என் மலர்tooltip icon

    சிவகங்கை

    • அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 5 பேரிடம் ரூ.21 லட்சம் மோசடி செய்த நபரை தேடி வருகின்றனர்.
    • அவர்கள் போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜிடம் புகார் செய்தனர்.

    சிவகங்கை

    சிவகங்கை தொண்டி ரோடு பகுதியில் வசிப்பவர் ராஜேஸ்வரி (வயது 45). இவர் சிவகங்கை காளவாசல் பகுதியைச் சேர்ந்த மீனாட்சிசுந்தரம், அவரது மனைவி மஞ்சுளா மற்றும் சிவகங்கை சேர்ந்த மருதுபாண்டி, முத்துப்பாண்டி, முத்து உமையாள் ஆகிய 5 பேருக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறி கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ரூ.21 லட்சம் பெற்றுக் கொண்டாராம்.

    அதன் பின்னர் அவர்கள் 5 பேருக்கும் பணி நியமன ஆணைகளையும் கொடுத்தாராம். அதைப் பெற்றுக் கொண்ட அவர்கள் அந்த உத்தரவில் குறிப்பிட்டிருந்த அலுவலகத்தில் பணிக்கு சேர சென்ற போது அந்த உத்தரவு போலியானது என்று தெரிந்ததாம்.

    இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் ராஜேஸ்வரி மீது சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜிடம் புகார் செய்தனர். அவரது உத்தரவின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மீனாட்சி சுந்தரம் விசாரணை நடத்தி ராஜேஸ்வரி மீது வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகிறார்.

    • மகாவீர் ஜெயந்தியையொட்டி 4-ந் தேதி டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது.
    • சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்துள்ளார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டத்தில் வருகிற 4-ந் தேதி (செவ்வாய்கிழமை) மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்படுகிறது. மேலும் அதனுடன் இணைந்த மதுபானம் அருந்தும் கூடம் FL1, FL2, FL3, FL3A, FL3AA, Fl4A உரிமம் பெற்ற ஓட்டல்கள், கிளப் மற்றும் கேண்டீன்களில் இயங்கும் மதுக்கூடங்களையும் மேற்கண்ட தினத்தில் முழுவதுமாக மூட தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.

    மேற்கண்ட தகவலை சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்துள்ளார்.

    • கலப்படத்தை தவிர்த்து பாதுகாப்பு நெறிமுறைகள் கடைபிடிக்க வேண்டும் என்று கலெக்டர் அறிவுறுத்தினார்.
    • 94440 42322 என்ற வாட்ஸ்-அப் புகார் சேவை எண்ணிலோ தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பழரசம், சர்பத், கரும்பு ஜூஸ், குளிர்பானங்கள், மோர், பதநீர், இளநீர், கம்மங்கூழ் உள்ளிட்ட திரவ ஆகாரங்களின் தேவை அதிகமாகிறது. எனவே திரவ குளிர்பானங்களை உற்பத்தி செய்து, விற்பனை செய்யும் வணிகர்கள் உணவு பாதுகாப்பு நெறி முறைகளை முறைப்படி பின்பற்ற வேண்டும்.

    அதன்படி அனைத்து உணவு வணிகர்களும் குறிப்பாக புதிய வணிகர்கள் உணவு பாதுகாப்புத் துறையின் உரிமம் அல்லது பதிவுச் சான்றிதழை https://foscos.fssai.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து உணவு பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவுச்சான்றிதழை பெற்ற பின்னரே, உணவு வணிகம் ஆரம்பிக்க வேண்டும்.

