என் மலர்
தஞ்சாவூர்
- டாஸ்மாக் கடையை பூட்டை உடைத்து கொள்ளையடித்து சென்றனர்.
- ஊழியர்கள் திருவையாறு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே உள்ள ஒக்கக்குடி கிராமத்தில் அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தீபாவளிக்கு முந்தைய நாள் இரவில் வியாபாரம் முடிந்த பின்னர் டாஸ்மாக் கடை பூட்டிவிட்டு ஊழியர்கள் வீட்டிற்கு சென்றனர்.
இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நள்ளிரவில் அங்கு வந்தனர்.
பின்னர் டாஸ்மாக் கடை பூட்டை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்தனர்.
கல்லாப் பெட்டியில் இருந்த பணம், விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மது பாட்டில்கள் ஆகியவற்றை கொள்ளையடித்துக் கொண்டு தப்பி ஓடினர்.
இந்நிலையில் நேற்று மதியம் வழக்கம் போல் பணிக்கு வந்த ஊழியர்கள் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பதறியடித்து கொண்டு சென்று பார்த்த போது கல்லாப்பெட்டியில் வைத்திருந்த பணம் மற்றும் மது பாட்டில்கள் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்துக் கொண்டு சென்றது தெரியவந்தது.
இது குறித்து ஊழியர்கள் திருவையாறு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரித்தனர்.
எவ்வளவு பணம் மற்றும் மதுபாட்டில்கள் கொள்ளை போனது என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
அதன் பிறகே கொள்ளை போனவற்றின் மதிப்பு முழு அளவில் தெரிய வரும் .இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரது உடல் கரை ஒதுங்கியது.
- கிழக்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் சுற்றுலா மாளிகை அருகே ஓடும் புது ஆற்றங்கரையோரம் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரது உடல் கரை ஒதுங்கியது.
இதனை பார்த்த பொதுமக்கள் உடனடியாக கிழக்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் இன்ஸ்பெ க்டர் சுதா தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். ஆனால் இறந்து கிடந்தவர் யார்? எந்த ஊர்? என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை.
இதையடுத்து அந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது பற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆற்றில் குதித்து அந்த நபர் தற்கொலை செய்து கொண்டாரா? தண்ணீரில் மூழ்கி இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பல்வேறு கோவில்களில் தீபாவளி சிறப்பு வழிபாடுகள் நடந்தது.
- அன்னப்பூரணி அம்மன் இனிப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
தஞ்சாவூர்:
தீபாவளி பண்டிகை நேற்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் தீபாவளி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
தஞ்சாவூர் மேலவீதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற கொங்கணேஸ்வர சுவாமி கோவிலில் தீபாவளியை முன்னிட்டு அன்னப்பூரணி அம்மன் இனிப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். தஞ்சை மேலவீதி மூலை அனுமாருக்கு தீபாவளியையொட்டி சிறப்பு பாலாபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
நாலுகால் மண்டபம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
வடக்கு வீதியில் உள்ள ராஜகோபால சாமி கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் சக்கரத்தாழ்வார் அருள் பாலித்தார்.நீலமேக பெருமாள் கோவிலில் செங்கமல வல்லி தாயார் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
இதேபோல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் தீபாவளி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
- ராக்கெட் வெடி அருள்தாஸ் வீட்டின் மேல் விழுந்தது.
- மேலும் அருகில் இருந்த மற்ற 2 வீடுகளுக்கும் தீ பரவியது.
கும்பகோணம்:
கும்பகோணம் அருகே கொரநாட்டுகருப்பூர் கீழத்தெருவில் வசித்து வருபவர் அருள்தாஸ். ஆட்டோ டிரைவர்.
இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் சேகர்.
இவர் கும்பகோணத்தில் மெக்கானிக் கடை நடத்தி வருகிறார்.
இதன் அருகே உள்ள மற்றொரு வீட்டை சேர்ந்தவர் சாமிநாதன், லோடு ஆட்டோ ஓட்டுநராக உள்ளார்.
3 வீடுகளும் குடிசை வீடுகளாகும்.
இந்நிலையில் நேற்று தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தின் போது அருகில் இருந்து வந்த ராக்கெட் வெடி அருள்தாஸ் வீட்டின் மேல் விழுந்தது.
இதில் குடிசை வீடு தீப்பிடித்து எரிந்தது. மேலும் அருகில் இருந்த மற்ற 2 வீடுகளுக்கும் தீ பரவியது. இதைத் தொடர்ந்து வீட்டில் இருந்தவர்கள் அலறி அடித்து கொண்டு வெளியே ஓடி வந்தனர்.
