என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.
பி.ஏ.பி., கால்வாய் அருகே தண்ணீர் திருட்டை தடுக்க அதிரடி நடவடிக்கை
- வணிக நோக்கில் நடைபெறும் தண்ணீர் திருட்டை கண்டறிந்து நோட்டீஸ் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- கால்வாய் அருகே அமைந்துள்ள கிணறுகளில், கால்வாய் நோக்கி சைடு போர் போடப்பட்டு இருந்தால் அந்த கிணறுகளின் மின் இணைப்பும் துண்டிக்கப்படும்.
உடுமலை:
பி.ஏ.பி., கால்வாய் அருகே வணிக நோக்கில் நடைபெறும் தண்ணீர் திருட்டை கண்டறிந்து நோட்டீஸ் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:-
பி.ஏ.பி., பிரதான கிளை கால்வாய்களின் கரையின் வெளிப்பகுதியில் இருந்து, 50 மீட்டர் தொலைவிற்குள் அமைந்துள்ள திறந்தவெளி, ஆழ்துளை கிணறுகள் அனைத்தும் தடை செய்யப்படும். திட்ட காலத்துக்கு முன்பே அமைக்கப்பட்ட கிணறுகளுக்கு விலக்கு அளிக்கப்படும். எனினும், பாசன காலங்களில் இந்த கிணறுகளை உபயோகப்படுத்தக்கூடாது.
கால்வாய்க்கு அருகே உள்ள ஆழ்துளை மற்றும் திறந்தவெளி கிணறுகளில், 5 முதல் 10 குதிரைத்திறன் மட்டுமே பயன்படுத்த வேண்டும். இந்த கிணறுகளின் வாயிலாக தொலை தூரத்துக்கு தண்ணீர் கொண்டு செல்லக்கூடாது. கால்வாய்க்கு அருகே, மிக குறைந்த பரப்பளவு கொண்ட நிலங்களில் கிணறுகள் அமைத்து வெளியிடங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்லக்கூடாது. அவ்வாறு அமைக்கப்பட்ட கிணறுகள் தடை செய்யப்படும்.கால்வாய் அமைத்ததன் வாயிலாக இரு துண்டுகளாக பிரிக்கப்பட்ட நிலங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்ல குழாய் அனுமதி, பாசன சங்கங்களின் ஒப்புதலுடன் வழங்கப்பட வேண்டும்.
கால்வாய் அருகே அமைந்துள்ள கிணறுகளில், கால்வாய் நோக்கி சைடு போர் போடப்பட்டு இருந்தால் அந்த கிணறுகளின் மின் இணைப்பும் துண்டிக்கப்படும்.
கால்வாய் கரையின் வெளிப்பகுதியில் இருந்து 50 மீட்டர் தொலைவிற்கு அப்பால் அமைந்துள்ள கிணறுகளின் தண்ணீரை அந்தந்த இடங்களிலே பயன்படுத்த வேண்டும். வெளியிடங்களுக்கு கொண்டு செல்லக்கூடாது.பாசன கால்வாய் நீர் அனைத்துமே ஆயக்கட்டு பூமி விவசாயிகளுக்கு மட்டுமே உரியது. வணிக பயன்பாடு மற்றும் இதர பயன்பாடுகளுக்கு பயன்படுத்தக்கூடாது.வழக்கில் இணைந்துள்ள மனுதாரர்களுக்கு மீண்டும் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
இப்பணிகள் ஆகஸ்டு மாதத்துக்குள் 50 சதவீதம் நிறைவு செய்து நீர்வளத்துறை அதிகாரிகள் வாயிலாக அறிக்கை சமர்பிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.






