என் மலர்
திருப்பூர்
- ஆடைகள் வாங்குவதற்கு பொதுமக்கள் கடைகளுக்கு படையெடுக்க தொடங்கி உள்ளனர்.
- சாலையோரங்களில் கடை அமைத்துள்ளதால் பொதுமக்கள் நடந்து செல்வதற்கே சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
திருப்பூர்:
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் பண்டிகைக்கு தேவையான பொருட்கள் மற்றும் ஆடைகள் வாங்குவதற்கு பொதுமக்கள் கடைகளுக்கு படையெடுக்க தொடங்கி உள்ளனர்.இதனால் திருப்பூரில் முக்கிய சாலையான குமரன் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
அதேபோல் திருப்பூர் மாநகரில் காதர்பேட்டை, மத்திய பேருந்து நிலையம், மார்க்கெட் சாலை உள்ளிட்ட பகுதிகளில் சாலையோர வியாபாரிகள் கடை அமைத்துள்ளதால் பொதுமக்கள் நடந்து செல்வதற்கே சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
முக்கிய சாலைகளான காதர் பேட்டை, குமரன் சாலை,மார்க்கெட் சாலை உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து அதிகரித்து வருவதால் கூடுதலாக போலீசாரை நிறுத்தி போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- காய்கறி வெட்டும் கத்தியால் சாந்தியின் தலை மற்றும் பின் முதுகு உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக குத்தினார்.
- கொலை தொடர்பான சிசிடிவி., காட்சிகள் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
திருப்பூர்:
திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் கடந்த 1ந் தேதி நடுத்தர வயது பெண்ணின் தலையில் சரமாரியாக கத்தியால் குத்திக்கொலை செய்த நபரை பேருந்து நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த தெற்கு காவல் நிலைய போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
இதனிடையே பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்த பெண்ணை பொதுமக்கள் உதவியுடன் ஆட்டோவில் ஏற்றி திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அந்த பெண் உயிரிழந்தார்.
இதனை தொடர்ந்து பெண்ணை கத்தியால் குத்திய நபரிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியை சேர்ந்த கணேசன் (வயது 52) என்பதும் ஆக்டிங் டிரைவராக பணியாற்றும் இவர் திருமணமாகாத நிலையில் பழனிக்கு சென்ற போது அங்கு பாலியல் தொழிலில் ஈடுபட்டிருந்த பவளக்கொடி என்ற சாந்தி (48) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது.
இதனைத்தொடர்ந்து சாந்தியை திருப்பூர் அடுத்த கோவில்வழி பகுதியில் குடியமர்த்திய கணேசன் ஒட்டன்சத்திரத்தில் பணியாற்றியபடி சாந்தியுடன் வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் சாந்தி மீண்டும் பாலியல் தொழிலில் ஈடுபடுவதை அறிந்த கணேசன் கடந்த 1ம் தேதி இரவு திருப்பூருக்கு வந்துள்ளார். அப்போது பேருந்து நிலையத்தில் சாந்தி வேறு ஒரு நபருடன் பேசிக் கொண்டிருந்ததை கண்டதும் ஆத்திரமடைந்த கணேசன் காய்கறி வெட்டும் கத்தியால் சாந்தியின் தலை மற்றும் பின் முதுகு உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக குத்தினார்.
இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த சாந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் . இதனையடுத்து கணேசனை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் அந்த கொலை தொடர்பான சிசிடிவி., காட்சிகள் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- இந்த சாலைகளில் பயணிக்கும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.
- சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனுவில் கூறியிருந்தனர்.
திருப்பூர்:
திருப்பூர் அணைக்காடு தனியார் பப்ளிக் பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில், எங்கள் பகுதியில் உள்ள சாலைகள் போதிய பராமரிப்பின்மை மற்றும் சேதமடைந்துள்ளதால், இந்த சாலைகளில் தினமும் பயணிக்கும் பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.
