என் மலர்
திருநெல்வேலி
- தாமிரபரணி ஆற்றின் குறுக்கே 150 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட சுலோச்சன முதலியார் பாலம் கம்பீரமாக இருக்கிறது.
- முதலமைச்சருக்கு மக்களை விட கூட்டணிதான் முக்கியமா?.
நெல்லை:
தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று நெல்லைக்கு வந்தார். அவர் நெல்லை சந்திப்பு, வண்ணார்பேட்டை உள்ளிட்ட தாமிரபரணி ஆற்றங்கரை பகுதிகளுக்கு சென்று மழை வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களை பார்வையிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளையும் வழங்கினார்.
பின்னர் பிரேமலதா விஜயகாந்த் நிருபர்களிடம் கூறியதாவது:-
நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் மற்றும் சுற்றி உள்ள குடியிருப்புகள், கடைகளுக்குள் மழை வெள்ளம் புகுந்துள்ளது.
இந்த வெள்ளத்தில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே 150 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட சுலோச்சன முதலியார் பாலம் கம்பீரமாக இருக்கிறது. ஆனால் மேலநத்தம்-கருப்பந்துறை இடையே 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டிய பாலம் இடிந்து விட்டது.
தாமிரபரணி கரையோர மக்களை பாதுகாக்க தமிழக அரசு தவறிவிட்டது. அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை. நள்ளிரவில் அணையில் இருந்து அதிக தண்ணீரை திறந்து விட்டு உள்ளனர். இதுவே அதிக பாதிப்புக்கு காரணம் ஆகும். முதலில் மக்களுக்கு மின் வினியோகம் வழங்க வேண்டும். குடிநீர், சுகாதார வசதி செய்து கொடுக்க வேண்டும். மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.25 ஆயிரமும், கடைகளுக்கு ரூ.5 லட்சமும் வழங்க வேண்டும்.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதுவரை வந்து நேரில் பார்க்கவில்லை. மீட்பு பணிகளையும் கவனிக்கவில்லை. மக்களை சந்திக்க வராமல், கூட்டணி குறித்து பேசுவதற்காக அவர் டெல்லிக்கு சென்று உள்ளார். தி.மு.க. அடுத்த தேர்தலுக்கான வியூகத்தை மட்டுமே செய்து வருகிறது. மக்களை பற்றி கவலைப்படவில்லை. முதலமைச்சருக்கு மக்களை விட கூட்டணிதான் முக்கியமா?. மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் முதலில் முதலமைச்சர் வந்து நிற்க வேண்டும். அப்படி நின்றால்தான் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், வேலை செய்வார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நெல்லை மாவட்டத்தில் மட்டும் 11 பேர் மழைக்கு பலியாகி உள்ளனர்.
- தூத்துக்குடி மாவட்டத்தில் முழு சேதாரம், உயிர்பலி குறித்து தற்போது கணக்கு எடுக்கப்பட்டு வருகிறது.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளத்தில் சிக்கி ஆங்காங்கே சிலர் அடித்துச் செல்லப்பட்டனர்.
தண்ணீர் வடிய தொடங்கிய நிலையில் உடல்கள் ஆங்காங்கே பிணமாக மிதந்தபடி உள்ளது. நெல்லை மாவட்டத்தில் மட்டும் 11 பேர் மழைக்கு பலியாகி உள்ளனர். மேலும் நெல்லை அருகே மானூர் காந்தீஸ்வரம் புதூரைச் சேர்ந்த வேலுச்சாமி என்பவர் மின்சாரம் தாக்கி பலியாகி உள்ளார்.
அதேபோல் தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தில் சிக்கி 16 பேரும், வீட்டு சுவர் இடிந்து 2 பேரும், மின்சாரம் தாக்கி 2 பேரும் பலியாகி உள்ளனர்.
