என் மலர்
உள்ளூர் செய்திகள்

உயிரிழந்த விவசாயிகள் பாண்டியன், குணசேகரன்.
கூடலூர் அருகே வயலுக்கு பூச்சிக்கொல்லி மருந்து தெளித்த 2 விவசாயிகள் பலி
- விவசாயிகள் பூச்சிக் கொல்லி மருந்து தெளித்த சம்பவத்தில் உயிரிழந்ததால் மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
- இறந்த விவசாயி வயல்களுக்கு தாசில்தார் சந்திரசேகர் தலைமையிலான அதிகாரிகள் சென்றும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கூடலூர்:
தேனி மாவட்டம் கூடலூர் 19-வது வார்டு காமாட்சி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பாண்டியன் (வயது 62). விவசாயி. இவருக்கு சொந்தமான நெல் வயல் வெட்டுக்காடு பகுதியில் உள்ளது. இதில் தற்போது முதல் போக சாகுபடி நடைபெற்று வருகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு கூடலூரில் உள்ள ஒரு உரக்கடையில் பூச்சிக்கொல்லி மருந்து வாங்கி பாண்டியன் தனது வயலுக்கு தெளித்தார். அப்போது திடீரென வயலில் மயங்கி விழுந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து குமுளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதே போல் கூடலூர் முனுசாமி கோவில் தெருவைச் சேர்ந்த குணசேகரன் (42) என்ற விவசாயி கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது நெல் வயலில் பூச்சிக்கொல்லி மருந்து தெளித்த போது மயங்கி விழுந்தார். தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு கடந்த 28-ந்தேதி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்தடுத்து 2 விவசாயிகள் பூச்சிக் கொல்லி மருந்து தெளித்த சம்பவத்தில் உயிரிழந்ததால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனால் உரக்கடைகளில் ஆய்வு செய்து மருந்துகளின் தரத்தை ஆய்வு செய்ய வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். மேலும் உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணமும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இது குறித்து வேளாண்மை அலுவலர் தெரிவிக்கையில், உரக்கடையில் மாதம் தோறும் முறையாக ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. 2 விவசாயிகள் உயிரிழப்பு தொடர்பாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடலூரில் பூச்சிக் கொல்லி மருந்து விற்பனை செய்த கடைகளை ஆய்வு செய்து மருந்துகளை மாதிரி எடுத்து ஆய்வுக்கு அனுப்பியுள்ளோம் என்றார்.
மேலும் பூச்சிக்கொல்லி மருந்து விற்பனை செய்த கடைகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இறந்த விவசாயி வயல்களுக்கு தாசில்தார் சந்திரசேகர் தலைமையிலான அதிகாரிகள் சென்றும் விசாரணை நடத்தி வருகின்றனர்.