சாலைகளின் தற்போதைய நிலை போக்குவரத்தின் சீரான ஓட்டத்தை பாதிக்கிறது.தாய்மார்கள் இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது தவறி குழந்தைகளுடன் கீழே விழுந்த சம்பவங்கள் ஏராளம்.
இந்த சாலையின் முற்றிலும் உடைந்த பள்ளத்தை கடக்க முயன்ற போது தாயின் கட்டுப்பாட்டை இழந்த ஒரு குழந்தை திறந்தவெளி பள்ளத்தில் விழுந்தது மிகவும் அதிர்ச்சியளித்தது. எனவே சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனுவில் கூறியிருந்தனர்.
- தாய், தந்தை மற்றும் வீட்டில் உள்ள பெரியவர்களை மதித்து பேணி காக்க வேண்டும்.
- விருப்பமுள்ளவர்கள் நாட்டிற்கு பணியாற்றிட ராணுவத்தில் சேர வேண்டும்.
முத்தூர்:
திருப்பூர் மாவட்டம் முத்தூர் தனியார் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவில் உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியும், கேரள மாநில முன்னாள் கவர்னருமான பி.சதாசிவம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கி சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-
தற்போதைய இந்தியாவில் ஒவ்வொரு மாவட்டத்திலும் தாலுகா அளவில் கல்லூரிகள் தொடங்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் கிராம பகுதி மாணவ, மாணவிகளின் கல்லூரி கல்வி கனவு நிறைவேறி வருகிறது.
மாணவ, மாணவிகள் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை வளர்ச்சி ஆகியவற்றை பயன்படுத்தி எதிர்கால இந்தியாவை வளர்ச்சி பாதைக்கு கொண்டு வர வேண்டும்.
நான் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்தபோது மும்பை குண்டு வெடிப்பு, ராஜீவ் காந்தி கொலை வழக்கு, எம்.பி. எம்.எல்.ஏ-க்கள் தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கீடு உள்பட 1000-க்கும் மேற்பட்ட வழக்குகள் நன்கு விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.
தாய், தந்தை மற்றும் வீட்டில் உள்ள பெரியவர்களை மதித்து பேணி காக்க வேண்டும். கடவுளுக்கு அடுத்தபடியாக பெற்றோர்களை இறுதி வரையில் வணங்க வேண்டும். தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள நம்ம ஊரு, நம்ம பள்ளி திட்டம் மிக சிறந்த திட்டமாகும். இந்த திட்டத்தின்படி ஒவ்வொரு மாணவர்களும் தாங்கள் படித்த பள்ளிக்கு முடிந்த வரையில் ஏதாவது உதவிகள் செய்திட வேண்டும். மேலும் விருப்பமுள்ளவர்கள் நாட்டிற்கு பணியாற்றிட ராணுவத்தில் சேர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
- வெள்ளகோவில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வெள்ளகோவில்:
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே உள்ள பாப்பம்பாளையத்தை சேர்ந்தவர் செல்வகுமார் . இவருக்கு சொந்தமான நூல் மில் உள்ளது. இங்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இது குறித்த தகவல் அறிந்ததும் வெள்ளகோவில் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் கட்டுக்குள் கொண்டு வர முடியாததால் காங்கயத்தில் இருந்து தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டது. 2 தீயணைப்பு நிலைய வீரர்களும் போராடி தீயை அணைத்தனர்.
இருப்பினும் கட்டிடங்கள் , எந்திரங்கள், மில்லில் இருந்த 45 டன் பஞ்சு , 35 டன் வேஸ்ட் துணிகள் எரிந்து சேதமாகின. அவற்றின் மதிப்பு பல லட்சம் இருக்கும். இது குறித்து வெள்ளகோவில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
- அருவியில் தண்ணீரின் சீற்றம் அதிகமாக உள்ளதால் அதில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமராவதி அணை கட்டப்பட்டுள்ளது. கேரளா மற்றும் தமிழக வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற பாம்பாறு, தேனாறு, சின்னாறு உள்ளிட்ட ஆறுகள் மற்றும் சிறு சிறு ஓடைகள் மூலமாக மழைக்காலங்களில் அணைக்கு நீர்வரத்து ஏற்படுகிறது.