மழை வெள்ள சேதங்கள் குறித்து நகராட்சி நிர்வாக கூடுதல் ஆணையர் பிரகாஷ் தூத்துக்குடியில் நிருபர்களுக்கு பேட்டி அளிதார். அப்போது அவர் கூறியதாவது:-
மத்திய ஆய்வு குழுவினர் தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், காயல்பட்டினம் பகுதிகளை ஆய்வு செய்கின்றனர். ஆய்வின்படி பல்வேறு சேதாரங்கள் கணக்கிட்டு விவசாய நிலங்கள், மீனவ படகுகள் சேதாரங்கள், உயிர்பலி எல்லாவற்றையும் கணக்கிட்டு ஒரு தொகுப்பாக தயார் செய்து அதன் மூலமாக இழப்பீடுகளை வாங்குவதற்கு உண்டான பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். தொடர்ந்து 2 நாட்கள் இந்த ஆய்வு நடக்கிறது. குறைந்தபட்சம் தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களுக்கு ரூ.5 ஆயிரம் கோடி சேதாரம் இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் முழு சேதாரம், உயிர்பலி குறித்து தற்போது கணக்கு எடுக்கப்பட்டு வருகிறது. முழு விவரங்கள் விரைவில் தெரியவரும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் 40 இடங்களுக்கு செல்ல முடியாத நிலை இருக்கிறது. ராணுவம் என்.டி.ஆர்.எப் போன்ற பயிற்சி வாய்ந்தவர்கள் மட்டுமே செல்ல முடியும் என்ற நிலை உள்ளது. ஹெலிகாப்டர்கள் ஒரு நாளைக்கு தேவைக்கு தகுந்த மாதிரி அனுப்பப்படுகிறது. தற்போது 10 ஹெலிகாப்டர்கள் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு பகுதிக்கும் அனுப்பப்பட்டு, அத்தியாவசிய பொருட்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. முதியவர்கள் மற்றும் கர்ப்பிணிகளை மீட்டு வருகிறோம். தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் உள்பட 400-க்கும் மேற்பட்டோர் வெள்ள பாதிப்பில் ஈடுபட்டவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 3 கம்பெனி ராணுவ படையினர் வந்து உள்ளனர். தேவை ஏற்பட்டால் முழு ஆதரவு கொடுப்பதாக அவர்கள் தெரிவித்து உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
எனவே, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மழை வெள்ளத்திற்கு பலியானவர்கள் எண்ணிக்கை 32-ஆக உயர்ந்து உள்ளது.
- மார்கழி மாதத்தில் இந்துக்கள் திருமண விழாக்களை நடத்துவது இல்லை.
- கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர்கள் டிசம்பர் மாதத்தில் திருமண விழா நடத்த ஏற்பாடு செய்திருந்தனர்.
நெல்லை:
கனமழை காரணமாக நெல்லை, தூத்துக்குடியில் உள்ள பல திருமண மண்டபங்களும் வெள்ள நீரால் சூழப்பட்டுள்ளன.
இதன் காரணமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற இருந்த பல திருமண விழாக்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.
பொதுவாக மார்கழி மாதத்தில் இந்துக்கள் திருமண விழாக்களை நடத்துவது இல்லை. அதேவேளையில் கிறிஸ்தவர்களுக்கு இந்த கட்டுப்பாடு கிடையாது.
இதன் காரணமாக கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர்கள் டிசம்பர் மாதத்தில் திருமண விழா நடத்த ஏற்பாடு செய்திருந்தனர்.
கனமழையால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள பல திருமண மண்டபங்களில் வெள்ளநீர் புகுந்ததால் இம்மாவட்டங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பல திருமண விழாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
செல்போன் சிக்னல் கிடைக்காத காரணத்தால் திருமண விழா ரத்து செய்யப்பட்ட விவரத்தை செல்போன் மூலம் உறவினர்களுக்கு தெரிவிக்க முடியாத நிலைக்கு திருமண வீட்டார் தள்ளப்பட்டு உள்ளனர்.
அதேவேளையில் தொடர்பு கொள்ள முடிந்த உறவினர்கள் மூலம் மற்ற உறவினர்களுக்கும் இந்த தகவலை தெரிவிக்க திருமண வீட்டார் அறிவுறுத்தி உள்ளனர்.
திருமணத்தையொட்டி மணமகளுக்கு சீர்வரிசை கொடுப்பதற்காக பெற்றோர் தங்களது வீட்டில் வாங்கி வைத்திருந்த கட்டில், பீரோ மற்றும் மின்சாதனப் பொருட்களும் வெள்ள நீரில் சேதம் அடைந்துள்ளது. இதனால் திருமண வீட்டார் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.
- வெள்ள முகாம்கள் ஏதும் நடைபெறாத கல்லூரிகள் செயல்படும்.
- வெள்ளிக்கிழமை முதல் பள்ளிகள் திறக்க ஆய்வு செய்யப்படுகிறது என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் வெள்ள பாதிப்பு காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.
வெள்ள முகாம்கள் ஏதும் நடைபெறாத கல்லூரிகள் செயல்படும் என்றும் வெள்ளிக்கிழமை முதல் பள்ளிகள் திறக்க ஆய்வு செய்யப்படுகிறது என்றும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
- கடந்த 3 நாட்களாக துண்டிக்கப்பட்ட நெல்லை - தூத்துக்குடி சாலையில் போக்குவரத்து தொடங்கியுள்ளது.
- மழை வெள்ளத்தால் நெல்லையில் உள்ள 840 நியாய விலைக் கடைகளில் 63 நியாய விலைக் கடைகள் பாதிக்கப்பட்டு பொருட்கள் சேதமடைந்துள்ளன.
நெல்லை:
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கடந்த 17 மற்றும் 18-ந்தேதிகளில் பெய்த அதீத கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
தற்போது, வெள்ளம் வடிய தொடங்கிய நிலையில் நெல்லை மாவட்டத்தில் மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது.
