என் மலர்tooltip icon

    திருப்பூர்

    • திருப்பூரில் மாத்ரு சக்தி சங்கமம் என்ற மகளிா் மாநாடு விவேகானந்தா வித்யாலயா பள்ளியில் நடைபெற்றது.
    • உலகம் உருவான சமயத்தில் நமக்கு தாய்வழி சமூகம்தான் இருந்தது.

    திருப்பூர்:

    தனியார் அறக்கட்டளை சாா்பில் ஜான் சிராணி லட்சுமிபாய் பிறந்த தினத்தை முன்னிட்டு, திருப்பூரில் மாத்ரு சக்தி சங்கமம் என்ற மகளிா் மாநாடு விவேகானந்தா வித்யாலயா பள்ளியில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் மகாகவி பாரதியாரின் கொள்ளுப் பேத்தி கவிஞா் இரா.உமாபாரதி பேசியதாவது:-

    குழந்தைகள் தவறு செய்தால் கண்டிக்க வேண்டுமே தவிர தண்டிக்கக்கூடாது. தவறு செய்யக்கூடாது என்றும், செய்தத் தவறை மறைக்கக்கூடாது என்றும் குழந்தைகளிடம் எடுத்துச் சொல்லவேண்டும். பயம் இல்லாமல் இருக்க வேண்டும் என்றால் சிறு தவறு, சிறு பொய்கூட சொல்லக்கூடாது. நாம் செய்யும் தவறு நமது மனசாட்சியை உறுத்திக்கொண்டே இருக்கும்.

    நாம் ஒவ்வொருவரும் நமக்கு நாமே உண்மையாக இருக்க வேண்டும். பெண் என்பவள் பேராற்றல் மிகுந்தவள். உலகில் இருக்கும் எல்லாவற்றுக்கும் முதன்மையானவள். உலகம் உருவான சமயத்தில் நமக்கு தாய்வழி சமூகம்தான் இருந்தது. இந்த உலகில் உண்மையை, நோ்மையை நிலைநாட்டுபவள் பெண். எத்தனை துன்பம் வந்தாலும் அதை தன்னுள் மறைத்துவைத்து விட்டு மகிழ்ச்சியை மட்டுமே வெளிக்காட்டுபவள் பெண் என்றாா்.

    • பசுமை சார் உற்பத்தி, வளம் குன்றா வளர்ச்சி நிலை உற்பத்தி முக்கியமான பேசுபொருளாக இருக்கிறது.[
    • பசுமை சார் உற்பத்தி விதிமுறைகளை முழுமையாக பின்பற்றி வருகிறது.

    திருப்பூர்:

    மத்திய ஜவுளித்துறை இணை செயலர் ராஜீவ் சக்சேனா, இயக்குனர் அனில்குமார், துணை செயலர் பிரசாந்த்குமார் மீனா ஆகியோர் திருப்பூர் வந்திருந்தனர். ஏற்றுமதியாளர்களை சந்தித்து, பாரத் டெக்ஸ் - 2024 கண்காட்சியில் பங்கேற்க அழைப்பு விடுத்தனர்.

    திருப்பூர் கே.எம்., நிட்வேர் யூனிட்டுக்கு சென்ற குழுவினர், பின்னலாடை உற்பத்தி தொழில்நுட்பம் மற்றும் வழிமுறைகள் குறித்து நேரில் பார்வையிட்டனர்.

    திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தில், பொது செயலாளர் திருக்குமரன், பொருளாளர் கோபால கிருஷ்ணன், இணை செயலாளர் சின்னசாமி உள்ளிட்டோரை சந்தித்து தொழில் நிலவரம் குறித்து பேசினர்.

    சங்க துணை தலைவர் இளங்கோவன் பேசுகையில், திருப்பூர் தொழில் குழுமம் மட்டுமே வர்த்தகர்களின் பசுமை சார் உற்பத்தி எதிர்பார்ப்புகளை முழுமையாக நிறைவேற்றி வருகிறது. ஒட்டுமொத்தமாக, பைபர் துவங்கி, முழுமை பெற்ற ஆடையாக உற்பத்தி செய்வது வரையில், அனைத்து தொழில்நுட்பங்களிலும் வளம் குன்றா வளர்ச்சி நிலையை பின்பற்றி முன்னோடியாக விளங்குகிறது என்றார்.