அதை ஆதாரமாகக்கொண்டு பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன திட்டத்தின் கீழ் திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.
கடந்த ஆண்டில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து அணை முழு கொள்ளளவை அடைந்து அமராவதி பிரதான கால்வாய் மற்றும் ஆற்றில் உபரி நீர் திறந்து விடப்பட்டது. ஆனால் நடப்பு ஆண்டில் போதிய மழைப்பொழிவு இல்லாததால் அணையின் நீர்மட்டம் குறைந்து வந்தது. இதனால் விவசாயிகள் கவலையடைந்தனர்.
இந்தநிலையில் கடந்த 4 நாட்களாக அமராவதி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைக்கு வந்து கொண்டிருந்த நீர்வரத்து 422 கன அடியில் இருந்து 1,619 கன அடியாக அதிகரித்துள்ளது. 90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் 57.29 அடியில் இருந்து 59.65 அடியாக அதிகரித்து ஒரே நாளில் 2.34 அடி உயர்ந்துள்ளது. மேலும் கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் நிலவுவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பதற்கான சூழல் உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அருவியில் தண்ணீரின் சீற்றம் அதிகமாக உள்ளதால் அதில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
- முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த வழிமுறைகளும், ஆலோசனைகளும் அடங்கிய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
- தீபாவளி பண்டிகை நேரங்களில் விபத்துகள் ஏற்படாதவாறு பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.
முத்தூர்:
காங்கயம் தீயணைப்பு துறையினர் சார்பில் தீயணைப்பு நிலைய அதிகாரி மணிகண்டன் தலைமையில் காங்கயம் பஸ் நிலையம், கடைவீதிகளில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு தீபாவளி பண்டிகை நேரங்களில் விபத்துகள் ஏற்படாதவாறு பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. இதில் பட்டாசுகள் திறந்தவெளியில் கூரை வீடுகள் இல்லாத இடங்களில் வெடிக்க வேண்டும். கைக்குழந்தைகள் இருக்கும் வீடுகள் அருகில் பட்டாசுகள் வெடிக்க கூடாது. எண்ணெய் சேமிக்கும் குடோன்கள், தேங்காய் பருப்பு குடோன்கள், பெட்ரோல் பங்குகள் இருக்கும் இடங்களில் பட்டாசுகள் வெடிக்க கூடாது. கையில் வைத்து பட்டாசுகளை வெடிக்கக்கூடாது. சிறியவர்கள் பட்டாசு வெடிக்கும் போது பெரியவர்கள் உடன் இருந்து கண்காணிக்க வேண்டும். ஆகிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த வழிமுறைகளும், ஆலோசனைகளும் அடங்கிய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இதில் காங்கயம் தீயணைப்பு நிலைய வீரர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு பற்றிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினர்.
- மொத்தம் 2245 கிலோ கொப்பரை ரூ.1 லட்சத்து 64 ஆயிரத்துக்கு வர்த்தகம் நடந்தது. 46 விவசாயிகள் பங்கேற்றனர்.
- ஏலத்தில் முதல் தரம் ஒரு கிலோ 27.45 ரூபாய்க்கும், இரண்டாம் தரம் ஒரு கிலோ 22.85 ரூபாய்க்கும், சராசரி 26.55 ரூபாய்க்கும் ஏலம் போனது.
முத்தூர்:
முத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் கொப்பரை ஏலம் நடைபெறும். அதன்படி நடந்த கொப்பரை ஏலத்தில் 2245 கிலோ தேங்காய் பருப்பு வந்தது. அவை அதிகபட்சமாக ஒரு கிலோ 85.45 ரூபாய்க்கும், குறைந்த பட்சமாக ரூ.60.15 க்கும், சராசரியாக ரூ.82.15-க்கும் ஏலம் போனது. மொத்தம் 2245 கிலோ கொப்பரை ரூ.1 லட்சத்து 64 ஆயிரத்துக்கு வர்த்தகம் நடந்தது. 46 விவசாயிகள் பங்கேற்றனர்.