இந்நிலையில், நெல்லை மாவட்டத்தின் தற்போதைய நிலை குறித்து மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் கூறியதாவது:-
* நெல்லை மாவட்டத்தில் உள்ள 1195 பள்ளிகளில் 1108 பள்ளிகள் முழு பாதுகாப்புடன் உள்ளன. மீதமுள்ள பள்ளிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
* கடந்த 3 நாட்களாக துண்டிக்கப்பட்ட நெல்லை - தூத்துக்குடி சாலையில் போக்குவரத்து தொடங்கியுள்ளது.
* மழை வெள்ளத்தால் நெல்லையில் உள்ள 840 நியாய விலைக் கடைகளில் 63 நியாய விலைக் கடைகள் பாதிக்கப்பட்டு பொருட்கள் சேதமடைந்துள்ளன.
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.
- நேற்று இரவு என்.ஜி.ஓ காலனி பகுதியில் உள்ள ஓடையில் அவரது மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டது.
- உடலை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக தீயணைப்பு துறையினர் அனுப்பி வைத்தனர்.
நெல்லை:
பாளை பெருமாள்புரம் என்.ஜி.ஓ. காலனி அருகே உள்ள திருமால்நகர் பகுதியை சேர்ந்தவர் சேர்மன். இவரது மகன் அருணாச்சலம் (வயது 19).
இவர் கடந்த 17-ந்தேதி இரவு தனது சகோதரியை அழைத்து வருவதற்காக மோட்டார் சைக்கிளில் புதிய பஸ் நிலையம் நோக்கி சென்றுள்ளார்.
அப்போது என்.ஜி.ஓ.காலனி பகுதியில் கனமழையில் சாலையில் சென்ற மழை வெள்ளத்தில் அவர் மோட்டார் சைக்கிளுடன் விழுந்து விட்டார்.
இதனிடையே அருணாச்சலத்தை காணாததால் அவரது பெற்றோர் பெருமாள்புரம் போலீசில் புகார் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
கடுமையான வெள்ளம் வந்து கொண்டிருந்த பகுதி வழியாக அவர் சென்றதால் அருணாச்சலம் மோட்டார் சைக்கிளுடன் வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி அவரை தேடினர்.
இந்நிலையில் நேற்று இரவு என்.ஜி.ஓ காலனி பகுதியில் உள்ள ஓடையில் அவரது மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டது.
இதனால் அதில் இருந்து சற்று தொலைவு வரை ஜே.சி.பி மூலமாக அருணாச்சலத்தை தீயணைப்புத் துறையினர் தேடிய நிலையில் இன்று காலை ஓடைக்குள் சிக்கி உயிரிழந்த நிலையில் அவர் பிணமாக மீட்கப்பட்டார்.
அவரது உடலை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக தீயணைப்பு துறையினர் அனுப்பி வைத்தனர்.
- நெல்லையில் இயல்பு நிலை திரும்பியுள்ளதால் மார்க்கெட்டுகளில் காய்கறிகள் வாங்குவதற்கு மக்கள் கூட்டம் அலைமோதியது.
- மதுரை, கோவை, ஈரோடு, திருப்பூர், சென்னை உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் பஸ்கள் கே.டி.சி.நகர் வழியாக 4 வழிச்சாலைக்கு செல்கிறது.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் பெய்த பெருமழை காரணமாக ஆயிரக்கணக்கான குடியிருப்புகளில் வெள்ளநீர் புகுந்தது.
குறிப்பாக மாநகர பகுதியில் பெருமழையால் அதிக அளவு வெள்ளம் ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.
இதன் காரணமாக மக்கள் வீடுகளிலேயே முடங்கினர். பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று 3-வது நாளாக விடுமுறை நீடிக்கிறது. தாழ்வான பகுதிகளில் வசித்த பொதுமக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மாநகரில் முக்கிய இடங்கள் மற்றும் சாலைகளில் மழைநீர் தேங்கி கிடந்த நிலையில், நேற்று பெரும்பாலான தெருக்களில் வெள்ளம் முற்றிலுமாக குறைந்தது.
டவுனில் சந்தி பிள்ளையார் முக்கு பகுதியில் இருந்து காட்சி மண்டபம் வரையிலும் தேங்கி கிடந்த மழைநீர் நேற்று மாலை முற்றிலும் வற்றியது. டவுன் கருப்பந்துறை அருகே மேலப்பாளையத்தையும், டவுனையும் இணைக்கும் வகையில் தாமிரபரணி ஆற்றின் குறுக்காக அமைந்திருந்த மேலநத்தம் தரைப்பாலம் கனமழை வெள்ளத்தால் முற்றிலுமாக உருக்குலைந்தது.
