என் மலர்
திருவள்ளூர்
- கணவர் இறந்த சோகத்தில் இருந்த வசந்தி வீட்டில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் அடுத்த பட்டரைப்பெரும்புதூர் குளக்கரை தெருவைச் சேர்ந்தவர் மணவாளன். விவசாயி.
இவரது மனைவி வசந்தி (வயது55). இவர்களுக்கு குழந்தை இல்லை.
கடந்த 3 மாதங்களுக்கு முன்பு உடல்நலக்கோளாறு காரணமாக மணவாளன் திடீரென உயிரிழந்தார். இதனால் வசந்தி மிகவும் மனவேதனை அடைந்தார்.அவருக்கு உறவினர்கள் ஆறுதல் கூறி வந்தனர்.
இந்தநிலையில் கணவர் இறந்த சோகத்தில் இருந்த வசந்தி வீட்டில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து திருவள்ளூர் தாலுக்கா போலீசில் புகார் செய்யப்பட்டது. சப் இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார் வசந்தியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
திருவள்ளூர் அடுத்த காக்களூர் பை பாஸ் சாலை, பழைய கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள கக்கன் தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசன்(45). கூலித் தொழிலாளி. இவரது மனைவி ரேகா.
திருவள்ளூர் நகராட்சி அலுவலகத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 3 மகன்களும் யோகலட்சுமி (9) என்ற ஒரு மகளும் உள்ளனர். சீனிவாசன் மது போதைக்கு அடிமையாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று மாலை வீட்டில் தனியாக இருந்த சீனிவாசன் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் முன்னதாக மனைவியிடம் மதுகுடிக்க பணம் கேட்டு தகராறு செய்ததாக தெரிகிறது. இது குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வீராவுக்கு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த திருப்பாச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் வீரா( வயது 34). திருத்தணி அடுத்த அருங்குளத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் (35).
நண்பர்களான இருவரும் நேற்று இரவு திருவள்ளூரில் இருந்து அருங்குளம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.பட்டரைப் பெரும்புதூர் முருகன் கோவில் அருகே வளைவில் திரும்பிய போது நிலைதடுமாறி இருவரும் மோட்டார் சைக்கிளோடு கீழே விழந்தனர்.
இதில் படுகாயம் அடைந்த அவர்களை திருவள்ளூர் தாலுக்கா சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார் மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இதில் பலத்த காயம் அடைந்த ரமேசை மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவ மனையில் அனுமதித்தனர்.
அங்கு சிகிச்சைப் பலனின்றி ரமேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். வீராவுக்கு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- காவல் நிலைய நடைமுறைகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
- மீஞ்சூர் அடுத்த ராம ரெட்டிபாளையம் துவக்கப்பள்ளி மாணவர்கள் வந்திருந்தனர்.
பொன்னேரி:
உலக குழந்தைகள் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு மீஞ்சூர் காவல் நிலையத்தில் பள்ளி மாணவர்களுக்கான விழிப்புணர்வு நடைபெற்றது. மீஞ்சூர் அடுத்த ராம ரெட்டிபாளையம் துவக்கப்பள்ளி மாணவர்கள் வந்திருந்தனர்.
காவல் நிலையத்தில் உள்ள துப்பாக்கி, வாக்கி டாக்கி, கைதியை விசாரிக்கும் அறை, கணினி அறை, காவலர்கள் குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் முறை, பதிவேடு அறை, புகார் எழுதும் முறை, ஓய்வறை, ஆகியவை மாணவர்களுக்கு காண்பிக்கப்பட்டு விளக்கம் அளிக்கப்பட்டது. பின்னர் மாணவர்களுக்கு ஜாமெட்ரி பாக்ஸ் வழங்கப்பட்டன.
காவல் உதவி ஆணையர் பிரமானந்தன், மீஞ்சூர் காவல் ஆய்வாளர்கள், சிரஞ்சீவி, டில்லி பாபு, உதவி ஆய்வாளர் சதீஷ் மற்றும் காவலர் பாலாஜி உட்பட பலர் உடனிருந்தனர்.
- அரண்வாயல் பகுதியில் வேகத்தடையில் பஸ் ஏறி இறங்கியபோது தவறி முன் மற்றும் பின்பக்க டயருக்கு இடையில் விழுந்தார்.
- பள்ளி நேரத்தில் போதுமான பஸ் இல்லாததே விபத்துக்கு காரணம் என பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் அடுத்த கூடப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபு. இவரது 14 வயது மகன் மணவாளநகர் நடேசன் அரசு மேல் நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர் கடந்த 18-ந் தேதி மாலையில் பள்ளி முடிந்ததும் அரசு மாநகர பஸ்சில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். படிக்கட்டில் தொங்கியபடி அவர் பயணம் செய்தார். அரண்வாயல் பகுதியில் வேகத்தடையில் பஸ் ஏறி இறங்கியபோது தவறி முன் மற்றும் பின்பக்க டயருக்கு இடையில் விழுந்தார்.
