என் மலர்
உள்ளூர் செய்திகள்

பேச்சுப்போட்டியில் கலந்து கொண்ட மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை மாவட்ட கலெக்டர் ஷஜீவனா மற்றும் கலைமாமணி நர்த்தகி நடராஜ் வழங்கினர்.
லட்சியத்துக்கு எதிராக அமையும் அனைத்தையும் எதிர்த்து போராட வேண்டும்
- கல்லூரி மாணவர்களிடையே தமிழர்களின் மரபையும் தமிழ்ப் பெருமிதத்தையும் உணர்த்தும் வகையில் ‘மாபெரும் தமிழ்க் கனவு’ என்ற பெயரிலான பண்பாட்டுப் பரப்புரை நிகழ்வுகள்.
- தமிழ்நாடு முழுவதும் உள்ள 1,000 கல்லூரிகளைச் சேர்ந்த ஏறத்தாழ 1 லட்சம் மாணவர்களை சென்றடையும் வண்ணம் 100 இடங்களில் சிறப்பாக நடத்தப்பட்டன.
தேனி:
தேனி மாவட்டம் போடி அரசு பொறியியல் கல்லூரியில் தமிழ் இணையக் கல்வி கழகத்தின் சார்பில் கல்லூரி மாணவ- மாணவிகளுக்கான மாபெரும் தமிழ்க் கனவு தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை 2-ம் கட்ட சொற்பொழிவு நிகழ்வு கலெக்டர் ஷஜீவனா தலைமையில் நடைபெற்றது. இதில் பத்மஸ்ரீ கலைமாமணி நர்த்தகி நடராஜ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் கலெக்டர் தெரிவித்ததாவது:-
கல்லூரி மாணவர்களிடையே தமிழர்களின் மரபையும் தமிழ்ப் பெருமிதத்தையும் உணர்த்தும் வகையில் 'மாபெரும் தமிழ்க் கனவு' என்ற பெயரிலான பண்பாட்டுப் பரப்புரை நிகழ்வுகள் தமிழ்நாடு முழுவதும் உள்ள 1,000 கல்லூரிகளைச் சேர்ந்த ஏறத்தாழ 1 லட்சம் மாணவர்களை சென்றடையும் வண்ணம் 100 இடங்களில் சிறப்பாக நடத்தப்பட்டன. இதன் 100-வது நிகழ்ச்சி சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் முதல்-அமைச்சர் தலைமையில் நடைபெற்றது.
போடி அரசினர் பொறியியல் கல்லூரியில் "தென்மேற்கு பருவக்காற்றும் தீந்தமிழ் வீச்சும்" என்னும் தலைப்பில் மாநில திட்டக்குழு உறுப்பினர் பத்மஸ்ரீ கலைமாமணி நர்த்தகி நடராஜ் சிறப்புரையாற்றி உள்ளார். அவர் கடந்த 30 ஆண்டுகளாக பரதநாட்டியத்திற்கு தமது வாழ்வை அர்ப்பணித்துள்ளார். இவரது திறமையைப் பாராட்டி, இந்திய அரசு 2019-ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கி பெருமைப்படுத்தியுள்ளது. இவரது வாழ்க்கை குறிப்பு 11-ம் வகுப்பு தமிழ் பாடநூலில் பாடமாக உள்ளது.
தமிழ் மரபின் வளமையையும் பண்பாட்டின் பெருமையையும், மாணவர்கள் அடுத்து வரும் தலைமுறையினருக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றார்.
நர்த்தகி நடராஜ் தெரிவித்ததாவது:-
கல்லூரி மாணவ-மாணவிகள் தாங்கள் காணும் கனவினை மிகப்பெரிய கனவாக காண வேண்டும்.அந்த கனவினை முழுமையாக எடுத்துக்கொண்டு அதற்கான கடின முயற்சியை மேற்கொள்வதன் மூலம் வெற்றி என்ற இலக்கினை எளிதாக அடைவது மட்டுமல்லாமல் இந்த சமுதாயத்தில் நீங்கள் யார் என்பதை நிரூபிக்க முடியும். மாணவர்கள் கல்லூரி படிப்பினை முடிக்கும் முன்னர் தங்கள் காணும் கனவினை நினைவாக்குவதற்கான பணிகளை இன்று தொடங்க வேண்டும் என்றும் வாழ்க்கையில் உங்களின் இலக்கிற்கு முரணாக அமையும் அனைத்தையும் எதிர்த்து போராடி தன்னம்பிக்கையுடன் விடாமுயற்சியுடன் தொடர்ந்து செயல்பட்டு வெற்றி காண வேண்டும் என பேசினார்.
பேச்சுப் போட்டியில் கலந்து கொண்ட மாணவ- மாணவிகளுக்கு மற்றும் சிறப்பான கேள்வி கேட்ட கேள்வி நாயகன், கேள்வி நாயகிகளுக்கு பாரட்டுச் சான்றிதழ்கள் மற்றும் புத்தங்களை பரிசாக கலெக்டர் வழங்கினார்.