பழையபேட்டை, வழுக்கோடை, தொண்டர் சன்னதி, ஆர்ச் பகுதி, ரத வீதிகள், சந்திப்பு மீனாட்சி புரம், சி.என்.கிராமம், வரதராஜ பெருமாள் கோவில் பகுதி, வண்ணார்சுமார் 4 நாட்களுக்கு பிறகு நெல்லையில் இயல்பு நிலை திரும்பியுள்ளதால் மார்க்கெட்டுகளில் காய்கறிகள் வாங்குவதற்கு மக்கள் கூட்டம் அலைமோதியது.பேட்டை, முருகன்குறிச்சி, பெருமாள்புரம், கே.டி.சி.நகர், என்.ஜி.ஓ. காலனி உள்ளிட்ட பகுதிகளில் தேங்கிய வெள்ளம் முழுமையாக வடிந்துவிட்டாலும் அதனால் ஏற்பட்ட பாதிப்பு என்பது அதிகமாகவே இருக்கிறது. மாநகரில் மட்டும் சுமார் 10-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்துவிட்டன.
அதேபோல் வீடுகளில் வைக்கப்பட்டிருந்த முக்கிய ஆவணங்களான வீட்டு பத்திரம், ஆதார், பான், வங்கி புத்தகம், பள்ளி மாணவர்களுக்கான சான்றிதழ்கள், புத்தகங்கள் உள்ளிட்டவைகளும் முற்றிலும் நாசமாகிவிட்டது. சந்திப்பு பஸ் நிலைய பகுதியில் வெள்ளம் இன்னும் வடியவில்லை. சந்திப்பு பஸ் நிலையத்தை சுற்றிலும், அதன் உள்புறத்திலும் சுமார் 7 அடி வரை தண்ணீர் தேங்கி கிடந்தது. இதனால் அங்கு அமைந்துள்ள தரைத்தள கடைகள் முழுவதும் முற்றிலும் நாசமாகின. சந்திப்பு ம.தி.தா பள்ளியில் வெள்ளம் குளம் போல் தேங்கி கிடக்கிறது.
நேற்று சந்திப்பு பஸ் நிலையத்தின் தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் வெள்ளம் முற்றிலுமாக வடிந்தது. மேற்கு பகுதி மற்றும் வடக்கு பகுதிகளில் இன்னும் வெள்ளம் வடியவில்லை. த.மு. சாலையில் தொடங்கி மதுரை சாலை உடையார்பட்டி வரையிலும் இன்றும் 4-வது நாளாக இடுப்பு அளவுக்கு தண்ணீர் தேங்கி கிடப்பதால் பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்துள்ளனர்.
சந்திப்பு பஸ் நிலையம் பகுதியில் உள்ள மருந்து கடைகள், எலக்ட்ரிக், பேக்கரி, எலக்ட்ரானிக்ஸ், பிளம்பிங், செல்போன், கண் கண்ணாடி, புத்தக கடைகள், ஸ்டூடியோக்கள், ஓட்டல்கள், டீக்கடைகள் என சுமார் ஆயிரம் கடைகளில் மழை வெள்ளமானது புகுந்தது. இதனால் இந்த கடைகளில் இருந்த பொருட்கள் முற்றிலும் நாசமாகியது. சுற்றிலும் சி.என்.கிராமம், மீனாட்சிபுரம், சிந்துபூந்துறை உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளில் டி.வி., பிரிட்ஜ், ஏ.சி. உள்ளிட்டவையும் சேதம் அடைந்தது. இவ்வாறாக சந்திப்பு பகுதியில் மட்டும் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்துள்ளது. இங்கு பெரும்பாலும் நடுத்தர வர்க்கத்தினர் கடும் நெருக்கடிக்கும் இடையே வாடகைக்கு கடைகள் வாங்கி நடத்தி வந்த நிலையில் மழை வெள்ளம் அவர்களுக்கு பேரிடியாக அமைந்துள்ளது.
இன்னும் ஒருசில நாட்களில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அதனை தொடர்ந்து புத்தாண்டு, பொங்கல் உள்ளிட்டவை வரும் நிலையில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து மீள்வதற்கு குறைந்தது 2 மாதம் தேவைப்படும் என கடை உரிமையாளர்கள் கூறியுள்ளனர். எனவே அவர்களின் வாழ்வாதாரத்திற்கு அரசு ஏதேனும் வழிவகை செய்ய வேண்டும் என கோரிக்கை பலமாக எழுந்துள்ளது.
சுமார் 4 நாட்களுக்கு பிறகு நெல்லையில் இயல்பு நிலை திரும்பியுள்ளதால் மார்க்கெட்டுகளில் காய்கறிகள் வாங்குவதற்கு மக்கள் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக டவுன் நயினார்குளம் மொத்த காய்கறி மார்க்கெட், பாளை காந்தி மார்க்கெட்டுகளில் அதிகாலையில் கார்கள், மோட்டார் சைக்கிள்களில் பொதுமக்கள் வந்து காய்கறிகள் வாங்கி சென்றனர். இதனால் அந்த சாலையில் கடும் போக்குவரத்து நெருக்கடி இருந்தது. இதேபோல் இறைச்சி கடைகள், பாலகங்களிலும் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
சந்திப்பு ரெயில் நிலையத்தில் நேற்று மதியத்திற்கு பிறகு நடை மேடை, தண்டவாளங்களில் தேங்கி கிடந்த மழைநீர் முழுமையாக வடிந்தது. எனவே நேற்று மாலையில் யார்டு பகுதிகள் சுத்தப்படுத்தப்பட்டு சோதனை ஓட்டம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து இன்று அதிகாலை முதல் மீண்டும் ரெயில்கள் ஓட தொடங்கின. அதேபோல் பார்சல் சர்வீஸ், தபால் சேவைகளும் தொடங்கின.
