என் மலர்tooltip icon

    திருவள்ளூர்

    • போலி வாஷிங் பவுடர், சோப்புகள் தயாரிக்கப்பட்டு வருவதாக சோழவரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • 500 மூட்டை சோப்பு பவுடர், 50 கேன் சோப்பு திரவம், 6 பேக்கிங் எந்திரங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    திருவள்ளூர்:

    சோழவரம் அடுத்த எடப்பாளையம் சுற்றுவட்டாரத்தில் உள்ள கிடங்குகளில் பிரபல நிறுவனத்தின் பெயரில் போலி வாஷிங் பவுடர், சோப்புகள் தயாரிக்கப்பட்டு வருவதாக சோழவரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து போலீசார் விரைந்து சென்று அங்குள்ள தனியார் தொழிற்சாலையில் சோதனை மேற்கொண்டனர். இதில் பிரபல நிறுவனத்தின் பெயரில் போலியாக வாஷிங் பவுடர் மற்றும் சோப்பு திரவம், சோப்புகள் தயாரித்து வந்தது தெரிய வந்தது.

    இதனையடுத்து 500 மூட்டை சோப்பு பவுடர், 50 கேன் சோப்பு திரவம், 6 பேக்கிங் எந்திரங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.1 கோடி ஆகும். போலி வாஷிங் பவுடர் தயாரித்து வந்த மேனேஜர் முகமது இப்ராஹிம், சூப்பர்வைசர் ரவி மற்றும் வடமாநில தொழிலாளர்கள் உள்ளிட்ட 15பேரை சோழவரம் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

    • மழையால் நோய் தொற்று ஏற்படாத வகையில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
    • முகாமில் 350 பேருக்கு சளி, இருமல், காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டத்தில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் நடத்த கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவிட்டார். இதையடுத்து மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டு முதல் நிலை ஊராட்சியில் தேங்கிய மழைநீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு மழையால் நோய் தொற்று ஏற்படாத வகையில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

    ஊராட்சித் தலைவர் சுகந்தி வடிவேல் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் எம்.டி.ஜி கதிர்வேல் முன்னிலை வகித்தார். முகாமில் 350 பேருக்கு சளி, இருமல், காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டது.

    • போலீசார் அங்கு சென்று பார்த்தபோது பவித்ரா தாலி கயிற்றால் கழுத்தை இறுக்கிய நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
    • அம்பத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜாைவ தேடி வருகின்றனர்.

    அம்பத்தூர்:

    அம்பத்தூர், கங்கை நகர், கள்ளிக்குப்பம் பகுதியில் வசித்து வந்தவர் பவித்ரா (28). இவர் கருத்து வேறுபாடு காரணமாக முதல் கணவரை பிரிந்து விட்டு கடந்த 6 மாதத்துக்கு முன்பு கள்ளிக்குப்பம், கங்கை நகரைச் சேர்ந்த ராஜா என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை 2 மணி அளவில் பவித்ரா வீட்டில் சண்டை நடப்பதாக அம்பத்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து இன்ஸ்பெக்டர் ராமசாமி, சப்-இன்ஸ்பெக்டர் முபாரக் தலைமையில் போலீசார் அங்கு சென்று பார்த்தபோது பவித்ரா தாலி கயிற்றால் கழுத்தை இறுக்கிய நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது கணவர் ராஜா மாயமாகி இருந்தார்.

    பவித்ராவின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பவித்ராவின் கணவர் தப்பி ஓடி இருப்பதால் அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டு உள்ளது.

    இதுகுறித்து அம்பத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜாைவ தேடி வருகின்றனர்.

    • பழவேற்காடு கூனங்குப்பம் பகுதியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடி தொழில் செய்து வருகிறார்கள்.
    • மீனவர்கள் ஏராளமானோர் திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    திருவள்ளூர், பழவேற்காடு கூனங்குப்பம் பகுதியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடி தொழில் செய்து வருகிறார்கள். இவர்களுக்கும் பழவேற்காடு, நடுவூர் மாதா குப்பம், ஆண்டிக்குப்பம், கோட்டைகுப்பம் ஆகிய பகுதியை சேர்ந்த மீனவர்களுக்கும் கடலுக்குள் சென்று மீன் பிடிப்பதில் தொடர்ந்து தகராறு இருந்து வருகிறது.

    இதுகுறித்து பலகட்ட பேச்சுவார்தை நடத்தியும் முடிவு எட்டப்படவில்லை. இதனால் கூனங்குப்பம் மீனவர்கள் மீன்பிடிதொழில் செய்ய முடியாத நிலை உள்ளது. இந்த நிலையில் பாதிக்கப்பட்ட கூனங்குப்பம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் ஏராளமானோர் திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரச்சினைக்கு நிரந்த தீர்வுகாணக்கோரி கோரிக்கை விடுத்தனர்.