    பழரசம், சர்பத், கம்மங்கூழ் போன்ற திரவ ஆகாரங்களைத் தயாரிக்கப் பயன்படும் தண்ணீர் பாதுகாப்பானதாகவும், நன்னீராகவும் இருக்க வேண்டும்.உற்பத்தியாளர்கள் பயன்படுத்தும் தண்ணீரின் தரத்தை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்துறையின் பகுப்பாய்வுக்கூடம் அல்லது என்.ஏ.பில். அங்கீகாரம் பெற்ற தனியார் பகுப்பாய்வுக்கூடங்களில் பகுப்பாய்வு செய்து, அதன் அறிக்கையை வைத்திருக்க வேண்டும். உற்பத்தியாளர்கள் கொள்முதல் செய்யும் அனைத்துப் பொருட்க ளுக்கும் பில் வைத்திருக்க வேண்டும்.

    திரவ ஆகாரங்களை தயாரித்து அதற்கேற்ற வெப்பநிலையில் வைத்திருக்க வேண்டும். கரும்பு ஜூஸ் உள்ளிட்ட அவ்வப்போது உடனடியாக விற்பனை செய்யப்படும் உணவுப்பொருட்களை தயாரித்த பின்னர் அதிக நேரம் இருப்பு வைத்திருக்கக் கூடாது.

    கம்மங்கூழ் போன்ற உணவுப்பொருட்கள் கடையை மூடும் வரை விற்பனையாகாமல் மீதமானால் அவற்றை அப்புறப்படுத்த வேண்டும். திரவ ஆகாரங்களைத் திறந்த நிலையில் ஈக்கள் மற்றும் பூச்சிகள் மொய்க்கும் வகையில் விற்பனை செய்யக்கூடாது. குளிரூட்ட, உணவுத் தர "ஐஸ் கட்டியைப்" பயன்படுத்த வேண்டும்.

    உணவுத் தர ஐஸ் கட்டி செயற்கை வண்ணம் கலக்காமலும், உணவுத் தரமில்லாத ஐஸ் கட்டி "நீல நிறத்திலும்" இருக்கும். ஐஸ் பெட்டிகள் கழுவி சுத்தமாக இருக்கிறதா? என உறுதி செய்து, ஐஸ்கட்டிகள் சுகாதாரமான முறையில் கையாளப்படுகிறதா? என்பதை உரிமையாளர் கவனிக்க வேண்டும்.

    நுகர்வோர்கள் கோடை காலத்தில் அதிக அளவில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் மற்றும் பாதுகாப்பான திரவ ஆகாரங்களை எடுத்துக் கொள்ள வேண்டும். பொட்டலமிடப்பட்ட திரவ ஆகாரங்களின் பாக்கெட்டுகளில் தயாரிப்புத் தேதி, காலாவதி நாள் உள்ளிட்ட அனைத்து லேபிள் விவரங்களும் உள்ளதா? என்பதை கவனித்து வாங்க வேண்டும். நுகர்வோர் வாங்கும் திரவ உணவுப்பொருட்களின் தரத்தில் குறைபாடோ அல்லது அவற்றை விற்பனை செய்யும் கடையில் சுகாதார குறைபாடோ காணப்பட்டால் உணவு பாதுகாப்பு அலுவலகத்திலோ அல்லது 94440 42322 என்ற வாட்ஸ்-அப் புகார் சேவை

    எண்ணிலோ தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஆக்கிரமிப்பு செய்த கண்மாயை மீட்டு தரவேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • தண்ணீரை கொண்டு இப்பகுதி விவசாயிகள் விவசாயப் பணியினை மேற்கொண்டு வருகின்றனர்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா அருகே உள்ள கொட்டக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட கொல்லாம்பட்டி கிராமத்தில் 150 குடியிரு ப்புகள் உள்ளன. கிராமத்திற்கு பாத்தியப்பட்ட குலவன் கண்மாய் சுமார் 23 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும்.

