என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவள்ளூர், பெரியபாளையத்தில் கஞ்சா, குட்கா கடத்திய 3 பேர் கைது
    X

    திருவள்ளூர், பெரியபாளையத்தில் கஞ்சா, குட்கா கடத்திய 3 பேர் கைது

    • போலீசார் மோட்டார் சைக்கிளுடன் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
    • குட்கா பொருட்களை கடத்த பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் கடம்பத்தூர் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே கொசவன்பேட்டை அஞ்சாத்தம்மன் கோவில் பஸ் நிறுத்தம் அருகே நேற்று மாலை பெரியபாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருமுருகன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்பொழுது அவ்வழியே ஒரு மோட்டார் சைக்கிளில் இரண்டு வாலிபர்கள் வந்தனர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

    அப்பொழுது அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறினர். போலீசார் அவர்களை துருவித்துருவி விசாரணை செய்தபோது கொசவன்பேட்டை ஊராட்சி, பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த தமிழ்ச் செல்வன் (வயது22), அஞ்சாத்தம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்த பூபதி (வயது19) என்பதும் கஞ்சா பொட்டலங்களை மோட்டார் சைக்கிளில் கொண்டு வந்து விற்பனை செய்வதையும் ஒப்புக்கொண்டனர்.

    எனவே, போலீசார் மோட்டார் சைக்கிளுடன் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் நேற்று புதுமாவிலங்கை எம்.ஜி.ஆர் நகர் வாட்டர் டேங்க் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் போலீசார் நிற்பதை கண்டதும் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு தப்பி ஓட முயன்றார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த நபரை விரட்டிச் சென்று பிடித்து விசாரித்த போது அவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பாக்கெட்டுகளை வாங்கி அவற்றை கடம்பத்தூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கடைகளில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்காக மோட்டார் சைக்கிளில் வந்தது தெரிய வந்தது.

    அவரிடம் இருந்தது 9 கிலோ குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். விசாரணையில் பிடிபட்டவர் திருவள்ளூர் அடுத்த பிரயாங்குப்பம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த ராஜகோபால் (70) என தெரிய வந்தது.

    போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவுசெய்து விசாரித்து வருகிறார்கள். குட்கா பொருட்களை கடத்த பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் கடம்பத்தூர் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    வெள்ளவேடு இன்ஸ்பெக்டர் இளையராஜா மற்றும் போலீசார் ஜமீன் கொரட்டூர் பகுதியில் பெட்டி கடையில் சோதனை செய்தனர். அப்போது 30 கிலோ குட்கா வைத்திருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து வெள்ளமேடு போலீசார் 30 கிலோ குட்காவை பறிமுதல் செய்து திருவள்ளூர் நெடுஞ்சாலை, ஜமீன் கொரட்டூர் பகுதியை சேர்ந்த ராஜபாண்டியை கைது செய்தனர்.

    Next Story
    ×