என் மலர்tooltip icon

    தேனி

    • வாங்கிய பணத்தை திருப்பி தராததால் கடன் கொடுத்தவர்கள் கேட்டுள்ளனர்.
    • இதனால் விரக்தி அடைந்த அவர் விஷம் குடித்து மயங்கினார்.

    சின்னமனூர்:

    சின்னமனூர் அருகே மார்க்கையன்கோட்டையை சேர்ந்தவர் விஜயசாரதி (வயது48). இவரது மனைவி கவுரி.குழு அமைத்து பலரிடம் கடன் வாங்கி உள்ளார். வாங்கிய பணத்தை திருப்பி தராததால் கடன் கொடுத்தவர்கள் கேட்டுள்ளனர்.

    இதனால் விரக்தி அடைந்த விஜயசாரதி விஷம் குடித்து மயங்கினார். சின்னமனூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இது குறித்து அவரது மனைவி கவுரி கொடுத்த புகாரின் பேரில் சின்னமனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 18 வயதிற்குட்பட்ட மாற்றுத்திறன் கொண்ட மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம்
    • மாற்றுத்திறனாளிகளுக்கு ஆதார் தொடர்பான கோரிக்கை குறித்து பதிவு செய்யப்படுகிறது.

    தேனி:

    தேனி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 18 வயதிற்குட்பட்ட மாற்றுத்திறன் கொண்ட மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நாளை முதல் 20ந் தேதி வரை 8 நாட்களுக்கு பல்வேறு இடங்களில் நடைபெற உள்ளது.

    11-ந் தேதி தேனி பி.சி.கான்வென்ட் பெண்கள் மேல்நிலைப்பள்ளி , 12-ந் தேதி ஆண்டிபட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, 13-ந் தேதி போடிநாயக்கனூர் ஜ.கா.நி.மேல்நிலைப் பள்ளி, 17-ந் தேதி சின்னமனூர் நகராட்சி உயர்நிலைப்பள்ளி (காலனி) மற்றும் உத்தமபாளையம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி, 18-ந் தேதி கம்பம் அரசு கள்ளர் தொடக்கப்பள்ளி (உத்தமபுரம்), 19-ந் தேதி பெரியகுளம் எட்வர்ட் நினைவு நடுநிலைப் பள்ளி, 20-ந் தேதி மயிலாடும்பாறை ஜி.ஆர்.வி.மேல்நிலைப் பள்ளி என மொத்தம் 8 நாட்கள் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.

    இந்த சிறப்பு மருத்துவ முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவச் சான்று வழங்குதல்,தேசிய அடையாள அட்டை மற்றும் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பெறுவதற்கு பதிவு செய்தல், முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீடுத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், உதவி உபகரணங்கள் மற்றும் பிற உதவிகள் பெறுவதற்கு ஆலோசனை வழங்குதல், மாற்றுத்திறனாளிகளுக்கு ஆதார் தொடர்பான கோரிக்கை குறித்து பதிவு செய்யப்படுகிறது.

    மாற்றுத்திறனாளிகள் ஒவ்வொருவரும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் - 6, குடும்ப அட்டை நகல் , ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுடன் இம்முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

    • போடி மெட்டு-மூணாறு தேசிய நெடுஞ்சாலையில் ரூ.381.76 கோடி மதிப்பில் அகலப்படுத்தும் பணி கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கியது.
    • கேரள முதல்-அமைச்சர் பினராயிவிஜயன், மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டத்தை கேரளாவுடன் இணைக்கும் தனுஷ்கோடி-கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஏராளமான சுற்றுலா வாகனங்கள், தோட்ட தொழிலாளர்கள் செல்லும் ஜீப்கள், அத்தியாவசிய தேவைக்காக செல்லும் லாரிகள், அரசு, தனியார் பஸ்கள் சென்று வருகின்றன.

    கேரளாவுக்கு குமுளி, கம்பம் மெட்டு, போடி மெட்டு என 3 சாலை வழியாக சென்று வருகின்றனர். இதில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மூணாறு மலைச்சாலை உள்ளது.

