என் மலர்
திருப்பூர்
உடுமலை:
உடுமலையை அடுத்த எஸ்.வி.புரம் வழியாக பி.ஏ.பி. பகிர்மான கால்வாய் செல்கிறது. இந்த கால்வாயில் தற்போது 4-ம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் சென்று கொண்டு உள்ளது.இந்த நிலையில் தொப்புள் கொடியுடன் கூடிய பெண் சிசு உடல் இறந்த நிலையில் கரை ஒதுங்கியது. இது குறித்த தகவல் போலீசுக்கு தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் அங்கு விரைந்த உடுமலை போலீசார் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.குழந்தை இறந்து பிறந்ததா?அல்லது பெண் குழந்தை என்பதால் கால்வாயில் வீசிவிட்டனரா? ஏதேனும் முறை தவறிய உறவுக்கு பிறந்ததா? பெண் சிசு உடலை கால்வாயில் வீசிச்சென்ற கல்நெஞ்சம் படைத்த தாய் யார் என்றும் தெரியவில்லை.இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். தொப்புள் கொடியுடன் கூடிய குழந்தையின் உடல் கால்வாயில் மீட்கப்பட்ட சம்பவம் உடுமலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- வனப்பகுதிக்கு வருகை தருகின்ற பொதுமக்கள் பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து மஞ்சள் பைகளை பயன்படுத்த வேண்டும்.
- கோவிலுக்கு வருகை தருகின்ற பொதுமக்கள் உணவுடன் கூடிய பிளாஸ்டிக் பைகள், தண்ணீருடன் கூடிய பாட்டில்களை வனப்பகுதிக்குள் வீசி செல்வதாக தெரிகிறது.
உடுமலை:
ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட உடுமலை வனச்சரக பகுதியில் ஏழுமலையான் கோவில் அமைந்துள்ளது. கோவிலானது அடர்ந்த வனப் பகுதியில் ஆண்டுதோறும் புரட்டாசி மாத சனிக்கிழமை மட்டும் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இந்த நிலையில் கோவிலுக்கு வருகை தருகின்ற பொதுமக்கள் உணவுடன் கூடிய பிளாஸ்டிக் பைகள், தண்ணீருடன் கூடிய பாட்டில்களை வனப்பகுதிக்குள் வீசி செல்வதாக தெரிகிறது.
இது குறித்து இயற்கை ஆர்வலர்கள் கூறியதாவது:- வறட்சி நிலவி வருகின்ற தற்போதைய சூழலில் உணவு தண்ணீரைத் தேடிக் கொண்டு ஏராளமான வனவிலங்குகள் அடிவாரப் பகுதியில் முகாமிட்டு உள்ளது.அப்போது அவை வனப்பகுதியில் வீசப்பட்டுள்ள உணவுடன் கூடிய பிளாஸ்டிக் பைகளை தின்று விடுகின்றது. இதனால் வனவிலங்குகள் படிப்படியாக உடல் ஆரோக்கியத்தை இழந்து பரிதாபமாக உயிரிழந்தும் வருகின்றன. அதன் இறப்பின் காரணத்தை கண்டறிவதற்காக பிரேத பரிசோதனை மேற்கொள்ளும் போது வயிற்றுப் பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகள் இருப்பதும் உறுதி செய்யப்பட்டு உள்ளது.எனவே வனப்பகுதிக்கு வருகை தருகின்ற பொதுமக்கள் பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து மஞ்சள் பைகளை பயன்படுத்த வேண்டும். வனத்துறையினரும் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துபவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். இதற்கிடையில் தன்னார்வலர்கள் மற்றும் வனத்துறையினர் இணைந்து வனப்பகுதியில் மக்கள் வீசி சென்ற பிளாஸ்டிக் பைகள் மற்றும் பாட்டில்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
- அத்திக்கடவு - அவிநாசி திட்டப்பணி ரூ.1,657 கோடி செலவில் நடந்து முடிந்துள்ளது.
- வடகிழக்கு பருவமழை எதிர்பார்க்கும் அளவுக்கு பெய்யாது.
திருப்பூர்:
கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட மக்களின் 60 ஆண்டு கோரிக்கையான அத்திக்கடவு - அவிநாசி திட்டப்பணி ரூ.1,657 கோடி செலவில் நடந்து முடிந்துள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் பெருக்கெடுக்கும் வெள்ளம், காலிங்கராயன் அணைக்கட்டில் நிரம்பி, வெளியேறும் உபரிநீர் தான் திட்டத்திற்கு பயன்படுத்தப்பட உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் பெய்யும் பருவமழையை நம்பிதான் திட்டம் பயன்பாட்டுக்கு வரவுள்ளது.
