என் மலர்tooltip icon

    திருப்பூர்

    • வணிக நோக்கில் நடைபெறும் தண்ணீர் திருட்டை கண்டறிந்து நோட்டீஸ் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    • கால்வாய் அருகே அமைந்துள்ள கிணறுகளில், கால்வாய் நோக்கி சைடு போர் போடப்பட்டு இருந்தால் அந்த கிணறுகளின் மின் இணைப்பும் துண்டிக்கப்படும்.

    உடுமலை:

    பி.ஏ.பி., கால்வாய் அருகே வணிக நோக்கில் நடைபெறும் தண்ணீர் திருட்டை கண்டறிந்து நோட்டீஸ் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

    பி.ஏ.பி., பிரதான கிளை கால்வாய்களின் கரையின் வெளிப்பகுதியில் இருந்து, 50 மீட்டர் தொலைவிற்குள் அமைந்துள்ள திறந்தவெளி, ஆழ்துளை கிணறுகள் அனைத்தும் தடை செய்யப்படும். திட்ட காலத்துக்கு முன்பே அமைக்கப்பட்ட கிணறுகளுக்கு விலக்கு அளிக்கப்படும். எனினும், பாசன காலங்களில் இந்த கிணறுகளை உபயோகப்படுத்தக்கூடாது.

    கால்வாய்க்கு அருகே உள்ள ஆழ்துளை மற்றும் திறந்தவெளி கிணறுகளில், 5 முதல் 10 குதிரைத்திறன் மட்டுமே பயன்படுத்த வேண்டும். இந்த கிணறுகளின் வாயிலாக தொலை தூரத்துக்கு தண்ணீர் கொண்டு செல்லக்கூடாது. கால்வாய்க்கு அருகே, மிக குறைந்த பரப்பளவு கொண்ட நிலங்களில் கிணறுகள் அமைத்து வெளியிடங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்லக்கூடாது. அவ்வாறு அமைக்கப்பட்ட கிணறுகள் தடை செய்யப்படும்.கால்வாய் அமைத்ததன் வாயிலாக இரு துண்டுகளாக பிரிக்கப்பட்ட நிலங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்ல குழாய் அனுமதி, பாசன சங்கங்களின் ஒப்புதலுடன் வழங்கப்பட வேண்டும்.

    கால்வாய் அருகே அமைந்துள்ள கிணறுகளில், கால்வாய் நோக்கி சைடு போர் போடப்பட்டு இருந்தால் அந்த கிணறுகளின் மின் இணைப்பும் துண்டிக்கப்படும்.

    கால்வாய் கரையின் வெளிப்பகுதியில் இருந்து 50 மீட்டர் தொலைவிற்கு அப்பால் அமைந்துள்ள கிணறுகளின் தண்ணீரை அந்தந்த இடங்களிலே பயன்படுத்த வேண்டும். வெளியிடங்களுக்கு கொண்டு செல்லக்கூடாது.பாசன கால்வாய் நீர் அனைத்துமே ஆயக்கட்டு பூமி விவசாயிகளுக்கு மட்டுமே உரியது. வணிக பயன்பாடு மற்றும் இதர பயன்பாடுகளுக்கு பயன்படுத்தக்கூடாது.வழக்கில் இணைந்துள்ள மனுதாரர்களுக்கு மீண்டும் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

    இப்பணிகள் ஆகஸ்டு மாதத்துக்குள் 50 சதவீதம் நிறைவு செய்து நீர்வளத்துறை அதிகாரிகள் வாயிலாக அறிக்கை சமர்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர். 

    • கடந்த 2ஆண்டாக தேங்காய்க்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் பொருளாதார நெருக்கடியில் சிக்கினர்.
    • தென்னை மரங்களில் கருந்தலைப்புழுக்களின் தாக்குதல் தென்பட துவங்கியுள்ளது.

    காங்கயம்:

    திருப்பூர் மாவட்டத்தில் தென்னை சாகுபடி, பிரதானமாக உள்ளது. கடந்த 2ஆண்டாக தேங்காய்க்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் பொருளாதார நெருக்கடியில் சிக்கினர்.தேங்காய்க்கு 23 முதல் 25 ரூபாய் விலை கிடைத்தால் தான் உர விலை, விவசாய தொழிலாளர் கூலி உள்ளிட்ட செலவினங்களை ஈடுகட்ட முடியும் என விவசாயிகள் கூறி வந்தனர்.ஆனால் தோட்டங்களில் இருந்து தேங்காய்க்கு 8 - 9 ரூபாய்க்கு மட்டுமே வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். தொடர்ந்து விலை வீழ்ச்சி தென்பட்ட நிலையில் விவசாயிகள் தென்னை மரங்களை பராமரிப்பதில் முழு கவனம் செலுத்தவில்லை என கூறப்படுகிறது.

