என் மலர்tooltip icon

    தேனி

    • கனமழை காரணமாக கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருந்தது.
    • ஆண்டிபட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பெய்த கனமழை காரணமாக நேற்று இரவு முதல் விட்டுவிட்டு மின்தடை ஏற்பட்டது.

    கூடலூர்:

    தேனி மாவட்டத்தில் நடப்பாண்டு பருவமழை பொய்த்துப்போன நிலையில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள முல்லைபெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருகிறது.

    இதனால் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்று 306 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 620 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 118.25 அடியாக உள்ளது. அணையிலிருந்து 300 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நீர்இருப்பு 2312 மி.கனஅடியாக உள்ளது.

    இதேபோல் வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதியிலும் நேற்று கனமழை பெய்தது. வைகை அணையில் மட்டும் 15 செ.மீ மழை கொட்டியது. இதனால் அணையின் நீர்மட்டம் 47.08 அடியாக உயர்ந்தது. நேற்று 41 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 331 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையிலிருந்து 69 கனஅடிநீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 1630 மி.கனஅடியாக உள்ளது.

    மஞ்சளாறு அணைக்கு நேற்று நீர்வரத்து இல்லாமல் இருந்தது. இன்று காலை அணைக்கு 108 கனஅடி நீர் வருகிறது. நீர்மட்டம் 48.50 அடியாக உள்ளது. நீர் இருப்பு 312.32 மி.கனஅடியாக உள்ளது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்ந்து 73.80 அடியாக உள்ளது. நீர்வரத்து 47 கனஅடி, திறப்பு 3 கனஅடி, நீர் இருப்பு 33.34 மி.கனஅடி.

    கனமழை காரணமாக கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருந்தது. இதனால் கடந்த 2 நாட்களாக அதிகளவு சுற்றுலா பயணிகள் வந்து குளித்து மகிழ்ந்தனர். இன்று காலை முதல் தண்ணீர் வரத்து மேலும் அதிகரித்ததால் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் குளிக்க தடைவிதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை கும்பக்கரை அருவிக்கு சுற்றுலா பயணிகள் யாரும் வரவேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதனால் வார விடுமுறை நாட்களில் அருவிக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.

    பெரியாறு 39, தேக்கடி 13.4, கூடலூர் 2.6, உத்தமபாளையம் 3.2, சண்முகாநதி அணை 7.4, போடி 18.8, வைகை அணை 150.2, சோத்துப்பாறை 61, மஞ்சளாறு 85, பெரியகுளம் 80.4, வீரபாண்டி 11.2, அரண்மனைப்புதூர் 24, ஆண்டிபட்டி 98.2 மி.மீ மழையளவு பதிவானது.

    ஆண்டிபட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பெய்த கனமழை காரணமாக நேற்று இரவு முதல் விட்டுவிட்டு மின்தடை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.

    • சம்பவத்தன்று வருசநாட்டில் உள்ள கம்ப்யூட்டர் சென்டருக்கு சென்றுவருவதாக வீட்டில் கூறிவிட்டு தனது மகளை அழைத்துச்சென்றார்.
    • ஆனால் இரவு வெகுநேரமாகியும் அவர்கள் வீடு திரும்பவில்லை.

    வருசநாடு:

    ஆண்டிபட்டி அருகே வருசநாடு உரக்குண்டான் பகுதியை சேர்ந்தவர் கவியரசன். இவரது மனைவி முத்துமாரி(25). இவர்களுக்கு மித்ரா என்ற 4 வயது குழந்தை உள்ளது. கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரச்சினை ஏற்பட்டது. இதனால் முத்துமாரி கோபித்துக்கொண்டு தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

    சம்பவத்தன்று வருசநாட்டில் உள்ள கம்ப்யூட்டர் சென்டருக்கு சென்றுவருவதாக வீட்டில் கூறிவிட்டு தனது மகளை அழைத்துச்சென்றார். ஆனால் இரவு வெகுநேரமாகியும் அவர்கள் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த முத்துமாரியின் தந்தை அக்கம்பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் வருசநாடு போலீசில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து கைக்குழந்தையுடன் மாயமான முத்துமாரியை தேடி வருகின்றனர்.