    போடி மெட்டு-மூணாறு தேசிய நெடுஞ்சாலையில் ரூ.381.76 கோடி மதிப்பில் அகலப்படுத்தும் பணி கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கியது. பணிகள் முடிந்து பல மாதங்கள் ஆகின்ற நிலையில் சாலை யை அதிகாரப்பூர்வமாக தற்போது திறப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    கடந்த ஆகஸ்ட் 17ந் தேதி திறந்து வைப்பதாக இருந்தது. ஆனால் பல்வேறு காரணங்களால் மத்திய மந்திரி நிதின் கட்கரி வர இயலவில்லை. இதனால் சாலை திறப்பு ஒத்தி வைக்கப்பட்டது.

    இந்நிலையில் வருகிற 12-ந் தேதி மத்திய மந்திரி நிதின் கட்கரி மூணாறு-போடி மெட்டு என்ற சாலையை திறந்து வைக்கிறார் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    இதேபோல் ரூ.25 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள செருதோணி பாலத்தையும், அடிமாலி-குமுளி தேசிய நெடுஞ்சாலை என்.எச்.185 அகலப்படுத்தும் பணிகளையும் அவர் தொடங்கி வைக்கிறார். இதில் கேரள முதல்-அமைச்சர் பினராயிவிஜயன், மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

    இயற்கை எழில் சூழ்ந்த மலைப்பகுதியில் வளைந்து நெழிந்து செல்லும் சாலையில் பயணிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

    • விவசாயிகள் பூச்சிக் கொல்லி மருந்து தெளித்த சம்பவத்தில் உயிரிழந்ததால் மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
    • இறந்த விவசாயி வயல்களுக்கு தாசில்தார் சந்திரசேகர் தலைமையிலான அதிகாரிகள் சென்றும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் கூடலூர் 19-வது வார்டு காமாட்சி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பாண்டியன் (வயது 62). விவசாயி. இவருக்கு சொந்தமான நெல் வயல் வெட்டுக்காடு பகுதியில் உள்ளது. இதில் தற்போது முதல் போக சாகுபடி நடைபெற்று வருகிறது.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு கூடலூரில் உள்ள ஒரு உரக்கடையில் பூச்சிக்கொல்லி மருந்து வாங்கி பாண்டியன் தனது வயலுக்கு தெளித்தார். அப்போது திடீரென வயலில் மயங்கி விழுந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து குமுளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதே போல் கூடலூர் முனுசாமி கோவில் தெருவைச் சேர்ந்த குணசேகரன் (42) என்ற விவசாயி கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது நெல் வயலில் பூச்சிக்கொல்லி மருந்து தெளித்த போது மயங்கி விழுந்தார். தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு கடந்த 28-ந்தேதி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    அடுத்தடுத்து 2 விவசாயிகள் பூச்சிக் கொல்லி மருந்து தெளித்த சம்பவத்தில் உயிரிழந்ததால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனால் உரக்கடைகளில் ஆய்வு செய்து மருந்துகளின் தரத்தை ஆய்வு செய்ய வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். மேலும் உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணமும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    இது குறித்து வேளாண்மை அலுவலர் தெரிவிக்கையில், உரக்கடையில் மாதம் தோறும் முறையாக ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. 2 விவசாயிகள் உயிரிழப்பு தொடர்பாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடலூரில் பூச்சிக் கொல்லி மருந்து விற்பனை செய்த கடைகளை ஆய்வு செய்து மருந்துகளை மாதிரி எடுத்து ஆய்வுக்கு அனுப்பியுள்ளோம் என்றார்.

    மேலும் பூச்சிக்கொல்லி மருந்து விற்பனை செய்த கடைகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இறந்த விவசாயி வயல்களுக்கு தாசில்தார் சந்திரசேகர் தலைமையிலான அதிகாரிகள் சென்றும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தமிழ்நாடு தீயணைப்புத் துறை மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் கம்பம் தீயணைப்பு நிலையத்தில் நடைபெற்றது.
    • சாரணர் இயக்க மாணவர்கள், தனியார் பயிற்சி பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    கம்பம்:

    தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்து பொதுமக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். மேலும் இந்த சட்டத்தினை பயன்படுத்தி பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அடிப்படை சட்டங்களை தெரிந்து கொள்ள வேண்டுமென்ற வகையில் தமிழ்நாடு தீயணைப்புத் துறை மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் கம்பம் தீயணைப்பு நிலையத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு கம்பம் தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜலட்சுமி தலைமை தாங்கினார். கம்பம் வடக்கு சப்-இன்ஸ்பெக்டர் இளையராஜா முன்னிலை வகித்தார். கம்பம் வடக்கு இன்ஸ்பெக்டர் சரவணன் கொடியசைத்து போட்டியை தொடங்கி வைத்தார்.