முத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஒவ்வொரு சனிக்கிழமையும் டெண்டர் முறையில் தேங்காய் ஏலம் நடைபெறுகிறது. முத்தூர் சுற்று வட்டார விவசாயிகள் 32 பேர் நேற்று விற்பனை கூடத்திற்கு 7579 தேங்காய்கள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஏலத்தில் முதல் தரம் ஒரு கிலோ 27.45 ரூபாய்க்கும், இரண்டாம் தரம் ஒரு கிலோ 22.85 ரூபாய்க்கும், சராசரி 26.55 ரூபாய்க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.83 ஆயிரத்துக்கு ஏலம் போனது என விற்பனைகூட மேற்பார்வையாளர் தங்கவேல் தெரிவித்தார்.
- நகர செயலாளர் சபரிமுருகானந்தன் மற்றும் வெள்ளகோவில் கிளை வாய்க்கால் பிஏபி., நீரினை பயன்படுத்துவோர் சங்க நிர்வாகிகள் உடனிருந்தனர்.
- பகிர்மான வாய்க்கால் அனைத்தையும் நிர்வாகம் பராமரிப்பு செய்து தடையின்றி தண்ணீர் வழங்க வழிவகை செய்யுமாறு கேட்டு கொள்கிறோம்.
முத்தூர்:
வறட்சியின் காரணமாக வெள்ளகோவில் பி.ஏ.பி நான்காம் மண்டலத்திற்க்கு இரண்டாம் சுற்று தண்ணீர் ஏழு நாள் 4.7 அடி தண்ணீர் விடக்கோரி அமைச்சர் மு.பெ.சாமிநாதனிடம் பி.ஏ.பி விவசாயிகள் சங்கத்தினர் நேற்று ஆய்வு மாளிகையில் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அப்போது வெள்ளகோவில் ஒன்றிய தி.மு.க. செயலாளர் சந்திரசேகரன், அவைத்தலைவர் தண்டபாணி, பகிர்மான குழு தலைவர் பாலசுப்பிரமணியம், பாசன விவசாய சங்க தலைவர் தங்கராஜ், காங்கயம் ஒன்றிய செயலாளர்கள் சிவானந்தன், கருணைபிரகாஷ், காங்கயம் நகர செயலாளர் சேமலையப்பன், முன்னாள் பொதுக்குழு மோகனசெல்வம், வெள்ளகோவில் நகர செயலாளர் சபரிமுருகானந்தன் மற்றும் வெள்ளகோவில் கிளை வாய்க்கால் பிஏபி., நீரினை பயன்படுத்துவோர் சங்க நிர்வாகிகள் உடனிருந்தனர்.
காங்கயம் வெள்ளகோவில் பி.ஏ.பி பாசன விவசாயிகள் அமைச்சர் மு.பெ.சாமிநாதனிடம் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:-
பி.ஏ.பி பாசனத்திற்கு வெள்ளகோவில் கிளை வாய்க்காலில் ஒருமுறை சுற்றுக்கு 5 நாள் முறை வைத்து 4.5அடி தண்ணீர் பெற்று தந்த தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனுக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்து க்கொள்கிறோம். வறட்சியின் காரணமாக நான்காம் மண்டலத்திற்கு இரண்டாம் சுற்று தண்ணீர் ஏழு நாள் 4.7 அடி தண்ணீர் பெற்று தருமாறு கேட்டுக்கொள்கிறோம். ஒன்று முதல் நான்கு வரை உள்ள அனைத்து மண்டலத்துக்கும் ஒரு சுற்றுக்கு 7 நாள் வீதம் 4.7 அடி தண்ணீர் கிடைக்க நிரந்தர ஆணை பெற்று தருமாறு கேட்டுக்கொள்கிறோம். பகிர்மான வாய்க்கால் அனைத்தையும் நிர்வாகம் பராமரிப்பு செய்து தடையின்றி தண்ணீர் வழங்க வழிவகை செய்யுமாறு கேட்டு கொள்கிறோம். பி.ஏ.பி., பிரதான வாய்க்காலில் நடைபெறும் தண்ணீர் திருட்டை தடுத்து மதகு கதவுகளை சரிசெய்து சேதமின்றி தண்ணீர் வழங்க ஆவண செய்யுமாறு கேட்டுகொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உடுமலையில் நிக் நேம் சுபாஷ் சேனா தேவி அறக்கட்டளை சார்பில் மாநில அளவிலான மகளிர் கைப்பந்து போட்டி நடைபெற்று வருகிறது.