இது குறித்து நீர்வளத்துறையினர் கூறுகையில், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் தென் மேற்கு பருவமழையை கணக்கிட்டு திட்டத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிட்டிருந்த நிலையில் தென் மேற்கு பருவமழை பொய்த்தது. வட கிழக்கு பருவமழையின் போது போதிய மழை பெய்து, நீர் வரத்து இருக்கும் போது தான் திட்டத்தை செயலாக்கத்திற்கு கொண்டு வர முடியும் என்றனர்.
இது குறித்து தமிழக விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் நல்லசாமி கூறுகையில், கடந்த ஆண்டே இத்திட்டம் 90 சதவீதம் முடிந்துவிட்டது.கடந்த நான்காண்டாக நீலகிரி உள்ளிட்ட இடங்களில் நல்ல மழை பெய்து பவானியில் வெள்ளம் பெருக்கெடுத்தது. கடந்தாண்டு 620 டி.எம்.சி., தண்ணீர் வீணாக கடலில் கலந்தது. அப்போதே வெள்ளோட்டம் முடித்து திட்டத்தை செயல்படுத்தியிருக்கலாம். வடகிழக்கு பருவமழை எதிர்பார்க்கும் அளவுக்கு பெய்யாது. நீலகிரி மலைத்தொடரில் பெருமழை பெய்து பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் மட்டுமே உபரி நீர்வெளியேறும். அதன் வாயிலாக திட்டம் பயன்பாட்டுக்கு வரும் என்றார்.
அத்திக்கடவு - அவிநாசி திட்ட போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் சம்பத்குமார் கூறுகையில், நீலகிரி மலையில் பெய்யும் மழையை நம்பியே திட்டம் செயல்பாட்டுக்கு வரும். இடைபட்ட நேரத்தில் திட்டத்தில் விடுபட்ட குளம், குட்டைகள் குறித்த கணக்கெடுப்பு நடத்தி விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க அரசு முன்வர வேண்டும் என்றார்.
- நிகழ்ச்சிக்கு அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார்.
- விழாவில் 5-வது வார்டு கவுன்சிலர் இந்திராணி, விவசாய சங்க தலைவர் மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திருப்பூர்:
சட்டக் கவசம் அமைப்பு சார்பில் 4-வது ஆண்டு தொடக்க விழா, ஆதரவற்றோர் இல்லத்தில் உணவு வழங்கும் விழா, சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா உள்ளிட்ட முப்பெரும் விழா நெருப்பெரிச்சல் கொங்கு கலையரங்கத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் மருதமுத்து, சிவன்ராஜ், கந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவையொட்டி திருமுருகன் ரியல் எஸ்டேட் அண்டு புரமோட்டர்ஸ், திருமுருகன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திருமுருகன் கல்வி அறக்கட்டளை உள்ளிட்ட திருமுருகன் குழுமத்தின் நிறுவனர் டாக்டர் ஜி.மோகனுக்கு கல்வித் தந்தை மற்றும் சமூக சேவகர் விருது, மாநகராட்சி 16-வது வார்டு கவுன்சிலர் தமிழ்ச்செல்வி கனகராஜிக்கு மக்கள் சேவைக்கான விருது உள்பட பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் நெருப்பெரிச்சல் பகுதியை சேர்ந்த ஏழைத்தொழிலாளியான மாரிமுத்து-சுமதி தம்பதிக்கு திருமுருகன் ரியல் எஸ்டேட் நிறுவனம் சார்பில் அதன் நிறுவனர் ஜி.மோகன் 1½ சென்ட் இலவச இடத்திற்காக தானக்கிரைய பத்திரத்தை வழங்கினார். அதைப் பெற்றுக் கொண்ட தம்பதி மோகனுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துக் கொண்டனர். விழாவில் 5-வது வார்டு கவுன்சிலர் இந்திராணி, விவசாய சங்க தலைவர் மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- மின் நுகர்வோர் தங்கள் மின் தொடர்பான குறைகளை நேரில் மனுக்களாக தெரிவித்து பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
- வருகிற 11-ந் தேதி அவினாசி மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின்நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் காலை 11 மணிக்கு நடக்கிறது.