பின்னர் தீ மளமள பிடித்து எரிந்தது.
இது குறித்து தகவல் அறிந்ததும் கும்பகோணம் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.இந்த தீ விபத்தில் அருள்தாஸ் என்பவர் வீட்டில் வைத்திருந்த 6 பவுன் தங்க நகை, சேகர் வீட்டில் வைத்திருந்த 4 பவுன் தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்கள் வீட்டு ஆவணங்கள், டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், கிரைண்டர், உள்ளிட்ட அனைத்து பொருட்களும் தீயில் எரிந்து நாசமானது.
இது குறித்து கும்பகோணம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- போக்சோ வழக்கில் கைதாகி தங்க வைக்கப்பட்டிருந்தான்.
- சிறுவன் தீபாவளி நாளான நேற்று சுவர் ஏறி குதித்து தப்பி ஓடினான்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்டம் கபிஸ்தலம் பகுதியை சேர்ந்த சிறுவன் ஒருவன் குற்ற வழக்கு ஒன்றில் போக்சோ வழக்கில் கைதாகி தஞ்சாவூர் அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தான்.
இந்த நிலையில் அந்த சிறுவன் தீபாவளி நாளான நேற்று சுவர் ஏறி குதித்து தப்பிச் ஓடினான்.
பின்னர் அச்சிறுவன் கபிஸ்தலம் பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு சென்றான். உடனடியாக போலீசார் கபிஸ்தலம் நோக்கி விரைந்து சென்றனர்.
ஆனால் தன்னைத் தேடி போலீசார் வீட்டிற்கு வருவதை அறிந்த சிறுவன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான்.
இதையடுத்து தப்பிச் சென்ற சிறுவனை போலீஸார் பல்வேறு இடங்களில் தீவிரமாகச் தேடி வருகின்றனர்.
தப்பியோடிய சிறுவன் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தான் அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ளான்.
இச்சிறுவன் உள்பட மொத்தம் 2 நபர்களே கூர்நோக்கு இல்லத்தில் தங்கி இருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதே போல, போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு தஞ்சாவூர் அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த மற்றொரு சிறுவன் கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி சுவரேறி குதித்து ஊட்டிக்கு பஸ்சில் சென்று கொண்டிருந்தபோது மேட்டுப்பாளையம் செக் போஸ்டில் பஸ்சை மறித்து பிடித்து தஞ்சாவூர் கொண்டு வரப்பட்டான்.
பின்பு அவனுக்கு பிணை அளிக்கப்பட்டது.
பிணை முடிந்து சிறுவன் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு மீண்டும் கூர்நோக்கு இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டு தங்க வைக்கப்பட்டான்.
இந்த நிலையில், இன்னொரு மாணவன் சுவரேறி குதித்து தப்பிச் சென்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- வேலி கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த போது விஷ பாம்பு கடித்தது.
- டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
மெலட்டூர்:
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, பொன்மான்மேய்ந்தநல்லூர்ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் ராஜா (வயது 38) கூலிதொழிலாளி இவர் வடக்கு மாங்குடி பகுதியில் வேலி கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த போது ராஜாவை விஷ பாம்பு கடித்ததாக கூறப்படுகிறது மயங்கிய நிலையில் கிடந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மெலட்டூர் அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து அய்யம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அம்மாபேட்டையில் அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
- 40 தொகுதிகளையும் நாம் கைபற்ற தொண்டர்கள் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும்.
மெலட்டூர்:
தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை வடக்கு, தெற்கு ஒன்றிய அதிமுக இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயல்வீரர்கள் மற்றும் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் சாலியமங்களம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது கூட்டத்திற்கு அம்மாபேட்டை வடக்கு ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், தெற்கு ஒன்றிய செயலாளர் ஏவி.சூரி நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் தஞ்சை மாவட்ட செயலாளர் ரெத்தினசாமி .
அம்மாபேரவை மாவட்ட செயலாளர் துரை சண்முகபிரபு, முன்னாள் அமைச்சர் சிவபதி, கலந்து கொண்டு பேசினர்.
பின்னர் தொண்டர்களுக்கு ஆலோசனை வழங்கி பேசிய முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் எம்.எல்.ஏ, பேசும் போது வரும் பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளையும் நாம் கைபற்ற தொண்டர்கள் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என கேட்டு கொண்டார்.
மாவட்ட பொருளாளர் ராம்குமார், இளைஞர் இளம்பெண் பாசறை மாவட்ட துணை தலைவர் திருமாவளவன், மெலட்டூர் நகர செயலர் சின்னதுரை, ஓன்றிய இணை செயலாளர் சுமத்ராமோகன் உள்பட மாவட்ட, ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- ஆயுர்வேத தினத்தை முன்னிட்டு இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம் நடை பெற்றது.