    சின்னமனூர் அருகே ஓடைப்பட்டியை சேர்ந்தவர் பவித்ரா(22). சம்பவத்தன்று சின்னமனூருக்கு வேலை தேடி செல்வதாக கூறிச்சென்றார். அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் ஓடைப்பட்டி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து பவித்ராவை தேடி வருகின்றனர்.

    • 111 பயனாளிகளுக்கு ரூ.104.88 லட்சம் மதிப்பீட்டில் தள்ளு வண்டிகள் வழங்கப்பட்டது.
    • இதனைத்தொடர்ந்து நகராட்சி 12-வது வார்டு பகுதியில் சமூக கழிப்பறை திறக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    தேனி:

    தேனி அல்லிநகரம் நகராட்சியில் தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் சாலையோர வியாபாரிகளுக்கு தள்ளு வண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி தேனி சமதர்மபுரம் பகுதியில் உள்ள காமராஜர் பூங்கா வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நகர் மன்ற தலைவர் ரேணுபிரியா பாலமுருகன் தலைமை தாங்கினார். பெரியகுளம் எம்.எல்.ஏ சரவணகுமார் முன்னிலை வகித்தார். நகராட்சி ஆணையாளர் கணேசன் வரவேற்றார். நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பியும், தேனி தி.மு.க வடக்கு மாவட்ட செயலாளருமான தங்கதமிழ்செல்வன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பயனாளிகளுக்கு தள்ளு வண்டிகளை வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் பாலமுருகன், கடவுள், திட்ட குழு உறுப்பினர் நாராயண பாண்டியன், சுகாதார அலுவலர் அறிவுச்செல்வம், நகர அமைப்பு அலுவலர் சலேத் அப்துல் நாசர், நகர அமைப்பு ஆய்வாளர் கணேஷ் குமார், சமுதாய அமைப்பாளர்கள் தமிழ்மணி, ராஜசெல்வி உள்பட கவுன்சிலர்கள், நகராட்சி பணியாளர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் போது 111 பயனாளிகளுக்கு ரூ.104.88 லட்சம் மதிப்பீட்டில் தள்ளு வண்டிகள் வழங்கப்பட்டது.

    இதனைத்தொடர்ந்து நகராட்சி 12-வது வார்டு பகுதியில் சமூக கழிப்பறை திறக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    • சின்னமனூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட மேகமலை வனப்பகுதியில் அதிகளவில் மான், காட்டு மாடு வேட்டையாடுவதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது
    • அதன்படி வனக்காப்பாளர்கள் ரோந்து சென்ற போது மஞ்சள் நதிக் கண்மாயில் மானின் தலை, குடல் போன்ற உள் உறுப்புகள் சிதறி கிடந்தது.

    சின்னமனூர்:

    சின்னமனூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட மேகமலை வனப்பகுதியான எரசக்கநாயக்கனூர் மலை மற்றும் பெருமாள் மலை பகுதியில் அதிகளவில் மான், காட்டு மாடு வேட்டையாடுவதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்படி வனக்காப்பாளர்கள் ரோந்து சென்ற போது மஞ்சள் நதிக் கண்மாயில் மானின் தலை, குடல் போன்ற உள் உறுப்புகள் சிதறி கிடந்தது.

    இது குறித்து வனத்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், கன்னிச்சேர்வைபட்டி எம்.ஜி.ஆர் காலனியை சேர்ந்த தங்கம் மகன் சுரேஷ், நாகராஜ் மகன் பிரகாஷ், சின்னஓவுலாபுரத்தை சேர்ந்த ஜெயராஜ் மகன் சிவா, சின்னச்சாமி மகன் ராகுல் ஆகிய 4 பேரும் மானை வேட்டையாடியது தெரிய வந்தது.

