என் மலர்
திருவள்ளூர்
- பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட ஆறு பேர் கொண்ட கும்பலை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், தாமரைப்பாக்கம் கிராமம், எஸ்.பி.பி கார்டன் அருகே பணம் வைத்து சூதாட்டத்தில் சிலர் ஈடுபடுவதாக வெங்கல் காவல் நிலைய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசனுக்கு நேற்று மாலை ரகசிய தகவல் கிடைத்தது.
எனவே அவரது தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்பொழுது அங்கு பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட ஆறு பேர் கொண்ட கும்பலை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து ரொக்க பணம் ரூ.600- ஒரு சீட்டு கட்டு ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை செய்தனர். அவர்கள் தாமரைப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த புருஷோத்தமன் (வயது35), பிரதீப் (வயது28), மோகன் (வயது36), நாகராஜ் (வயது33), செந்தில்குமார் (வயது38), பிரகாஷ் (வயது42) என்பதும் தெரிய வந்தது. பிடிபட்ட ஆறு பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
- நெற்பயிர் விளைந்துள்ளதால் பின்னர் சர்வே செய்யும்படி நிலத்தை விற்றவர் வலியுறுத்தல்
- வருவாய்த்துறையினரும், காவல்துறையினரும் ஒப்புக் கொள்ளாததால் வாக்குவாதம்
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், சின்னம்பேடு ஊராட்சியில் தனி நபர் ஒருவருக்கு சொந்தமான சுமார் 1.40 ஏக்கர் விவசாய நிலம் ஒன்று ஆதிதிராவிட ஆரம்ப பள்ளி அருகே உள்ளது. இதில், 30 சென்ட் நிலத்தை கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்னர் அவர் விற்று விட்டாராம்.
இந்நிலையில், நிலத்தை வாங்கிய நபர் நேற்று அந்த நிலத்தை வருவாய் துறையைச் சேர்ந்த சர்வேயர் மற்றும் ஆரணி காவல் நிலைய போலீசாருடன் திடீரென அளந்து கல்பதிக்க அங்கு வந்தார். நெற்பயிர் விளைந்துள்ள அந்த விவசாய நிலத்தை அளந்து கல் பதிக்க முயன்றனர். ஆனால், நிலத்தை விற்பனை செய்தவர் தற்போது இந்த நிலத்தில் நெற்பயிர் விளைந்து அறுவடைக்கு தயாராக உள்ளது. எனவே, நெல் அறுவடை முடிந்த பின்னர் நிலத்தை அளந்து கொள்ளுங்கள். கல் பதிக்கும் பணியை சற்று காலதாமதம் செய்யுங்கள் என்று வலியுறுத்தினாராம். ஆனால், அதற்கு வருவாய்த்துறையினரும், காவல்துறையினரும் ஒப்புக் கொள்ளவில்லையாம்.
இச்செய்தி அப்பகுதியில் காட்டுத் தீயாக பரவியது. இதனால் கிராம மக்கள் ஏராளமானோர் ஒன்று திரண்டு, நெற்பயிர் சேதமாவதை தடுக்க கல் பதிக்கும் பணியை அறுவடைக்குப் பின்னர் செய்யுங்கள் என்று கூறி அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் செய்வது அறியாது வருவாய் துறையினரும், காவல்துறையினரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இப்பிரச்சினையால் சுமார் இரண்டு மணி நேரம் இப்பகுதியில் பதட்டமும், பரபரப்பும் நிலவியது.
திருவள்ளூர்:
சென்னை அரக்கோணம் ரெயில்வே மார்க்கத்தில் செவ்வாப்பேட்டை ரெயில் நிலையம் அருகே ரெயில்வே கேட் அமைந்துள்ளது.
இந்த ரெயில் நிலையத்தின் அருகே ஆவடி சாலையுடன் திருவூர் பகுதியை இணைக்கும் வகையில் கடந்த 2015-ம் ஆண்டு சுமார் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 660 மீட்டர் நீளமும் 30 மீட்டர் அகலமும் கொண்ட மேம்பாலமானது கட்டும் பணி தொடங்கி நடந்து வந்தது.
