ளி நாணயத்துடன் பட்டாசு, வெள்ளி பாத்திரங்கள் மளிகை பொருட்கள் வழங்குவதாகவும், மாதம் 500 செலுத்தினால் 2 கிராம் தங்கத்துடன் ஏனைய பொருட்களும் வழங்கப்படும் என்றும் அறிவித்து பணம் வசூலித்தார்.
மேலும் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட முகவர்களை நியமித்து தீபாவளி பண்டு சீட்டுக்கு பணத்தை வசூலித்தார். தீபாவளி நெருங்கியும் பணம் கட்டியவர்களுக்கு உரிய பொருட்கள் வழங்காமல் இருந்தார்.
இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் அலுவலகம் மற்றும் கலெக்டர் அலுவலகத்தில் புகார் கொடுத்தனர். இதனால் ஜே.பி.ஸ்டார் ஏஜென்சி கடைகள் அனைத்தையும் மூடிவிட்டு உரிமையாளர் ஜே.பி.ஜோதி தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் திருவள்ளூர் அடுத்த காக்களூர் ஊராட்சி அப்பாசாமி சாலையில் உள்ள ஜே.பி.ஜோதிக்கு சொந்தமான கடையில் இருந்து இரவு நேரத்தில் பொருட்களை வேனில் ஏற்றுவதை அறிந்து உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
திருவள்ளூர் தாலுக்கா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனால் முகவர்களாக செயல்பட்டவர்கள் மற்றும் தீபாவளி சீட்டு போட்டவர்கள் என 50-க்கும் மேற்பட்டோர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் மற்றும் கலெக்டர் அலுவலகத்தில் மீண்டும் புகார் அளித்தனர்.
அதில், திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் சுமார் ரூ.25 கோடி ரூபாய் வரை மோசடி செய்தவர் மீது புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் முகவர்களாக செயல்பட்ட எங்களின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது. தலைமறைவான ஜே.பி.ஜோதியை கைது செய்து பணத்தை திரும்ப ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- பலத்த மழை இல்லாததால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு இன்று நீர்வரத்து மேலும் குறைந்து உள்ளது.
- புழல் ஏரிக்கு இன்று காலை நிலவரப்படி நீர் வரத்து மேலும் குறைந்து 305 கனஅடியாக உள்ளது.
திருவள்ளூர்:
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து கனமழை கொட்டி வருகிறது. திருவள்ளூர் மாவட்டத்திலும் பலத்த மழை வெளுத்து வாங்கியது.
இதனால் ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. கடந்த சில நாட்களாக கொட்டித்தீர்த்த கனமழையால் சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் பூண்டி ஏரிக்கு தொடர்ந்து அதிக அளவு தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
பூண்டி ஏரியின் மொத்த உயரம் 35 அடி. இதில் தற்போது 29.66 அடிக்கு தண்ணீர் உள்ளது. ஏரிக்கு இன்று காலை நிலவரப்படி 1420 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. 53 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
கடந்த 9-ந்தேதி நிலவரப்படி பூண்டி ஏரியின் நீர்மட்டம் 26.32 அடியாக இருந்தது. தொடர்ந்து பெய்த பலத்த மழை காரணமாக ஏரியின் நீர்மட்டம் ஒரு வாரத்தில் 3 அடி உயர்ந்து உள்ளது குறிப்பிடத்தக்கது. ஏரிக்கு தொடர்ந்து அதிக அளவு தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. ஏரி முழுவதும் தண்ணீர் நிறைந்து கடல்போல் காட்சி அளிக்கிறது.
பலத்த மழை இல்லாததால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு இன்று நீர்வரத்து மேலும் குறைந்து உள்ளது. 1003 கன அடியாக வந்து கொண்டிருந்த தண்ணீர் இன்று காலை 533 கனஅடியாக சரிந்தது. செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவான 3645 மில்லியன் கன அடியில் தற்போது நீர் இருப்பு 2799 மி.கன அடியாக உள்ளது. மொத்த உயரமான 24 அடியில் 20.78 அடிக்கு தண்ணீர் உள்ளது.
புழல் ஏரிக்கு இன்று காலை நிலவரப்படி நீர் வரத்து மேலும் குறைந்து 305 கனஅடியாக உள்ளது. ஏரியின் மொத்த கொள்ளளவு 3300 மி.கனஅடி. இதில் 2759 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரியில் இருந்து 710 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
- ஜெரினா தன் மகனை குளிக்க வைக்க வெந்நீர் வைத்தார்.