    இதனால் காங்கயம், அவிநாசி, பல்லடம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தென்னை மரங்களில் கருந்தலைப்புழுக்களின் தாக்குதல் தென்பட துவங்கியுள்ளது. இதனால் தென்னை மர இலைகள் காய்ந்து பழுப்பு நிறத்திற்கு மாறியுள்ளன. ஏற்கனவே, தேங்காய் விலை வீழ்ச்சியால் ஆங்காங்கே சிதறு தேங்காய் உடைக்கும் போராட்டத்தில் குதித்துள்ள விவசாயிகளுக்கு, இப்பிரச்சினை கூடுதல் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த பிரச்சினையில் இருந்து மீண்டு வருவது குறித்து, வேளாண் துறை மற்றும் பொங்கலூர் வேளாண் அறிவியல் நிலையத்தினர் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.

    இதனிடையே தென்னை விவசாயத்தில், மரத்தின் வயதுக்கு ஏற்ப ஊடுபயிர் சாகுபடி செய்து வருவாய் ஈட்டலாம் என தென்னை ஆராய்ச்சி நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    உடுமலை மற்றும் சுற்றியுள்ள கிராமப்பகுதிகளில், 12,500 ஹெக்டேரில் தென்னை சாகுபடி உள்ளது. இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான விவசாயிகள், காய் மற்றும் பயிறு வகை சாகுபடியை காட்டிலும் தென்னை விவசாயத்தில் ஆர்வம் காட்டுகின்றனர்.

    தென்னையில் ஊடுபயிராக மரத்தின் வயதுக்கு ஏற்ப பயிர்களை பயிரிட வேண்டும். தென்னை நடவு செய்யப்பட்ட நாளில் இருந்து 8 வயது வரை கடலை, எள்ளு, நெல், வாழை போன்றவை ஊடுபயிராக சாகுபடி செய்யலாம்.இந்த 8 ஆண்டு காலத்தில் சூரியஒளி ஊடுபயிர்களுக்கு நன்றாக கிடைக்கும். இதனால் பயிர்கள் செழிப்பாக வளரும்.

    தென்னையின்8 வயது முதல் 15 வயது வரை, மரத்தின் நிழல் அதிக அளவு இருக்கும். அப்போது நிழலில் வளரும் தோட்டக்கலை பயிர்களான, உளுந்து, கொள்ளு, பாசி பயிறு, சோயா மற்றும் கால்நடை தீவன பயிர்களை ஊடுபயிராக சாகுபடி செய்யலாம்.

    20 வயதிற்கு மேல் தென்னையில் ஊடுபயிராக, ஜாதிக்காய், வாழை, குறுமிளகு போன்றவை பயிரிடலாம். இதில் குறுமிளகு நன்கு விளைச்சல் தரக்கூடிய ஒன்றாக இருக்கிறது. ஒரு செடியில் வருடத்திற்கு 2 கிலோ வரை குறுமிளகு கிடைக்கிறது.ஒரு ஏக்கர் தென்னையில் 70 மரம் வரை நடவு செய்யலாம். இதில் ஊடுபயிராக ஒரு மரத்திற்கு ஒரு குறுமிளகு செடி பயிரிட்டால் வருடத்திற்கு 140 கிலோ குறுமிளகு கிடைக்கிறது. இதில் நன்றாக வருவாய் கிடைக்கும்.ஊடுபயிர் வாயிலாக கிடைக்கும் வருமானத்தை தோட்டத்தின் தண்ணீர், உரம், ஆள் கூலி போன்ற செலவினங்களுக்கு பயன்படுத்தலாம். தென்னையில் கிடைக்கும் வருமானம் விவசாயிகளுக்கு முழுவதுமாக கிடைக்கும்.

    இத்தகவலை ஆழியார் தென்னை ஆராய்ச்சி நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • கண்வலிச் செடி எனப்படும் செங்காந்தள் மலர் செடி சாகுபடியில் ஏராளமான விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
    • கண்வலி செடிகளுக்கு பயிர்க்காப்பீடு மற்றும் பொருள் ஈட்டுக்கடன் உள்ளிட்ட சலுகைகளையும் வழங்க வேண்டும்.