இந்த பணிகள் 60 சதவீதம் முடிவடைந்த நிலையில் பணிகள் நிறுத்தப்பட்டு 7 ஆண்டுகளாக கிடப்பில் போடப்படு உள்ளது. இதனால் செவ்வாப்பேட்டை திருவூர், அரண்வாயில் சேர்ந்த பொது மக்கள் மருத்துவம், பள்ளி கல்லூரி உள்ளிட்ட பிற பணிகளுக்கு செல்வோர் மூன்று கிலோ மீட்டர் துாரம் சுற்றி செல்லும் அவல நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில் தற்காலிகமாக செவ்வாய்பேட்டை ரெயில் நிலையம் அருகே உள்ள ரெயில்வே பாலத்தின் கீழ் செல்வதற்காக ஆயத்தப்படுத்தி கொடுத்திருந்த நிலையில் தற்போது மழையின் காரணமாக அந்த ரெயில்வே பாலத்தின் கீழ் இடுப்பளவிற்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது.
இதன் காரணமாக அவ்வழியே செல்லும் பொதுமக்கள் இருசக்கர வாகன ஓட்டிகள் பள்ளிக்குச் செல்லும் மாணவ மாணவிகள், கர்ப்பிணி பெண்கள், நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியைச் சேர்ந்த 1000-க்கும் மேற்பட்டோர் செவ்வாப்பேட்டை ரெயில் நிலையத்தில் மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென வலியுறுத்தி நேற்று மாலை புறநகர் ரெயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் இன்று மேம்பாலம் அருகே ரெயில் நிலையம் அருகே ரெயில்வே மேம்பாலத்தை விரைந்து முடிக்க வலியுறுத்தி சாலையில் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் செவ்வாப்பேட்டை-திருவூர் செல்லும் சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பூந்தமல்லி சரக உதவி ஆணையர் முத்துவேல் பாண்டி, திருவள்ளூர் வட்டாட்சியர் மதியழகன் செவ்வாப்பேட்டை இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் அதிகாரிகள் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
- திருவள்ளூர் அடுத்த மணவாளநகர், செங்கல் வராயன் தெருவைச் சேர்ந்தவர் பிரபு.
- பிரபு திருவள்ளூர் டவுன் போலீசில் புகார் கொடுத்தார்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் அடுத்த மணவாளநகர், செங்கல் வராயன் தெருவைச் சேர்ந்தவர் பிரபு (30). கூலித் தொழிலாளியான பிரபு நேற்று திருவள்ளூர் நகர போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பெரிய குப்பம், கற்குழாய் சாலையில் உள்ள அரசு டாஸ்மாக் கடைக்கு மது அருந்துவதற்காக சென்றுள்ளார்.
கற்குழாய் சாலைப் பகுதியில் சைக்கிள் ஸ்டேண்ட் நடத்தி வரும் லாரன்ஸ் என்கிற அரவிந்த் (34) என்பவர் பிரபுவை மடக்கி மது வாங்கித் தரவேண்டும் என கேட்டு தகராறு செய்துள்ளார். பணம் இல்லை என பிரபு கூறியதால் தகாத வார்த்தைகளால் பேசி, லாரன்ஸ் கையில் வைத்திருந்த பீர் பாட்டிலால் பிரபுவை அடித்துள்ளார்.
மேலும் பிரபு கொண்டு வந்த இரு சக்கர வாகனத்தை, இது திருட்டு வாகனம் என்னிடம் கொடுத்து விட்டு ஓடிவிடு என்றும் இல்லையேல் அடித்து கொலை செய்துவிடுவேன் என்றும் மிரட்டியுள்ளார்.
இது குறித்து பிரபு திருவள்ளூர் டவுன் போலீசில் புகார் கொடுத்தார். சப்-இன்ஸ்பெக்டர் ஏ. சுசீலா வழக்குப் பதிவு செய்து லாரன்சை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர்த்தேக்கங்களில் தற்போது 80 சதவீதத்திற்கும் அதிகமான நீர் இருப்பு உள்ளது.
- சென்னைக்கு குடிநீர் வழங்கும் வீராணம் ஏரியில் கடந்த ஆண்டு இதே கால கட்டத்தில் 935.2 மில்லியன் கன அடி தண்ணீர் இருந்தது.
திருவள்ளூர்:
சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர்த்தேக்கங்களில் தற்போது 80 சதவீதத்திற்கும் அதிகமான நீர் இருப்பு உள்ளது.