- குழந்தை அஜ்மீரை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
ஊத்துக்கோட்டை:
ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைக்குப்பம் ஊராட்சி, முஸ்லிம் நகரை சேர்ந்தவர் ரஜாக். தொழிலாளி. இவரது மனைவி ஜெரினா. இவர்களது 2 வயது மகன் அஜ்மீர்.
நேற்று காலை ஜெரினா தன் மகனை குளிக்க வைக்க வெந்நீர் வைத்தார். பின்னர் அந்த வெந்நீரை பாத்திரத்தில் ஊற்றி குளியல் அறையில் வைத்து விட்டு சோப்பை எடுக்க வெளியே வந்தார். அந்த நேரத்தில் அருகில் நின்றுகொண்டிருந்த குழந்தை அஜ்மீர் திடீரென வெந்நீர் பாத்திரத்தில் தவறி விழுந்தான். இதில் அவனது உடல் முழுவதும் வெந்து போனது. அலறல் சத்தம் கேட்டு ஜெரினா வந்து பார்த்தபோது குழந்தை வெந்நீர் பாத்திரத்தில் விழுந்து துடிப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக குழந்தை அஜ்மீரை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
பின்னர் மேல்சி கிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்து வமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த அஜ்மீர் பரிதாபமாக உயிர் இழந்தான். இதனால் அவனது குடும்பத்தினர் சோகம் அடைந்து உள்ளனர்.
இதுகுறித்து ஊத்துக்கோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த அருண் உறவினர் வீட்டு திருமணத்திற்காக மோட்டார் சைக்கிளில் கடந்த ஞாயிற்றுக்கிழமை திருநின்றவூர் சென்றார்.
- வடமதுரை ஊராட்சியில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க் அருகே வந்தபோது சாலையின் குறுக்கே நாய் ஒன்று திடீரென வந்ததால் பிரேக் போட்டார்.
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள சென்னங்காரணி ஊராட்சி மன்ற 6-வது வார்டு உறுப்பினர் அருண் பாண்டி (வயது24). தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவர் தனது உறவினர் வீட்டு திருமணத்திற்காக மோட்டார் சைக்கிளில் கடந்த ஞாயிற்றுக்கிழமை திருநின்றவூர் சென்றார்.
பின்னர் திருமணம் முடிந்து நேற்று இரவு தனது வீடு நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். திருநின்றவூர்-பெரியபாளையம் நெடுஞ்சாலையில் வடமதுரை ஊராட்சியில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க் அருகே வந்தபோது சாலையின் குறுக்கே நாய் ஒன்று திடீரென வந்ததால் பிரேக் போட்டார்.
இதில் நிலை தடுமாறி சாலையில் வைத்திருந்த இரும்பு தடுப்பில் மோதிக்கொண்டார். இந்த விபத்தில் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே அருண்பாண்டி பலியானார்.
தகவல் அறிந்த பெரியபாளையம் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பலியான வாலிபர் அருண்பாண்டி உடலை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
- கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.
- கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை வீட்டில் இருந்த தனது தாய் தேவகியிடம் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு முருகன் வெளியே சென்றார்.
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள ராள்ளபாடி கிராமத்தில் வசித்து வந்தவர் முருகன் (வயது 34). எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்தார்.
இவருக்கும் வடமதுரை, பேட்டைமேடு காலனியைச் சேர்ந்த அம்மு என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இத்தம்பதியினருக்கு கீர்த்தனா (வயது 8) என்ற மகளும், ஓவியன்(வயது 6) என்ற மகனும் உள்ளனர். கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை வீட்டில் இருந்த தனது தாய் தேவகியிடம் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு முருகன் வெளியே சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
காணாமல் போன தனது மகனை கண்டுபிடித்து தருமாறு தேவகி பெரியபாளையம் காவல் நிலையத்தில் திங்கட்கிழமை மதியம் புகார் செய்திருந்தார்.
இந்நிலையில் நேற்று மாலை ஆரணி ஆற்றில் புதுப்பாளையம்-அஞ்சாத்தம்மன் கோவில் இடையே உள்ள தரைப்பாலத்தின் அருகே தண்ணீரில் பிணம் ஒன்று மிதப்பதாக பெரியபாளையம் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்தது. எனவே, போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பிணத்தை கைப்பற்றி திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் காணாமல் போன முருகன் தண்ணீரில் மூழ்கி இறந்ததை போலீசார் உறுதி செய்தனர். வேலைக்கு சென்றவர் எப்படி ஆரணி ஆற்று நீரில் மூழ்கி பலியானார்? என போலீசார் வழக்கு பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.