    மூலனூர்:

    திருப்பூர், கரூர், திண்டுக்கல் ஆகிய 3 மாவட்டங்களில், கண்வலிச் செடி எனப்படும் செங்காந்தள் மலர் செடி சாகுபடியில் ஏராளமான விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.அந்த மாவட்டங்களில் குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டுமே அச்செடிகள் வளர்வதற்குரிய காலசூழ்நிலை நிலவுகிறது.

    இவ்விதைக்கிழங்கில் மருத்துவ குணம் நிறைந்துள்ள நிலையில் சந்தையில் நல்ல விலை கிடைத்து வந்தது. கிலோ 3,700 ரூபாய்க்கு விற்கப்பட்ட விதை தற்போது 1,500 ரூபாய்க்கு தான் விற்கப்படுகிறது என்கின்றனர் விவசாயிகள்.

    இது குறித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் கூறியதாவது:-

    வறட்சி சமயத்தில் போர்வெல் தண்ணீர் பாய்ச்சி தொழிலாளர்களுக்கு தினக்கூலியாக 800 ரூபாய் வரை செலவிட்டு பந்தல் அமைத்து சாகுபடி செய்கிறோம். ஆனால் உழைப்புக்கேற்ற வருமானம் கிடைப்பதில்லை.

    இடைத்தரகர்கள் வாயிலாக தான் அவற்றை சந்தைப்படுத்துகிறோம். அவை எங்கு செல்கிறது, யாரிடம் எவ்வளவு தொகைக்கு விற்கப்படுகிறது என்ற எந்த விபரமும் எங்களுக்கு தெரிவதில்லை. அரசுத்துறை சார்பில் இந்த சந்தை நிலவரத்தை கண்காணிக்க வேண்டும்.சில வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படும் கண்வலி கிழங்கு விதைகள், அங்கிருந்து மருந்துகளின் மூலப்பொருட்களாக பயன்படுத்தப்பட்டு மருந்து வடிவில் நமக்கு வருகிறது.

    மாநில அரசின் மருத்துவ தாவரங்கள் மற்றும் மூலிகை ஆராய்ச்சி நிறுவனத்தின் வாயிலாகவே இவ்விதைகளை கொள்முதல் செய்து குறைந்தபட்ச ஆதார விலையாக 3,000 ரூபாய் நிர்ணயிக்க வேண்டும். ரப்பர் மற்றும் 16 வகை காய்கறி விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மாநில அரசு பாலுக்கும் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்து வழங்கி வருகிறது. அதே போன்று, கண்வலி விதைக்கும் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்க வேண்டும்.கண்வலி செடிகளுக்கு பயிர்க்காப்பீடு மற்றும் பொருள் ஈட்டுக்கடன் உள்ளிட்ட சலுகைகளையும் வழங்க வேண்டும்.மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், கண்வலி விதை விற்பனையை துவக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர். 

    • போலீசாரை கண்டதும் காரில் வந்த நபர் காரை நிறுத்தி விட்டு தப்பி ஓட முயன்றார்.
    • காரை சோதனை செய்தபோது அதில் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையில் சப் -இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி, ஜெகதீஷ் மற்றும் போலீஸ்காரர்கள் பிரபு, சதீஷ், குமரவேல் ,வேல்முருகன் ஆகியோர் கொண்ட தனிப்படை போலீசார் குன்னத்தூரில் இருந்து பெருமாநல்லூர் செல்லும் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது திருப்பூர் நோக்கி வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். போலீசாரை கண்டதும் காரில் வந்த நபர் காரை நிறுத்தி விட்டு தப்பி ஓட முயன்றார். அந்த வாலிபரை போலீசார் விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். தொடர்ந்து காரை சோதனை செய்தபோது அதில் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    தொடர்ந்து அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தியதில் அவர் தர்மபுரி மாவட்டம் கரிமங்கலத்தைச் சேர்ந்த மாதேஷ் (வயது 31) என்பது தெரியவந்தது. மேலும் இவர் தர்மபுரியில் இருந்து புகையிலை பொருட்களை கடத்தி வந்து திருப்பூரில் உள்ள ஒரு நபருக்கு கொண்டு வந்ததும் தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரை பறிமுதல் செய்தனர்.