    இதையடுத்து வேட்டை கும்பலை சேர்ந்த சுரேஷ் மற்றும் பிரகாஷ் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவான மற்ற 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • ரூ.2 லட்சம் கடன் வாங்கியதை திருப்பி தர காலம் தாழ்த்தி வந்துள்ளார்.
    • காபில் பணத்தை திருப்பி கொடுக்காமல் தகராறு செய்து முகமது சமீரை தாக்கி உள்ளார்.

    சின்னமனூர்:

    தேனி மாவட்டம் சின்னமனூர் சாமிக்குளம் பகுதியை சேர்ந்தவர் அபுதாகீர் மகன் காபில் (வயது21). இவர் பட்டப்படிப்பு முடித்து விட்டு அரசு போட்டித்தேர்வுக்கு தயாராகி வந்தார்.

    அதே பகுதியை சேர்ந்த காதர் மகன் முகமது சமீர் என்பவரிடம் ரூ.2 லட்சம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த பணத்ைத திருப்பி தர காலம் தாழ்த்தி வந்துள்ளார்.

    இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.

    நேற்று இரவு காபில் முகமது சமீரிடம் கடனை திருப்பி தருவதாகவும், சின்னமனூர் வண்டிப்பேட்டை பகுதிக்கு வருமாறு கூறி உள்ளார். இதனைத் தொடர்ந்து முகமது சமீர் அவரது உறவினர் அலாவுதீனுடன் அங்கு சென்றார்.

    அப்போது காபில் பணத்தை திருப்பி கொடுக்காமல் தகராறு செய்து முகமது சமீரை தாக்கி உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த 2 பேரும் காபிலை சரமாரியாக கத்தியால் குத்தினர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த காபில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். கொலை சம்பவத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் சின்னமனூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து காபிலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சின்னமனூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் பதுங்கி இருந்த முகமதுசமீர் மற்றும் அலாவுதீனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • கல்லூரி மாணவர்களிடையே தமிழர்களின் மரபையும் தமிழ்ப் பெருமிதத்தையும் உணர்த்தும் வகையில் ‘மாபெரும் தமிழ்க் கனவு’ என்ற பெயரிலான பண்பாட்டுப் பரப்புரை நிகழ்வுகள்.
    • தமிழ்நாடு முழுவதும் உள்ள 1,000 கல்லூரிகளைச் சேர்ந்த ஏறத்தாழ 1 லட்சம் மாணவர்களை சென்றடையும் வண்ணம் 100 இடங்களில் சிறப்பாக நடத்தப்பட்டன.

    தேனி:

    தேனி மாவட்டம் போடி அரசு பொறியியல் கல்லூரியில் தமிழ் இணையக் கல்வி கழகத்தின் சார்பில் கல்லூரி மாணவ- மாணவிகளுக்கான மாபெரும் தமிழ்க் கனவு தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை 2-ம் கட்ட சொற்பொழிவு நிகழ்வு கலெக்டர் ஷஜீவனா தலைமையில் நடைபெற்றது. இதில் பத்மஸ்ரீ கலைமாமணி நர்த்தகி நடராஜ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    நிகழ்ச்சியில் கலெக்டர் தெரிவித்ததாவது:-

    கல்லூரி மாணவர்களிடையே தமிழர்களின் மரபையும் தமிழ்ப் பெருமிதத்தையும் உணர்த்தும் வகையில் 'மாபெரும் தமிழ்க் கனவு' என்ற பெயரிலான பண்பாட்டுப் பரப்புரை நிகழ்வுகள் தமிழ்நாடு முழுவதும் உள்ள 1,000 கல்லூரிகளைச் சேர்ந்த ஏறத்தாழ 1 லட்சம் மாணவர்களை சென்றடையும் வண்ணம் 100 இடங்களில் சிறப்பாக நடத்தப்பட்டன. இதன் 100-வது நிகழ்ச்சி சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் முதல்-அமைச்சர் தலைமையில் நடைபெற்றது.

