என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    நாய் குறுக்கே வந்ததால் விபத்து- மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி
    X

    நாய் குறுக்கே வந்ததால் விபத்து- மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி

    • தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த அருண் உறவினர் வீட்டு திருமணத்திற்காக மோட்டார் சைக்கிளில் கடந்த ஞாயிற்றுக்கிழமை திருநின்றவூர் சென்றார்.
    • வடமதுரை ஊராட்சியில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க் அருகே வந்தபோது சாலையின் குறுக்கே நாய் ஒன்று திடீரென வந்ததால் பிரேக் போட்டார்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள சென்னங்காரணி ஊராட்சி மன்ற 6-வது வார்டு உறுப்பினர் அருண் பாண்டி (வயது24). தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவர் தனது உறவினர் வீட்டு திருமணத்திற்காக மோட்டார் சைக்கிளில் கடந்த ஞாயிற்றுக்கிழமை திருநின்றவூர் சென்றார்.

    பின்னர் திருமணம் முடிந்து நேற்று இரவு தனது வீடு நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். திருநின்றவூர்-பெரியபாளையம் நெடுஞ்சாலையில் வடமதுரை ஊராட்சியில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க் அருகே வந்தபோது சாலையின் குறுக்கே நாய் ஒன்று திடீரென வந்ததால் பிரேக் போட்டார்.

    இதில் நிலை தடுமாறி சாலையில் வைத்திருந்த இரும்பு தடுப்பில் மோதிக்கொண்டார். இந்த விபத்தில் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே அருண்பாண்டி பலியானார்.

    தகவல் அறிந்த பெரியபாளையம் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பலியான வாலிபர் அருண்பாண்டி உடலை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

    Next Story
    ×