    • திருப்பூர் மத்திய காவல் நிலையத்திற்கு கோவில் நிர்வாகத்தினர் தகவல் அளித்தனர்.
    • கஞ்சா அருந்திய நபர் ஒருவர் கோவில் கருவறையில் புகுந்த சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் மங்கலம் சாலை, பூச்சக்காட்டிலுள்ள செல்வ விநாயகர் கோவிலில் வாலிபர் ஒருவர் தன்னை யாரோ வெட்ட வருகிறார்கள் எனக்கூறி கோவில் கருவறைக்குள் சென்று பதுங்கி கொண்டார். இதனை கண்ட கோவில் தரிசனத்துக்காக வந்திருந்த பெண் ஒருவர் கோவில் நிர்வாகிகளிடம் இது குறித்து கூறினார்.

    உடனடியாக கருவறைக்குள் சென்ற நிர்வாகிகள் அங்கு பதுங்கியிருந்த நபரை பிடித்து வெளியே இழுத்து வந்து தர்மஅடி கொடுத்தனர். அடி தாங்க முடியாமல் வலியால் அலறிய வாலிபர் தன்னை ஒருவன் வெட்ட வருவதாகவும், அதனால் உள்ளே வந்து பதுங்கி கொண்ட தாகவும் கூறினான்.

    இதனை தொடர்ந்து திருப்பூர் மத்திய காவல் நிலையத்திற்கு கோவில் நிர்வாகத்தினர் தகவல் அளித்தனர். கோவிலுக்கு விரைந்து வந்த போலீசார் வாலிபரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.

    விசாரணையில் வாலிபரின் பெயர் கோகுல் என்பதும், அதே பகுதியை சேர்ந்த பழைய குற்றவாளி என்பதும் தெரியவந்தது. இந்நிலையில் இன்று நண்பர்களுடன் சேர்ந்து கஞ்சா அருந்தியுள்ளார். அதில் ஏற்பட்ட தகராறில் நண்பர்கள் வெட்ட வந்ததாக கூறி கோவிலின் கருவறைக்குள் புகுந்து மறைந்து கொண்டது தெரியவந்தது.

    தொடர்ந்து அந்த வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கஞ்சா அருந்திய நபர் ஒருவர் கோவில் கருவறையில் புகுந்த சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    • மாவட்டத்தில், 1,500க்கும் மேற்பட்ட மருந்துக் கடைகள் உள்ள நிலையில் 3 ஆய்வாளர்கள் மட்டுமே பணியில் உள்ளனர்
    • ஆய்வாளர்கள் எண்ணிக்கை குறைவால் ஆய்வு பணிகளில் தொய்வு ஏற்படுகிறது.

    திருப்பூர்:

    தமிழகத்தில் மருந்து கட்டுப்பாட்டு துறை 15 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மண்டலத்துக்கும் ஒரு மருந்துக்கட்டுப்பாட்டு உதவி இயக்குனர், முதுநிலை மருந்தக ஆய்வாளர், மருந்தக ஆய்வாளர் என பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

    கட்டுப்பாட்டுத்துறை தொடர்பான பிரச்னைகளை கண்டறியும் பொருட்டு மத்திய அரசு 2003ல் புதிய கமிட்டி ஒன்றை நியமித்தது.அந்த கமிட்டி பல்வேறு மாநிலங்களில் ஆய்வு மேற்கொண்டு 200 மருந்துக்கடைகளுக்கு ஒரு மருந்தக ஆய்வாளர் எனும் விகிதத்தை கடைபிடிக்க அறிவுறுத்தியது.

    அந்த நிலையே தற்போது வரை நீடிக்கிறது. ஆனால் திருப்பூர் மாவட்டத்தில், 1,500க்கும் மேற்பட்ட மருந்துக் கடைகள் உள்ள நிலையில் 3 ஆய்வாளர்கள் மட்டுமே பணியில் உள்ளனர்.அவர்களுக்கு தனியே அலுவலகம் கிடையாது. மருந்துகள் துறை தொடர்பான கோர்ட்டு, வழக்கு விசாரணைக்கு விளக்கம் அளிக்க ஆய்வாளர்களே சென்னை செல்ல வேண்டியுள்ளது. குறைந்தது 6 முதல் 8 ஆய்வாளர் பணியில் இருந்தால் அவ்வப்போது மருந்தகங்களில் தேவையான சோதனை மேற்கொள்ள முடியும்.