    ஏற்றுமதியாளர் சங்க பொருளாளர் கோபாலகிருஷ்ணன் பேசுகையில், உலக நாடுகள் மத்தியில், பசுமை சார் உற்பத்தி, வளம் குன்றா வளர்ச்சி நிலை உற்பத்தி முக்கியமான பேசுபொருளாக இருக்கிறது.

    திருப்பூர் தொழில் நகரம், 15 ஆண்டுகளாக, பசுமை சார் உற்பத்தியை வெற்றிகரமாக செய்து வருகிறது. ஜீரோ டிஸ்சார்ஜ் தொழில்நுட்ப சுத்திகரிப்பு, காற்றாலை மின் உற்பத்தி, சோலார் உற்பத்தி என பசுமை சார் உற்பத்தியில் திருப்பூர் முன்னோடியாக விளங்குகிறது என்றார்.

    ஜவுளித்துறை இணை செயலர் ராஜீவ் சக்சேனா பேசியதாவது:-

    தற்போதைய இந்திய ஜவுளி வர்த்தகத்தில், 2024ல் நடக்கும், பாரத் டெக்ஸ் கண்காட்சியின் முக்கியத்துவம் குறித்து அனைவரும் அறிய வேண்டும். ஏற்றுமதியாளர், கட்டாயம் கண்காட்சியில் பங்கேற்று பயன்பெற வேண்டும்.

    திருப்பூர் கிளஸ்டர், வளம் குன்றா வளர்ச்சி என்ற பசுமை சார் உற்பத்தி விதிமுறைகளை முழுமையாக பின்பற்றி வருகிறது. புகழ்பெற்ற திருப்பூர் தொழில் நகரம், மற்ற பிராண்ட் நிறுவனங்களுக்காக, பின்னலாடை உற்பத்தி செய்வதற்கு பதிலாக, திருப்பூருக்கென பிரத்யேக பிராண்ட்களை கட்டமைக்க திட்டமிட வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார். 

    • திருப்பூர் வடக்கு தொகுதியில் அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும், வரும் 25 மற்றும் 26ந் தேதிகளில் சிறப்பு முகாம் நடக்க உள்ளது.
    • ஹார்வி குமாரசாமி மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில், தாசில்தார் மகேஸ்வரன் தலைமை வகித்தார்.

    திருப்பூர்: 

    திருப்பூர் வடக்கு தொகுதியில் அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும், வரும் 25 மற்றும் 26ந் தேதிகளில் சிறப்பு முகாம் நடக்க உள்ளது. வாக்காளர் பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம் போன்ற பணிகள் நடந்து வருகின்றன. சிறப்பு முகாமுக்கு, ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் தயாராகும் வகையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. ஹார்வி குமாரசாமி மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில், தாசில்தார் மகேஸ்வரன் தலைமை வகித்தார்.

    தேர்தல் பிரிவு துணை தாசில்தார் ரம்யா மற்றும் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் பங்கேற்றனர். வாக்காளரிடம் படிவங்களை கொடுத்து, பூர்த்தி செய்து பெறுவது, தேவையான ஆதார ஆவணங்களை பெற்று இணைப்பது. ஆன்லைனில் அவ்விவரங்களை பதிவேற்றம் செய்யும் முன் சரிபார்க்க வேண்டும். சிறப்பு முகாம் நாட்களில், ஓட்டுச்சாவடிகளில் மேற்கொள்ள வேண்டிய சிறப்பு ஏற்பாடுகள் குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது. 

    • தி கிட் திரைப்படத்தை பள்ளிகளில் திரையிட உத்தரவிடப்பட்டுள்ளது.
    • இதைஎழுதி, இயக்கி, நடித்ததோடு, சார்லி சாப்ளினே இசையமைத்துள்ளார்.

    திருப்பூர்:

    நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின் குழந்தைப்பருவ அனுபவங்களை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட, தி கிட் திரைப்படத்தை பள்ளிகளில் திரையிட உத்தரவிடப்பட்டுள்ளது.