    • உமாவிற்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது.
    • உமாவின் சகோதரர் பெருமாள் என்பவர் வெங்கல் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே உள்ள வெங்கல் கிராமம், பெருமாள் கோவில் தெருவில் வசித்து வந்தவர் உமா (வயது31). இப்ப பெண்ணுக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் இருந்து வந்தது.

    இதையடுத்து உமாவை நேற்று முன் தினம் மாலை ஆவடியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று அனுமதித்தனர். அவருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. எனவே டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர்.

    இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு உமா பரிதாபமாக பலியானார். இந்த சம்பவம் குறித்து நேற்று உமாவின் சகோதரர் பெருமாள் என்பவர் வெங்கல் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

    எனவே போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த சம்பவம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.

    • ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலிருந்து துவங்கிய பேரணியை அரசு மருத்துவர் அனுரத்னா துவக்கி வைத்தார்.
    • பல்வேறு வாக்கியங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தியபடி மாணவர்கள் ஊர்வலமாக சென்றனர்.

    பொன்னேரி:

    பொன்னேரியில் உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகள் முன்னேற்றம் குறித்த விழிப்புணர்வு நடைபெற்றது. ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலிருந்து துவங்கிய பேரணியை அரசு மருத்துவர் அனுரத்னா துவக்கி வைத்தார்.

    இதில் பங்கேற்ற பள்ளி மாணவர்கள், ஊனம் ஒரு தடையல்ல ஊன்றுகோலாய் நாம் இருந்தால் இணைவோம் முயல்வோம், ஊனம் ஒரு அடையாளம் அல்ல, சமத்துவம் சகோதரத்துவம் என பல்வேறு வாக்கியங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தியபடி பொன்னேரி பஜாரில் ஊர்வலமாக சென்றனர்.

    இதில் மேற்பார்வையாளர் ராஜேஷ் கண்ணா, ஆசிரியர் இளவரசன், ரகுநாதன் மற்றும் சிறப்பு பயிற்றுனர்கள் ஜமுனா, செபஸ்டின், சுகந்தி ரம்யா, உதவி தலைமை ஆசிரியர் சுரேஷ்,டாக்டர் ராதாகிருஷ்ணன் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் சங்க மாநிலத் தலைவர் காத்தவராயன் மற்றும் 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் இந்த பேரணியில் கலந்து கொண்டனர். மாணவர்கள் சமூகத்துடன் மாற்றுத்திறனாளி மாணவர்களை சமத்துவத்துடன் சகோதரத்துவமுடன் நடத்தப்பட்டது.

    • ரூ.2.84 கோடி மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம் கட்டப்பட்டுள்ளது
    • மாவட்ட ஊராட்சி குழு தலைவர் கே.வி.ஜி. உமாமகேஸ்வரி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்

    பெரியபாளையம்:

    தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையத்தில் ரூ.2.84 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட எல்லாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் புதிய கட்டிடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக நேற்று திறந்து வைத்தார்.

    இந்நிலையில், இந்த அலுவலகத்தில் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தராஜன், பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி ஆகியோர் குத்து விளக்கேற்றி பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

    இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் கே.வி.ஜி. உமாமகேஸ்வரி, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) செ.ஆ.ரிஷப், சார் ஆட்சியர் (பொன்னேரி) ஐஸ்வர்யா ராமநாதன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் ராஜவேல்,

    எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நடராஜன், ஸ்டாலின், ஒன்றிய பெருந்தலைவர் வடமதுரை கே.ரமேஷ், துணைப் பெருந்தலைவர்         வக்கீல் சுரேஷ், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பி.ஜே.மூர்த்தி, எல்லாபுரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் ஆ.சத்தியவேலு மற்றும் எல்லாபுரம் ஒன்றிய குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் 20 கிலோமீட்டர் சுற்றிச் செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.
    • முதியவர்கள், பெண்கள், வேலைக்கு செல்பவர்கள் என பலதரப்பட்ட மக்களும் மிகவும் அவதியுற்று வருகிறார்கள்.

