என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருவள்ளூர் அருகே கூவம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு-தரைப்பாலம் சேதம்
- பருவ மழையால் கூவம் ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தரைப்பாலம் மீண்டும் நேற்று சேத மடைந்தது.
- போலீசார் பாலத்தில் இரு புறமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் சத்தரை ஊராட்சியில் சத்தரை கண்டிகை வழியாக கொண்டஞ்சேரி செல்லும் நெடுஞ்சாலையில் கூவம் ஆற்றின் குறுக்கே பாலம் உள்ளது.
இந்த பாலத்தை பயன் படுத்தி, கொண்டஞ்சேரி, மப்பேடு வழியாக சுங்கு வார்சத்திரம், காஞ்சிபுரம், பூந்தமல்லி, ஸ்ரீபெரும்புதுார், தண்டலம், அரக்கோணம் சென்று வருகின்றனர்.
கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வடகிழக்கு பருவமழையில் பாலம் சேதமடைந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து நெடுஞ்சாலைத் துறையினர் 4.5 லட்சம் ரூபாய் மதிப்பில், சேதமடைந்த தரைப்பாலத்தை தற்காலிகமாக சீரமைத்தனர்.
இந்நிலையில் தற்போது பெய்து வரும் பருவ மழையால் கூவம் ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தரைப்பாலம் மீண்டும் நேற்று சேத மடைந்தது.
இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பொது மக்கள் பாதுகாப்பு கருதி மப்பேடு சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் தலைமையில் போலீசார் பாலத்தில் இரு புறமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.






