என் மலர்tooltip icon

    திருப்பூர்

    • சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி மாணவா்கள் 9 போ் சிறப்பிடம் பிடித்துள்ளனா்.
    • டி.காா்த்திக் 3 -வது இடத்தையும், எஸ்.வித்யா 6 -வது இடத்தையும் பிடித்தனா்.

    திருப்பூர் : 

    பாரதியாா் பல்கலைக்கழக அளவிலான தோ்வில் திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி மாணவா்கள் 9 போ் சிறப்பிடம் பிடித்துள்ளனா்.

    திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி முதல்வா் வ.கிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    பாரதியாா் பல்கலைக்கழகத்தின் 2022-23 ம் ஆண்டின் இறுதியாண்டு தோ்வில் திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி மாணவா்கள் 9 போ் பல்கலைக்கழக அளவில் சிறப்பிடம் பிடித்துள்ளனா். முதுநிலை வேதியியல் பாடப்பிரிவில் டி.காா்த்திக் 3 -வது இடத்தையும், எஸ்.வித்யா 6 -வது இடத்தையும் பிடித்தனா்.

    முதுநிலை இயற்பியல் பாடப்பிரிவில் ஏ.ஜெனீபா் 5 வது இடத்தையும், முதுநிலை சா்வதேச வணிகவியல் பாடப்பிரிவில் ஜெ.தனலட்சுமி 7 வது இடத்தையும், எம்.சுடலைராஜ் 8 வது இடத்தையும் பிடித்தனா்.

    முதுநிலை தமிழ் இலக்கியப் பாடப்பிரிவில் ஏ.நந்தகுமாா் 8 வது இடத்தையும் பிடித்தனா். இதேபோல, இளங்கலை தமிழ் இலக்கியப் பாடப்பிரிவில் எஸ்.திவ்யா 9 வது இடத்தையும், இளங்கலை வரலாறு பாடப்பிரிவில் கே.புகழரசி 9 வது இடத்தையும், என்.நேசிகா 10 வது இடத்தையும் பிடித்துள்ளனா் என்று தெரிவிக்க ப்பட்டுள்ளது.

    • போக்குவரத்து கடும் நெருக்கடியுடனும் ரோடுகள் நெரிசலுடன் காணப்படுவது சகஜமாக உள்ளது.
    • போக்குவரத்து நெரிசல் தீர்வு காணப்படாமல் தினமும் பெரும் அவதியை ஏற்படுத்துகிறது.

    திருப்பூர் : 

    திருப்பூர் நகரப்பகுதியில் பல்வேறு முக்கியமான ரோடுகளில் தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. இதனால் போக்குவரத்து கடும் நெருக்கடியுடனும் ரோடுகள் நெரிசலுடன் காணப்படுவது சகஜமாக உள்ளது. குறிப்பாக புஷ்பா சந்திப்பு பகுதியில் போக்குவரத்து சிக்னல் உள்ள நிலையிலும் பல்வேறு காரணங்களால் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் தீர்வு காணப்படாமல் தினமும் பெரும் அவதியை ஏற்படுத்துகிறது.

    இதனால் போக்குவரத்து துணை மற்றும் உதவி கமிஷனர்கள், வடக்கு போக்குவரத்து போலீசார் ஆலோசித்து, இப்பகுதியில் சோதனை அடிப்படையில் சில மாற்றங்களை துவங்கினர். அவ்வகையில் பி.என்., ரோட்டிலிருந்து வந்து அவிநாசி ரோடு மற்றும் காலேஜ் ரோடு செல்லும் அனைத்து வாகனங்களும், ஐ பவுண்டசேன் வழியாக ெரயில்வே மேம்பாலத்தின் கீழ்ப்பகுதியில் சென்று திரும்பி மீண்டும் புஷ்பா சந்திப்பு வந்து செல்ல வேண்டும்.