    திருவள்ளூர்:

    வடகிழக்கு பருவமழையின் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆறு, ஏரி, குளங்கள் அனைத்தும் வேகமாக நிரம்பி வருகிறது. இந்த நிலையில் திருவள்ளூர் அருகே விடையூர்-கலியனூர் இடையே செல்லும் கொசஸ்தலை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக மேல்விளாகம், கலியனூர், கலியனூர் காலனி, மணவூர், நெமிலியகரம், குப்பம் கண்டிகை, இராஜபத்மாபுரம், மருதவல்லிபுரம், ஒண்டிகுடிசை, சின்னம்மாபேட்டை, ஜாகீர் மங்கலம், பழையனூர், காபுல் கண்டிகை, உள்ளிட்ட 13 கிராமங்கள் துண்டிக்கப்பட்டு உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் 20 கிலோமீட்டர் சுற்றிச் செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.

    விடையூர் கலியனூர் இணைக்கும் வகையில் கடந்த 2016- 017-ம் ஆண்டு ரூ.3 கோடி 60 லட்சம் திட்டம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வந்த மேம்பால பணி கடந்த 5 ஆண்டுகளாக பாதியில் நிறுத்தப்பட்டு கிடப்பில் போடப்பட்டு உள்ளது. தற்போது கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருப்பதால் அப்பகுதியை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவியர்கள் விடையூர் பகுதியில் உள்ள மேல்நிலைப்பள்ளிக்கு ஆற்றின் குறுக்கே பாதியில் நிறுத்தப்பட்டுள்ள மேம்பால ஏணியில் ஏறி ஆபத்தான முறையில் சென்று வரும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் முதியவர்கள், பெண்கள், வேலைக்கு செல்பவர்கள் என பலதரப்பட்ட மக்களும் மிகவும் அவதியுற்று வருகிறார்கள்.

    வருடா வருடம் பருவமழை காலங்களில் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் 13 கிராமங்கள் துண்டிக்கப்படுவதும், பள்ளி மாணவர்கள், பொதுமக்கள், வேலைக்குச் செல்லாமல் வீட்டில் முடங்கி வருவதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. இத்தகைய அவல நிலையை போக்க கிடப்பில் போடப்பட்டுள்ள மேம்பாலத்தை அரசு விரைந்து முடித்து தர வேண்டுமென அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

    • திருவள்ளூர் அடுத்த வெள்ளவேடு அருகே உள்ள நேமம் ஏரியில் தொடர் மழையின் காரணமாக ஏரி முழுவதுமாக நிரம்பி கடல் போல் காட்சி இருக்கிறது.
    • நேமம் ஏரி முழுவதுமாக நிரம்பியுள்ளதால், நேமம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 500 ஏக்கருக்கும் மேலாக பயிரிடப்பட்ட விவசாயிகள் பயன்பெறுவார்கள்.

    திருவள்ளூர்:

    வடகிழக்கு பருவ மழையின் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 5 நாட்களாக பரவலாக நல்ல மழை பெய்து வந்தது. இதன் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆறு, ஏரி, குளங்கள் அனைத்தும் வேகமாக நிரம்பியது. இந்த நிலையில் திருவள்ளூர் அடுத்த வெள்ளவேடு அருகே உள்ள நேமம் ஏரியில் தொடர் மழையின் காரணமாக ஏரி முழுவதுமாக நிரம்பி கடல் போல் காட்சி இருக்கிறது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 535 கன அடி ஆகும். தற்போது 480 கன அடி நீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு 150 கன அடி நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது.

    இதைத்தொடர்ந்து இந்த ஏரியின் மதகு எண் 2 மற்றும் 7-ல் இருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த தண்ணீரானது செம்பரம்பாக்கம் ஏரிக்கு செல்லும் இணைப்பு கால்வாய் வழியாக சென்று செம்பரப்பாக்கம் ஏரியை சென்றடையும். தற்போது நேமம் ஏரி முழுவதுமாக நிரம்பியுள்ளதால், நேமம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 500 ஏக்கருக்கும் மேலாக பயிரிடப்பட்ட விவசாயிகள் பயன்பெறுவார்கள். இந்த உபரி நீர் திறப்பை பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பழனிக்குமார், பூந்தமல்லி தாசில்தார் செல்வம் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் திறந்து வைத்தனர்.

    • பழவேற்காடு குளத்து மேடு பகுதியில் பழங்குடி கிராம மக்கள் வசித்து வருகின்றனர்.
    • திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பா.ஜ.க.வினர் காய்கறி, அரிசி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

    பழவேற்காடு குளத்து மேடு பகுதியில் பழங்குடி கிராம மக்கள் வசித்து வருகின்றனர். தற்போது பெய்த கன மழை காரணமாக அப்பகுதி முழுவதும் மழை நீர் சூழ்ந்து குடிசைகளுக்குள் புகுந்ததால் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பா.ஜ.க.வினர் காய்கறி, அரிசி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

    இதில் பாஜக மாநிலத் துணைத் தலைவர் சக்கரவர்த்தி, மாநில மீனவர் அணி தலைவர் முனுசாமி, அரசு தொடர்பு துறை தலைவர் பாஸ்கர், கே.ஆர்.வி.வெங்கடேசன், பொதுச் செயலாளர் அன்பாலையா சிவக்குமார், மாவட்ட தலைவர் செந்தில் கலந்து கொண்டனர்.