இன்று மாலை நெல்லையில் இருந்து சென்னைக்கு நெல்லை எக்ஸ்பிரஸ், அனந்தபுரி, கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் உள்ளிட்டவை இயக்கப்பட உள்ளது. செங்கோட்டை-நெல்லை இடையே பயணிகள் ரெயில் இயக்கம் இன்று காலை முதல் தொடங்கியது. தாம்பரம்-செங்கோட்டை-தாம்பரம், பாலருவி எக்ஸ்பிரஸ் உள்ளிட்டவை இன்று முதல் இயங்குகிறது. தூத்துக்குடிக்கு ரெயில்கள் இயங்கவில்லை. அதேபோல் ஸ்ரீவைகுண்டத்தில் ரெயில் தண்டவாளத்தில் ஏற்பட்ட மண் அரிப்பால் திருச்செந்தூருக்கு இயக்கப்படும் பயணிகள் ரெயில், செந்தூர் எக்ஸ்பிரஸ் உள்ளிட்டவையும் இயக்கப்படவில்லை.
இதேபோல் நேற்று வரை தென்காசி, ஆலங்குளம் உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளுக்கு பொது போக்குவரத்து தொடங்கப்படாமல் இருந்த நிலையில் இன்று காலை முதல் தென்காசிக்கு பஸ்கள் இயங்கின. அதே நேரத்தில் சங்கரன்கோவிலுக்கு சென்ற பஸ்கள் டவுன் ஆர்ச், மார்க்கெட் வழியாக தச்சநல்லூர் சென்று சங்கரன்கோவில் சென்றது. வண்ணார்பேட்டை வடக்கு புறவழிச்சாலையில் அமைந்துள்ள தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் வாகனங்கள் செல்வதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. அந்த பைபாசில் உடையார்பட்டி பகுதியில் சாலை துண்டிக்கப்பட்டுள்ளதால் அந்த சாலையில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.
இதனால் மதுரை, கோவை, ஈரோடு, திருப்பூர், சென்னை உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் பஸ்கள் கே.டி.சி.நகர் வழியாக 4 வழிச்சாலைக்கு செல்கிறது. அதே நேரத்தில் நெல்லையில் இருந்து தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூருக்கு பஸ்கள் இயக்கம் 4-வது நாளாக துண்டிக்கப்பட்டுள்ளது. வண்ணார்பேட்டை கொக்கிரகுளம் பகுதியில் ஆம்னி பஸ்கள், கனரக லாரிகள் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்ட அறிவியல் மையத்தில் தேங்கி கிடந்த வெள்ள நீர் வடிந்துவிட்டது. அதே நேரத்தில் அந்த வழியாக செல்லும் அண்ணா சாலை வெள்ளத்தால் துண்டிக்கப்பட்டதால் அங்கு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
- நெல்லையில் 40 ஆயிரம் ஏக்கர், தூத்துக்குடியில் 46 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.
- இந்த ஆண்டும் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்ததால் சுமார் 80 ஆயிரம் ஏக்கர் வரையிலும் நெற்பயிர் நடவு செய்யப்பட்டது.
தென் மாவட்டங்களில் கடந்த 16-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை விடாமல் கொட்டித்தீர்த்த வரலாறு காணாத மழை மக்களின் வாழ்க்கையை அடியோடு புரட்டி போட்டது.
குறிப்பாக தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக பல்வேறு இடங்களில் ஊருக்குள் வெள்ளம் புகுந்தது.
இதனால் நகரப்பகுதிகள் மற்றும் கிராமங்கள் என 2 மாவட்டங்களிலும் திரும்பிய இடமெல்லாம் வெள்ளக்காடாக மாறியது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
மேலும் வெள்ளநீர் விவசாயிகளின் விளைநிலங்களுக்குள் புகுந்ததால் அவர்களின் வாழ்வாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தை பொருத்தவரை விவசாயத்தை முதன்மையாக கொண்ட மாவட்டமாகும்.
இந்த மாவட்டத்தில் ஜூன் செப்டம்பர் வரை தென்மேற்கு பருவமழை காலத்தில் கார் சாகுபடி மற்றும் நவம்பர்-பிப்ரவரி வரை வடகிழக்கு பருவமழை காலத்தில் பிசான சாகுபடியும் செய்யப்படுகிறது.
இதேபோல் தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களிலும் பிரதான பயிராக நெல்லும், அடுத்தபடியாக பயிறு வகைகளும் சாகுபடி செய்யப்படுகிறது.
தாமிரபரணி ஆற்று பாசனம் மூலம் மானூர், பாளை, அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, நாங்குநேரி, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டத்தின் குறிப்பிட்ட சில பகுதிகளில் நெல் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. மொத்த சாகுபடி பரப்பில் நன்செய் நெல் சாகுபடி முக்கிய பங்கு வகிக்கிறது.