இதில் வலது காலில் பின் சக்கரம் ஏறி இறங்கி அவரது கால் முறிந்தது. இதையடுத்து திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு சென்னை அரசு மருத்துவ மனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து தாயார் செண்பகம் கொடுத்த புகாரின பேரில் செவ்வாப்பேட்டை போலீசார் பஸ் டிரைவர் கீழ்மணம்பேடு கிராமத்தைச் சேர்ந்த ஜெகதீசன் (46) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பள்ளி நேரத்தில் போதுமான பஸ் இல்லாததே விபத்துக்கு காரணம் என பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
- செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த நீர்மட்டம் 24 அடியில் தற்போது 19.61 அடி தண்ணீர் உள்ளது.
- மழை பொழிவு இல்லாததால் ஏரிக்கு நீர்வரத்து 163 கன அடியாக குறைந்துள்ளது.
பூந்தமல்லி:
சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரவலாக இம்மாத தொடக்கத்தில் கனமழை பெய்ததால் ஏரிகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர தொடங்கியது.
இதில் சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகளில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்தானது அதிகரிக்க தொடங்கிய நிலையில் முதற்கட்டமாக கடந்த 2-ம் தேதி 100 கனஅடி உபரி திறக்கப்பட்டு படிப்படியாக 1000 கனஅடி வரை உயர்த்தப்பட்டது.
செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த நீர்மட்டம் 24 அடியில் தற்போது 19.61 அடி தண்ணீர் உள்ளது. மொத்த கொள்ளளவான 3465 மில்லியன் கனஅடியில் தற்போது 2508 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது.
மழை பொழிவு இல்லாததால் ஏரிக்கு நீர்வரத்து 163 கன அடியாக குறைந்துள்ளது. இதனால் உபரி நீரின் வெளியேற்றம் 800 கன அடியிலிருந்து தற்போது 100 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் வரும் நாட்களில் மழை பொழிவு இருந்து நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் வெளியேற்ற கூடிய உபரி நீரின் அளவு அதிகரிக்கபடும் எனவும் தொடர்ந்து ஏரியை கண்காணித்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இம்மாதம் 2-ம் தேதியிலிருந்து தொடர்ந்து 20 தினங்களாக உபரி நீர் வெளியேப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
- பெரியபாளையம் அருகே நெய்வேலி கிராமம், மேட்டு தெருவை சேர்ந்தவர் முனியம்மாள்.
- பெரியபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே நெய்வேலி கிராமம், மேட்டு தெருவை சேர்ந்தவர் முனியம்மாள் (வயது 69). இவர் தனது வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தார்.அப்பொழுது அவ்வழியே சென்ற மாடுகள் ஒன்றோடு ஒன்று முட்டிக்கொண்டு சண்டையிட்டுக் கொண்டு ஓடி வந்து முனியம்மாளை முட்டி கீழே தள்ளியது.
இதில், படுகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று அனுமதித்தனர்.அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை முனியம்மாள் பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து பெரியபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- போலீசார் மோட்டார் சைக்கிளுடன் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
- குட்கா பொருட்களை கடத்த பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் கடம்பத்தூர் போலீசார் பறிமுதல் செய்தனர்.
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே கொசவன்பேட்டை அஞ்சாத்தம்மன் கோவில் பஸ் நிறுத்தம் அருகே நேற்று மாலை பெரியபாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருமுருகன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்பொழுது அவ்வழியே ஒரு மோட்டார் சைக்கிளில் இரண்டு வாலிபர்கள் வந்தனர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்பொழுது அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறினர். போலீசார் அவர்களை துருவித்துருவி விசாரணை செய்தபோது கொசவன்பேட்டை ஊராட்சி, பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த தமிழ்ச் செல்வன் (வயது22), அஞ்சாத்தம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்த பூபதி (வயது19) என்பதும் கஞ்சா பொட்டலங்களை மோட்டார் சைக்கிளில் கொண்டு வந்து விற்பனை செய்வதையும் ஒப்புக்கொண்டனர்.
எனவே, போலீசார் மோட்டார் சைக்கிளுடன் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் நேற்று புதுமாவிலங்கை எம்.ஜி.ஆர் நகர் வாட்டர் டேங்க் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் போலீசார் நிற்பதை கண்டதும் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு தப்பி ஓட முயன்றார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த நபரை விரட்டிச் சென்று பிடித்து விசாரித்த போது அவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பாக்கெட்டுகளை வாங்கி அவற்றை கடம்பத்தூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கடைகளில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்காக மோட்டார் சைக்கிளில் வந்தது தெரிய வந்தது.