- திருநின்றவூர்-பெரியபாளையம் செல்லும் சாலையில் ஒன்றிய குழு உறுப்பினரின் 2013-2014-ம் ஆண்டு நிதி ரூ.5 லட்சத்தில் அமைக்கப்பட்டு இருந்த பயணிகள் நிழற்குடையை அகற்றினர்.
- மழை, வெயில் உள்ளிட்ட பல்வேறு இயற்கை சீற்றத்தால் பயணிகள் நிழற்குடை இல்லாமல் அவதிக்கு உள்ளாகின்றனர்.
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம், தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலையில் இருந்து பெரியபாளையம்-திருநின்றவூர், திருவள்ளூர்-செங்குன்றம் ஆகிய ஊர்களுக்கு செல்லலாம். இதனால் முக்கியத்துவம் வாய்ந்த இந்த நான்கு சாலைகள் சந்திக்கும் கூட்டுச்சாலையில் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள், வியாபாரிகள், பள்ளி, கல்லூரிகள், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் வந்து செல்வார்கள்.
இந்நிலையில், தனியார் நிறுவனத்தின் மிகப்பெரிய லாரிகள் வந்து செல்ல இந்த நான்கு வழிச்சாலை சந்திக்கும் இடத்தில் ரவுண்டானா அமைப்பதாக கூறி, கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் நெடுஞ்சாலைத்துறையினர் சாலையை அகலப்படுத்தும் பணியை மேற்கொண்டனர்.
அப்பொழுது திருநின்றவூர்-பெரியபாளையம் செல்லும் சாலையில் ஒன்றிய குழு உறுப்பினரின் 2013-2014-ம் ஆண்டு நிதி ரூ.5 லட்சத்தில் அமைக்கப்பட்டு இருந்த பயணிகள் நிழற்குடையை அகற்றினர்.
சாலை விரிவாக்கத்திற்கு பின்னர் மீண்டும் அது அமைத்து தரப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் அப்போது உறுதி கூறப்பட்டது. ஆனால், அந்த நிழற்குடையை சாலை ஓரம் குப்பை தொட்டியில் போட்டு வைத்துள்ளனர். இதனால் மழை, வெயில் உள்ளிட்ட பல்வேறு இயற்கை சீற்றத்தால் பயணிகள் நிழற்குடை இல்லாமல் அவதிக்கு உள்ளாகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பயணிகள் நிழற்குடையை போர்க்கால அடிப்படையில் அங்கு அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பால் உயர்வைக் கண்டித்தும், மின்சார கட்டண உயர்வை கண்டித்தும் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- ஈரோடு மாவட்டம் அந்தியூரில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார்.
பொன்னேரி:
தமிழகத்தில் பால் உயர்வைக் கண்டித்தும், மின்சார கட்டண உயர்வை கண்டித்தும் பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. ஈரோடு மாவட்டம் அந்தியூரில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார்.
இந்நிலையில், பொன்னேரி அண்ணா சிலை அருகே பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் பொன்னேரி நகர துணைத் தலைவர் சிவகுமார் தலைமை தாங்கினார்.
மேலும், பொதுச் செயலாளர் ஏ.கே.மூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆதி கேசவன், பிறமொழி பிரிவு மாவட்டத் தலைவர் பிரகாஷ் சர்மா, மாவட்ட துணைத்தலைவர் டாக்டர் சோமு ராஜசேகர், தாட்சாயினி மற்றும் நகர நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- கடந்த சில நாட்களாக பெய்த கன மழையால் பள்ளி தலைமை ஆசிரியர் அறையில் இன்று அதிகாலை மேல்தள சிமெண்டு மின் விசிறியுடன் பெயர்ந்து விழுந்தது.
- மேல்தள சிமெண்டு பெயர்ந்து விழுந்ததில் கம்யூட்டர் உள்ளிட்ட பொருட்கள் சேதம் அடைந்தன.
திருவொற்றியூர்:
எண்ணூர் நெட்டுக்குப்பம், மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் 137 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக பெய்த கன மழையால் பள்ளி தலைமை ஆசிரியர் அறையில் இன்று அதிகாலை மேல்தள சிமெண்டு மின் விசிறியுடன் பெயர்ந்து விழுந்தது. இதில் கம்யூட்டர் உள்ளிட்ட பொருட்கள் சேதம் அடைந்தன. அறையில் யாரும் இல்லாததால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
சேதம் அடைந்த அறையை திருவொற்றியூர் மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு, உதவி ஆணையர் சங்கரன், வார்டு கவுன்சிலர் சிவக்குமார் பார்வையிட்டனர்.
- ஜெகநாதபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் 120 மாணவர்கள் படித்து வருகின்றனர்.