திருப்பூர்:
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் திருப்பூர் மின்பகிர்மான வட்ட மேற்பார்ைவ பொறியாளர் சார்பில் வருகிற 11-ந் தேதி அவினாசி மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின்நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் காலை 11 மணிக்கு நடக்கிறது. மேற்பார்வை பொறியாளர் மின் நுகர்வோரிடம் குறைகளை கேட்டறிகிறார். எனவே மின் நுகர்வோர் தங்கள் மின் தொடர்பான குறைகளை நேரில் மனுக்களாக தெரிவித்து பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.இந்த தகவலை மின்வாரிய செயற்ெபாறியாளர் பரஞ்ஜோதி தெரிவித்துள்ளார்.
- தி.மு.க. இளைஞரணி 2-வது மாநில மாநாட்டில் திரளாக பங்கேற்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
- ஒன்றிய, நகர நிர்வாகிகளுக்கு கேடயம் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.
திருப்பூர்:
தி.மு.க. திருப்பூர் தெற்கு மாவட்ட ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் கூட்டம் திருப்பூர் பலவஞ்சிபாளையத்தில் உள்ள தி.மு.க. கலைஞர் அறிவாலயம் தளபதி அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் ஜெயராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். தி.மு.க.தெற்கு மாவட்ட செயலாளரும், மாநகராட்சி 4-வது மண்டல தலைவருமான இல.பத்மநாபன் முன்னிலை வகித்தார்.இதில் சிறப்பு விருந்தினர்களாக தி.மு.க. உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினரும், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சருமான மு.பெ.சாமிநாதன், மகளிர் அணி துணைச்செயலாளரும், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சருமான கயல்விழி செல்வராஜ் ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள்.கூட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம், முகவரி மாற்றம் போன்ற பணிகளுக்கு சிறப்பு முகாம் அடுத்த மாதம் 4, 5, 18, 19 ஆகிய தேதிகளில் நடத்த உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.இதனை ஒவ்வொரு வாக்குச்சாவடியாக மாவட்ட கழகம் வழங்கும் குறிப்பேட்டில் ஒவ்வொரு வாக்காளர் பெயருடன் பூர்த்தி செய்து, அந்தந்த ஒன்றிய, நகர, பேரூர் கழக வாக்குச்சாவடி ஒருங்கிணைப்பாளர் ஒப்புதலோடு, மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.தமிழகம் முழுவதும் மகளிரின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 மாதந்தோறும் கடந்த மாதம் 15-ந் தேதி முதல் மகளிர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பான திட்டத்தை வழங்கிய முதல்-அமைச்சருக்கு பாராட்டு தெரிவிப்பது.அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை இ யங்க தேவையான நிதியை தமிழக அரசு வழங்க கேட்பது. நவம்பர் மாதம் 27-ந் தேதி இளைஞரணி செயலாளரும், விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவது.சென்னையில் வருகிற 14-ந் தேதி நடைபெறும் மகளிர் உரிமை மாநாட்டில் தெற்கு மாவட்டத்தில் இருந்து நிர்வாகிகள் திரளாக பங்கேற்பது, டிசம்பர் மாதம் 17-ந்தேதி சேலத்தில் நடைபெறும் தி.மு.க. இளைஞரணி 2-வது மாநில மாநாட்டில் திரளாக பங்கேற்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.இதில் தெற்கு மாவட்ட தி.மு.க. ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தையொட்டி மேற்கு மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தை நடத்த சிறப்பாக ஒத்துழைப்பு கொடுத்த ஒன்றிய, நகர நிர்வாகிகளுக்கு கேடயம் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.
- பெருமாளுக்கு துளசி மாலைகளும், வண்ண மலர்களையும் பக்தர்கள் அணிவித்தனர்.
- தொடர்ந்து பக்தர்களுக்கு துளசி தீர்த்தம் வழங்கப்பட்டது.
காங்கயம்:
திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே உள்ள பெருமாள் மலை மீது குடி கொண்ட ஸ்ரீதேவி சமேத பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத வழிபாடு நடந்து வருகிறது. இந்நிலையில் 3-வது சனிக்கிழமை விழா வெகு சிறப்பாக நடந்தது. இதையொட்டி பெருமாளுக்கு துளசி மாலைகளும், வண்ண மலர்களையும் பக்தர்கள் அணிவித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை வழிபாடு செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு துளசி தீர்த்தம் வழங்கப்பட்டது. முடிவில் விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் காங்கயம் நண்பர்கள் அன்னதான கமிட்டி சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
- சம்பவத்தன்று வேலை முடிந்து இரவு நேரத்தில் தனது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
- அவரை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள காட்டூர் பகுதியை சேர்ந்த மூர்த்தி என்பவரது மகன் புகழேந்தி (வயது 23). இவர் திருப்பூரில் உள்ள வழக்கறிஞர் ஒருவரிடம் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று வேலை முடிந்து இரவு நேரத்தில் தனது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பல்லடம் அருகே உள்ள மாதப்பூர் பிரிவு என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத வாகனம், மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியதாக தெரிகிறது. இதில் தூக்கி வீசப்பட்ட புகழேந்தி பலத்த காயத்துடன் கீழே விழுந்தார்.