- சித்த மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டது.
தஞ்சாவூர்:
இந்தியா மருத்துவம் மற்றும் ஹோமியோபதித் துறை 8- வது தேசிய ஆயுர்வேத தினத்தை முன்னிட்டு தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனை ஆயுர்வேத மருத்துவப்பிரிவால் நடத்தப்படும் இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம் தஞ்சை வடக்கு வீதியில் நடை பெற்றது.
முகாமிற்கு எம்.எல்.ஏ.க்கள் துரை.சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம் ஆகியோர் தலைமை தாங்கினர்.
தஞ்சை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.
இதில் அனைத்து மூட்டு வலி மற்றும் எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள் சளி, இருமல், ஆஸ்துமா, ஜூரம் உள்னிட்ட சுவாசக் கோளாறுகள் சொறி, சிரங்கு, அரிப்பு உள்ளிட்ட அனைத்து தோல் நோய்கள், இதயம் மட்டும் மூளை சம்பந்தப்பட்ட நோய்கள், உடல் பலஹீனம், ரத்தச் சோகை, ஆண்மைக்குறைவு உள்ளிட்ட அனைத்து நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள், கருப்பைக்கோளாறு மற்றும் பெண்களுக்கான நோய்கள், அயிற்றுப்புண், பசியின்மை, மலச்சிக்கல் உள்ளிட்ட செரிமானக் கோளாறுகள், சர்க்கரை, உப்பு நீர், இரத்தக் கொதிப்பு மற்றும் சிறுநீரகக் கோளாறுகள், உள்ளிட்ட நோய்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு சித்த மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டது.
முகாமில் சித்த அலுவலர் குணசேகரன், தஞ்சை மருத்துவ கல்லூரி ஆயுர்வேத மருத்துவர் கஜேந்திரன், மூத்த ஆயுர்வேத மருத்துவர் நாராயணன் சங்கீதா ஆயுர்வேத மருத்துவர் பபிதா, கிருத்திகா யோகா மருத்துவர் பழனிசாமி, மற்றும் ஆறுமுகம் கலியமூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் தர்மராஜன், பகுதி செயலாளர்கள், மாமன்ற உறுப்பினர்கள், இந்திரஜித், மண்டல தலைவர் புண்ணியமூர்த்தி, சதாசிவம் மற்றும் ஆயுர்வேத துறையைச் சார்ந்த மருத்துவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடபடுகிறது.
- துணிக்கடைகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
தஞ்சாவூர்:
தீபாவளி பண்டிகை நாளை உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது.
தீபாவளி பண்டிகை தினத்தன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் அதிகாலையில் எண்ணெய் தேய்த்து குளித்து புத்தாடை அணிவார்கள்.
பின்னர் பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை சாப்பிட்டும் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள்.
நாளை தீபாவளி என்பதால் இன்று அதிகாலையில் இருந்தே பட்டாசு, புத்தாடைகள் ,இனிப்புகள் வாங்க பொதுமக்கள் குவிந்து வருகின்றனர்.
தஞ்சையில் தீபாவளி இறுதி கட்ட விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது.
தஞ்சை காந்திஜி சாலை, கீழவாசல், புதிய பஸ் நிலையம் , பழைய பஸ் நிலையம் என அனைத்து இடங்களிலும் திரும்பிய பக்கமெல்லாம் மக்கள் வெள்ளமாக காட்சியளித்தது. பொருட்கள் வாங்க அலைமோதிய மக்கள் கூட்டத்தால் கடை வீதிகள் திக்குமுக்காடின.
கிராமப்பகுதிகளில் இருந்து மக்கள் தஞ்சை மாநகரை நோக்கி படையெடுத்து வருகின்றனர். இதனால் துணிக்கடைகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. தங்களுக்கு பிடித்த கடைகளுக்கு சென்று கலர், கலரான வண்ணமயமான துணிமணிகளை வாங்கி கொண்டு மக்கள் உற்சாகமாக சென்றனர்.
அதேபோல் பட்டாசு கடைகள், சுவீட் கடைகளிலும் மக்கள் அதிக அளவில் கூடியிருந்தனர்.
சிறுவர்கள் தங்களுக்கு விருப்பமான பட்டாசுகளை வாங்கி சென்றனர்.
தஞ்சை அண்ணாசாலை, காந்திஜிசாலையில் அமைக்கப்பட்டிருந்த தரைக்கடைகளிலும் துணிமணிகள் வாங்குவதற்கு கூட்டம் அதிகமாக இருந்தது.