பூண்டி நீர்த்தேக்கத்தில் கடந்த ஆண்டு இதே கால கட்டத்தில் முழு கொள்ளளவான 3231 மில்லியன் கன அடி தண்ணீர் இருந்தது. இதனால் 22 ஆயிரம் கன அடி வரை உபரிநீர் வெளியேற்றப்பட்டு வந்தது. தற்போது பூண்டி சத்திய மூர்த்தி நீர்த்தேக்கத்தில் 1,865 மில்லியன் கன அடி தண்ணீர் மட்டுமே உள்ளது. புழல் அதன் மொத்த கொள்ளளவான 3,300 மில்லியன் கன அடியில் தற்போது 2624 மில்லியன் கன அடி உள்ளது. செம்பரம்பாக்கம் அதன் முழு கொள்ளளவான 3,645 மில்லியன் கன அடியில் தற்போது 2635 மில்லியன் கன அடி உள்ளது. கடந்த ஆண்டைவிட 15 மில்லியன் கன அடி தண்ணீர் குறைவாக உள்ளது. சோழவரத்தில் கடந்த ஆண்டு 781 மில்லியன் கன அடி தண்ணீர் இருந்தது, ஆனால் தற்போது 417 மில்லியன் கன அடியாக உள்ளது என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். திருவள்ளூர் மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகையில் முழு அளவில் 500 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது. இதில் கடந்த ஆண்டைப் போலவே சேமிப்பு உள்ளது.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் வீராணம் ஏரியில் கடந்த ஆண்டு இதே கால கட்டத்தில் 935.2 மில்லியன் கன அடி தண்ணீர் இருந்தது.
ஆனால் தற்போது 679.2 மில்லியன் கன அடி தண்ணீரே உள்ளது. இந்த 6 ஏரிகளில் நீர் இருப்பு தற்போது 8769 மில்லியன் கன அடியாக உள்ளது.
தமிழகத்தில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால் ஏரிகளில் நீர்மட்டம் மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
- திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் இம்மாத தொடக்கத்தில் கனமழை வெளுத்து வாங்கியது.
- மழை பொழிவு இல்லாததால் ஏரிக்கு நீர்வரத்து 253 கன அடியாக குறைந்துள்ளது.
பூந்தமல்லி:
திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் இம்மாத தொடக்கத்தில் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக இருக்கும் ஏரிகளில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்தானது அதிகரிக்க தொடங்கியது. இதனால் கடந்த 2-ந் தேதி முதற்கட்டமாக 100 கனஅடி உபரி திறக்கப்பட்டு பின்னர் படிப்படியாக 1000 கன அடி வரை உயர்த்தப்பட்டது.
செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த நீர்மட்டம் 24 அடியில் தற்போது 20.13அடியாகவும், மொத்த கொள்ளளவான 3465 மில்லியன் கனஅடியில் தற்போது 2635 மில்லியன் கன அடி தண்ணீரும் உள்ளது. மழை பொழிவு இல்லாததால் ஏரிக்கு நீர்வரத்து 253 கன அடியாக குறைந்துள்ளது. ஆனால் உபரிநீர் வெளியேற்றம் தொடர்ந்து 800 கன அடியாக உள்ளது. மேலும் வரும் நாட்களில் மழை பொழிவு இருந்து நீர்வரத்து அதிகரித்தால் உபரி நீர் அளவு அதிகரிக்கப்படும் எனவும், தற்போது ஏரியின் நீர்மட்டம் 20 அடியை கடந்துள்ளதால் ஏரியை கண்காணித்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
- பொன்னேரி பகுதியில் தொடர்ந்து வாகனங்கள் திருடு போவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
- போலீசார் கண்காணிப்பு கேமிரா காட்சியை வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பொன்னேரியில் உள்ள புதிய பஸ் நிலையம் அருகில் மளிகை மற்றும் காய்கறி கடை நடத்தி வருபவர் தினகரன். இவரது கடையில் ஆவூரை சேர்ந்த நீலா என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவர் வழக்கம்போல் கடைமுன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார்.
பின்னர் சிறிது நேரம் கழித்து பார்த்த போது மோட்டார் சைக்கிளை காணவில்லை. மர்ம நபர் அதனை திருடி சென்று இருப்பது தெரியவந்தது. இதேபோல் அதேபகுதியில் உள்ள காய்கறி கடையின் முன்பு நிறுத்தி இருந்த வேலு என்பவரது சைக்கிளை மர்ம நபர் திருடி சென்றுவிட்டார். இந்த காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி உள்ளது.
இதுகுறித்து பொன்னேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் கண்காணிப்பு கேமிரா காட்சியை வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பொன்னேரி பகுதியில் தொடர்ந்து வாகனங்கள் திருடு போவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
- தி.மு.க. அரசை வீட்டிற்கு அனுப்ப சட்டமன்ற தேர்தலை எதிர்பார்த்து மக்கள் காத்திருக்கிறார்கள்.
- வருகிற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் தமிழக முதல்வராகவும் பொறுப்பு ஏற்றுக் கொள்வார்.