மானாவாரி பகுதிகளில் நீர் ஆதாரம் இருக்கும் பகுதிகளிலும் கூட நெற்பயிர் விவசாயிகளால் சாகுபடி செய்யப்படுகிறது. மேலும் மக்காச்சோளம், பயறு, நிலக்கடலை, எள், தென்னை, வாழை, மிளகாய் ஆகிய பயிர்களும் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
இதில் சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பருத்தி அதிகளவில் பயிரிடப்படுகிறது. களக்காடு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வாழை உள்ளிட்ட பயிர்கள் பயிரிடப்படுகின்றன.
நெல்லை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காலத்தில் ஆண்டுதோறும் கார் பருவ சாகுபடியானது சுமார் 23 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் நடைபெறும்.
தொடர்ந்து முக்கியமான பருவ சாகுபடியாக கருதப்படும் பிசான பருவ சாகுபடி காலகட்டத்தில் மாவட்டம் முழுவதும் சுமார் 60 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பில் நெல் நடவு பணிகள் நடைபெறும்.
இவ்வாறாக தாமிரபரணி ஆற்று பாசனத்தின் மூலம் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் சுமார் 86,107 ஏக்கரில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. இதில் நெல்லையில் 40 ஆயிரம் ஏக்கர், தூத்துக்குடியில் 46 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.
இவை தவிர தாமிரபரணி ஆற்று நீர் பாசனம் அல்லாமல் மற்ற பாசனங்கள் வழியாக நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடையநல்லூர், புளியங்குடி, சங்கரன்கோவில், ஆலங்குளம், கடையம், ராதாபுரம், திசையன்விளை என மற்ற பகுதிகளில் அணைகளின் நீர்ப்பாசனத்தின் மூலம் சுமார் ஒரு லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.
இந்த நிலையில் இந்த ஆண்டும் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்ததால் சுமார் 80 ஆயிரம் ஏக்கர் வரையிலும் நெற்பயிர் நடவு செய்யப்பட்டது. ஆனால் சமீபத்தில் 2 நாட்களாக பெய்த பெரும் மழை காரணமாக அணைகளில் கூடுதல் நீர் திறக்கப்பட்டதால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டு விளை நிலங்களுக்குள் மழை நீர் புகுந்தது.
இது தவிர ஏராளமான குளங்களிலும் உடைப்பு ஏற்பட்டு வயலுக்குள் புகுந்ததால் நடவு செய்யப்பட்ட நெற்பயிர்கள் அனைத்தும் நாசமாகி வாழ்வாதாரம் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் திடியூர் பகுதியை சேர்ந்த ரமேஷ் என்ற விவசாயி கூறியதாவது:-
வடகிழக்கு பருவமழை காரணமாக குளங்கள் அனைத்தும் நிரம்பிய நிலையில் கடன் வாங்கி ஏராளமானவர்கள் நெல் நடவு பணியில் ஈடுபட்டனர். ஆனால் தற்போது பெய்த பெருமழையால் விளைநிலங்களுக்குள் தண்ணீர் புகுந்து பயிர்கள் நாசமாகிவிட்டது.
பொதுவாக நெல் நடவு செய்யும்போது ஒரு ஏக்கருக்கு உழவு செய்து மரம் அடிக்க ரூ.6 ஆயிரம் வரை டிராக்டருக்கு செலவாகிறது.
அதன்பின்னர் வரப்பு வெட்டுவதற்கு ரூ.1,800-ம், நாற்று நடுவதற்கு வேலையாட்களுக்கு கூலியாக ஏக்கருக்கு ரூ.3,600 வரையிலும் செலவாகிறது. முன்னதாக நெல் விதை வாங்கி நாற்று வளர வைக்க ரூ.1,800 செலவாகிறது.
அதன்பின்னர் நெல் நாற்று நடும்போதே அதற்கு அடி உரமாக ரூ.1,350 மதிப்பிலான டி.ஏ.பி. உரம், 266 ரூபாய்க்கு யூரியா உள்ளிட்டவையும் பயன்படுத்தப்படுகிறது. பின்னர் களை பறிக்க ரூ.3 ஆயிரம் வரை கூலியாக கொடுக்க வேண்டியுள்ளது.
இதேபோல் 3 முறைகளை பறித்தல், மருந்து அடித்தல், உரம் போடுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இவற்றையெல்லாம் கடந்து நெல் விளைந்தவுடன் எந்திரம் மூலம் அறுவடை செய்ய வேண்டும். ஒரு ஏக்கரை அறுவடை செய்ய 1 1/2 மணி நேரம் வரை ஆகிறது. இதற்கு கூலியாக ரூ.3,600 செலவு செய்ய வேண்டியுள்ளது.