    • ஜார்க்கண்ட், பீகார், மேற்கு வங்காளம், டெல்லி, குஜராத் போன்ற வட மாநிலங்களில் இருந்தே இந்த செக்ஸ் மோசடி கும்பல் அதிகமாக கைவரிசை காட்டி வருகிறது.
    • சென்னையில் மட்டும் நாள்தோறும் இந்த மோசடி வலையில் பலர் சிக்குகிறார்கள்.

    ஹலோ...

    ஹவ் ஆர் யூ...

    என்று உங்கள் வாட்ஸ் அப்பில் இளம்பெண்ணின் புகைப்படத்தோடு குறுஞ்செய்தி வந்து விழுந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்? அதனை கண்டு கொள்ளாமல் கடந்து விடுவீர்களா? பேசுவதற்கு அழகான பெண்ணாக இருக்கிறதே? பேசித்தான் பார்ப்போமே என்று சாட்டிங்கில் ஈடுபடுவீர்களா? இதில் நீங்கள் இரண்டாம் நபராக இருந்தால் நிச்சயம் உங்கள் மானம் கப்பலேறுவது நிச்சயம்.

    இப்படித்தான் நடுத்தர வயதை தொட்ட ஒருவர் செல்போனில் இளம்பெண்ணுடன் சாட்டிங் செய்து லட்சக்கணக்கில் பணத்தை இழந்துள்ளார் என்கிறார்கள் சைபர் கிரைம் போலீசார். ஹலோ... என்று பேச தொடங்கிய அறிமுகம் இல்லாத அந்த பெண்ணுடன் எதிர் முனையில் இருந்த அந்த நபர் 'ஹாய்' சொல்லி பேச தொடங்கினார். தொடர்ந்து நீங்கள் என்ன செய்கிறீர்கள்? எந்த ஊர்? என்று கேட்டு பேசிக்கொண்டிருக்கும் போதே திடீரென அப்பெண் வாட்ஸ் அப் வீடியோ காலில் வாங்க என்ஜாய் பண்ணலாம் என்றதும் ஆசையில் அந்த நபரும் வீடியோ கால் செய்துள்ளார்.

    எதிர்முனையில் அவர் கண்ட காட்சி தூக்கி வாரி போட செய்துள்ளது. வாட்ஸ் அப்பில் சாட்டிங் செய்த பெண் உடலில் ஒட்டு துணி கூட இல்லாமல் காட்சி அளித்துள்ளார். இதை பார்த்து நடுத்தர வயதுடைய நபர் ஆடிப்போனார். ஆனால் ஆசை யாரை விட்டது. நொடிப்பொழுதில் அவரும் பிறந்த மேனிக்கு செல்ல... சில நிமிடங்கள் எதிர்முனையில் காட்சி தந்த பெண்ணை ரசித்துள்ளார்.

    அப்போது போன் இணைப்பு துண்டிக்கப்பட... அடுத்த நொடியே நடுத்தர வயதுக்காரர் செல்போனுக்கு அவரது ஆடையில்லாத போட்டோக்கள் வந்து விழுந்துள்ளன. இதை பார்த்ததும் 'ஐயோ... மானம் போச்சே... என்ன செய்ய... என்று பதறி கொண்டிருக்கும் போதே போன் வருகிறது.

    நீ... செல்போனில் வீடியோ காலில் பெண்ணை ரசித்ததை படமாக்கி வைத்துள்ளோம். நாங்கள் கேட்கும் பணத்தை அனுப்பாவிட்டால் மானம் போய் விடும். உனது உறவினர்கள், நண்பர்களின் செல்போனுக்கு போட்டோவை அனுப்பி விடுவோம் என்று எதிர்முனையில் ஒலித்த மிரட்டல் குரலால் மிரண்டு போன நடுத்தர வயதுக்காரர் லட்சங்களை இழந்து தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

    இந்த சம்பவம் ஒரு உதாரணம் தான். ஒவ்வொரு நாளும் இதுபோன்ற 'செக்ஸ்' மோசடி கும்பல் பலரையும் தங்களது வலையில் வீழ்த்தி பணம் பறித்துக்கொண்டேதான் இருக்கிறது. இதனை வெளியில் சொன்னால் மானம் போய் விடுமே என்று பயந்து பலர் வெளியில் சொல்வதே இல்லை. இதையே தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு பணம் பறிக்கும் செயல்கள் அதிகரித்து கொண்டே இருக்கின்றன. எனவே இதுபோன்ற மோசடி நபர்களிடம் சிக்காமல் இருக்க மிகவும் உஷாராக இருக்க வேண்டும் என்று எச்சரிக்கிறார் சைபர் கிரைம் போலீஸ் அதிகாரி ஒருவர்.

