என் மலர்
சிவகங்கை
மானாமதுரை ஒன்றியத்தில் 39 ஊராட்சிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமப்புற மக்கள் கல்வியறிவு பெறுவதற்காக சிறு கிராமங்களில் கூட ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றது. இதையடுத்து இந்த ஊராட்சிக்குட்பட்ட பின் தங்கிய கிராமங்களில் உள்ள பள்ளிகளுக்கு அங்கு பணியாற்றி வரும் ஆசிரியர்கள் சரிவர பணிக்கு வருவது இல்லை என புகார் எழுந்துள்ளது.
ஒரு பள்ளியில் 2ஆசிரியர்கள் பணியாற்றினால் அதில் ஒருவர் மட்டும் பணிக்கு வருவது என்று அவர்களுக்குள் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்கின்றனர். மேலும் அந்த பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் பள்ளியின் கதவு சாவியை உள்ளூரில் உள்ள மாணவர்களிடம் ஒப்படைத்து விடுகின்றனர். இதையடுத்து அந்த மாணவர்கள் காலை நேரத்தில் வந்து அந்த பள்ளியை திறப்பது, வகுப்பு நேரம் முடிந்தவுடன் பின்னர் அந்த பள்ளியை மூடுவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.
பொதுவாக அரசு பள்ளியில் பணியாற்றும் தலைமைஆசிரியர் காலை 8.30 மணிக்கு பள்ளிக்கு வரவேண்டும் என்றும் 9 மணிக்கு வகுப்புகள் தொடங்கப்பட வேண்டும் என்றும் நடைமுறை உள்ளது. ஆனால் மானாமதுரை பகுதியில் உள்ள பெரும்பாலான பள்ளிகளில் காலை 10 மணிக்கு மேல்தான் ஆசிரியர்கள் பணிக்கு வருகின்றனர். அதன் பின்னர் அந்த பள்ளியில் முறையான இறை வணக்கம் கூட நடத்துவது இல்லை. பின்னர் மாலை 3 மணிக்கு பள்ளியில் இருந்து மாணவர்களை வீட்டிற்கு அனுப்பி வைத்து விட்டு அவர்களும் புறப்பட்டு சென்று விடுவாதாக கூறப்படுகிறது. இதனால் இதுபோன்று உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளின் கல்வித் தரம் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது.
மேலும் மானாமதுரை மற்றும் அதன் கிராமப்புற பள்ளியில் படித்து வரும் 5-ம் வகுப்பு மாணவனுக்கு தாய் மொழியான தமிழைக்கூட வாசிக்க திணறும் அளவிற்கு அரசு பள்ளிகளில் கல்வித்தரம் உள்ளது. மேலும் மானாமதுரை அருகே கிளங்காட்டூர் கிராமத்தில் உள்ள நெடுங்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தற்போது 26 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் தினந்தோறும் கால தாமதமாக வருவதாக கிராம மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
இதையடுத்து நேற்று காலை 9.40 மணி வரை இந்த பள்ளிக்கு ஆசிரியர்கள் வராததால் மாணவ-மாணவிகள் காலை முதல் ஆசிரியர்களின் வருகைக்காக பள்ளி வாசலில் காத்திருந்தனர். மேலும் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கிராமப்புற பள்ளிகளுக்கு மாவட்ட கல்வி அதிகாரிகள் சரிவர ஆய்வு நடத்துவது இல்லை என்றும் கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்த காரணத்தினால் கிராமப்புறத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள் குறித்த நேரத்திற்குள் அந்த பள்ளிகளுக்கு வருவது இல்லை. எனவே சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அதிகாரிகள் இதுபோல் கிராமப்புறங்களில் உள்ள அரசு பள்ளிகளுக்கு தொடர்ந்து சென்று சரியான நேரத்திற்குள் ஆசிரியர்கள் அங்கு வருகின்றார்களா என்று ஆய்வு செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல் நலக்குறைவால் நேற்று முன்தினம் மரணமடைந்தார். அவரது மறைவையொட்டி சிங்கம்புணரியில் அனைத்து கட்சியினர்கள் மற்றும் வர்த்தக சங்கம் சார்பில் அஞ்சலி செலுத்தும் விதமாக சிங்கம்புணரி புசலியம்மாள் மருத்துவமனை முன்பு இருந்து 500-க்கும் மேற்பட்டவர்கள் மவுன ஊர்வலமாக வந்து சிங்கம்புணரி அண்ணாசிலை முன்பு வைக்கப்பட்டிருந்த வாஜ்பாய் உருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.