தற்போது நாங்கள் ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை செலவு செய்து நாற்று நட்ட நிலையில், மழையால் அவை மூழ்கி நாசமாகி விட்டது. இந்த நிலங்களில் மீண்டும் உழவு செய்து நாற்று நட்டாலும், அவை நல்ல மகசூல் தராது. காலம் கடந்து விட்டதால் இனி விதை நெல் வாங்கி நாற்று பாவ முடியாது. மார்கழி மாத பயிறு மண்ணுக்கு ஆகாது என்பார்கள். எனவே இனி நாங்கள் நாற்று வாங்கி நடும்போது புகையான் உள்ளிட்ட நோய் தாக்குதல் தான் ஏற்படும்.
எனவே அரசு எங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணை தலைவர் பெரும்படையார் கூறியதாவது:-
தென் மாவட்டங்களில் பெய்த மிக கனமழை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை புரட்டி போட்டுள்ளது. ஆயிரக்கணக்கான விளைநிலங்கள் நீரில் மூழ்கியுள்ளது.
வாழை, நெல் பயிர்கள் வெள்ளத்தால் சேதமடைந்துள்ளது. குளம், கால்வாய்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இந்த விளைநிலங்களில் இன்னும் 1 ஆண்டுக்கு விவசாய பணிகள் மேற்கொள்ள முடியாது. எனவே ஒரு விவசாயி குடும்பத்துக்கு மாதம் தோறும் ரூ 10 ஆயிரம் என 1 ஆண்டுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நெல்லை வெள்ளத்தில் தத்தளித்தது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளானார்கள்.
- கனமழையால் நெல்லை மாநகர் மற்றும் மாவட்டத்தில் 215 வீடுகள் இடிந்து சேதமடைந்துள்ளன.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் கடந்த 16-ந்தேதி தொடங்கி நேற்றுமுன்தினம் மதியம் வரை வரலாறு காணாத மழை பெய்தது. இதனால் நெல்லை வெள்ளத்தில் தத்தளித்தது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளானார்கள்.
கடும் வெள்ளத்தில் ஆங்காங்கே சிலர் அடித்துச் சென்றுள்ளனர். இந்தநிலையில் வெள்ளம் வடிய தொடங்கிய நிலையில் உடல்கள் ஆங்காங்கே பிணமாக மிதந்தபடி உள்ளது. அதாவது நெல்லை சந்திப்பு பகுதியில் 60 வயது முதியவரும், சி.என்.கிராமம் பகுதியில் 80 வயது முதியவர் உடலும் பிணமாக மிதந்தது. இவர்கள் இருவரின் உடல்களையும் சந்திப்பு போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
நெல்லைபேட்டை சுத்தமல்லி பாரதிநகர் பகுதியை சேர்ந்தவர் வள்ளுவன் (58). கூலி தொழிலாளியான இவர் நெல்லை டவுனில் உள்ள வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தார். அவரது உடலும் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.
நெல்லை டவுனை அடுத்த பழைய பேட்டை கிருஷ்ணபேரி ஓடைக்கரை தெருவை சேர்ந்தவர் கடற்கன்னி (58). ஆட்டோ டிரைவரான இவர் நேற்றுமுன்தினம் மாலை அதே பகுதியில் உள்ள குளத்து மறுகால் தண்ணீரில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டார். இதனை பார்த்தவர்கள் அவரை மீட்க முயற்சி செய்தனர். ஆனால் அதற்குள் கடற்கன்னி வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டார். இதைத்தொடர்ந்து அவரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. மேலும் பேட்டை போலீசார் மற்றும் தீயணைப்பு மீட்பு படையினரும் அவரை தொடர்ந்து தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று காலை டவுண் மாதா பூங்கொடி தெரு பகுதியில் கடற்கன்னி உடல் மீட்கப்பட்டது. இதேபோல் பாளையங்கோட்டை பகுதியில் வீடு இடிந்து விழுந்து முதியவர் ஒருவர் இடிபாடுகளுக்குள் சிக்கி பலியானார். அவருடைய பெயர் விவரம் தெரியவில்லை. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மழை வெள்ளத்துக்கு இதுவரை நெல்லை மாவட்டத்தில் 10 பேர் பலியாகி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே நெல்லை அருகே உள்ள ரெட்டியார்பட்டியை சேர்ந்த அருணாச்சலம் (வயது 19) என்பவர் மோட்டார் சைக்கிளுடன் என்.ஜி.ஓ. காலனி ஓடையில் விழுந்தார். இதனால் அவரை வெள்ளம் அடித்துச்சென்றது. அவரை தேடும் பணியில் போலீசாரும், தீயணைப்பு படையினரும் மும்மரமாக ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையே கனமழையால் நெல்லை மாநகர் மற்றும் மாவட்டத்தில் 215 வீடுகள் இடிந்து சேதமடைந்துள்ளன. மேலும் ஆயிரக்கணக்கான வீடுகள் பகுதியாகவும் இடிந்து சேதம் அடைந்துள்ளன.
- பல்வேறு இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டது.
- பாதுகாப்பு கருதி ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாது என தெரிவிக்கப்பட்டது.