    அரசு, உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் 6 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களின் கற்பனைத்திறனை மேம்படுத்தவும், கலை ஆர்வத்தை தூண்டி, தனித்திறன்களை வெளிக்கொணரும் வகையிலும், மாதந்தோறும் ஒரு சிறார் திரைப்படம் திரையிடப்படுகிறது.

    திரைப்படம் முடிந்த பிறகு மாணவர்களை குழுவாக அமர வைத்து, திரைப்படத்தின் மையக்கரு, பிடித்த கதாபாத்திரம் எது, குறிப்பிட்ட கதாபாத்திரத்தை ஏற்று நடித்தல், படத்தின் முடிவை மாற்றி அமைத்தல் குறித்து விவாதிக்க வைக்க வேண்டும். திரைப்படம் குறித்து மாணவர்கள் கலந்துரையாடியதை அறிக்கையாக தொகுத்து, எமிஸ் இணையதளத்தில் பதிவேற்றப்படுகிறது.

    1921ல் வெளியான இத்திரைப்படம், நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின் குழந்தைப்பருவ அனுபவங்களை மையமாக கொண்டு தயாரிக்கப்பட்ட மவுன திரைப்படம்.இதைஎழுதி, இயக்கி, நடித்ததோடு, சார்லி சாப்ளினே இசையமைத்துள்ளார். ஐக்கிய மாகாணங்களின் தேசிய திரைப்படப் பதிவேட்டில் பாதுகாக்கப்பட்டு வரும் இத்திரைப்படம் குழந்தைகளின் கற்பனைத்திறனை மேலும் விரிவாக்கும். 

    • திருமுருகநாத சுவாமி கோவிலில் ஒரு லட்சத்து எட்டு தீபம் ஏற்றும் திருவிழா வருகிற 26-ந் தேதி நடைபெறவுள்ளது.
    • திருப்பூா் சேக்கிழாா் புனித பேரவையினா் சாா்பில் இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    திருப்பூர்:

    காா்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு, திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவிலில் ஒரு லட்சத்து எட்டு தீபம் ஏற்றும் திருவிழா வருகிற 26-ந் தேதி நடைபெறவுள்ளது.திருமுருகநாத சுவாமி அறக்கட்டளை-திருப்பூா் சேக்கிழாா் புனித பேரவையினா் சாா்பில் இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது.பக்தா்கள் பங்களிப்புடன் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று சேவையாற்ற விருப்பமுள்ளவா்கள் 78454-81121 என்ற செல்போன் எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்று கோவில் அறங்காவலா் குழுவினா், கோவில் நிா்வாகத்தினா் தெரிவித்துள்ளனா்.

    • இருவருக்கும் பாகப்பிரிவினை செய்யப்பட்டு 2.75 ஏக்கர் பிரித்து கொடுக்கப்பட்டது.
    • சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    திருப்பூர்:

    ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த அருக்காணி என்பவருக்கும் அவரது அக்கா மாரத்தாள் என்பவருக்கும் பூர்வீக சொத்தாக திருப்பூர் மாவட்டம் முத்து கவுண்டம்பாளையத்தில் 5.30 ஏக்கர் நிலம் உள்ளது. இருவருக்கும் பாகப்பிரி வினை செய்யப்பட்டு 2.75 ஏக்கர் பிரித்து கொடுக்கப்பட்டது.

    இந்நிலையில் மாரத்தாள் மற்றும் அவரது மகன் ஆகியோர் அருக்காணிக்கு சேர வேண்டிய 2.75 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்ததாக கூறப்படுகிறது.

    இது குறித்து அருக்காணி திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இந்தநிலையில் இன்று திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த அருக்காணி மற்றும் அவரது மகன் குப்புசாமி ஆகியோர் திடீரென உடலில் மண்ணெண்ணை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றனர்.

    உடனடியாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி 2பேர் மீது தண்ணீர் ஊற்றினர். பின்னர் விசாரணைக்காக அழைத்து சென்றனர். இச்சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

    • பள்ளி வளாகத்தில் மதுபாட்டில்கள் மற்றும் மனித கழிவுகள் கிடந்தது.
    • காலாண்டு தேர்வு விடுமுறையின் போதும் பள்ளி வளாகத்தில் இது போன்ற சம்பவங்கள் நடந்தது.

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே கிரி சமுத்திரத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை 168 மாணவர்கள் படித்து வருகின்றனர்.

    பள்ளியின் தலைமை ஆசிரியராக கண்ணம்மாள் என்பவர் உள்ளார். இந்த பள்ளியில் சுற்று சுவர் இல்லாததால் சமூக விரோதிகள் அடிக்கடி வந்து குற்ற செயல்களில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.

    தற்போது கடந்த 2 நாட்களாக விடுமுறை அளிக்கப்பட்டது. இன்று காலை வழக்கம்போல் பள்ளியை ஆசிரியர்கள் திறந்தனர்.

    பள்ளி வளாகத்தில் மதுபாட்டில்கள் மற்றும் மனித கழிவுகள் கிடந்தது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பள்ளி நிர்வாகத்தினர் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த பள்ளியில் தூய்மை பணியாளர் இல்லை. தற்காலிகமாக பணியாளர்களை அழைத்து தூய்மை பணி செய்து வருகிறோம். பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைத்து தரகோரி பலமுறை மனு அளித்துள்ளோம்.

    இருப்பினும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதேபோல் காலாண்டு தேர்வு விடுமுறையின் போதும் பள்ளி வளாகத்தில் இது போன்ற சம்பவங்கள் நடந்தது. இது தொடர்பாக அதிகாரிகள் நிரந்தர தீர்வு காண வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • 5 மாதங்களாக போலீசார் விசாரணை நடத்தி கொலையாளியை பிடித்துள்ளனர்.
    • பனியன் நிறுவன தொழிலாளியை கொன்று வாலிபர் நாடகமாடிய சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் ஊத்துக்குளி ரோடு மண்ணரை பகுதியை சேர்ந்தவர் அண்ணாதுரை (வயது 52). பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இவரது மனைவி யமுனா (42). தனியார் பள்ளியில் நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். அவர்கள் 11-ம்வகுப்பு படித்து வருகின்றனர்.

    கடந்த 26-6-2023 அன்று அண்ணாதுரை மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். யமுனா வேலைக்கும், குழந்தைகள் பள்ளிக்கும் சென்று விட்டனர். மாலை வீடு திரும்பிய போது அண்ணாதுரை மயக்கமடைந்த நிலையில் பேச்சு மூச்சு இல்லாமல் கிடந்தார். உடனே அவரை அக்கம்பக்கத்தினர் உதவியுடன் யமுனா மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்த போது அண்ணாதுரை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து திருப்பூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக அண்ணாதுரை தூக்குப்போட்டு தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். இதையடுத்து உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பிரேத பரிசோதனையில் அண்ணாதுரை கழுத்தை நெரிக்கப்பட்டதற்கான தடயங்கள் இருந்தது. மேலும் பின்னந்தலையில் காயங்கள் இருந்தது. தூக்குப்போட்டு தற்கொலை செய்யும் போது தலையில் காயம் ஏற்பட்டிருக்கலாம் என போலீசார் கருதினர்.

    அண்ணாதுரையின் உறவினர்கள், மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக தூக்குப்போட்டு தற்கொலை செய்திருக்கலாம் என எண்ணினர். இருப்பினும் அண்ணாதுரை சாவில் போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. இது தொடர்பாக தீவிர விசாரணையை மேற்கொண்டனர்.

    அப்போது அண்ணாதுரை இறக்கும் போது அவருடன் கடைசியாக இருந்த நபர் குறித்து விசாரணை நடத்தினர். இதில் மண்ணரை பகுதியை சேர்ந்த நந்தகோபால் (36) என்பவர் இருந்துள்ளார். எனவே அவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை கூறினார். போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை நடத்திய போது அண்ணாதுரையை கொலை செய்ததை நந்தகோபால் ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது அண்ணாதுரைக்கு நந்தகோபால் கடன் கொடுத்துள்ளார். அந்த பணத்தை திருப்பி கேட்பதற்காக அண்ணாதுரை வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் கட்டையால் அண்ணாதுரையின் தலையில் அடித்துள்ளார். இதில் அவர் மயங்கி விழவே வீட்டில் இருந்த துப்பட்டாவால் அண்ணாதுரையின் கழுத்தை இறுக்கி கொன்றுள்ளார். பின்னர் அங்கிருந்து அவர் சென்று விட்டார்.