    போடி அரசினர் பொறியியல் கல்லூரியில் "தென்மேற்கு பருவக்காற்றும் தீந்தமிழ் வீச்சும்" என்னும் தலைப்பில் மாநில திட்டக்குழு உறுப்பினர் பத்மஸ்ரீ கலைமாமணி நர்த்தகி நடராஜ் சிறப்புரையாற்றி உள்ளார். அவர் கடந்த 30 ஆண்டுகளாக பரதநாட்டியத்திற்கு தமது வாழ்வை அர்ப்பணித்துள்ளார். இவரது திறமையைப் பாராட்டி, இந்திய அரசு 2019-ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கி பெருமைப்படுத்தியுள்ளது. இவரது வாழ்க்கை குறிப்பு 11-ம் வகுப்பு தமிழ் பாடநூலில் பாடமாக உள்ளது.

    தமிழ் மரபின் வளமையையும் பண்பாட்டின் பெருமையையும், மாணவர்கள் அடுத்து வரும் தலைமுறையினருக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றார்.

    நர்த்தகி நடராஜ் தெரிவித்ததாவது:-

    கல்லூரி மாணவ-மாணவிகள் தாங்கள் காணும் கனவினை மிகப்பெரிய கனவாக காண வேண்டும்.அந்த கனவினை முழுமையாக எடுத்துக்கொண்டு அதற்கான கடின முயற்சியை மேற்கொள்வதன் மூலம் வெற்றி என்ற இலக்கினை எளிதாக அடைவது மட்டுமல்லாமல் இந்த சமுதாயத்தில் நீங்கள் யார் என்பதை நிரூபிக்க முடியும். மாணவர்கள் கல்லூரி படிப்பினை முடிக்கும் முன்னர் தங்கள் காணும் கனவினை நினைவாக்குவதற்கான பணிகளை இன்று தொடங்க வேண்டும் என்றும் வாழ்க்கையில் உங்களின் இலக்கிற்கு முரணாக அமையும் அனைத்தையும் எதிர்த்து போராடி தன்னம்பிக்கையுடன் விடாமுயற்சியுடன் தொடர்ந்து செயல்பட்டு வெற்றி காண வேண்டும் என பேசினார்.

    பேச்சுப் போட்டியில் கலந்து கொண்ட மாணவ- மாணவிகளுக்கு மற்றும் சிறப்பான கேள்வி கேட்ட கேள்வி நாயகன், கேள்வி நாயகிகளுக்கு பாரட்டுச் சான்றிதழ்கள் மற்றும் புத்தங்களை பரிசாக கலெக்டர் வழங்கினார்.

    • வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியபோது 3 சேவல்கள் திருடப்பட்டது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • புகாரின்பேரில் சேவல்கள் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    ஆண்டிபட்டி:

    ஆண்டிபட்டி அருகே ரோசனம்பட்டியை சேர்ந்தவர் குபேந்திரன் (வயது51). இவர் தனது தோட்டத்தில் செட் அமைத்து சண்ைட சேவல்கள் வளர்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று கோவிலுக்கு சென்று விட்டு வீடு திரும்பியபோது 3 சேவல்கள் திருடப்பட்டது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இந்த நிலையில் இறைச்சி கடையில் அவரது சேவல்களை அஜித், சுந்தரேசன், துரைச்சாமி ஆகியோர் விற்க விலை பேசினர்.

    இது குறித்து அறிந்ததும் க.விலக்கு போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அஜித்தை கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.

    • குழந்தையுடன் வெளியே சென்ற பெண் இரவு வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.
    • புகாரின் பேரில் போலீசார் மாயமானவர்களை தேடி வருகின்றனர்.

    சின்னமனூர்:

    சின்னமனூர் அருகே எஸ்.அழகாபுரியை சேர்ந்த மோகன்பாபு மனைவி மைப்பாரை (வயது26). இவர்களுக்கு வர்ஷா (8) என்ற மகளும் லோகேஸ்வரன் (3) என்ற மகனும் உள்ளனர்.