- உடுமலை அமராவதி சைனிக் பள்ளி ஆங்கில ஆசிரியர் இளமுருகு, டிரஸ்டிகள் கணேஷ் , பாலமுருகன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
உடுமலை:
உடுமலையில் நிக் நேம் சுபாஷ் சேனா தேவி அறக்கட்டளை சார்பில் மாநில அளவிலான மகளிர் கைப்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. ரேணுகாதேவி பிறந்தநாளை முன்னிட்டு தன்னம்பிக்கை வாரம் கொண்டாடப்படுவதை ஒட்டி அவர் நினைவாக மாநில அளவிலான மகளிர் கைப்பந்து போட்டி உதவியுடன் 3 ம் தேதி முதல் 5ம் தேதி வரை இரவு பகல் போட்டிகளாக நடக்கிறது. இதில் எஸ்டிஏடி. எக்ஸ்எல்என்சி கல்லூரி, ஜேபிஆர். கல்லூரி ,பாரதியார் கல்லூரி, பனிமலர் கல்லூரி, பி .ஆர் .கே .கல்லூரி, போஸ்டல் டிபார்ட்மென்ட் ஆகிய மகளிர் அணிகள் பங்கேற்றுள்ளன.
இரண்டாம் நாள் போட்டியில் சென்னை ஜே .பி .ஆர் .கல்லூரி, பாரதியார் கல்லூரி ஆகியவை கலந்து கொண்டு விளையாடின. இதில் அதிக புள்ளிகளை பெற்று ஜே. பி .ஆர் .கல்லூரி வெற்றி பெற்றது. இதில் சிறந்த வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்ட ஜேபிஆர். கல்லூரி மாணவி ஆதர்யராய்க்கு காசோலை மற்றும் கேடயம் வழங்கப்பட்டது. இதில் உடுமலை சுபாஷ் ரேணுகாதேவி அறக்கட்டளை நிறுவனர் கே.ஆர்எஸ். செல்வராஜ் ,உடுமலை அமராவதி சைனிக் பள்ளி ஆங்கில ஆசிரியர் இளமுருகு, டிரஸ்டிகள் கணேஷ் , பாலமுருகன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- 37 -வது தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் கோவாவில் இம்மாதம் தொடங்குகிறது. இந்த போட்டிகளை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்
- பணி நிறைவு அலுவலர் கணேசன் , சமூக ஆர்வலர் ரமேஷ் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டு அவர்களை வாழ்த்தி வழி அனுப்பி வைத்தனர்.
உடுமலை:
இந்திய அணி சார்பாக 15 வயதுக்கு மேற்பட்டவர்கள் கலந்து கொள்வதற்கான வீரர்கள் தேர்வு கோவாவில் நடைபெறுகிறது. 37 -வது தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் கோவாவில் இம்மாதம் தொடங்குகிறது. இந்த போட்டிகளை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். இதில் களரி போட்டிகள் நவம்பர் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இதில் 300-க்கும் மேற்பட்ட வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் 12மாநிலங்களில் இருந்து கலந்து கொள்கின்றனர். இதில் தமிழ்நாடு களரி பயட்டு அசோசியேஷன் சார்பில் மடத்துக்குளம் பகத்சிங் களரி மார்ஷியல் ஆர்டஸ் அறக்கட்டளை சார்பில் ஆசான் வீரமணி தலைமையில் தமிழ்நாடு அணிக்காக 8 பேர் பங்கேற்கின்றனர்.