உடனே அவரை அக்கம் பக்கம் இருந்தவர்கள் ஓடோடி வந்து அவரை மீட்டு, பல்லடம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து பல்லடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- 2000 வாக்குகள் அதிகம் பெற அ.தி.மு.க நிர்வாகிகள் உள்ளிட்ட உறுப்பினர்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்
- கூட்டத்தில் தேர்தல் பணி மேற்பார்வை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
அவினாசி:
திருப்பூர் மாவட்டம் அவினாசி மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடந்தது. இதற்கு மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெகதீசன் தலைமை தாங்கினார். கோவை புறநகர் வடக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் நாசர் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் வருகிற நாடாளுமன்ற தேர்தல் பணிக்காக பூத் கமிட்டி அமைப்பது, தேர்தல் பணி மேற்பார்வை ஆகியவை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
2000 வாக்குகள் அதிகம் பெற அ.தி.மு.க நிர்வாகிகள் உள்ளிட்ட உறுப்பினர்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் இலக்கிய அணி மாவட்ட செயலார் கார்த்திக் ராஜா, அண்ணா தொழிற்சங்க ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் திரளாக கலந்து கொண்டனர்.
- 95 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. மீதமுள்ள பணிகள் வரும் டிசம்பர் மாதத்திற்குள் நிறைவு செய்யப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.
- துணை மேயா் ஆா்.பாலசுப்பிரமணியம், மாநகாட்சி பொறியாளா் கண்ணன் மற்றும் நீா்பாசன துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.
திருப்பூர்:
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் ரூ.1.120.57 கோடி மதிப்பீட்டில் திருப்பூா் மாநகராட்சிக்கான 4 -வது கூட்டுகுடிநீா் திட்ட நீரேற்று நிலையத்தின் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகளை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் ஆய்வு செய்தாா். அப்போது அவா் கூறியதாவது:- திருப்பூா் மாநகராட்சியில் 4 -வது கூட்டுக் குடிநீா் திட்டப் பணிகள் ரூ.1,120.57 கோடி மதிப்பீட்டில் 6 பகுதிகளாக நடைபெற்று வருகின்றன. இதில், ஒரு நீரேற்று நிலையம், ஒரு குடிநீா் சுத்திகரிப்பு நிலையம், 144 கிலோ மீட்டா் தொலைவுக்கு குடிநீா் ஈா்ப்பு குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தில் மொத்தம் உள்ள 29 மேல்நிலை நீா்த்தேக்க தொட்டிகளில், 21 மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகளின் பணிகள் நிறைவடைந்து, நீரேற்றம் செய்யப்பட்டுள்ளது. 95 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. மீதமுள்ள பணிகள் வரும் டிசம்பர் மாதத்திற்குள் நிறைவு செய்யப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். இத்திட்டம் பயன்பாட்டுக்கு வரும்போது ஒருவருக்கு 135 லிட்டா் குடிநீா் வழங்கப்படும். அடுத்த 30 ஆண்டுகளுக்கு பயன்பெறும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றாா்.
இதைத்தொடா்ந்து, அன்னூா் வட்டம், ஒட்டா்பாளையத்தில் 4-வது கூட்டு குடிநீா் திட்ட சுத்திகரிப்பு நிலையம், பவானி சாகா் வடிநிலக்கோட்டம், ஓடந்துறை கிராமத்தில் பவானி ஆற்றின் குறுக்கே ரூ.24.54 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் தடுப்பணை பணிகளையும் ஆய்வு செய்தாா். ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியா் கிறிஸ்துராஜ், மேயா்தினேஷ்குமாா், மாநகராட்சி ஆணையா் பவன்குமாா் ஜி.கிரியப்பனவா், துணை மேயா் ஆா்.பாலசுப்பிரமணியம், மாநகாட்சி பொறியாளா் கண்ணன் மற்றும் நீா்பாசன துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.
- பொது மக்களுக்கு வன உயிரின பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு வனத்துறை மூலமாக துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.
- இந்த சைக்கிள் பேரணி, திருப்பூர் அவினாசி ரோடு புஷ்பா தியேட்டர் பஸ் நிலையத்தில் இருந்து தொடங்கி அவிநாசி, பெருமாநல்லூர் வழியாக நஞ்சராயன் பறவைகள் சரணாலயத்தை சென்றடைந்தது.