பொன்னேரி:
பொன்னேரியில் உள்ள தர்காவில் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வின் நிரந்தர பொதுச் செயலாளராகவும், மீண்டும் தமிழக முதல்வராகவும் வர வேண்டி அ.தி.மு.க. அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் சிறப்பு பிரார்த்தனை செய்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வின் நிரந்தர பொதுச் செயலாளராகவும், வருகிற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் தமிழக முதல்வராகவும் பொறுப்பு ஏற்றுக் கொள்வார். தி.மு.க. அரசை வீட்டிற்கு அனுப்ப சட்டமன்ற தேர்தலை எதிர்பார்த்து மக்கள் காத்திருக்கிறார்கள். நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் நடைபெறும். அதில் அ.தி.மு.க. வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பிரதமர் மோடி, மத்திய மந்திரி அமித்ஷா ஆகியோரை தான் சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை என எடப்பாடி பழனிசாமி கூறியது பா.ஜனதா கட்சியில் இருந்து அ.தி.மு.க வெளியேறுவதற்கான முன்னோட்டமா என்ற கேள்விக்கு அவர் பதில் கூற மறுத்து விட்டார்.
- பொன்னேரி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் பொன்னேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- பொன்னேரி சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து இருசக்கர வாகனம் திருட்டு நடைபெறுவதாகவும் போலீசார் ரோந்து வரவேண்டும் எனவும் பொதுமக்கள், வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொன்னேரி:
பொன்னேரி அடுத்த புதிய பேருந்து நிலையம் அருகில் மளிகை மற்றும் காய்கறி கடை நடத்தி வருபவர் தினகரன். இவரது கடையில் ஆவூரை சேர்ந்த நீலா என்பவர் வேலை பார்த்து வருகிறார். நேற்று வழக்கம்போல் இருசக்கர வாகனத்தில் கடைக்கு வந்த தினகரன் கடையின் முன்பு நிறுத்திவிட்டு வேலை பார்த்து வந்தார். பின்னர் பணி முடித்து வீட்டிற்கு செல்வதற்காக வாகனத்தை தேடியபோது காணவில்லை. அருகில் தேடியும் கிடைக்காததால் கடையில் உள்ள சிசிடிவி கேமராவை பார்த்தபோது மதியம் இருசக்கர வாகனத்தில் வந்த இரு நபர்கள் பைக்கை திருடி கொண்டு செல்வது தெரியவந்தது.
இதைப் போன்று இன்று காலை காய்கறி கடையில் வேலை செய்து வருபவர் வேலு. காலையில் சைக்கிளில் வந்து கடை திறந்து வியாபாரம் செய்தார். இதற்கிடையே கடை முன்பு நிறுத்தி இருந்த சைக்கிள் திடீரென காணாமல் போனது குறித்து அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து சிசிடிவி கேமராவில் பதிவான காட்சியில் அடையாளம் தெரியாத மர்மநபர் சைக்கிளை திருடுவது பதிவாகி இருந்தது.
இதுகுறித்து பொன்னேரி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் பொன்னேரி போலீசார் விசாரித்து வருகின்றனர். பொன்னேரி சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து இருசக்கர வாகனம் திருட்டு நடைபெறுவதாகவும் போலீசார் ரோந்து வரவேண்டும் எனவும் பொதுமக்கள், வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- 50-க்கும் மேற்பட்ட தொகுப்பு வீடுகள் கடந்த சில நாளுக்கு முன்பாக பெய்த மழையால் மேற்கூரை பழுதடைந்தும், சிமெண்ட் கலவை பெயர்ந்தும் ஆபத்தான நிலையில் உள்ளது.
- பொன்னேரி எம்.எல்.ஏ. துரை சந்திரசேகர் சேதம்அடைந்த தொகுப்பு வீடுகளை ஆய்வு செய்தார்.
மீஞ்சூர் ஒன்றியம் நெய்த வாயல் ஊராட்சியில் 100-க்கும் மேற்பட்ட தொகுப்பு வீடுகள் 20 ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்டது. இந்த நிலையில் இங்குள்ள 50-க்கும் மேற்பட்ட தொகுப்பு வீடுகள் கடந்த சில நாளுக்கு முன்பாக பெய்த மழையால் மேற்கூரை பழுதடைந்தும், சிமெண்ட் கலவை பெயர்ந்தும் ஆபத்தான நிலையில் உள்ளது.
இதுகுறித்து அங்கு வசிப்பவர்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்த பொன்னேரி எம்.எல்.ஏ. துரை சந்திரசேகர் சேதம்அடைந்த தொகுப்பு வீடுகளை ஆய்வு செய்தார். அப்போது ஊராட்சி மன்ற தலைவர் பாலன் உடன் இருந்தார்.