நெல்லை:
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பெய்த அதிகனமழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும் பல்வேறு இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டது.
தேவைக்கேற்ப அரசு பேருந்துகள் இயக்கப்பட்டாலும், பாதுகாப்பு கருதி ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாது என தெரிவிக்கப்பட்டது.
மழை ஓய்ந்த பிறகு மீட்பு பணிகளும், நிவாரண உதவிகளும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படுகிறது.
இந்நிலையில், நெல்லை ரெயில் நிலையத்தில் சூழ்ந்து இருந்த வெள்ள நீர் வடிந்த நிலையில் ரெயில் சேவை இன்று மீண்டும் தொடங்கியுள்ளது.
நெல்லை - செங்கோட்டை இடையே பயணிகள் ரெயில் சேவை, செங்கோட்டை - தாம்பரம் இடையே இயங்கும் பாலருவி எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில் சேவைகள் வழக்கம் போல செயல்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
- தூத்துக்குடி மக்கள் வெளியில் கால் வைக்க முடியாத அளவுக்கு தவிப்பில் உள்ளனர்.
- மக்களைக் கேட்டால்தான் மீட்புப்பணிகள் குறித்து உண்மை நிலை தெரியவரும்.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு செய்தார். பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் அதி கனமழை பெய்துள்ளது. அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால் பாதிப்பை குறைத்திருக்கலாம். வானிலை மைய அறிவுரை அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுத்திருந்தால் மக்களை காத்திருக்கலாம்.

தூத்துக்குடி மக்கள் வெளியில் கால் வைக்க முடியாத அளவுக்கு தவிப்பில் உள்ளனர். மக்களைக் கேட்டால்தான் மீட்புப்பணிகள் குறித்து உண்மை நிலை தெரியவரும் என்றார்.
- நெல்லை சந்திப்பு பகுதியில் வெள்ளம் வடியத் தொடங்கிய நிலையில் சுமார் 60 வயது முதியவர் உடல் மீட்கப்பட்டது.
- வெள்ளத்தில் சிக்கி நேற்று 3 பேர் உயிரிழந்த நிலையில் இன்று மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நேற்று மதியம் வரை வரலாறு காணாத மழை பெய்தது. இதனால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.
இதுபோல் காட்டாற்று வெள்ளமும் தாமிரபரணியில் கலந்ததால் சுமார் ஒரு லட்சம் கன அடி தண்ணீர் ஆற்றில் சென்றது. இதில் ஆற்றங்கரையோர குடியிருப்புகள் மற்றும் கிராமங்களுக்குள் வெள்ளநீர் புகுந்ததால் அங்கு வசித்து வந்தவர்கள் வெளியேற்றப்பட்டு மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து நேற்று மழை சற்று குறைய தொடங்கியதால் அணைக்கு நீர்வரத்து சரிய தொடங்கியது. இதனால் ஆற்றில் வரும் வெள்ளம் குறைய தொடங்கியது. இன்று காலை தாமிரபரணியில் தண்ணீரின் அளவு குறைந்துள்ளது.
இந்நிலையில் நெல்லை சந்திப்பு பகுதியில் வெள்ளம் வடியத் தொடங்கிய நிலையில் சுமார் 60 வயது முதியவர் உடல் மீட்கப்பட்டது. இதேபோல் சி.என்.கிராமம் பகுதியில் சுமார் 80 வயது முதியவர் உடலும் மீட்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரின் உடலை சந்திப்பு போலீசார் பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சம்பவம் வழக்குப்பதிவு செய்து இறந்தவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பேட்டை சுத்தமல்லி பாரதி நகர் பகுதியை சேர்ந்தவர் வள்ளுவன் (வயது 58). கூலி தொழிலாளியான இவர் நெல்லை டவுனில் வெள்ள நீரில் சிக்கி உயிரிழந்தார். இது குறித்து டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து வள்ளுவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை டவுனை அடுத்த பழைய பேட்டை கிருஷ்ணபேரி ஓடைக்கரை தெருவை சேர்ந்தவர் கடற்கன்னி (58). ஆட்டோ டிரைவரான இவர் நேற்று மாலை அதே பகுதியில் உள்ள குளத்து மறுகால் தண்ணீரில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டார். இதனை பார்த்தவர்கள் அவரை மீட்க முயற்சி செய்தனர். ஆனால் அதற்குள் கடற்கன்னி வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டார். இதைத்தொடர்ந்து அவரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. மேலும் பேட்டை போலீசார் மற்றும் தீயணைப்பு மீட்பு படையினரும் அவரை தொடர்ந்து தேடி வந்தனர். இந்நிலையில் இன்று காலை டவுண் மாதா பூங்கொடி தெருப்பகுதியில் கடற்கன்னி உடல் மீட்கப்பட்டது.
நெல்லையில் வெள்ளத்தில் சிக்கி நேற்று 3 பேர் உயிரிழந்த நிலையில் இன்று மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனால் மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.