இதனால் காந்திஜி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்களில் செல்பவர்கள் நத்தையை போல் மெதுவாக தான் செல்ல முடிந்தது.
கட்டுக்கடங்காத மக்கள் கூட்டத்தால் நெரிசலை பயன்படுத்தி திருடர்கள் பணம், நகையை திருடிச் சென்று விடக்கூடாது என்பதற்காக மக்களிடையே ஒலிபெருக்கி மூலம் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
மேலும் ஆங்காங்கே தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மப்டியில் நின்றும் கண்காணித்து வருகின்றனர்.
இதேபோல் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக பஸ், ரயில் நிலையங்களிலும் பொதுமக்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.
- கட்டிடகலைக்கு சிறந்த எடுத்துகாட்டாக தஞ்சை பெரிய கோவில் உள்ளது.
- சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து செல்கிறார்கள்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் பெரிய கோவில் உலக புகழ் வாய்ந்தது. கட்டிடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கும் பெரிய கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
பெரிய கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் நடைபெறும்.
இங்குள்ள மகாநந்திக்கு பிரதோஷம் தோறும் சிறப்பு அபிஷேக வழிபாடு நடைபெறும்.
அதன்படி நேற்று பிரதோஷத்தை முன்னிட்டு மகாநந்திக்கு மஞ்சள், பால் உள்ளிட்ட திரவியப் பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
- சம்பா பருவ சாகுபடி தாமதமாக செய்யப்பட்டு வருகிறது.
- பயிர் காப்பீடு செய்வதற்கான காலக்கெடுவை தமிழ்நாடு அரசு நீட்டிக்க வேண்டும்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்ட கலெக்டருக்கு, தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்ட தலைவர் ராமச்சந்திரன், மாவட்ட செயலாளர் பாஸ்கர் ஆகியோர் மின்னஞ்சல் மூலம் இன்று காலை அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
தஞ்சாவூர், திருவாரூர் , நாகை, மயிலாடுதுறை உள்பட காவிரி டெல்டா பகுதிகளில் நடப்பாண்டில் சாகுபடி செய்யப்பட்ட குறுவைப் பயிர் போதிய தண்ணீர் வரத்தின்றி பெரும்பாலான ஏக்கர் பயிர்கள் கருகி வீணாகி விட்டன.
இந்நிலையில் சம்பா பருவத்திற்காக போதிய தண்ணீர் கிடைக்காததால், சம்பா பருவ சாகுபடி தாமதமாக செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் சம்பா பருவத்திற்கான பயிர் காப்பீடு செய்வதற்கு நவம்பர் 15 வரை செய்யலாம் என அரசு அறிவித்துள்ளது.
பயிர் காப்பீடு செய்வதற்கான சிட்டா அடங்கல் பெறுவதற்கு விவசாயிகள் நிர்வாக காரணங்களினால் அலைக்கழிக்கப்படுகின்றனர்.
தற்போது மழை பெய்து வருவதாலும், காவேரி தண்ணீர் ஓரளவு வருவதை நம்பியும் விவசாயிகள் சம்பா சாகுபடியில் இறங்கி உள்ள நிலையில் காப்பீடு செய்வ தற்கான காலக்கெடுவை தமிழ்நாடு அரசும், தஞ்சை மாவட்டம் நிர்வாகமும் பரிசீலித்து மேலும் ஒரு மாத காலத்திற்கு நீட்டிப்பு செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- அய்யப்பன் பட்டியலினத்தை சேர்ந்த ஒருவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.
- பெருக வாழ்ந்தான் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
தஞ்சாவூர்:
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தாலுகா புத்தகரம் பகுதியை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 49) விவசாயி.
சம்பவத்தன்று அய்யப்பன் அதே பகுதியில் டிராக்டர் ஓட்டி வந்த பட்டியலினத்தை சேர்ந்த ஒருவரை வழிமறித்து நிறுத்தி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.
இது குறித்து பெருக வாழ்ந்தான் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
அதன்பேரில் போலீசார் அய்யப்பன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த வழக்கு தஞ்சாவூர் மாவட்ட 2-வது கூடுதல் கோர்ட்டில் நடந்து வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி மலர்விழி, வன்கொ டுமை சட்டத்தின் கீழ் குற்றம்சாட்டபட்ட அய்யப்னுக்கு 1 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.2000 அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
மேலும் அபராதம் கட்ட தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனை எனவும் தீர்ப்பளித்தார்.
இந்த வழக்கில் அரசு தரப்பில் கூடுதல் அரசு குற்றத்துறை வக்கீல் அர்ச்சுனன் வாதாடினார்.