- விபத்து ஏற்பட்டபோது வந்தே பாரத் ரெயில் 90 கி.மீட்டர் வேகத்தில் வந்ததாக தெரிகிறது.
- அபராதம் விதிக்க கன்று குட்டியின் உரிமையாளரை ரெயில்வே போலீசார் தேடி வருகிறார்கள்.
திருவள்ளூர்:
சென்னை-மைசூர் இடையேயான வந்தே பாரத் ரெயில் கடந்த வாரம் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த ரெயில் சென்ட்ரல் நிலையத்தில் இருந்து புறப்பட்டு காட்பாடி, பெங்களூரு ரெயில் நிலையத்தில் நிற்கும். பின்னர் கடைசியாக மைசூர் சென்றடையும்.
இந்த ரெயில் நேற்று மாலை அரக்கோணம் அருகே சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தபோது தண்டவாளத்தின் குறுக்கே வந்த கன்றுக்குட்டியின் மீது மோதியது.
இதில் அந்த கன்றுக்குட்டி இறந்துபோனது. விபத்து ஏற்பட்டபோது வந்தே பாரத் ரெயில் 90 கி.மீட்டர் வேகத்தில் வந்ததாக தெரிகிறது.
இதைத்தொடர்ந்து அங்கு நிறுத்தப்பட்ட வந்தே பாரத் ரெயிலின் முன் பகுதியை என்ஜின் டிரைவர் சோதனை செய்தார். இதில் ரெயிலின் முன் பகுதி லேசாக சேதம் அடைந்து இருந்தது.
பின்னர் 2 நிமிடம் தாமதமாக வந்தே பாரத் ரெயில் சென்னை நோக்கி புறப்பட்டு வந்தது.
இந்த நிலையில் ரெயில் தண்டவாளத்தில் மாடுகளை மேய்ச்சலுக்கு விட்ட அதன் உரிமையாளருக்கு அபராதம் விதிக்க ரெயில்வே அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.
ஆனால் இறந்து போன கன்று குட்டியின் உரிமையாளர் யார் என்று தெரியவில்லை. இதையடுத்து அபராதம் விதிக்க கன்று குட்டியின் உரிமையாளரை ரெயில்வே போலீசார் தேடி வருகிறார்கள்.
இதுகுறித்து தெற்கு ரெயில்வே கோட்ட அதிகாரி கூறும்போது, 'அரக்கோணம் அருகே வந்தே பாரத் ரெயில் மோதியதில் கன்றுக்குட்டி இறந்து போனது. அந்த கன்று குட்டியின் உரிமையாளரை கண்டு பிடித்து வழக்குப்பதிவு செய்து அபராதம் விதிக்கப்படும்.
தண்டவாளத்தில் கால்நடைகளை சுற்ற விட்டால். உரிமையாளர்கள் மீது ரெயில்வே சட்ட 1989-ன்படி 154-வது பிரிவின் தண்டிக்கப்படுவார்கள்' என்றார்.
- துளசி, இது குறித்து கடந்த 7 -ந்தேதி திருவள்ளூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
- துளசி தனது பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் காதலன் சதீஷ் குமாரின் வீட்டின் மூன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் அருகே உள்ள கொட்டையூர் ஊராட்சியைச் சேர்ந்தவர் துளசி(29). இவர் உறவினரான சதீஷ்குமார் என்பவரை கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்தார். திருமணம் செய்த கொள்வதாக கூறி சதீஷ்குமார் நெருக்கமாக பழகிவந்தார்.
கடந்த 4-ந் தேதி என்னை குடும்பத்தினரின் அனுமதியுடன் பதிவுத்திருமணம் செய்வதாக சதீஷ்குமார் கூறி இருந்தார். இதற்கிடையே அவர் திடீரென தலைமறைவாகி விட்டார்.
இதுபற்றி துளசி சதீஷ் குமாரின் வீட்டிற்கு சென்று கேட்ட போது 50 சவரன் நகை மற்றும் கார் கொடுக்க வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் கூறியதாக தெரிகிறது.
இதனால் அதிர்ச்சி அடையந்த துளசி, இது குறித்து கடந்த 7 -ந்தேதி திருவள்ளூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த துளசி தனது பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் காதலன் சதீஷ் குமாரின் வீட்டின் மூன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
தகவல் அறிந்ததும் மப்பேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்டாலின் அந்தோணி, சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் போலீசார் துளசியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
இதையடுத்து துளசி போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து சென்றார். இதனால் அப்பகுதியில் சிறுது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.