    பருவ மழை காலங்களில் கண்மாயின் மூலம் கிடைக்கப்பெறும் தண்ணீரை கொண்டு இப்பகுதி விவசாயிகள் விவசாயப் பணியினை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்நிலையில் கண்மாய்க்கு அருகே இருந்து வரும் சுமார் 24 ஏக்கர் பரப்பளவு விவசாய நிலங்களை 1987-ம் ஆண்டிலிருந்து 5 நபர்கள் கொண்ட கூட்டு பட்டா எங்கள் வசம் இருந்து வருவதாக அவர்களின் வாரிசுதாரர்கள் கூறி அந்நிலங்களில் உள்ள முட்செடிகளை ஜேசிபி இயந்திரங்கள் மூலம் அகற்றும் நடவடிக்கையில் தற்சமயம் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இப்பகுதி விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் கண்மாய்க்கு அருகே உள்ள நிலங்கள் அனைத்தும் கண்மாய்க்கு உட்பட்ட தாகவே இருந்து வருகிறது. எனவே இதில் தற்சமயம் தனியார் தரப்பினைச் சேர்ந்த நபர்கள் மேற்கொண்டு வரும் பணியினை நிறுத்த வேண்டும், கண்மாய்க்கு நடுவே இரு திசைகளில் இருந்து வரும் கோவில் மற்றும் மயான பகுதிக்கு செல்லும் பாதைகள் முதலியவற்றை மீட்டு தர வேண்டும்.

    அரசு நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் பட்டா மாற்றியதை ரத்து செய்ய வேண்டும். கண்மாய்க்கு பாத்தியப்பட்ட கலிங்கு மற்றும் கரை பகுதியை மீட்டு தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை மனுவாக மாவட்ட ஆட்சியருக்கும், வருவாய் துறையினருக்கும் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அளித்துள்ளனர். ஆனால் தற்போதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க வில்லை என கூறப்படுகிறது.

    எனவே கண்மாய்க்கு அருகில் உள்ள நிலப்பகுதிகள் கிராமத்திற்கு சொந்தமானதா? அல்லது 5 பேர்கள் கொண்ட குழுவினரின் வாரிசுகளுக்கு சொந்தமானதா? என்று முடிவெடுக்கும் அதிகாரம் மாவட்ட நிர்வாகத்தி னருக்கும், வருவாய் துறையினரும் மட்டுமே உள்ள காரணத்தினால் அவர்கள் மௌனம் கலைத்தால் மட்டுமே இதற்கு முடிவு எட்டும் என்பது சமூக ஆர்வலர்க ளின் நிலைப்பாடாக இருந்து வருகிறது.

    மேலும் இது சம்பந்தமான நீதி கிடைக்க நீதிமன்றத்தை நாடப்போவதாக கிராம மக்கள் தரப்பினர் கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நாட்டார் கால்வாய் சீரமைக்க ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தமிழரசி எம்.எல்.ஏ. நன்றி கூறினார்.

    மானாமதுரை

    மதுரை-ராமேசுவரம் சாலையில் உள்ள கிருங்காகோட்டையை ஒட்டியுள்ள வைகை ஆற்றுப்பகுதியில் நாட்டார் கால்வாய் உள்ளது. இந்த கால்வாய் மூலம் 16 பெரியகண்மாய்கள், 25 சிறிய கண்மாய்கள், 30-க்கும் மேற்பட்ட குளங்கள், ஊரணிகளில் விவசாயத்தேவைக்கும், மீன்வளர்ப்புக்கும் தண்ணீர் நிரம்பி வந்தது. 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த கால்வாய் முறையாக தூர்வா ரப்படாமல் போனதால் மேடாகி கருவேலமரங்கள் நிறைந்து தண்ணீர் செல்வது தடைபட்டது. இந்த நிலையில் தி.மு.க. அரசு பொறுப்பேற்றதும் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி, நாட்டார் கால்வாயை தூர்வாரி கண்மாய்களுக்கு தண்ணீர் கொண்டு செல்ல தமிழ்நாடு அரசிடம் கோரிக்கை விடுத்தார்.