    போட்டியில் கம்பம் ஸ்ரீ முத்தையா பிள்ளை மேல்நிலைப்பள்ளி சாரணர் இயக்க மாணவர்கள், தனியார் பயிற்சி பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். போட்டியானது கம்பம் கோம்பை சாலையில் உள்ள தீயணைப்பு துறை அலுவலகத்தில் தொடங்கி, கோம்பை ரோடு, சந்தை திடல், மெயின் ரோடு வழியாக கம்பம் அரசு மருத்துவமனையை சென்றடைந்து. அங்கிருந்து மெயின் ரோடு வழியாக கம்பம் மெட்டு ரோடு, புது பள்ளிவாசல், தங்க விநாயகர் கோயில் வழியாக தீயணைப்பு நிலையத்தை வந்தடைந்தது.

    போட்டியில் கலந்து கொண்ட மாணவர்களை அதிகாரிகள் பாராட்டி வாழ்த்தினர்.

    • பெரியகுளத்தில் போலீசார் மற்றும் பெரியகுளம் விளையாட்டு கழகம் சார்பில் ஹேப்பி சண்டே நிகழ்ச்சி நடைபெற்றது.
    • பெரியகுளம் அதனைச் சுற்றி உள்ள பகுதியில் இருந்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆண்கள்- பெண்கள் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    பெரியகுளம்:

    பெரியகுளத்தில் போலீசார் மற்றும் பெரியகுளம் விளையாட்டு கழகம் சார்பில் ஹேப்பி சண்டே நிகழ்ச்சி நடைபெற்றது. உடற்பயிற்சி, கலை, யோகா, பரதம் உள்ளிட்டவைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதத்தில் ஹேப்பி சண்டே நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    இதில் முதல் வாரமான இன்று காலை 6 மணிக்கு முதலில் மாரத்தான் போட்டிகள் நடைபெற்றது. இந்த மாரத்தான் போட்டிகள் 6 வயது முதல் 13 வயது வரை ஒரு பிரிவிலும், 14 வயது முதல் 18 வயது உடைய சிறுவர்களுக்கு தனியாக ஒரு பிரிவும், போலீசாருக்கு தனியாக ஒரு பிரிவும், 18 வயதுக்கு மேல் பட்ட அனைவருக்கும் தனியாக ஒரு பிரிவும் என 4 பிரிவுகளில் மாரத்தான் போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டியில் பெரியகுளம் அதனைச் சுற்றி உள்ள பகுதியில் இருந்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆண்கள்- பெண்கள் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    இதனைத் தொடர்ந்து பரதம், யோகா, சிலம்பம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளில் மாணவ, மாணவியர் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். மாரத்தான் போட்டியை தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்ரே தொடங்கி வைத்தார். போட்டிகளில் பங்கேற்று முதல் மூன்று இடம் பிடித்தவர்களுக்கு ரொக்கப் பரிசும், பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    • கடந்த மாதம் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த அறிவகம் அதன்பின்னர் மீண்டும் பணிக்கு சென்றார்.
    • அறிவகத்தின் உடலை நாளை சொந்தஊர் கொண்டுவர உள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் வருசநாடு அருகே முருக்கோடையை சேர்ந்தவர் அறிவகம்(36). இவருக்கு சவுந்தர்யா என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கடந்த 16 வருடத்திற்கு முன்பு இந்திய ராணுவத்தில் பணியில் சேர்ந்தார். அதன்பின்னர் பல்வேறு இடங்களில் பணியாற்றி பஞ்சாப் மாநிலத்தில் கடைசியாக பணியாற்றினார்.

    கடந்த மாதம் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த அறிவகம் அதன்பின்னர் மீண்டும் பணிக்கு சென்றார். பஞ்சாப் மாநிலத்தில் ராணுவ முகாமில் தங்கியிருந்த போது அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனைதொடர்ந்து அவருடன் பணிபுரிந்தவர்கள் அறிவகத்தை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தார்.