இதையொட்டி சிங்கம்புணரி பகுதியில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன. மவுன ஊர்வலத்தில் பாரதீய ஜனதா கட்சி மாவட்ட துணைத் தலைவர் செந்தில் குமார், நகர தலைவர் வசிகரன், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ ராம, அருணகிரி, மாநில இலக்கிய அணி துணைத் தலைவர் சிங்கை தருமன், காங்கிரஸ் நகர தலைவர் பழனிவேல்ராஜன் மற்றும் தி.மு.க சார்பில் நகரச் செயலாளர் யாகூப், பொதுக்குழு உறுப்பினர்கள் சோமசுந்தரம், அம்பலமுத்து, அ.தி.மு.க சார்பில் முன்னாள் கவுன்சிலர் குணசேகரன் மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் பொன்பகீரதன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
சிவகங்கை:
மானாமதுரை அருகே வைகை ஆற்றில் தெ.புதுக்கோட்டை, செய்களத்தூர், வாகுடி ஆகிய பகுதிகளில் மணல் குவாரி நடத்த கடும் எதிர்ப்பு போராட்டம் நடந்துவருகிறது. மக்கள் எதிர்ப்பை மீறி தெ.புதுக்கோட்டையில் மணல் குவாரி அமைக்கப்பட்டு மணல் தொழில் தொடங்கியது. மக்கள் உண்ணாவிரத போராட்டம் காரணமாக கடந்த 14-ந் தேதி மணல்குவாரி நடைபெறவில்லை.
சுதந்திர தினத்தை முன்னிட்டு ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் நடந்தது. சிவகங்கை மாவட்டத்தில் தெ.புதுக்கோட்டை, மேல நெட்டூர், கீழ நெட்டூர், குறிச்சி, தெற்கு சந்தனூர் ஆகிய ஊராட்சிகளில் நடந்த கிராம சபையில் மணல் குவாரி அமைத்து மணல் அள்ளக்கூடாது என தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.
காரைக்குடி பருப்பூரணி பகுதியில் உள்ள அய்யப்பன் கோவிலில் இருந்து ஆண்டுதோறும் ஏராளமான பக்தர்கள் கார்த்திகை மற்றும் ஆடி மாதங்களில் விரதம் இருந்து மாலை அணிந்து சபரி மலைக்கு செல்வது வழக்கமாக இருந்து வருகிறது. அதேபோல் இந்தாண்டும் அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருக்க தொடங்கினர்.
இதையடுத்து கடந்த 12-ந்தேதி இரவு காரைக்குடியில் இருந்து 5 பஸ்களில் சுமார் 300-க்கும் மேற்பட்ட அய்யப்ப பக்தர்கள் இருமுடி கட்டிக்கொண்டு சபரிமலைக்கு புறப்பட்டனர். அவர்கள் முதலில் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். பின்னர் நெல்லை, செங்கோட்டை வழியாக கேரளா மாநிலத்தில் உள்ள சபரி மலைக்கு சென்றனர்.
அப்போது செங்கோட்டையை தாண்டி அவர்கள் கேரள எல்லைக்குள் நுழையும்போது அம்மாநில போலீசார் அவர்களை நிறுத்தி தற்போது கேரளாவில் கடும் மழை பெய்து ஆங்காங்கே வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சபரிமலை, பம்பை தீர்த்தம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளப்பெருக்கு உள்ளதால் நீங்கள் அங்கு செல்ல முடியாது. எனவே நீங்கள் உங்கள் ஊருக்கு செல்லுங்கள் என்று திருப்பி அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து அய்யப்ப பக்தர்கள் அங்கிருந்து நேற்று அதிகாலை காரைக்குடிக்கு வந்தனர். பின்னர் பருப்பூரணி பகுதியில் உள்ள அய்யப்பன் கோவிலுக்கு வந்து இருமுடிகளை இறக்கி வைத்து சாமி தரிசனம் செய்தனர்.
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் பெரியார் நகரை சேர்ந்தவர் மகேந்திரகுமார். இவரது மகன் ராஜ்குமார் (வயது 31). திருப்பத்தூர் நகராட்சி குத்தகை சைக்கிள் ஸ்டாண்ட்டில் வேலை செய்து வந்தார்.
ராஜ்குமாருக்கு திருமணமாகி கவுசல்யா (28) என்ற மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கடந்த 11-ந்தேதி திருப்பத்தூர் அடுத்த பெரிய குனிச்சி பகுதியில் உள்ள கோவிந்தன் என்பவர் வீட்டின் அருகே ராஜ்குமார் அடித்து கொலை செய்யப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார்.