    போலீசார் விசாரணை நடத்திய போது அண்ணாதுரை வீட்டிற்கு நந்தகோபால் வந்து சென்றதுடன், தான் கொலை செய்ததை மறைத்து ஒன்றும் தெரியாதது போல் இருந்து நாடகமாடியுள்ளார். தற்போது போலீசார் விசாரணையில் சிக்கிக்கொண்டார். 5 மாதங்களாக போலீசார் விசாரணை நடத்தி கொலையாளியை பிடித்துள்ளனர். தொடர்ந்து நந்தகோபாலிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். பனியன் நிறுவன தொழிலாளியை கொன்று வாலிபர் நாடகமாடிய சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • கைவசம் உள்ள உள்ளூர் தொழிலாளர் மற்றும் வடமாநில தொழிலாளரை கொண்டு கடந்த வாரம் முழுவதும் பணிகளை செய்தனர்.
    • ஜாப் ஒர்க் நிறுவனங்களும் தங்கள் இயக்கத்தை தொடங்கும் என பின்னலாடை உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களில் வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் உட்பட 6 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகையை தங்கள் சொந்த ஊரில் கொண்டாடுவதையே வெளி மாவட்ட மக்கள் விரும்புகின்றனர்.

    இந்நிலையில் தீபாவளி பண்டிகைக்கு கடந்த 10-ந்தேதியே புறப்பட்டு சென்றனர். பின்னலாடை நிறுவனங்களில் வழக்கம் போல் அவசரகதியில் முடிக்க வேண்டிய ஆர்டர்கள் இந்த முறை இல்லை. இயக்கம் சீராக இருப்பதால் நிறுவனங்களும் தாராளமாக 10 நாட்கள் வரை விடுமுறை அளித்தன. வடமாநில தொழிலாளர்களும் சொந்த ஊர் சென்றனர்.

    நிர்வாகம் மற்றும் அலுவலக பணியாளர்கள் ஏற்கனவே பணிக்கு வந்த நிலையில், கைவசம் உள்ள உள்ளூர் தொழிலாளர் மற்றும் வடமாநில தொழிலாளரை கொண்டு கடந்த வாரம் முழுவதும் பணிகளை செய்தனர்.

    விடுமுறையில் சென்ற தொழிலாளர்கள் பலர் இன்று திருப்பூர் திரும்பியுள்ளதால் பின்னலாடை நிறுவனங்கள் இயல்பான இயக்கத்தை தொடங்கி உள்ளன. ஜாப் ஒர்க் நிறுவனங்களும் தங்கள் இயக்கத்தை தொடங்கும் என பின்னலாடை உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.மேலும் தொழிலாளர்கள் திரும்பிவிட்டதால் இன்று முதல் அனைத்து கடைகளும் விடுமுறை முடிந்து பரபரப்பான இயக்கத்தை தொடங்கின.

    • நடப்பாண்டு வெற்றிகரமாக குங்குமப்பூ விளைந்து, அறுவடை செய்யப்பட்டுள்ளது.
    • குங்குமப்பூ கிழங்கு நடவு செய்து 52 முதல் 60 நாட்களில் அறுவடை செய்ய முடியும்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கேரள மாநிலம் மறையூர், காந்தலூர் மலைப்பகுதியாகவும், குளிர் சீதோஷ்ண நிலை காணப்படும் பகுதியாகவும் உள்ளது. இங்கு ஆப்பிள், ஸ்ட்ராபெரி, பிளாக்பெரி என குளிர் பிரதேஷங்களில் மட்டும் விளையும் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில் காஷ்மீரில் மட்டும் விளையும் குங்குமப்பூ கேரள அரசு நிறுவனமான, கிருஷி விகாஸ் கேந்திரா சார்பில், காந்தலூர் பெருமலையை சேர்ந்த விவசாயி ராமமூர்த்தி நிலத்தில் பரிசோதனை முறையில் நடவு செய்யப்பட்டது.

