search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போலீசில் தஞ்சமடைய சென்ற காதல் ஜோடியை வழிமறித்து தாக்கிய கூலிப்படை கும்பல்
    X

    போலீசில் தஞ்சமடைய சென்ற காதல் ஜோடியை வழிமறித்து தாக்கிய கூலிப்படை கும்பல்

    • தாக்குதலில் ஈடுபட்ட பல்லடம் அருகே உள்ள கள்ளிமேட்டைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
    • போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து கூலிப்படையினரை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    பல்லடம்:

    திருப்பூர் கல்லூரி சாலையை சேர்ந்த 23 வயது வாலிபரும், கோவில் வழி பகுதியைச் சேர்ந்த 22 வயது பெண்ணும் சமூக வலைத்தளங்கள் மூலம் பழகி காதலித்து வந்தனர். இந்த நிலையில் அந்த பெண் திடீரென மாயமானார். இதையடுத்து அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பெண்ணை தேடி வந்தனர்.

    அப்போது காதல்ஜோடி இருவரும் பல்லடம் அருகே உள்ள அருள்புரத்தில் இருப்பதாக தகவல் கிடைத்தது. இது குறித்து பல்லடம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அருள்புரம் பகுதி நல்லூர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்டது என்பதால் காதல்ஜோடியை நல்லூர் போலீஸ் நிலையத்திற்கு போலீசார் பாதுகாப்புடன் அனுப்பி வைத்தனர்.

    இந்தநிலையில் பல்லடம் அருகே அருள்புரம் அருகே சென்று கொண்டிருந்த போது அவர்களை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிள் மற்றும் 3 கார்களில் வந்த 10-க்கும் மேற்பட்டோர் காதலர்களையும் அவரது நண்பர்களையும் சரமாரி தாக்கினர். இதில் காயமடைந்த அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த தாக்குதலில் ஈடுபட்ட பல்லடம் அருகே உள்ள கள்ளிமேட்டைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.இந்த சம்பவத்தில் தாக்குதல் நடத்தியவர்கள் கூலிப்படையைச் சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.

    இவர்கள் ஏற்கனவே பல்லடம், கணபதிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில், பல்வேறு அடாவடி செயல்களில் ஈடுபட்டுள்ளதாகவும், அவர்கள் மீது பல்வேறு வழக்குகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. தென் மாவட்டங்களில் கூலிப்படையினர் சர்வ சாதாரணமாக உலா வருகின்றனர். ஆனால் திருப்பூர், கோவை உள்ளிட்ட பகுதிகளில் அது போன்ற சம்பவங்கள் இல்லை. தற்போது இந்த சம்பவத்தின் மூலம் இங்கும் கூலிப்படையினர் ஊடுருவி உள்ளதாக தெரிகிறது. எனவே போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து கூலிப்படையினரை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    Next Story
    ×