இவர்கள் உடுமலையிலிருந்து ெரயில் மூலம் கோவை சென்று கோவையில் இருந்து ெரயில் மூலம் கோவா செல்கின்றனர். கோவா செல்லும் களரி வீரர்கள் உடுமலையிலிருந்து வாழ்த்தி வழி அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிகழ்ச்சியில் உடுமலை கிளை நூலகம் எண் இரண்டு நூலக வாசகர் வட்ட தலைவர் இளமுருகு, மடத்துக்குளம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தாலுகா செயலாளர் வடிவேல், பணி நிறைவு அலுவலர் கணேசன் , சமூக ஆர்வலர் ரமேஷ் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டு அவர்களை வாழ்த்தி வழி அனுப்பி வைத்தனர்.
- அமராவதி அணையில் துவங்கி கரூர் திருமுக்கூடலூர் பகுதியில் காவிரி ஆற்றுடன் அமராவதி ஆறு இணைகிறது.
- விவசாயத்திற்கு மட்டுமின்றி தென்னைநார் தொழிற்சாலை உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகளுக்கும் நீர் எடுக்கப்படுகிறது.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி அணை வாயிலாக திருப்பூர் ,கரூர் மாவட்டத்தில் 54, 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. வழி ஓரத்தில் உள்ள கிராமங்களுக்கும் குடிநீர் ஆதாரமாக உள்ளது.
அமராவதி அணையில் துவங்கி கரூர் திருமுக்கூடலூர் பகுதியில் காவிரி ஆற்றுடன் அமராவதி ஆறு இணைகிறது. திருப்பூர் ,கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்கள் வழியாக 148 கி.மீ தூரம் பயணிக்கும் அமராவதி ஆற்றின் இரு கரைகளிலும் நூற்றுக்கணக்கான மின் மற்றும் ஆயில் மோட்டார் வைத்து சட்ட விரோதமாக நீர் எடுக்கப்படுகிறது.விவசாயத்திற்கு மட்டுமின்றி தென்னைநார் தொழிற்சாலை உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகளுக்கும் நீர் எடுக்கப்படுகிறது. ஒரு சில பகுதிகளில் ஆற்றுக்குள்ளேயே குழி தோண்டி மோட்டார்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பாசனம் மற்றும் குடிநீருக்கு திறக்கப்படும் நீர் பெரும் அளவு திருடப்படுவதால் பாசன நிலங்களில் வறட்சியும், அமராவதி ஆற்றின் கரையோர கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. எனவே அமராவதி ஆற்றில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்டுள்ள மோட்டார்களை அகற்ற வேண்டும் என விவசாயிகளும் உள்ளாட்சி நிர்வாகத்தினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதையடுத்து ஆற்றில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்டுள்ள மின் மோட்டார்களை அகற்றவும் முறைகேடாக பெறப்பட்டுள்ள மின் இணைப்புகளை துண்டிக்கும் பணியிலும் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
உடுமலை ,மடத்துக்குளம் ,தாராபுரம், அரவக்குறிச்சி உள்ளிட்ட வழியோரத்தில் ஆற்றின் இரு புறமும் அதிகாரிகள் குழு ஆய்வு செய்து வருகிறது. முறைகேடாக அமைக்கப்பட்டுள்ள மோட்டார்கள்,பைப் கட்டுமானங்களை அகற்றி பறிமுதல் செய்யப்படுவதோடு போலீசில் புகார் தெரிவித்து வழக்கு பதிவு செய்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஆற்றின் கரையில் கிணறுகள் அமைத்தும் மோட்டார்கள் அமைத்தும் நீர் ஊறிஞ்சபடுவது கண்டறியப்பட்டால் விவசாய மின் இணைப்பை துண்டிக்க மின்வாரியத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டு அந்தப் பணிகளும் நடந்து வருகிறது. ஆற்றில் சட்ட விரோதமாக நீர் எடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.