    எம்.எல்.ஏ.வின் கோரிக்கையை ஏற்று நாட்டார் கால்வாயை சீரமைக்க ரூ10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கு விவசாயிகள் நன்றி தெரிவித்தனர். கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது இந்த கால்வாயை தூர்வார ரூ.3 கோடி ஒதுக்கி பணிகளை செய்தது. முறையாக வேலை செய்யாமல் பெருமளவு நிதியை செலவழிக் காமல் வீணடிக்கப்பட்டுள்ளது. தற்போது முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டார். நாட்டார் கால்வாயை சீரமைக்கும் பணியால் 3 மாவட்டங்களும் பயனடையும் நிலை உள்ளது. விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு கிராமமும் பயன்பெறும். இந்த அறிவிப்பால் இந்த பகுதியில் மானாவாரியாக உள்ள நிலங்கள் விளைநிலங்களாக மாறும். சட்டமன்றத்தில் கேள்வி நேரத்தில் தனது கோரிக்கையை ஏற்று நிறைவேற்றிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தமிழரசி எம்.எல்.ஏ. நன்றி கூறினார்.

    • திருப்பத்தூர் அருகே ஊரணி ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.
    • கோர்ட்டு உத்தரவுப்படி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா அருகே உள்ள ஆ. தெக்கூர் கிராமத்தில் நகரத்தார்களால் கட்டப்பட்ட 120 ஆண்டு கால மீனாட்சி சுந்தரேஸ்வரரர் கோவில் உள்ளது. இந்தக் கோவிலின் முன்பு 5 ஏக்கர் பரப்பளவில் ஊரணி இருந்தது. ஆனால் இந்த ஊரணியைச் சுற்றி வணிக கட்டிடங்கள் மற்றும் குடியிருப்புகள் ஆக்கிரமித்த தால் தண்ணீர் வரத்து பாதை அடைபட்டு பயன்பாடு இல்லாமல் போனது.

    இதுகுறித்து கோவில் நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் மனு அளிக்கப்பட்டது. மேலும் உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆக்கிரமிப்பு களை அகற்ற வேண்டி 2 ஆண்டுக்கு முன்பு மாவட்ட நிர்வாகத்திற்கும், வருவாய் துறையினருக்கும் உத்தரவு பிறப்பித்தது. இதனை எதிர்த்து ஆக்கிரமிப்பாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அதனை விசாரித்த நீதிபதிகள் ஊரணியை சுற்றி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ள அனைத்து பகுதிகளையும் மீட்டெடுத்து ஊரணியை சீரமைக்கும்படி மாவட்ட ஆட்சியருக்கும், வருவாய் துறையினருக்கும் கடந்த 17-ந் தேதி உத்தரவு பிறப்பித்தது.

    அதன் அடிப்படையில் திருப்பத்தூர் வட்டாட்சியர் வெங்கடேசன், மண்டல துணை வட்டாட்சியர் செல்லமுத்து ஆகியோர் தலைமையில் ஊரணியின் மேற்குப்பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ள சுமார் 20-க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டு வந்த மின் விநியோகத்தை தடை செய்தனர்.

    மேலும் ஜேசிபி இயந்திரம் மூலம் கட்டிடங்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். ஊரணியை சுற்றியுள்ள மற்ற பகுதிகளில் இருந்து வரும் சுமார் 47 குடியிருப்பு பகுதிகளின் உரிமை யாளர்களுக்கு மாற்று இடங்களில் 3 சென்ட் நிலம் வழங்கி, வரும் நாட்களில் அப்பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளும் அகற்றப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    முன்னதாக ஆக்கிரமிப்பு களை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்ட நபர்களிடம் போலீஸ் துணை சூப்பிரண்டு ஆத்மநாதன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதனைத் தொடர்ந்து ஆக்கிரமிப்பு களை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தப் பணிகளால் பொன்னமராவதி-திருப்பத்தூர் சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • தமிழர்களின் வரலாற்று பெருமையை விளக்கும் கீழடி அருங்காட்சியகத்தை சிவக்குமார், சூர்யா-ஜோதிகா பார்வையிட்டனர்.
    • அப்போது மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் உடனிருந்தார்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் கீழடி அருங்காட்சியகத்தில் தமிழர்கள் நாகரீகத்தை விளக்கும் பல்வேறு பொருட்கள் காட்சிபடுத்தப் பட்டுள்ளது. இதனை தினமும் ஏராளமான பொதுமக்கள், மாணவ-மாணவிகள் பார்வையிட்டு வருகின்றனர்.