திருப்பூர்:
திருப்பூர் வனக்கோட்டம், திருப்பூர் வனச்சரகத்தில் ஆனைமலை புலிகள் காப்பகம் சார்பில் கடந்த ஒரு வார காலமாக வன உயிரின வார விழா கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், வன உயிரின வார விழாவின் கடைசி நாள் கொண்டாட்டங்களாக வன உயிரினங்களின் பாதுகாப்பை வலியுறுத்தி திருப்பூர் வனச்சரகத்தில் சைக்கிள் பேரணி நடைபெற்றது. இதில் திருப்பூர் மாநகராட்சி ஆணையர் பவன் குமார் ஜி. கிரியப்பனவர் மற்றும் திருப்பூர் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் ஆகியோர் கலந்து ெகாண்டு வன உயிரின பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் சைக்கிள் ஓட்டினர். மேலும் பொது மக்களுக்கு வன உயிரின பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு வனத்துறை மூலமாக துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. இந்த சைக்கிள் பேரணி, திருப்பூர் அவினாசி ரோடு புஷ்பா தியேட்டர் பஸ் நிலையத்தில் இருந்து தொடங்கி அவிநாசி, பெருமாநல்லூர் வழியாக நஞ்சராயன் பறவைகள் சரணாலயத்தை சென்றடைந்தது. இதைத்தொடர்ந்து மரம் நடும் விழாவுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.
- 30 ஆண்டுகள் சிறப்பாக பணிபுரிந்து வரும் ஆசிரிய பெருமக்களுக்கு பாராட்டு விழா என ஐம்பெரும் விழா நடந்தது.
- விழாவிற்கு தமிழக ஆசிரியர் கூட்டணி வட்டார தலைவர் ரா. துரைசாமி தலைமை தாங்கினார்.
அவினாசி:
திருப்பூர் மாவட்டம் அவினாசியில் உள்ள ஒரு மண்டபத்தில் தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பில் இயக்கத்தின் மாணிக்க (40 வது ஆண்டு) விழா, பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா, டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா, 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்று மீண்டவர்களுக்கு பாராட்டு விழா, 30 ஆண்டுகள் சிறப்பாக பணிபுரிந்து வரும் ஆசிரிய பெருமக்களுக்கு பாராட்டு விழா என ஐம்பெரும் விழா நடந்தது.
விழாவிற்கு தமிழக ஆசிரியர் கூட்டணி வட்டார தலைவர் ரா. துரைசாமி தலைமை தாங்கினார். வட்டார செயலாளர் செந்தில் குமார் வரவேற்று பேசினார். வட்டார மகளிர் அணி செயலாளர் சுசீலா உறுதிமொழி ஏற்புரை ஆற்றினார். இதில் தமிழக ஆசிரியர் கூட்டணி அகில இந்திய செயலாளர் அண்ணாமலை கலந்து கொண்டு ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு வழங்கி பேசினார்.
அப்போது அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- மக்கள் நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கின்ற ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு கோரிக்கைகள் ஏதாவது நிறைவேற்றி இருக்கிறதா? என்றால் இல்லை. உதாரணத்திற்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு கொண்டு வருவோம் என்று முதலமைச்சர் கூறினார். நான்கு சட்டமன்ற கூட்டம் நடந்துள்ளது.
பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வருவோம் என சொல்லாமலே பார்த்து கொள்கிறார். இது மிகவும் மனவேதனையாக உள்ளது. அரசு மேல்நிலை, உயர்நிலை பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலைமையை மாற்ற வேண்டும். ஆசிரியர்கள் தங்களது பணிகளை செய்வதற்கு கூட முடியாமல் இணையதளத்திலிருந்து அனைத்து பதிவுகளையும் ஆசிரியர்களே பதிவு செய்ய வேண்டி உள்ளது. பாடம் நடத்தக்கூட ஆசிரியர்களுக்கு நேரம் ஒதுக்காமல் இயந்திரமாக ஆக்கி வருகிறார்கள்.
எனவே இணையதள பணியில் இருந்து ஆசிரியர்களுக்கு விடுதலை செய்ய வேண்டும். 6.25 லட்சம் பேர் புதிய ஓய்வூதிய திட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே பழைய ஓய்வு ஊதிய திட்டத்தை சுயமாக அமல்படுத்துவோம் என அரசு உறுதி தர வேண்டும் இவ்வாறு அவர் தெரிவித்தார்.