    சம்பவத்தன்று குழந்தைகளுடன் மைப்பாரை வெளியே சென்றார். அதன்பின்னர் இரவு வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தாய் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்காததால் ஓடைப்பட்டி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண் மற்றும் குழந்தைகளை தேடி வருகின்றனர்.

    • தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் மனுக்கள் குழு கூட்டம் தலைவர் கோவிசெழியன் தலைமையில் நடைபெற்றது.
    • ஆய்வுகூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களின் மீது மேல்நடவடிக்கை எடுக்க கலெக்டரிடம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

    தேனி:

    தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் மனுக்கள் குழு கூட்டம் தலைவர் கோவிசெழியன் தலைமையில் நடைபெற்றது. கலெக்டர் ஷஜீவனா, எம்.எல்.ஏக்கள் அய்யப்பன், கார்த்திகேயன், பாபு, பொன்னுச்சாமி, முத்துராஜா, சட்டமன்ற பேரவை செயலாளர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் எம்.எல்.ஏக்கள் சரவணக்குமார், மகாராஜன் ஆகியோரும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் குழுவின் தலைவர் பேசியதாவது,

    தேனி மாவட்டத்தில் உள்ள பல்வேறு துறைகளை சேர்ந்த அலுவலர்கள் பதில் அளிக்கும்போது மனுக்களு க்கான பதில்களை சட்டமன்ற பேரவை செய்தியாளர்கள் பதிவு செய்வார்கள். கூட்டத்தின் நடவடிக்கை குறிப்புகள் அடிப்படையில் அறிக்கை யாக தயார் செய்யப்பட்டு பேரவையின் முன் தாக்கல் செய்யப்படும்.

    தேனி மாவட்டத்தில் கடந்த 27.7.2010-ம் தேதியன்று குழு ஆய்வு மேற்கொண்டு 2011-ம் ஆண்டு 14-வது பேரவையில் மனுக்கள் குழுவினரால் பேரவைக்கு அளிக்கப்பட்ட 15 மனுக்கள் மற்றும் 2013-ம் ஆண்டு அளிக்கப்பட்ட 12 மனுக்கள் என மொத்தம் 25 மனுக்கள் மீது மறுஆய்வு மேற்கொள்ள குழு பரிந்துரை செய்யப்பட்டது.

    ஆய்வுகூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களின் மீது மேல்நடவடிக்கை எடுக்க கலெக்டரிடம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி தலைவர் பிரீத்தா, மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • லோயர் கேம்ப் முல்லைப்பெரியாறு பகுதியில் இருந்து மதுரை மாநகராட்சிக்கு குழாய்கள் மூலம் குடிநீர் கொண்டு செல்லும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
    • தடுப்பணை பணிகள் ஆகியவற்றை மதுரை மாநகராட்சி மேயர் மற்றும் ஆணையாளர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் லோயர் கேம்ப் முல்லைப்பெரியாறு பகுதியில் இருந்து மதுரை மாநகராட்சிக்கு குழாய்கள் மூலம் குடிநீர் கொண்டு செல்லும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக அம்ருத் திட்டத்தின் கீழ் ஆசிய வளர்ச்சி வங்கி நிதி உதவியுடன் ரூ.1653.21 கோடி மதிப்பில் குடிநீர் மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தி பணிகள் நடைபெற்று வருகிறது.

    தற்போது முல்லை ப்பெரியாறு லோயர் கேம்ப் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் பம்பிங் ஹவுஸ், பொதுப்பணித்துறை மூலம் கட்டப்பட்டு வரும் தடுப்பணை பணிகள் ஆகியவற்றை மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி, ஆணையாளர் பிரவீன்குமார் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    மேலும் தேனி - கூடலூர் பிரதான சாலையில் கே.புதுப்பட்டி, உத்தம பாளையம், சின்னமனூர் சாலையோரங்களில் இரும்பு குழாய்கள் பதிக்கப்பட்டு வரும் பணிகளையும் பார்வையிட்டு விரைந்து முடிக்க பொறியாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களுக்கு உத்தரவிட்டனர்.