அவரிடம் இருந்தது 9 கிலோ குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். விசாரணையில் பிடிபட்டவர் திருவள்ளூர் அடுத்த பிரயாங்குப்பம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த ராஜகோபால் (70) என தெரிய வந்தது.
போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவுசெய்து விசாரித்து வருகிறார்கள். குட்கா பொருட்களை கடத்த பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் கடம்பத்தூர் போலீசார் பறிமுதல் செய்தனர்.
வெள்ளவேடு இன்ஸ்பெக்டர் இளையராஜா மற்றும் போலீசார் ஜமீன் கொரட்டூர் பகுதியில் பெட்டி கடையில் சோதனை செய்தனர். அப்போது 30 கிலோ குட்கா வைத்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து வெள்ளமேடு போலீசார் 30 கிலோ குட்காவை பறிமுதல் செய்து திருவள்ளூர் நெடுஞ்சாலை, ஜமீன் கொரட்டூர் பகுதியை சேர்ந்த ராஜபாண்டியை கைது செய்தனர்.
- மாணவர்கள் அனைவரையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்று புகார் எழுதும் முறை கற்றுக் கொடுக்கப்பட்டது.
- ஆசிரியர்கள் துரைப்பாண்டியன், சரவணன், கோபிநாத், முகமது அக்பர் கலந்து கொண்டனர்.
ஊத்துக்கோட்டையில் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு போலீஸ் துறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாணவர்கள் அனைவரையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்று புகார் எழுதும் முறை கற்றுக் கொடுக்கப்பட்டது. மேலும் கைதிகள் அறை, ஆயுதக் கிடங்கு, ஆவண காப்பு அறை, கணினி அறை, போலீஸ் ஓய்வு அறைகள் காண்பிக்கப்பட்டன.
இதில் இன்ஸ்பெக்டர் ஏழுமலை, சப்-இன்ஸ்பெக்டர்கள் வரதராஜன், சிவா, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பழனி, ஏட்டு மாதவன், பள்ளி தலைமை ஆசிரியர் லோகநாத், உதவி தலைமை ஆசிரியர் செந்தில்வேலன், ஆசிரியர்கள் துரைப்பாண்டியன், சரவணன், கோபிநாத், முகமது அக்பர் கலந்து கொண்டனர்.
- சிறிது நேரத்தில் நீரில் மூழ்கி மணி பரிதாபமாக இறந்தார்.
- திருப்பாலைவனம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பொன்னேரி:
பொன்னேரியை அடுத்த அகரம் ஊராட்சிக்குட்பட்ட உப்பு நெல்வாயல் ஏரியில் அதே பகுதியைச் சேர்ந்த மணி (வயது 23) மற்றும் அவரது உறவினரான அருள் ஆகியோர் மீன் பிடித்தனர்.
அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற போது ஏரி பள்ளத்தில் மணி சிக்கிக் கொண்டார்.
நீச்சல் தெரியாததால் அவர் தண்ணீரில் மூழ்கினார். அருகில் இருந்த உறவினர் அவரை காப்பாற்ற முயன்றும் முடிய வில்லை.
சிறிது நேரத்தில் நீரில் மூழ்கி மணி பரிதாபமாக இறந்தார். அவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவியும், 2 மாத பெண் குழந்தையும் உள்ளது.
இதுகுறித்து திருப்பாலைவனம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- கட்டிடத்தின் திறப்பு விழா உத்தண்டி கண்டிகை அரசு பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
- மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் பள்ளி கட்டிடங்களை திறந்து வைத்தார்.
பொன்னேரியை அடுத்த அனுப்பப்பட்டு உத்தண்டி கண்டிகையில் எண்ணூர் காமராஜர் துறைமுகம் கூட்டாண்மை சமூகப் பொறுப்பு நிதியில் இருந்து மீஞ்சூர் ஒன்றியத்தில் அடங்கிய அனுப்பம்பட்டு, சிறுவாக்கம், காட்டூர், கம்மார்பாளையம் உள்ளிட்ட 8 பள்ளிகளுக்கு தலா ரூ.18.90 லட்சம் மதிப்பீட்டில் மொத்தம் ரூ.1 கோடியே 51 லட்சத்து 20 ஆயிரம் செலவில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டது. இந்த கட்டிடத்தின் திறப்பு விழா உத்தண்டி கண்டிகை அரசு பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் பள்ளி கட்டிடங்களை திறந்து வைத்தார். இதில் காமராஜர் துறைமுகம் தலைவர் சுனில் பாலிவால், பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகர், சேர்மன் ரவி, மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராமகிருஷ்ணன், ரவி, ஒன்றிய கவுன்சிலர்கள் பிரவீனா சங்கர் ராஜா, கதிரவன், பானுபிரசாத், ரமேஷ், அனுப்பம்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணவேணி அப்பாவு கலந்து கொண்டனர்.