    இது தொடர்பாக அவர் கூறும்போது, நமது ஆசையை தூண்டிவிட்டு பணம் பறிக்கும் மோசடியான செயல்களில் இதுவும் ஒன்று. வெளிநாட்டில் இருந்தோ அல்லது வெளி மாநிலங்களில் இருந்து கொண்டோ... குழுவாக செயல்பட்டு பெண்களை பேச வைத்து ஏமாற்றுவார்கள். பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் போன் நம்பரை எடுத்து தொடர்பு கொள்வார்கள்.

    சென்னையில் மட்டும் நாள்தோறும் இந்த மோசடி வலையில் பலர் சிக்குகிறார்கள். கடந்த ஆண்டு மட்டும் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் 4 பேர் மட்டுமே தைரியமாக புகார் அளித்துள்ளனர்.

    இதுதொடர்பாக சைபர் கிரைமில் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரே ஒரு நபர் மட்டும் ரூ.17 லட்சத்தை இழந்திருக்கிறார். எனவே அறிமுகம் இல்லாத பெண்களிடம் இருந்து வரும் இதுபோன்ற அழைப்புகளை ஏற்று ஏமாற வேண்டாம் என்றும் அந்த அதிகாரி கேட்டுக்கொண்டார். இப்படி மோசடியாக பணம் பறிக்கும் கும்பலை சேர்ந்தவர்கள் வட மாநில அழகிகளை இதற்காக பயன்படுத்தி வருகிறார்கள் என்றும் சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.

    ஜார்க்கண்ட், பீகார், மேற்கு வங்காளம், டெல்லி, குஜராத் போன்ற வட மாநிலங்களில் இருந்தே இந்த செக்ஸ் மோசடி கும்பல் அதிகமாக கைவரிசை காட்டி வருகிறது. இதுபோன்ற மோசடி கும்பலை பிடிப்பது என்பது கடினமான காரியமாகவே இருந்து வருகிறது.

    எனவே ஏமாற்று பேர் வழிகளிடம் சிக்காமல் இருந்தாலே மானம் போகாமல் காக்க முடியும். பணத்தை பறி கொடுத்து விட்டு தவிப்பதையும் தவிர்க்க முடியும் என்கிறார்கள் சைபர் கிரைம் போலீசார்.

    உங்கள் போனுக்கும் எங்கேயோ இருந்து ஒரு பெண் வாங்க... பழகலாம்.. பேசலாம் என்று அழைக்கலாம். உஷாராக இருங்கள்.

    • திருவள்ளூர், லங்ககாரத் தெருவைச் சேர்ந்தவர் கஜபதி. திருவள்ளூரில் உள்ள தியேட்டரில் வேலை பார்த்து வருகிறார்.
    • வீட்டின் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு 6 பவுன் நகை மற்றும் 775 கிராம் வெள்ளிப்பொருட்கள் கொள்ளை போய் இருந்தது.

    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டை அருகே உள்ள பாலவாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜலந்தர்ரெட்டி. இவர் அருகே உள்ள பெரம்பூர் கிராமத்தில் பூ, பழச்செடிகள் விற்கும் வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் ஜலந்தர்ரெட்டி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சென்னை சென்றார். நேற்று காலை மீண்டும் வீட்டுக்கு திரும்பி வந்த போது பின்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த ரூ.1 லட்சத்து 80 ஆயிரத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.

    இது குறித்து ஜலந்தர் ரெட்டி ஊத்துக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். திருவள்ளூர், லங்ககாரத் தெருவைச் சேர்ந்தவர் கஜபதி. திருவள்ளூரில் உள்ள தியேட்டரில் வேலை பார்த்து வருகிறார்.

    இவர் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றார். பின்னர் இரவு வந்தபோது வீட்டின் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு 6 பவுன் நகை மற்றும் 775 கிராம் வெள்ளிப்பொருட்கள் கொள்ளை போய் இருந்தது. வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு கொள்ளை கும்பல் கைவரிசை காட்டி உள்ளனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் திருவள்ளூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீபபி விசாரணை நடத்தி வருகிறார்.

    ×