    காலேஜ் ரோடு வழியாக வரும் வாகனங்கள்,ெரயில்வே மேம்பாலம் செல்ல அவிநாசி ரோடு வழியாக கீரணி சந்திப்பு, ராம் நகர் வழியாக பி.என். ரோடு அடைந்து, புஷ்பா சந்திப்பை கடந்து செல்ல வேண்டும்.அதற்கேற்ப ெரயில்வே மேம்பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    இதுதவிர புஷ்பா சந்திப்பு பகுதியில் ரோட்டைக் கடக்கும் பாதசாரிகள் அனைவரும் முழுமையாக அங்குள்ள நடை மேம்பாலத்தை கட்டாயம் பயன்படுத்த வேண்டும். இதனால் சிக்னலுக்கு முழுமையாக வேலையே இல்லாத நிலை ஏற்படும்.இந்த நடைமுறை மாற்றம் சோதனை அடிப்படையில் ஒரு சில நாட்கள் பின்பற்றப்படும். அதில் ஏதேனும் மாற்றங்கள் தேவைப்படின் அதற்கேற்ப இதில் மாற்றம் செய்யப்படும் என போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.

    • நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • நாளை 21-ந் தேதி இந்த துைண மின் நிலையத்தில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

    அவினாசி :

    அவினாசி மின்வாரிய செயற் பொறியாளர் பரஞ்ஜோதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது:-

    அவினாசி அருகே உள்ள நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை 21-ந் தேதி இந்த துைண மின் நிலையத்தில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அதன்படி அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த துணை மின் நிலையத்துக்குட்பட்ட பச்சாம் பாளையம், பரமசிவம்பாளையம், பெரியாயிபாளையம், பள்ளிபாளையம், பொங்குபாளையம், காளம்பாளையம், பழைய ஊஞ்சப்பாளையம், புதுஊஞ்சப்பாளையம், குப்பாண்டம்பாளையம், துலுக்கமுத்தூர், நல்லாத்துப்பாளையம், வ.அய்யம்பாளையம், ஆயிக்கவுண்டம்பாளையம், வேலூர், மகாராஜா கல்லூரி, எஸ்.எஸ்.நகர், வீதிக்காடு, முட்டியங்கிணறு, திருமலை நகர், பெ.அய்யம்பாளையம் ஒரு பகுதி, கணக்கம்பாளையம், சிட்கோ ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

    • எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
    • திருப்பூர் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் அதற்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

    திருப்பூர் :

    எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி பிளஸ்-2 செய்முறைத்தேர்வு பிப்ரவரி மாதம் 12-ந் தேதியும், பிளஸ்-1 செய்முறைத்தேர்வு பிப்ரவரி மாதம் 19-ந் தேதியும், எஸ்.எஸ்.எல்.சி. செய்முறைத்தேர்வு பிப்ரவரி மாதம் 23-ந் தேதியும் தொடங்குகிறது.

    பிளஸ்-2 பொதுத்தேர்வு மார்ச் மாதம் 1-ந் தேதியும், பிளஸ்-1 தேர்வு மார்ச் மாதம் 4-ந் தேதியும், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு மார்ச் மாதம் 26-ந் தேதியும் தொடங்குகிறது. எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் மேல்நிலை தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் திருப்பூர் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் அதற்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

    திருப்பூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை 33 ஆயிரத்து 445 மாணவ-மாணவிகளும், பிளஸ்-1 பொதுத்தேர்வை 28 ஆயிரத்து 376 பேரும், பிளஸ்-2 பொதுத்தேர்வை 25 ஆயிரத்து 688 பேர் என மொத்தம் 87 ஆயிரத்து 509 மாணவ-மாணவிகள் பொதுத்தேர்வு எழுத தயாராகி வருகிறார்கள்.

    • 6 டன் கோ 32 ரக விதைகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளது.
    • செழிப்பான பயிர் வளர்ச்சிக்கு தேவையான உரம் ஏக்கருக்கு 5 கிலோ மணல் கலந்து பயிருக்கு இட பரிந்துரைக்கப்படுகிறது.