    பின்னர் தேனி மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை அலுவலகத்தில் ஆலோ சனைக் கூட்டம் நடை பெற்றது. இதில் கண்கா ணிப்பு பொறியாளர் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் 118.10 அடியாக உள்ளது. 306 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 300 கன அடி நீர் திறக்கப்படுகிறது. வைகை அணையின் நீர் மட்டம் 46.90 அடியாக உள்ளது. 41 கன அடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 69 கன அடி நீர் திறக்கப்படு கிறது.

    மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 47.95 அடியாக உள்ளது. வரத்தும், திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 69.04அடியாக உள்ளது. 10 கன அடி நீர் வருகிறது. 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது. பெரியாறு 8.8, தேக்கடி 7.6, கூடலூர் 2.2, சண்முகாநதி அணை 10.6, உத்தமபாளை யம் 2.4, வைகை அணை 5.8, மஞ்சளாறு 1, சோத்துப்பாறை 4, வீரபாண்டி 4, அரண்ம னைப்புதூர் 20 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

    • பட்டுப்புழுக்கள் 20 நாட்களை கடந்தும் புழுக்களை உற்பத்தி செய்யாததால் பட்டுப்புழு உற்பத்தியாளர்கள் கடும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர்.
    • நோய்வாய்ப்பட்ட புழுக்கள் மற்ற புழுக்களையும் பாதித்து வருவதால் தீ வைத்து அழித்து வருகின்றனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி அருகே உள்ள பெருமாள் கவுண்டன்பட்டியில் 15-க்கும் மேற்பட்ட பட்டுப்புழு கூடு உற்பத்தியாளர்கள் பட்டுப்புழுக்களை வளர்த்து உற்பத்தி செய்து வருகின்றனர். 100 ஏக்கருக்கு மேல் இப்பகுதியில் பட்டுப்புழு உற்பத்தி செய்து மல்பெரி இலைகள் எனப்படும் முசுமுசுக்கை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

    ஆண்டுக்கு ரூ.2 கோடிக்கு மேல் லாபம் ஈட்டித்தரும் இந்த தொழில் இப்பகுதி விவசாயிகளுக்கு வரப்பிரசாதமாக உள்ளது. பட்டுப்புழு உற்பத்தியாளர்கள் அரசு மானியம் பெற முடியாமல் தவித்து வந்தனர். இதனால் குறிப்பிட்ட கால அளவுக்கு பிறகு நோய்வாய்ப்பட்டு புழுக்கள் செத்து மடிந்து இழப்பை ஏற்படுத்தி வந்தது.

    அரசு அங்கீகாரம் பெற்ற விற்பனை மையத்திலிருந்து பெறப்படும் பட்டுப்புழு முட்டை ஒன்றுக்கு 450 முதல் 600 முட்டை இடுவதால் விவசாயிகள் தங்கள் விளைநிலத்தின் அளவை பொறுத்து 200 முதல் 300 வரை முட்டைகளை பெற்று அதிலிருந்து வரக்கூடிய லட்சக்கணக்கான பட்டுப்புழுக்களுக்கு 12 நாட்கள் வரை மல்பெரி இலைகளை உணவாக வழங்கி வருகின்றனர்.

    12-ம் நாளில் பட்டுப்புழு கூடு கட்டுவதற்கு உரிய பக்குவம் அடைந்ததும் புழுக்கள் மீது வலைகள் வைக்கப்படும். அதன்மீது 6 நாட்களில் பட்டுப்புழுக்கள் கூடுகளை உற்பத்தி செய்யும். அதன்பிறகு ஓரிரு நாட்களில் முறையாக பராமரிக்கப்பட்டு விற்பனைக்கு கொண்டு செல்லப்படும்.