    காஷ்மீர், பாம்போரா கிராமத்தில் இருந்து குங்குமப்பூ கிழங்கு கொண்டு வரப்பட்டு இயற்கை உரங்கள் இட்டு நடவு செய்யப்பட்டது. தற்போது, காஷ்மீரில் விளைவது போலவே நன்கு வளர்ந்து, அதே நிறம், குணம் ஆகியவற்றுடன் முதல் முறையாக குங்குமப்பூ அறுவடை செய்யப்பட்டுள்ளது.

    வேளாண் விஞ்ஞானிகள் சுதாகர், சவுந்தரராஜ், மாரியப்பன், வெங்கட்சுப்ரமணியம் குழுவினர், சாகுபடி முதல் அறுவடை வரை கண்காணித்து வருகின்றனர்.

    இதுகுறித்து வேளாண் விஞ்ஞானிகள் கூறியதாவது:-

    நடப்பாண்டு வெற்றிகரமாக குங்குமப்பூ விளைந்து, அறுவடை செய்யப்பட்டுள்ளது. அக்டோபர் முதல் டிசம்பர் வரை சாகுபடி காலமாக கொண்டு இரு ஆண்டுகளாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. குங்குமப்பூ கிழங்கு நடவு செய்து 52 முதல் 60 நாட்களில் அறுவடை செய்ய முடியும். ஒரு ஏக்கருக்கு ஒரு லட்சம் கிழங்கு நடவு செய்தால் 2.5 லட்சம் பூக்கள் பூக்கின்றன.

    ஒரு ஏக்கருக்கு 1.5 கிலோ குங்குமப்பூ உற்பத்தி செய்ய முடியும். ஒரு கிலோ ரூ. 3 லட்சம் வரை விற்கப்படுகிறது. ஒரு ஏக்கருக்கு 2 மாதங்களில் சராசரியாக ரூ.4.5 லட்சம் லாபம் கிடைக்கிறது. சாகுபடி செலவு மிகவும் குறைவாகவே உள்ளது. அவை வளர்வதற்கு மழை குறைவாகவும், குளிர் சீதோஷ்ண நிலை நிரந்தரமாகவும் இருக்க வேண்டும். மாநில அரசுக்கு இது குறித்த அறிக்கை அளித்து இப்பகுதிகளில் சாகுபடி பரப்பு அதிகரிக்கப்படும் என்றனர்.

    • அமராவதி அணை வாயிலாக 54,637 ஏக்கர் நிலங்கள் பயன்பெற்று வருகின்றன.
    • நீர் திறக்க வேண்டும், என பாசன சங்க நிர்வாகிகள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    உடுமலை : 

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை வாயிலாக திருப்பூர், கரூர் மாவட்டத்திலுள்ள, 29,387 ஏக்கர் பழைய ஆயக்கட்டு பாசன நிலங்களும், 25,250 ஏக்கர் புதிய ஆயக்கட்டு பாசன நிலங்கள் என 54,637 ஏக்கர் நிலங்கள் பயன்பெற்று வருகின்றன.

    அமராவதி பழைய ஆயக்கட்டு பாசன நிலங்களுக்கு, ஜூன் 1 முதல் மார்ச் 31 வரையும், புதிய ஆயக்கட்டு நிலங்களுக்கு, ஆகஸ்டு1 முதல், மார்ச் 31 வரை வழங்க வேண்டும். நடப்பாண்டு, தென்மேற்கு பருவமழை ஏமாற்றியதால் அணைக்கு நீர் வரத்து பாதித்தது. இதனால், பாசனத்துக்கு நீர் திறப்பதில் சிக்கல் ஏற்பட்டது.நிலைப்பயிர்களை காப்பாற்றும் வகையிலும், குடிநீர் தேவைக்காகவும், இரு முறை உயிர்த்தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டது.