    உடுமலை :

    ஆனைமலை வட்டாரத்தில் உள்ள 19 வருவாய் கிராமங்களில் சிறுதானியப் பயிரான சோளப்பயிர் 1,000 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டு உள்ளது. இதற்கு வேளாண்மைத்துறையினால் தற்போது வரை சான்றளிக்கப்பட்ட 6 டன் கோ 32 ரக விதைகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளது. இதில் 16 வகையான நுண்ணூட்ட சத்துக்கள் நிறைந்த செழிப்பான பயிர் வளர்ச்சிக்கு தேவையான உரம் ஏக்கருக்கு 5 கிலோ மணல் கலந்து பயிருக்கு இட பரிந்துரைக்கப்படுகிறது. இதனுடன் ½ லிட்டர் உயிர் உரம் அசோஸ்பைரில்லம் பாஸ்போ பாக்டீரியா நோய் கிருமிகளில் இருந்து பாதுகாக்கும். ஒரு கிலோ சூடோமோனஸ் பூஞ்சானக்கொல்லி ஆகிய அவசியமான இடுபொருட்கள் மாநில அரசின் குறுவைக்கு மாற்றுப்பயிர் திட்டத்தில் இலவசமாகவும், மத்திய அரசு திட்டங்களான தேசிய உணவு ஊட்டச்சத்து பாதுகாப்பு சிறுதானிய திட்டத்தில் 50 சதவீத மானிய விலையிலும் ஆனைமலை, கோட்டூர் வேளாண்மை விரிவாக்க மையங்களில் அந்தந்த பகுதி உதவி வேளாண்மை அலுவலர் பரிந்துரையின் படி விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    சோளப்பயிர், தட்டை, கொள்ளு, நிலக்கடலை சாகுபடி மற்றும் உற்பத்தி திறனை அதிகரிக்க மானாவாரி விவசாயிகளை ஊக்கப்படுத்தும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த தகவலை ஆனைமலை வேளாண்மை உதவி இயக்குனர் விவேகானந்தன் தெரிவித்தார்.

    • முத்துக்குமாரசாமி மலைக்கோவிலில் ஆண்டு தோறும் கந்த சஷ்டி விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
    • இந்த ஆண்டுக்கான கந்த சஷ்டி விழா கடந்த திங்களன்று விநாயகர் வேள்வியுடன் துவங்கியது.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள மாதப்பூரில் புகழ்பெற்ற முத்துக்குமாரசாமி மலைக்கோவிலில் ஆண்டு தோறும் கந்த சஷ்டி விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இங்கு பக்தர்கள் விழாவின் தொடக்க நாள் அன்று பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை தொடங்குவார்கள். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான கந்த சஷ்டி விழா கடந்த திங்களன்று விநாயகர் வேள்வியுடன் துவங்கியது. தொடர்ந்து யாகசாலை பூஜை முத்துக்குமாரசாமி, வள்ளி தெய்வானைக்கு காப்பு கட்டுதல் நடைபெற்றது. இதனை தொடர்ந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் காப்புக் கட்டினர்.தொடர்ந்து முத்துக்குமாரசுவாமிக்கு சந்தனம்,பால்,தயிர்,தேன், உள்ளிட்ட 18 வகை வாசனை திரவியங்களால், அபிஷேக அலங்காரம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் முத்துக்குமாரசுவாமி அருள் பாலித்தார்.கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு தினசரி காலை 8:30 மணி முதல் 12 மணி வரையிலும் மாலை 5:30 மணி முதல் 7.30 மணி வரையிலும் யாகசாலை பூஜைகள் ,சுவாமிக்கு அபிஷேகம், தீப ஆராதனையும், தினசரி சான்றோர் பெருமக்களின் ஆன்மீக சொற்பொழிவுகளும் நடைபெற்றது.

    நேற்று 18 ந் தேதி காலை 8:30 மணிக்கு மண்டபார்சனையும் 96 வாசனை திரவியங்கள் கொண்டு முத்துக்குமாரசுவாமிக்கு அபிஷேகம் நடைபெற்றது. மேலும் மாலை 6.30 மணிக்கு சூரனை வதம் செய்யும் சூரசம்கார விழா கோவில் வளாகத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது. சூரனை வதம் செய்வதற்காக முருகப்பெருமான் அன்னை பார்வதியிடம் சக்திவேல் பெற்று சூரபத்மனை வதம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது, இந்த காட்சியை ஏராளமான பக்தர்கள் கண்டு களித்தனர், தொடர்ந்து முருகப் பெருமானுக்கு சிறப்பு தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டது.