    ஆய்வாளர்கள் எண்ணிக்கை குறைவால் ஆய்வு பணிகளில் தொய்வு ஏற்படுகிறது. எனவே முறையற்ற மற்றும் தடை செய்யப்பட்ட மருந்து விற்பனையைக் கண்டறிந்து தடுக்க போதிய எண்ணிக்கையில், மருந்தக ஆய்வாளர்கள் பணியிடங்களை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.  

    • கடந்த சில மாதங்களாக பல்வேறு காரணங்களால் பெரும்பாலான கைத்தறிகள் முடங்கி, பல ஆயிரம் பேர் வேலை இழந்துள்ளனர்.
    • தனியாரிடம் நெசவு செய்வோருக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும்.

    திருப்பூர்:

    திருப்பூர், கோவை மாவட்டத்தில் ஏராளமான கைத்தறிகள் உள்ளன. கடந்த சில மாதங்களாக பல்வேறு காரணங்களால் பெரும்பாலான கைத்தறிகள் முடங்கி, பல ஆயிரம் பேர் வேலை இழந்துள்ளனர். இதையடுத்து, தமிழ்நாடு நெசவு தறிக்காரர்கள் வாழ்வுரிமை இயக்கத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம் மாநில தலைவர் தேவராஜன் தலைமையில் நடந்தது.

    கூட்டத்தில் கடந்த 6 மாதங்களாக பெரும்பாலான கைத்தறிகள் பாவு, நூல் இல்லாமல் முடங்கி கிடக்கின்றன. பல ஆயிரம் பேர் வேலை இழந்துள்ளனர். இதற்கு தீர்வாக கைத்தறி கூட்டுறவு சங்கங்களில் புதிதாக உறுப்பினர் சேர்க்க வேண்டும். பாவு, நூல் உடனே வழங்க வேண்டும்.தனியாரிடம் நெசவு செய்வோருக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும். நெசவாளர்களுக்கு என தனியாக கூட்டுறவு வங்கி துவக்க வேண்டும். 60 வயதான நெசவாளர்களுக்கு வழங்கப்படும் 1000 ரூபாய் பென்ஷனை 5000 ரூபாயாக உயர்த்த வேண்டும்.

    இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, தேசிய கைத்தறி நெசவாளர் தினமான வரும் 7-ந் தேதி அனைத்து கைத்தறி நெசவாளர்களின் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  

    • தனியார் கல்லூரி அருகே ஒருவர் பலத்த காயங்களுடன் கிடப்பதாக அவிநாசி பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதா பமாக உயிரிழந்தார்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே திருப்பூர் -தாராபுரம் சாலையில் குப்பிச்சிபாளையத்தை அடுத்த தனியார் கல்லூரி அருகே சம்பவத்தன்று ஒருவர் பலத்த காயங்களுடன் கிடப்பதாக அவிநாசி பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் அடிப்படையில் அங்கு சென்று பார்த்தபோது 30 வயது மதிக்கத்தக்க ஒருவர் அடிபட்டு கிடந்தார். அவர் மீது எந்த வாகனம் மோதியது என்பது தெரியவில்லை. உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர்.

    அங்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதா பமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • போலீசார் வெள்ளகோவில் கிராம பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
    • பிரபாகரன் (வயது33) உள்ளிட்ட 30 பேரை கைது செய்து அவர்களிடமிருந்த ரூ. 12,200 பணம் மற்றும் 10 சேவல்களை பறிமுதல் செய்தனர்.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவிலில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி மற்றும் போலீசார் வெள்ளகோவில் கிராம பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது இலுப்பைகிணறு என்ற இடத்தில் கும்பலாக ஆட்கள் நின்று கூச்சலிட்டு கொண்டிருந்தனர்.

    அங்கு சென்று பார்த்தபோது சண்டை சேவல்களை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து சேவல் சண்டை சூதாட்டத்துக்கு ஏற்பாடு செய்த வெள்ளகோவில் பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் (வயது33) உள்ளிட்ட 30 பேரை கைது செய்து அவர்களிடமிருந்த ரூ. 12,200 பணம் மற்றும் 10 சேவல்களை பறிமுதல் செய்தனர்.

    சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • தாக்குதலில் ஈடுபட்ட பல்லடம் அருகே உள்ள கள்ளிமேட்டைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
    • போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து கூலிப்படையினரை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    பல்லடம்:

    திருப்பூர் கல்லூரி சாலையை சேர்ந்த 23 வயது வாலிபரும், கோவில் வழி பகுதியைச் சேர்ந்த 22 வயது பெண்ணும் சமூக வலைத்தளங்கள் மூலம் பழகி காதலித்து வந்தனர். இந்த நிலையில் அந்த பெண் திடீரென மாயமானார். இதையடுத்து அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பெண்ணை தேடி வந்தனர்.