    இதுகுறித்து சொந்தஊரில் உள்ள குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் கண்ணீர் விட்டு கதறிஅழுதனர். அறிவகத்தின் உடலை நாளை சொந்தஊர் கொண்டுவர உள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர். பணிக்கு சென்ற ராணுவவீரர் உயிரிழந்ததால் அந்த கிராம மக்கள் சோகத்தில் உள்ளனர்.

    • ஆசிரியையின் கல்வி அலுவலகத்தில் அவரது சான்றிதழ்களை தற்போது சரிபார்த்தனர். அப்போது அவர் 12ம் வகுப்பு சான்றிதழ் போலியாக கொடுத்தது தெரிய வந்தது.
    • போலி சான்றிதழ் கொடுத்து ஆசிரியை பணியில் சேர்ந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் கண்டமனூர் ராஜேந்திரா நகர் பகுதியில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு கடந்த 1999-ம் ஆண்டு விஜயபானு (வயது 47) என்பவர் இடை நிலை ஆசிரியராக பணியில் சேர்ந்தார்.

    இந்த நிலையில் மாவட்ட கல்வி அலுவலகத்தில் அவரது சான்றிதழ்களை தற்போது சரிபார்த்தனர். அப்போது அவர் 12ம் வகுப்பு சான்றிதழ் போலியாக கொடுத்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து மாவட்ட கல்வி அலுவலர் கலாவதி தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இது குறித்து புகார் அளித்தார்.

    எஸ்.பி. உத்தரவின் பேரில் கண்டமனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆசிரியை விஜயபானுவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். போலி சான்றிதழ் கொடுத்து ஆசிரியை பணியில் சேர்ந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • குடிநீர் வாரிய ஊழியர் படியில் இருந்து தவறிவிழுந்ததால் தலையில் படுகாயத்துடன் கிடந்தார்.
    • ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

    ஆண்டிபட்டி:

    ஆண்டிபட்டி அருகே குன்னூர் வள்ளல்நதி கூட்டுகுடிநீர் திட்ட தற்காலிக குடிநீர் ஆபரேட்டராக பணிபுரிந்து வந்தவர் பெரியசாமி(48). இவருக்கு திருமணமாகவில்லை. காலை மற்றும் மாலை நேரங்களில் வைகையாற்று கிழக்குகரை பகுதியில் உள்ள குடிநீர் வாரிய வளாகத்தில் தண்ணீர் திறந்துவிடும் பணி மேற்கொண்டு வந்தார்.

    சம்பவத்தன்று பணிக்கு சென்ற அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தாய் போஜம்மாள் மற்றும் உறவினர்கள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது படியில் இருந்து தவறிவிழுந்ததால் தலையில் படுகாயத்துடன் கிடந்தார். தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து க.விலக்கு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • தேனியில் அண்ணா நெடுந்தூர மாரத்தான் ஓட்டப் போட்டி நடத்தப்பட்டது.
    • ஊக்கத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட கலெக்டர் ஷஜீவனா வழங்கினார்.

    தேனி:

    தேனி மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறையின் சார்பில் இளைஞர்களிடம் உடற்பயிற்சியை பேணுவது குறித்தும் மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் அண்ணா நெடுந்தூர மாரத்தான் ஓட்டப் போட்டி நடத்தப்பட்டது.

    17 முதல் 25 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு அரண்ம னைபுதூர் ஊராட்சிமன்ற அலுவலகத்திலிருந்து தொடங்கி கொடுவிலா ர்பட்டி, பள்ளபட்டி விலக்கு, அய்யனார்புரம் வழியாக மீண்டும் அரண்மனைப்புதூர் வரை 8 கி.மீ தூரம் சென்று நிறைவடைந்தது. இப்போட்டியில் 70 நபர்கள் கலந்து கொண்டனர்.

    25 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கான போட்டி யில் அரண்மனைபுதூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தி லிருந்து கொடுவிலார்பட்டி, பள்ளபட்டி விலக்கு, அய்யனார்புரம் வழியாக மீண்டும் அரண்மனைப்புதூர் விலக்கு, ரயில்வே கிராசிங் வழியாக புதிய பஸ் நிலையம் வரை 10 கி.மீ தூரம் சென்று நிறைவடைந்தது. இப்போட்டியில் 30 நபர்கள் கலந்து கொண்டனர்.