    • தேசிய இயற்கை மருத்துவ தினத்தை முன்னிட்டு ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
    • டாக்டர். சுந்தரவேல், இயற்கை மருத்துவர்கள் தனலட்சுமி, அருள்ஜோதி, அகிலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள பொங்கலூரில்தேசிய இயற்கை மருத்துவ தினத்தை முன்னிட்டு ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பொங்கலூர் பொ.வெ.க மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவ மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை பொங்கலூர் ஒன்றிய குழு தலைவர் வக்கீல் எஸ். குமார் தொடங்கி வைத்தார். இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தில் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் தனம், பொங்கலூர் ஊராட்சி மன்ற தலைவர் சத்யா பாலசுப்ரமணியம், பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயபாலன்,தமிழாசிரியர் சிவக்குமார், பொங்கலூர் ஒன்றிய ஆணையாளர் விஜயகுமார், பொங்கலூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர். சுந்தரவேல், இயற்கை மருத்துவர்கள் தனலட்சுமி, அருள்ஜோதி, அகிலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் தேவணம்பாளையத்தில் நேற்று உடும்பு ஒன்று ஒரு வீட்டுக்குள் திடீரெனப் புகுந்தது
    • வீட்டிற்குள் உடும்பு புகுந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் தேவணம்பாளையத்தில் நேற்று உடும்பு ஒன்று ஒரு வீட்டுக்குள் திடீரெனப் புகுந்தது. இதனால் அந்த வீட்டில் இருந்தவர்கள் அதனை பார்த்து அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர். இது குறித்து அக்கம் பக்கத்தினர் பல்லடம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் அந்த உடும்பினை லாவகமாக பிடித்தனர். பின்னர் இது குறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து உடும்பை பத்திரமாக மீட்டு காட்டுப்பகுதியில் விடுவதற்காக அங்கிருந்து எடுத்துச் சென்றனர். வீட்டிற்குள் உடும்பு புகுந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • பஸ் நிறுத்தத்தில் சுமார் 60 முதல் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் படுத்த படுக்கையாக கிடந்தார்.
    • இட்லி மற்றும் தண்ணீர் பாட்டில் போன்றவை வாங்கிக் கொண்டு வந்து அந்த பெரியவரிடம் கொடுத்தார்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் இருந்து கோவை செல்லும் சாலையில் உள்ள பஸ் நிறுத்தத்தில் சுமார் 60 முதல் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் படுத்த படுக்கையாக கிடந்தார். இதை கண்ட பயணிகள் ஏதோ மது அருந்திவிட்டு தூங்குவதாக நினைத்தனர். இதனால் பஸ் நிறுத்த இருக்கையில் அமர்வதற்கு கூட அஞ்சினர். இந்த நிலையில் திடீரென ஒரு கைக்குழந்தையுடன் வந்த பெண் ஒருவர் மனிதாபிமானத்துடன் அந்த பெரியவர் மீது பரிவு காட்டினார். இதையடுத்து அந்த பெண் அங்குள்ள ஓட்டலுக்கு சென்று இட்லி மற்றும் தண்ணீர் பாட்டில் போன்றவை வாங்கிக் கொண்டு வந்து அந்த பெரியவரிடம் கொடுத்தார். அந்த பெரியவரால் எழுந்து, அமர்ந்து உட்கார முடியாத சூழ்நிலையில் படுத்த படுக்கையாக கிடப்பதால் அந்தப் பெண் அந்த பெரியவர் கையில் கொடுத்தார். அதை அவர் படுத்த நிலையிலேயே சிறிது சிறிதாக இட்லியை சாப்பிட தொடங்கினார். இந்த சம்பவத்தை அப்பகுதியில் உள்ள பயணிகள் கண்டு மெய் சிலிர்த்தனர். பொதுவாக யாராவது அனாதையாக சாலையோரம் கிடந்தால் அவரை யாரும் பெரும்பாலும் கண்டு கொள்வதில்லை. இப்படிப்பட்ட இந்த சூழ்நிலையில் இந்த பெண் நடந்து கொண்ட விதம் மனிதாபிமானத்தை உண்டாக்கியது. தற்போது இந்த பெரியவர் யார்?, எந்த ஊர்? என்ற விவரம் தெரியவில்லை. சமூக அறக்கட்டளை நிர்வாகத்தினர் உதவுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சம்பவம் குறித்து அலங்கியம் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான அண்ணன், தம்பி உள்பட 3பேரை தேடி வந்தனர்.
    • தாராபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். பின்னர் அவர்கள் கோவை சிறையில் அடைக்கப்பட்டனர்.

     தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ளது சின்னக்காம்பாளையம். இப்பகுதியை சேர்ந்த சக்திவேல் (வயது 55) மற்றும் மதிவாணன் (57) ஆகிய இருவரின் வீடுகள் அடுத்தடுத்து உள்ளன. இதில் சக்திவேல் தனது இடத்தில் இடைவெளி விடாமல் வீடு கட்டியுள்ளார். இவர் தான் கட்டிய வீட்டிற்கு வெள்ளையடிக்க அருகில் வசிக்கும் மதிவாணன் வீட்டு இடத்துக்குள் சென்றதாக தெரிகிறது.

    இதனால் சக்திவேலை பார்த்து உனது இடம் முழுவதும் வீடு கட்டி விட்டாய் எதற்கு என் வீட்டு வாசலுக்கு வந்தாய் என மதிவாணன் தட்டி கேட்டார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது சக்திவேல் சார்பாக அவரது அண்ணன் கருப்புசாமி மற்றும் மகன் மதன்குமாரும், அதே போல மதிவாணன் சார்பாக தம்பி ரமேஷ் பாபு சேர்ந்து தகராறில் ஈடுபட்டனர்.

    இதில் ஆத்திரமடைந்த மதிவாணன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சக்திவேல், அவரது அண்ணன் கருப்புசாமி மற்றும் சக்திவேல் மகன் மதன்குமார் ஆகிய மூன்று பேரையும் கத்தியால் குத்தினார். அதில் சக்திவேல், கருப்புசாமி (58), சக்திவேல் மகன் மதன்குமார் (18) ஆகிய மூவரும் பலத்த கத்திக்குத்து காயம் அடைந்தனர். உடனடியாக அவர்கள் திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தநிலையில் 3 பேரை கத்தியால் குத்திய மதிவாணன் மற்றும் அவரது தம்பி ரமேஷ்பாபு , பிரதீபா ஆகிய 3 பேரும் தலைமறைவாகினர். சம்பவம் குறித்து அலங்கியம் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான அண்ணன், தம்பி உள்பட 3பேரை தேடி வந்தனர். அப்போது 3பேரும் திருப்பூர் கோல்டன் நகர் பாளையக்காடு வடுக்கு பகுதியில் ஒரு வீட்டில் மறைந்திருந்தனர். அவர்களை போலீசார் நேரில் சென்று கைது செய்தனர்.பின்னர் தாராபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். பின்னர் அவர்கள் கோவை சிறையில் அடைக்கப்பட்டனர்.  

    • திருப்பூர் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தால் கடந்த 10-ந் தேதி அன்று அறிவிக்கை வெளியிடப்பட்டது.
    • முற்பட்ட வகுப்பினருக்கான அதிகபட்ச வயது வரம்பு 32 ஆகும்.

    திருப்பூர்:

    திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் கீழ் இயங்கும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், கூட்டுறவு நகர வங்கிகள், பணியாளர் கூட்டுறவு கடன் சங்கங்கள், மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை, வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கங்கள், தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள், நகரகூட்டுறவு கடன் சங்கங்கள், கூட்டுறவு அச்சகங்கள், மாவட்ட கூட்டுறவு ஒன்றியம் மற்றும் இதர சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர் காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட திருப்பூர் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தால் கடந்த 10-ந் தேதி அன்று அறிவிக்கை வெளியிடப்பட்டது.

    இந்த தேர்வுக்கு தகுதி பெற்ற விண்ணப்பதாரரிடம் இருந்து விண்ணப்பங்கள் www.drbtiruppur.net என்ற இணைய தளம் வாயிலாக 1.12.2023 அன்று மாலை 5.45 மணிவரை வரவேற்றப்படுகின்றன. இதற்கான எழுத்து தேர்வு அடுத்த மாதம் (டிசம்பர்) 24-ந் தேதி காலை 10 மணிமுதல் மதியம் 1 மணிவரை திருப்பூர் மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையத்தால் நடத்தப்பட உள்ளது.