- பெண்கள் தங்களுக்கு 4 மாதமாக முதியோர் ஓய்வூதியம் இன்னும் வரவில்லை.
சோழவரம் அடுத்த ஜெகநாதபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் 120 மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்களுக்கு 3 வகுப்பறைகள் மட்டும் உள்ளதால் கூடுதல் வகுப்பறைகள் கேட்டு ஊராட்சி நிர்வாகம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் இதனை ஆய்வு செய்ய பொன்னேரி எம்.எல்.ஏ. துரை சந்திரசேகர் வந்தார். அப்போது அப்பகுதியை சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் தங்களுக்கு 4 மாதமாக முதியோர் ஓய்வூதியம் இன்னும் வரவில்லை. அதனை பெற்றுத்தரவேண்டும் என்று துரைசந்திரசேகர் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை விடுத்தனர்.
இதுபற்றி விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக எம்.எல்.ஏ. தெரிவித்தார். அப்போது ஊராட்சி தலைவர் மணிகண்டன் உடன் இருந்தார்.
- கர்நாடகா மாநிலத்தில் இருந்து குட்கா கடத்தி வந்து செங்குன்றம் பகுதியில் உள்ள கடைகளுக்கு சப்ளை செய்வதும் தெரிய வந்தது.
- கார் மற்றும் 200 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
திருவள்ளூர்:
திருவள்ளூர் பகுதியில் டவுன் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ பபி, சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது தேரடி வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா கடத்திச் செல்வது தெரிய வந்தது.
இதையடுத்து காரில் இருந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் காவாகவடா கிராமத்தை சேர்ந்த சங்கர்லால் (24) என்பவரை கைது செய்தனர்.
இவர் கர்நாடகா மாநிலத்தில் இருந்து குட்கா கடத்தி வந்து செங்குன்றம் பகுதியில் உள்ள கடைகளுக்கு சப்ளை செய்வதும் தெரிய வந்தது.
கார் மற்றும் 200 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
- எல்லாபுரம் ஒன்றிய தலைவர் எம்.சேகர் தலைமை தாங்கினார்.
- தமிழகம் முழுவதும் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகிறார்கள்.
பெரியபாளையம்:
தமிழகத்தில் சொத்துவரி உயர்வு, வீட்டு வரி உயர்வு, மின்கட்டணம், பால் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து பாரதிய ஜனதா கட்சியினர் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகிறார்கள்.
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் பஸ் நிலையம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், எல்லாபுரம் ஒன்றிய பாஜக சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, எல்லாபுரம் ஒன்றிய தலைவர் எம்.சேகர் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பரந்தாமன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு வேல்மாரியப்பன், ஊடகப்பிரிவு மாவட்டத் தலைவர் புருஷோத்தமன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். முடிவில், நாகராஜ் நன்றி கூறினார்.
- ஸ்ரீ சங்கரி யோகா பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் யோகாசன பயிற்சி பெற்று வருகிறார்.
- மாணவனின் சாதனை மூன்று உலக சாதனை புத்தகங்களில் இடம் பிடித்தது.
கும்மிடிப்பூண்டி:
கும்மிடிப்பூண்டி பகுதியை சேர்ந்த புண்ணியக்கோடி - கிரிஜா தம்பதியர் மகன் டி.பி.ஷர்வின்குமார் (வயது 11). கும்மிடிப்பூண்டி, ஸ்ரீ கலைமகள் வித்யாமந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், ஆறாம் வகுப்பு பயின்று வருகிறார். அதே பகுதியில் இயங்கி வரும் ஸ்ரீ சங்கரி யோகா பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், யோகாசன பயிற்சி பெற்று வருகிறார்.
இந்நிலையில் சக்கராசனத்தில் நின்றபடி, ஒரு கையை தரையில் வைத்து, ஒரு நிமிடத்தில், 78 முறை, தலையால் தரையை தொட்டு, தண்டால் எடுத்து, உலக சாதனை படைத்துள்ளார் ஷர்வின்குமார்.
இவரது சாதனை, ‛இன்டர்நேஷனல் புக் ஆப் ரெக்கார்ட்', ‛வேல்ட் வைட் புக் ஆப் ரெக்கார்ட்', ‛அசிஸ்ட் உலக சாதனை', ஆகிய மூன்று உலக சாதனை புத்தகங்களில் இடம் பிடித்தன. சாதனை படைத்த ஷர்வின்குமார், அவருக்கு யோகா பயிற்சி அளித்த சந்தியா ஆகியோருக்கு பாராட்டு குவிகிறது.