- மதுரவாயல்-துறைமுகம் மேம்பாலம் பணி நிலுவையில் உள்ளது.
- பூந்தமல்லி, ஆவடி, மதுரவாயல் உள்ளிட்ட 6 சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பூந்தமல்லி:
திருவள்ளுர் கிழக்கு, மத்திய மற்றும் தெற்கு மாவட்ட பா.ம.க. சார்பில் அக்கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் வேலப்பன்சாவடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் பூந்தமல்லி, ஆவடி, மதுரவாயல் உள்ளிட்ட 6 சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மாவட்ட செயலாளர் கே.என்.சேகர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பா.ம.க.தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார்.
பின்னர் அன்புமணி ராமதாஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கி உள்ளது. இதற்கான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை செய்து முடிக்க வில்லை.மழைநீரை பாதுகாத்து தேக்கி வைக்க வேண்டும், சென்னையை சார்ந்த ஏரிகளை தூர்வாரி அதிக கொள்ளளவு கொண்ட ஏரிகளாக மாற்ற வேண்டும் என்று பலமுறை கூறி வருகிறோம். அந்த வேலைகள் நடக்கவில்லை.
புழல், போரூர், ரெட்டை ஏரிகளில் கழிவுகள் கலந்து வருகிறது. சென்னைக்கு புதிதாக பத்து ஏரிகளை உருவாக்க வேண்டும். ஒவ்வொரு ஏரியும் ஒரு டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட ஏரியாக உருவாக்க வேண்டும்,
இரண்டு திராவிட கட்சிகளும் அடுத்த தேர்தலை பற்றி தான் சிந்தித்து கொண்டிருக்கிறார்கள். அடுத்த தலைமுறைக்கு அல்ல. மதுரவாயல்-துறைமுகம் மேம்பாலம் பணி நிலுவையில் உள்ளது. அதனை உடனடியாக தொடங்கி முடிக்க வேண்டும். இந்த சாலை இல்லாத காரணத்தால் இன்னும் தொழிற்சாலைகள் அதிக அளவில் இங்கு வர தயக்கம் காட்டுகின்றனர்.
மெட்ரோ ரெயில் திட்டத்தை ஆவடி வரை நீட்டிக்க வேண்டும். கொசஸ்தலை ஆற்றில் 5 கிலோ மீட்டருக்கு ஒரு தடுப்பணை கட்ட வேண்டும்.மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை கருணை உள்ளத்தோடு அரசு அணுக வேண்டும். 2026-ல் பா.ம.க. தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமைப்பது குறித்தும், அதற்கு ஏற்ப வியூகங்களை 2024 நாடாளுமன்ற தேர்தலில் அமைப்போம்.
ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக அரசு சட்ட மசோதா இயற்றப்பட்டுள்ளது. அதற்கு ஆளுநர் இன்னும் கையெழுத்து இடாமல் உள்ளார். இதற்கு முன்பு அவசர சட்டத்தை கொண்டு வந்தார்கள். அதற்கு ஆளுநர் கையெழுத்து இட்டார். தற்போது இந்த மசோதாவிற்கு கையெழுத்திட்டு முழுமையான சட்டமாக மாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைந்த அமைப்பு தலைவர் ஆலப் பாக்கம் ஏ.ஆர்.டில்லிபாபு, மாவட்ட ஒருங்கிணைந்த அமைப்பு செயலாளர் சிவகோவிந்தராசு உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
- பொன்னேரி சார் ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.
- பொன்னேரி சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் குறைகளையும் பிரச்சினைகளையும் தெரிவித்தனர்.
பொன்னேரி:
பொன்னேரி சார் ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் சார் ஆட்சியர் ஐஸ்வர்யா ராமநாதன் தலைமையில் வட்டாட்சியர் செல்வகுமார் முன்னிலையில் நடைபெற்றது. இந்த கூட்டங்களில் பொன்னேரி சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் குறைகளையும் பிரச்சினைகளையும் தெரிவித்தனர். இதில் பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு காணும் வகையில் அனைத்து துறை அரசு அதிகாரிகளும் பங்கேற்க வேண்டும்.
பல்வேறு துறைகளில் முடிவு எடுக்கக் கூடிய அதிகாரிகள் பங்கேற்காமல் கடைநிலை ஊழியரை கூட்டத்திற்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இதனால் விவசாயிகளின் குறைகளுக்கு முடிவு எட்டப்படாமல் தொடர் கதையாகிறது என்று குற்றம் சாட்டினார்கள்.