    ஒருசில நாட்கள் தாமதமானாலும் புழுக்களுக்கு இறகுகள் முளைத்து பட்டுப்பூச்சிகளாக மாறி கூட்டைவிட்டு வெளியே வந்துவிடும். இதனால் கூடுகள் சிதைந்து பயனற்றதாகிவிடும். இந்நிலையில் பழனி, தொப்பம்பட்டியில் பெறப்பட்ட பட்டுப்புழுக்கள் 20 நாட்களை கடந்தும் புழுக்களை உற்பத்தி செய்யாததால் பட்டுப்புழு உற்பத்தியாளர்கள் கடும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர்.

    இதனால் புழுக்கள் நோய்வாய்ப்பட்டு இறந்து வருகிறது. நோய்வாய்ப்பட்ட புழுக்கள் மற்ற புழுக்களையும் பாதித்து வருவதால் தீ வைத்து அழித்து வருகின்றனர். இதுகுறித்து தேனி மாவட்ட பட்டுப்புழு உற்பத்தி துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

    ஓரிரு மாதங்களிலேயே லட்சக்கணக்கான அளவில் வருவாய் இழப்பை சந்தித்துள்ளதாகவும், அரசு உரிய நடவடிக்கை எடுத்து பட்டு உற்பத்தியை பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சேதுபாரதம் திட்டத்தின் கீழ் இந்த பணிக்காக ரூ.45 கோடி ஒதுக்கப்பட்டது. போடி டி.எஸ்.பி. அலுவல கம் அருகே தொடங்கி மத்திய அரசின் நறுமண ப்பொருள் வாரிய அலுவல கம் வரை மேம்பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது.
    • அதிகாரிகள் ஆய்வு செய்து பணிகள் மேற்கொள்ளும் போது வாகனங்கள் சென்று வர உரிய ஏற்பாடுகள் செய்யவும் பணிகளை தரமாக மற்றும் விரைவாக முடிக்க அறிவுரை வழங்கினார்.

    மேலசொக்கநாதபுரம்:

    போடி-மதுரை அகல ரெயில் பாதை பணிகள் முடிந்து போடியில் இருந்து மதுரை மற்றும் சென்னைக்கு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் போடி - மூணாறு தேசிய நெடுஞ்சாலையில் இரட்டை வாய்க்கால் அருகே சாலையின் குறுக்கே ரெயில் பாதை செல்கிறது.

    இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் கேரளாவுக்கு செல்லும் அத்தியாவசிய வாகனங்களும் நீண்ட நேரம் நின்று செல்லும் நிலை உள்ளது. எனவே இதனை தவிர்க்க நெடுஞ்சாலை த்துறை சார்பில் இரட்டை வாய்க்கால் பகுதியில் மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது.

    சேதுபாரதம் திட்டத்தின் கீழ் இந்த பணிக்காக ரூ.45 கோடி ஒதுக்கப்பட்டது. போடி டி.எஸ்.பி. அலுவல கம் அருகே தொடங்கி மத்திய அரசின் நறுமண ப்பொருள் வாரிய அலுவல கம் வரை மேம்பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்காக நிலம் கையகப்படு த்தும் பணிகள் முடிவடைந்து ராட்சத கான்கிரீட் தூண்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த பணிகளை மதுரை கோட்ட தேசிய நெடு ஞ்சாலை பொறியாளர் முருகன், தேனி உதவி கோட்ட தேசிய நெடுஞ்சா லை பொறியாளர் ரம்யா, போடி சரக உதவி கோட்ட பொறியாளர் பிரவீன் உள்ளிட்ட அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    பணிகள் மேற்கொள்ளும் போது வாகனங்கள் சென்று வர உரிய ஏற்பாடுகள் செய்யவும் பணிகளை தரமாக மற்றும் விரைவாக முடிக்க அறிவுரை வழங்கினார்.

    ×