    இந்நிலையில் வடகிழக்கு பருவமழை துவங்கி, அணைக்கு நீர் வரத்து துவங்கியுள்ள நிலையில், பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன நிலங்களுக்கு நீர் திறக்க வேண்டும், என பாசன சங்க நிர்வாகிகள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அதன் அடிப்படையில் அமராவதி பழைய ஆயக்கட்டு பாசனம், திருப்பூர், கரூர் மாவட்டத்தில் 18 வாய்க்கால் பாசன நிலங்கள் மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன நிலங்களுக்கு, வரும், 24-ந் தேதி முதல், டிசம்பர் 31ம் தேதி வரை நீர் திறக்க, நீர் வளத்துறை அதிகாரிகள் பரிந்துரைத்து, அரசுக்கு கருத்துரு அனுப்பியுள்ளனர்.

    அதிகாரிகள் கூறுகையில், அமராவதி அணையின், மொத்தமுள்ள 90 அடி உயரத்தில் 78.22 அடி நீர்மட்டமும், மொத்த கொள்ளவான, 4,047 மில்லியன் கனஅடியில், 3,030.18 மில்லியன் கனஅடி நீர் இருப்பும் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 679 மில்லியன் கனஅடி நீர் வரத்து உள்ளது.

    அணை நீர் இருப்பு மற்றும் எதிர்பார்க்கப்படும் வரத்து அடிப்படையில் 3,174.34 மில்லியன் கனஅடி நீர் திறக்க அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. நீர் வரத்தை பொருத்து, பாசன நிலங்களுக்கு, பாசன காலம் நீடிப்பு செய்யப்படும் என்றனர்.

    • ஒவ்வொரு தொகுதியிலும் 1,500 வாக்காளருக்கு ஒரு ஓட்டுச்சாவடி அமைய உள்ளது
    • மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரம் முதல்கட்ட சரிபார்ப்பு பணியும் முடிந்துள்ளது

    திருப்பூர் : 

    நாட்டின் 18வது பாராளுமன்ற தேர்தல், அடுத்த ஆண்டு நடக்கிறது. ஒவ்வொரு தொகுதியிலும் 1,500 வாக்காளருக்கு ஒரு ஓட்டுச்சாவடி அமைய உள்ளது. வரும் ஜனவரி மாதம், வாக்காளர் இறுதி பட்டியல் தயாராகிவிடும். நாடு முழுவதும் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரம் முதல்கட்ட சரிபார்ப்பு பணியும் முடிந்துள்ளது.அனைத்து மாநிலங்களிலும் தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை மையங்களை இறுதி செய்ய தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

    புதிய மாவட்டங்கள் உருவாகியுள்ளதால் அதற்கு ஏற்ப புதிய ஓட்டு எண்ணிக்கை மையம் அமைக்க தேர்தல் கமிஷன் வழிகாட்டியுள்ளது. பாராளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு செய்த பிறகு 2009, 2014, 2019 ஆகிய 3 பொதுத்தேர்தல் நடந்துள்ளது. தமிழகத்தில் புதிய மாவட்டம் உருவாகியுள்ளதால் மாவட்டம் வாரியாக தொகுதிக்கு ஒரு ஓட்டு எண்ணிக்கை மையம் அமைக்க, தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ளது.

    இது குறித்து தேர்தல் பிரிவு அலுவலர்கள் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தல் ஏற்பாடுகளை இந்திய தேர்தல் கமிஷன் துவக்கிவிட்டது. அதன் ஒருபகுதியாக ஓட்டு எண்ணிக்கை மையம் அமையும் இடத்தை உறுதி செய்ய மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டசபை தொகுதிகளுக்கான, ஸ்ட்ராங் ரூம் மற்றும் எண்ணிக்கை மையம் வசதியுடன் ஓட்டு எண்ணிக்கை மையம் அமைக்கப்படும்.மாவட்ட தேர்தல் அலுவலர், மாநகர மற்றும் மாவட்ட போலீசுடன் சென்று கள ஆய்வு நடத்தி, ஓட்டு எண்ணிக்கை மையம் அமைவிடத்தை உறுதி செய்ய வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர். 

    ×