என் மலர்
நீங்கள் தேடியது "கடும் நஷ்டம்"
- பட்டுப்புழுக்கள் 20 நாட்களை கடந்தும் புழுக்களை உற்பத்தி செய்யாததால் பட்டுப்புழு உற்பத்தியாளர்கள் கடும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர்.
- நோய்வாய்ப்பட்ட புழுக்கள் மற்ற புழுக்களையும் பாதித்து வருவதால் தீ வைத்து அழித்து வருகின்றனர்.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் போடி அருகே உள்ள பெருமாள் கவுண்டன்பட்டியில் 15-க்கும் மேற்பட்ட பட்டுப்புழு கூடு உற்பத்தியாளர்கள் பட்டுப்புழுக்களை வளர்த்து உற்பத்தி செய்து வருகின்றனர். 100 ஏக்கருக்கு மேல் இப்பகுதியில் பட்டுப்புழு உற்பத்தி செய்து மல்பெரி இலைகள் எனப்படும் முசுமுசுக்கை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
ஆண்டுக்கு ரூ.2 கோடிக்கு மேல் லாபம் ஈட்டித்தரும் இந்த தொழில் இப்பகுதி விவசாயிகளுக்கு வரப்பிரசாதமாக உள்ளது. பட்டுப்புழு உற்பத்தியாளர்கள் அரசு மானியம் பெற முடியாமல் தவித்து வந்தனர். இதனால் குறிப்பிட்ட கால அளவுக்கு பிறகு நோய்வாய்ப்பட்டு புழுக்கள் செத்து மடிந்து இழப்பை ஏற்படுத்தி வந்தது.
அரசு அங்கீகாரம் பெற்ற விற்பனை மையத்திலிருந்து பெறப்படும் பட்டுப்புழு முட்டை ஒன்றுக்கு 450 முதல் 600 முட்டை இடுவதால் விவசாயிகள் தங்கள் விளைநிலத்தின் அளவை பொறுத்து 200 முதல் 300 வரை முட்டைகளை பெற்று அதிலிருந்து வரக்கூடிய லட்சக்கணக்கான பட்டுப்புழுக்களுக்கு 12 நாட்கள் வரை மல்பெரி இலைகளை உணவாக வழங்கி வருகின்றனர்.
12-ம் நாளில் பட்டுப்புழு கூடு கட்டுவதற்கு உரிய பக்குவம் அடைந்ததும் புழுக்கள் மீது வலைகள் வைக்கப்படும். அதன்மீது 6 நாட்களில் பட்டுப்புழுக்கள் கூடுகளை உற்பத்தி செய்யும். அதன்பிறகு ஓரிரு நாட்களில் முறையாக பராமரிக்கப்பட்டு விற்பனைக்கு கொண்டு செல்லப்படும்.
ஒருசில நாட்கள் தாமதமானாலும் புழுக்களுக்கு இறகுகள் முளைத்து பட்டுப்பூச்சிகளாக மாறி கூட்டைவிட்டு வெளியே வந்துவிடும். இதனால் கூடுகள் சிதைந்து பயனற்றதாகிவிடும். இந்நிலையில் பழனி, தொப்பம்பட்டியில் பெறப்பட்ட பட்டுப்புழுக்கள் 20 நாட்களை கடந்தும் புழுக்களை உற்பத்தி செய்யாததால் பட்டுப்புழு உற்பத்தியாளர்கள் கடும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர்.
இதனால் புழுக்கள் நோய்வாய்ப்பட்டு இறந்து வருகிறது. நோய்வாய்ப்பட்ட புழுக்கள் மற்ற புழுக்களையும் பாதித்து வருவதால் தீ வைத்து அழித்து வருகின்றனர். இதுகுறித்து தேனி மாவட்ட பட்டுப்புழு உற்பத்தி துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
ஓரிரு மாதங்களிலேயே லட்சக்கணக்கான அளவில் வருவாய் இழப்பை சந்தித்துள்ளதாகவும், அரசு உரிய நடவடிக்கை எடுத்து பட்டு உற்பத்தியை பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.