    கீழடி அருங்காட்சிய கத்தை ஏராளமான திரை பிரபலங்களும், சமூக ஆர்வலர்களும், ஆராய்ச்சியாளர்களும், வெளிநாட்டு தூதுவர்களும் பார்த்து செல்கின்றனர். இந்நிலையில் இன்று தமிழ் திரை உலகின் முன்னணி நடிகரான சூர்யா தனது மனைவி ஜோதிகா, தந்தை சிவக்குமார் மற்றும் உறவினர்களுடன் கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட்டார். அப்போது மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் உடனிருந்தார்.

    அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பொருட்களை தொல்லியல் துறை அதிகாரிகள் சிவக்குமார், சூர்யா, ஜோதிகா ஆகியோருக்கு விளக்கி கூறினர். அதனை அவர்கள் ஆர்வமுடன் கேட்டு தெரிந்து கொண்டனர்.

    • காரைக்குடி சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள காலிமனைகளை தொழில் முனைவோர்களுக்கு ஒதுக்கீடு செய்ய கலந்தாலோசனைக் கூட்டம் நடந்தது.
    • உதவி செயற்பொறியாளர் (மதுரை) வேலுசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள காலிமனைகளை தகுந்த தொழில் முனைவோர்களுக்கு ஒதுக்கீடு செய்து தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கத்தில் காரைக்குடி தொழிற்பேட்டை வளாகத்தில் உள்ள சிறு, குறு தொழிலாளர் நல சங்க கட்டிடத்தில் தொழில்துறை கூடுதல் செயலாளர் பல்லவி பல்தேவ், கலெக்டர் மதுசூதன் ரெட்டியுடன் கலந்தாலோசனைக் கூட்டம் நடத்தினார்.

    இதில் தொழில் அதிபர்கள் உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்கின்ற விதத்தையும், விற்பனை விகித முறையையும், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள படித்து முடித்த இளைஞர்கள் காரைக்குடி சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள காலிமனைகளை பயன்படுத்தி, தொழிற் முனைவோர்களாக உருவாக்குவதற்கான வாய்ப்புகள் மற்றும் அதற்கான வழிமுறைகள் குறித்தும் கலந்தாலோசனை மேற்கொள்ளப்பட்டது.

    இதில் பங்கேற்ற காரைக்குடி சிட்கோ தொழிற்பேட்டையை சேர்ந்த தொழில் அதிபர்கள் தங்களது கருத்துக்கள் மற்றும் மேம்படுத்த வேண்டிய பல்வேறு வசதிகள் குறித்து தெரிவித்தனர்.

    இந்த கோரிக்கைகள் தொடர்பாக அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொழில்துறை கூடுதல் செயலாளர் பல்லவி பல்தேவ் தெரிவித்தார்.

    சிட்கோ கிளை மேலாளர் கலாவதி, காரைக்குடி வட்டாட்சியர் தங்கமணி, உதவி செயற்பொறியாளர் (மதுரை) வேலுசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • தேவகோட்டை யூனியனில் ரூ.16.99 கோடியில் நடைபெறும் வளர்ச்சித்திட்ட பணிகளை கலெக்டர் பார்வையிட்டார்.
    • இந்த பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டத்தில் மொத்தம் 12 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. அந்த ஊராட்சி ஒன்றி யங்களின் செயல்பாடுகள் மற்றும் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் தொடர்பாக ஆண்டாய்வு மேற்கொள்ளும் வகையில் கலெக்டர் மதுசூதன்ரெட்டி தேவகோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் ஆய்வு செய்தார்.

