என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பூண்டி ஏரியின் நீர்மட்டம் ஒரு வாரத்தில் 3 அடி உயர்ந்தது
- பலத்த மழை இல்லாததால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு இன்று நீர்வரத்து மேலும் குறைந்து உள்ளது.
- புழல் ஏரிக்கு இன்று காலை நிலவரப்படி நீர் வரத்து மேலும் குறைந்து 305 கனஅடியாக உள்ளது.
திருவள்ளூர்:
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து கனமழை கொட்டி வருகிறது. திருவள்ளூர் மாவட்டத்திலும் பலத்த மழை வெளுத்து வாங்கியது.
இதனால் ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. கடந்த சில நாட்களாக கொட்டித்தீர்த்த கனமழையால் சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் பூண்டி ஏரிக்கு தொடர்ந்து அதிக அளவு தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
பூண்டி ஏரியின் மொத்த உயரம் 35 அடி. இதில் தற்போது 29.66 அடிக்கு தண்ணீர் உள்ளது. ஏரிக்கு இன்று காலை நிலவரப்படி 1420 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. 53 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
கடந்த 9-ந்தேதி நிலவரப்படி பூண்டி ஏரியின் நீர்மட்டம் 26.32 அடியாக இருந்தது. தொடர்ந்து பெய்த பலத்த மழை காரணமாக ஏரியின் நீர்மட்டம் ஒரு வாரத்தில் 3 அடி உயர்ந்து உள்ளது குறிப்பிடத்தக்கது. ஏரிக்கு தொடர்ந்து அதிக அளவு தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. ஏரி முழுவதும் தண்ணீர் நிறைந்து கடல்போல் காட்சி அளிக்கிறது.
பலத்த மழை இல்லாததால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு இன்று நீர்வரத்து மேலும் குறைந்து உள்ளது. 1003 கன அடியாக வந்து கொண்டிருந்த தண்ணீர் இன்று காலை 533 கனஅடியாக சரிந்தது. செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவான 3645 மில்லியன் கன அடியில் தற்போது நீர் இருப்பு 2799 மி.கன அடியாக உள்ளது. மொத்த உயரமான 24 அடியில் 20.78 அடிக்கு தண்ணீர் உள்ளது.
புழல் ஏரிக்கு இன்று காலை நிலவரப்படி நீர் வரத்து மேலும் குறைந்து 305 கனஅடியாக உள்ளது. ஏரியின் மொத்த கொள்ளளவு 3300 மி.கனஅடி. இதில் 2759 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரியில் இருந்து 710 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.