    அப்போது காதல்ஜோடி இருவரும் பல்லடம் அருகே உள்ள அருள்புரத்தில் இருப்பதாக தகவல் கிடைத்தது. இது குறித்து பல்லடம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அருள்புரம் பகுதி நல்லூர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்டது என்பதால் காதல்ஜோடியை நல்லூர் போலீஸ் நிலையத்திற்கு போலீசார் பாதுகாப்புடன் அனுப்பி வைத்தனர்.

    இந்தநிலையில் பல்லடம் அருகே அருள்புரம் அருகே சென்று கொண்டிருந்த போது அவர்களை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிள் மற்றும் 3 கார்களில் வந்த 10-க்கும் மேற்பட்டோர் காதலர்களையும் அவரது நண்பர்களையும் சரமாரி தாக்கினர். இதில் காயமடைந்த அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த தாக்குதலில் ஈடுபட்ட பல்லடம் அருகே உள்ள கள்ளிமேட்டைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.இந்த சம்பவத்தில் தாக்குதல் நடத்தியவர்கள் கூலிப்படையைச் சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.

    இவர்கள் ஏற்கனவே பல்லடம், கணபதிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில், பல்வேறு அடாவடி செயல்களில் ஈடுபட்டுள்ளதாகவும், அவர்கள் மீது பல்வேறு வழக்குகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. தென் மாவட்டங்களில் கூலிப்படையினர் சர்வ சாதாரணமாக உலா வருகின்றனர். ஆனால் திருப்பூர், கோவை உள்ளிட்ட பகுதிகளில் அது போன்ற சம்பவங்கள் இல்லை. தற்போது இந்த சம்பவத்தின் மூலம் இங்கும் கூலிப்படையினர் ஊடுருவி உள்ளதாக தெரிகிறது. எனவே போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து கூலிப்படையினரை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    • அதிகாலை 4 மணி முதல் சாமி தரிசனம் செய்வதற்காக பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
    • பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் இருந்ததால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது

    அவினாசி:

    திருப்பூர் மாவட்டம் அவினாசியில் கொங்கு ஏழு சிவாலயங்களில் முதன்மை பெற்றதும் காசிக்கு நிகரான கோவில் போன்ற பல சிறப்பு வாய்ந்த அவினாசி லிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. நேற்று ஆடிபெருக்கை முன்னிட்டு சுவாமி சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனை நடந்தது.

    அதிகாலை 4 மணி முதல் சாமி தரிசனம் செய்வதற்காக அவினாசி, கருவலூர், சேவூர், தெக்கலூர், பழங்கரை, மற்றும் திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து குழந்தைகள் பெண்கள், உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

    அனைவருக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் இருந்ததால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    இதே போல் அவினாசி கரிவரதராஜப்பெருமாள் கோவில், வீர ஆஞ்சநேயர் கோவில், காரணப் பெருமாள் கோவில், ஆகாசராயர் கோவில்,கருவலூர் மாரியம்மன் கோவில், பழங்கரை பொன்சோ ழீசுவரர் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடந்தது.

    • அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ் மன்ற தொடக்க விழா நடந்தது.
    • மாணவர்கள் 135 குறள் ஒப்புவித்தல், நவீன நாடகம், பெருஞ்சலங்கை ஆட்டம். சலங்கை ஆட்டம், ஒயிலாட்டம் ஆகிய நிகழ்ச்சிகளை நடத்தி காட்டினர்.

    அவினாசி:

    அவினாசியில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ் மன்ற தொடக்க விழா நடந்தது. கல்லூரி முதல்வர் ஜோ.நளதம் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், கல்லூரி தமிழ்த் துறை தலைவர் மணிவண்ணன் வரவேற்றார். ச.கண்ணப்பன் வாழ்த்துரையாற்றினார்.

    திரைப்பட இயக்குனர் ராசி அழகப்பன் தமிழ்மன்றத்தை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினர். மாணவர்கள் 135 குறள் ஒப்புவித்தல், நவீன நாடகம், பெருஞ்சலங்கை ஆட்டம். சலங்கை ஆட்டம், ஒயிலாட்டம் ஆகிய நிகழ்ச்சிகளை நடத்தி காட்டினர்.

    இதில் கல்லூரி பேராசியர்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

    ×