    அப்போது ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களின் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளும், அது தொடர்பாக பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடு களையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளில் முடிவுற்றுள்ள பணிகள், நடைபெற்று வரும் பணிகள் மற்றும் அரசின் பல்வேறு துறைவாரியாக பொது மக்களுக்கு வழங்கப் பட்டுள்ள நலத்திட்ட உதவிகளின் விபரங்கள், பயன்பெற்ற பயனாளிகளின் எண்ணிக்கை ஆகியவைகள் தொடர்பான பராமரிக் கப்பட்டு வரும் கோப்புகளையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.

    ஊராட்சிகளின் சார்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய வளர்ச்சிப் பணிகள் தொடர்பாகவும், நிதிநிலை மற்றும் அலுவல கங்களில் தேவையான அடிப்படை வசதிகள் மேம்படுத்தல், கூடுதல் கட்டிடங்கள், பயனற்ற நிலையில் உள்ள கட்டி டங்கள், அலுவலர்களின் கோரிக்கைகள் தொடர்பாகவும் கலெக்டர் ஆய்வு செய்தார்.

    தேவகோட்டை யூனியன் சார்பில் 2022-23-ம் நிதியாண்டில் ரூ.16.99 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் மொத்தம் 496 வளர்ச்சித் திட்ட பணிகள் தொடர்பாக, பகுதிவாரியாக மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்து கலெக்டர் மதுசூதன் ரெட்டி ஆய்வு செய்து இந்த பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வின்போது, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) சாந்தி, தேவகோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மாலதி, விஜயகுமார் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.

    • சிவகங்கை மாவட்டத்தில் மணிமேகலை விருது பெற சமுதாய அமைப்பினர் விண்ணப்பிக்கலாம்.
    • தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க அலுவலகத்திலோ அல்லது 04575- 240962 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு விபரங்கள் பெறலாம்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    முதல்-அமைச்சரின் ஆணையின்படி 2022-23-ம் ஆண்டிற்கு ஊரக மற்றும் நகர்புறங்களில் சிறப்பாக செயல்படும் மகளிர் சுய உதவிக் குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, வட்டார அளவிலான கூட்டமைப்பு, கிராம வறுமை ஒழிப்புச் சங்கம், பகுதி அளவிலான கூட்டமைப்பு, நகர அளவிலான கூட்டமைப்பு ஆகியவற்றில் சிறப்பாக செயல்படும் அமைப்புகளுக்கு தமிழக அரசால் மணிமேகலை விருது வழங்குவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    சிவகங்கை மாவட்டத்தில் 2022-23-ம் ஆண்டிற்கு மணிமேகலை விருதுக்கு தகுதியான மேற்கண்ட சமுதாய அமைப்புகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

    இந்த விருதிற்கு தகுதியான சமுதாய அமைப்புகள் அந்தந்த வட்டாரங்களில் உள்ள மகளிர் திட்ட வட்டார இயக்க மேலாண்மை அலகில் 25.4.2023-ந் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு சிவகங்கையில்உள்ள திட்ட இயக்குநர், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க அலுவலகத்திலோ அல்லது 04575- 240962 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு விபரங்கள் பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • முத்துமாரியம்மன் கோவில் பங்குனி பெருந்திருவிழா நடந்தது.
    • அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 24 மணி நேரம் சிறப்பு பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகில் உள்ளது தாயமங்லம் கிராமம். இங்கு பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி பெருந்திருவிழா 10 நாட்கள் நடைபெறும். இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    திருவிழா தொடங்கு வதற்கு 5 நாட்கள் முன்பே மதுரை மாட்டுதாவணி பஸ்நிலை யத்தில்இருந்து தாயமங்லம் கோவில் வரை அரசுபஸ் போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது.