    இதற்கான கல்வி தகுதி ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு மற்றும் கூட்டுறவு பயிற்சியாகும்.புனேயில் உள்ள வைகுந்த் மேத்தா தேசிய கூட்டுறவு நிறுவனம் வழங்கும் முதுநிலை வாணிப மேலாண்மை ( கூட்டுறவு) பட்டம் மற்றும் பல்கலைக்கழக மானியக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் கூட்டுறவில் முதுநிலை பட்டப்படிப்பு படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். மேலும் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி முடித்து தேர்வு முடிவுகள் நிலுவையில் இருப்பவர்களும், தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தால் நடத்தப்படும் கூட்டுறவு மேலாண்மை நிலையங்களில் 2023-24 -ஆம் ஆண்டு நேரடி பயிற்சி, அஞ்சல்வழி, பகுதிநேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கு ( Diploma in Cooperative Management) சேர்ந்துள்ளவர்களும் இப்பணிக்கு உரிய சான்று, கட்டணம் செலுத்தியற்கான ரசீதை திருப்பூர் மாவட்ட ஆள்சேர்ப்பு இணை தளத்தில் பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்கலாம்.

    முற்பட்ட வகுப்பினருக்கான அதிகபட்ச வயது வரம்பு 32 ஆகும். ஏனைய அனைத்து பிரிவினருக்கு அதிக பட்ச வயது வரம்பு இல்லை. எழுத்து தேர்வு பட்டப்படிப்பு நிலையிலான தரத்துடனும், கூட்டுறவு மேலாண்மை, கூட்டுறவு நிதி மற்றும் வங்கியியல், கூட்டுறவுகணக்கியல், கணினி பயன்பாடு, பொது அறிவு, தமிழ்போன்ற பாடங்களை உள்ளடக்கியதாகவும் இருக்கும். எழுத்து தேர்வு கொள்குறி வகையில் (Objective Type) 200 வினாக்களுடன், 170 மதிப்பெண்களுக்கானதாகவும் தேர்வுக்கான கால அளவு 180 நிமிடங்கள் கொண்டதாகவும் இருக்கும். வினாத்தாள் ஆங்கிலம் மற்றும் தமிழில் அச்சடிக்கப்பட்டிருக்கும். எழுத்து தேர்வுக்கான மதிப்பெண் மற்றும் நேர்முக தேர்வுகான மதிப்பெண் முறையே 85:15 என்ற விகிதத்தில் இருக்கும். விண்ணப்ப தாரர்கள் எழுத்து தேர்விலும், நேர்முக தேர்விலும் பெற்ற ஒட்டு மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் அரசாணைப்படியான இட ஒதுக்கீடு, இன சுழற்றி முறை, அவர்கள்தெரிவித்த முன்னுரிமை விருப்ப சங்கம் ஆகியவற்றின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டு உரிய சங்கத்திற்கு ஒதுக்கீடு செய்யப்படுவார்கள். மேலும் இது தொடர்பான விரிவான விவரங்கள் திருப்பூர் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலைய இணைய தளத்தில் www.drbtiruppur.net வெளியிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • ஏ.வி.பி. டிரஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ‘ஷிக்்ஷா பேர்23’ கண்காட்சி நடைபெற்றது.
    • பாட வாரியாக பலவகையான ஒப்படைவுகள் காட்சிப்படுத்தப்பட்டன.

    திருப்பூர் :

    திருப்பூர் காந்தி நகர் ஏ.வி.பி. டிரஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 'ஷிக்்ஷா பேர்23' கண்காட்சி நடைபெற்றது. இதில் மாணவர்களின் பாட வாரியாக பலவகையான ஒப்படைவுகள் காட்சிப்படுத்தப்பட்டன. கண்காட்சிக்கு வேலவன் மெட்ரிக்குலேசன் பள்ளி முதல்வர் மற்றும் அறங்காவலர் எஸ்.பிரேமா இளங்குமரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். மாணவர்களின் படைப்புகள் அனைத்தும் வியக்கத்தக்க வகையில் இருந்தன.

    நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் ஏ.கார்த்திகேயன், பொருளாளர் லதா கார்த்திகேயன், முதல்வர் டயானா, ஒருங்கிணைப்பாளர் ஆர்.வித்யா ரிஸ்வான், பெற்றோர்கள் கலந்துகொண்டு ஆசிரியர்களையும், மாணவர்களையும் பாராட்டினார்கள்.

    ×