    17 முதல் 25 வயதிற்குட்பட்ட பெண்கள் பிரிவில் 125 நபர்களும் மற்றும் 25 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் பிரிவில் 25 நபர்களுக்கான போட்டி அரண்மனைபுதூர் ஊராட்சிமன்ற அலுவலகத்தில் இருந்து கொடுவிலார்பட்டி, பள்ளபட்டி விலக்கு, அய்யனார்புரம் வரை 5 கி.மீ தூரம் சென்று நிறைவடைந்தது.

    ஊக்கத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட கலெக்டர் ஷஜீவனா வழங்கினார்.

    இதில் உதவி காவல் கண்காணிப்பாளர் மதுகுமாரி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தன் மாவட்ட விளையாட்டு அலுவலர் முருகன் மற்றும் அலுவலர்கள் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • தேனி சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி மாதம் 3-ம் சனிக்கிழமையை முன்னிட்டு ஏகதின லட்சார்ச்சனை பூஜை நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் பக்தர்கள், கிராம பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    தேனி:

    தேனி அருகே நாகலாபுரம் ஊராட்சி பகுதியில் உள்ள ஸ்ரீ தேவி ஸ்ரீ பூமாதேவி சமேத சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி மாதம் 3-ம் சனிக்கிழமையை முன்னிட்டு ஏகதின லட்சார்ச்சனை பூஜை நடைபெற்றது. இந்த பூஜையை முன்னிட்டு சவுந்தரராஜ பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் செய்யப்பட்டது. மேலும் ஏகதின பூஜையை முன்னிட்டு பெருமாள் வீதி உலா செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சிக்கு கோவில் நிர்வாக குழு தலைவர் முனியப்பன் தலைமை தாங்கினார். கோவில் டிரஸ்டி வெங்கடேசன், பொருளாளர் கணபதி, நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் ரமேஷ், கந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த பூஜை நிகழ்ச்சியில் பக்தர்கள், கிராம பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    இதற்கான பூஜையை பட்டாச்சாரியார்கள் மணிவண்ணன், சீதாராமன், பாபு உள்பட பட்டாச்சாரியார்கள் குழுவினர் செய்தனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    • ஹைவேவிஸ் பகுதியில் மலைச்சாலையில் கட்டுப்பாட்டை இழந்த சுற்றுலா வேன் தலைகீழாக கவிழ்ந்தது. இதில் வேனில் வந்த 22 பேர் காயம் அடைந்தனர்.
    • 6 பேர் பலத்த காயம் அடைந்ததால் மேல் சிகிச்சைக்காக தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    சின்னமனூர்:

    சின்னமனூர் அருகே மேற்கு மலைத் தொடர்ச்சியில் உள்ள ஹைவேவிஸ் பகுதியில் மேகமலை, மணலாறு, வெண்ணியார், மகாராஜன் மெட்டு, இரவங்கலாறு உள்ளிட்ட கிராமங்கள் உள்ளது. இங்கு சுற்றுலா வந்தவர்கள் இயற்கை அழகை கண்டு ரசித்து விட்டு திரும்பி கொண்டிருந்தனர். மலைச்சாலையில் கட்டுப்பாட்டை இழந்த சுற்றுலா வேன் தலைகீழாக கவிழ்ந்தது. இதில் வேனில் வந்த 22 பேர் காயம் அடைந்தனர்.

    அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக சின்னமனூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். நித்தியா (வயது34), திவ்யா (28), சத்யா (38), விஜய்கிருஷ்ணா (10), மகேஷ்வரன் (40) ஜெயப்பிரியா(32) உள்ளிட்ட 6 பேர் பலத்த காயம் அடைந்ததால் மேல் சிகிச்சைக்காக தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மற்ற 16 பேர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். விசாரணையில் மதுரை காமராஜர் பல் கலைக்கழகம் அருகில் உள்ள புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த தங்கையா (48) என்பவர் உறவினர்களை தனது சொந்த வேனில் அழைத்துக் கொண்டு சுற்றுலா வந்தது தெரிய வந்தது.

    ×