    கடந்த29-ந்தேதி பங்குனி பெருந்திருவிழா தொடங்கியது. நேற்று முதல் தினமும் 50-க்கும் மேற்பட்ட பஸ்கள் தாயமங்லம் சென்று வருகிறது. வருகிற 5-ந்தேதி (புதன்கிழமை) பொங்கல் விழா, 6-ந்தேதி தேரோட்டம், 7-ந்தேதி பால்குடம், ஊஞ்சல் உற்சவம், இரவு பூபல்லக்கு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    முன்னதாக முதல்நாள் விழாவில் மூலவர் அம்மனுக்கு 11 வகையான மூலிகை பொருட்களால் சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டு அபிஷேகம் நடந்தது. இதையடுத்து கொடி மரத்திற்கு சிறப்பு பூஜை, நவசக்தி ஹோமம், லட்சார்ச்சனை நடந்தது.

    மேலும் சிவகங்கை, மானாமதுரை, அருப்புக்கோ ட்டை, கமுதி, பரமக்குடி, காளையார் கோவில் ஆகிய ஊர்களில் இருந்து அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 24 மணி நேரம் சிறப்பு பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது.

    விழாஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் வெங்கடேசன்செட்டியார் மற்றும் அலுவலர்கள், கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய முதுமக்கள் தாழி கண்டுபிடிக்கப்பட்டது.
    • மண்ணில் புதைக்கப் பயன்படுத்தப்பட்ட புதைகலன்கள், ஈமத்தாழிகள் என்றும் அழைக்கின்றனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள வலசை கிராமத்தில் தென்னக வரலாற்று மையத்தைச் சேர்ந்த வரலாற்று ஆர்வலர்கள் மீனாட்சி சுந்தரம், சிவக்குமார், தருனேசுவரன், கமுதி பசும்பொன் முத்து ராமலிங்கத் தேவர் நினைவு கல்லூரி வரலாற்றுத்துறை பேராசிரியர் தங்கமுத்து ஆகியோர் களப்பணி மேற்கொண்டனர்.

    அப்போது அங்கு மண் மூடியவாறு வாய் பகுதி மட்டும் வெளியே தெரியும் நிலையில் முதுமக்கள் தாழி புதைந்திருப்பதை அவர்கள் கண்டறிந்தனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது:-

    இந்த கிராமப் பகுதியில் நத்தபுரக்கி செல்லும் தார் சாலையின் காட்டுப் பகுதியில் மழை பெய்து மண் அரிப்பு ஏற்பட்டதால் இந்த முதுமக்கள் தாழி வெளியே தெரிய வந்துள்ளது.

    முழுமையாக தரைத்த ளத்தை தோண்டினால் முழு வடிவிலான முது மக்கள் தாழி தெரியும். முதுமக்கள் தாழிகள் என்பது பண்டைய தமிழகத்தில் இறந்தவர்களின் உடல்களை வைத்து மண்ணில் புதைக்கப் பயன்படுத்தப்பட்ட புதைகலன்கள், ஈமத்தாழிகள் என்றும் அழைக்கின்றனர்.

    இதைப் பற்றி சங்கப் பாடல்களிலும் குறிப்புகள் உள்ளன. குளமுற்றத்து துஞ்சிய கிள்ளிவளவன் பற்றி ஐயூர் முடவனார் பாடிய புறநானூற்றுப் பாடல் முதுமக்கள் தாழி பற்றி குறிப்பிடுகிறது.

    ஒருவர் இறந்த பின்னர் அவரது உடலை அல்லது எலும்புகளை அல்லது உடலை எரித்த சாம்பலை அவர் பயன்படுத்திய பொருட்களுடன் தாழியில் வைத்துப் புதைத்து விடுவது வழக்கம். இப்படி புதைக்கப்பட்ட தாழிகள் தமிழ்நாட்டில் பல இடங்களில் கிடைத்துள்ளன. உடல் செயலிழந்த முதியவர்களை உயிருடன் புதைக்கவும் இந்த தாழிகள் பயன்பட்டன என்ற கருத்தும் நிலவுகிறது.

    மானாமதுரை பகுதியில் பல இடங்களில் முதுமக்கள் தாழிகள் கிடைத்துள்ளன. 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்த பகுதியில் மக்கள் வாழ்ந்ததற்கான ஆதரமாக இவை உள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×