பணி முடிந்து வீடு திரும்பிய ராஜ்குமார், அதே பகுதியை சேர்ந்த துளசிராமன், லாரி டிரைவர் ரமேஷ் மற்றும் சிலருடன் பேசி கொண்டிருந்ததை சிலர் பார்த்துள்ளனர்.
இதனால் சந்தேகமடைந்த போலீசார் ரமேசை தேடி சென்றனர். அப்போது அவர் தலைமறைவாக இருந்தது தெரியவந்தது. மேலும் ரமேசுக்கும், கொலையுண்ட ராஜ்குமாரின் மனைவி கவுசல்யாவுக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததை போலீசார் கண்டு பிடித்தனர்.
இதனையடுத்து கவுசல்யாவை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது ரமேசுடன் கள்ளத்தொடர்பு இருந்ததை அவர் ஒப்புக்கொண்டார்.
தலைமறைவாக இருந்த ரமேஷ், அவரது நண்பர் துளசிராமன் ஆகியோரை தனிப்படை போலீசார் இன்று காலை மடக்கி பிடித்தனர். அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அதில் கவுசல்யா, அவரது கள்ளக்காதலனை ஏவி கணவரை கொலை செய்தது தெரியவந்தது.
ராஜ்குமார் இல்லாத நேரங்களில் கவுசல்யா ரமேஷ் தனிமையில் சந்தித்துள்ளனர். அடிக்கடி போனில் பேசியதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் ராஜ்குமாருக்கு தெரியவந்தது. அவர் கவுசல்யாவை கடுமையாக கண்டித்தார்.

ராஜ்குமாருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனை பயன்படுத்தி அவரை கொல்ல முடிவு செய்தனர். ரமேஷின் நண்பர் கவுதமபேட்டையை சேர்ந்த துளசிராமன் சம்பவத்தன்று ராஜ்குமாரை தனியாக அழைத்து சென்று மதுவாங்கி கொடுத்தார். ராஜ்குமாரும் மதுகுடித்தார். அவருக்கு போதை உச்சத்துக்கு ஏறியது.
அப்போது திட்டமிட்டபடி ரமேஷ் அங்கு சென்றார். அப்போது தான் இவர்களை சிலர் பார்த்துள்ளனர். ஆட்கள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் ராஜ்குமாரை ஒயரால் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளனர்.
பின்னர் போலீசுக்கு பயந்து தலைமறைவாகி விட்டதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்த கவுசல்யா, ரமேஷ், துளசிராமன் ஆகியோரை கைது செய்தனர். 3 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் உள்ள அரசு அருங்காட்சியக துறையின் மூலம் ஒவ்வொரு மாவட்டத்திலும் அருங்காட்சியக காட்சி ரதம் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. இந்த ரதம் தற்போது சிவகங்கை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்ய வருகை தந்துள்ளது. கலெக்டர் அலுவலக வளாகத்திற்கு வருகை தந்த அந்த ரதத்தை கலெக்டர் லதா வரவேற்று, அதனை பார்வையிட்டார். பின்னர் அரசுத்துறை அதிகாரிகளும் ரதத்தை பார்வையிட்டனர். பின்னர் கலெக்டர் லதா கூறியதாவது:-
சென்னை அரசு அருங்காட்சியகத்தில் இருந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பார்வையிட்டு பயன்பெறும் வகையில் அருங்காட்சியக ரதத்தின் மூலம் கண்காட்சி நடத்த திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் சிவகங்கை மாவட்டத்திற்கு இந்த ரதம் வருகை தந்துள்ளது. இந்த ரதம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் அதிக அளவில் மக்கள் கூடும் இடங்களுக்கு சென்று எல்லோரும் பார்த்து தெரிந்துகொள்ளும் வகையில் அருங்காட்சியக ரதம் செல்லும்.
இந்த ரதத்தில் தென்னிந்திய நாணயம், சோழர் கால நாணயம், பாரம்பரிய இசைக்கருவிகள், போர் கருவிகள், அரியவகை அஞ்சல் வில்லைகள், சிற்பங்கள், செப்பேடுகள், அரியவகை பாலூட்டி வகைகள், மண்பாண்டங்கள், கனிமங்கள், தாவரவியல், அரியவகை ஓவியங்கள் உள்ளிட்டவை வைக்கப்பட்டுள்ளன. மேலும் வாகனத்தின் உள்பகுதியில் மின்னணு திரையில் பாரம்பரிய வரலாற்று சிறப்பு குறித்த குறும்படங்களும் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக சிவகங்கை வட்டார பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் அருங்காட்சியக ரதத்தை பார்வையிட்டனர்.
திருப்பத்தூர்:
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பேரூராட்சி அலுவலகப் பதிவேடு மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு உரப்பூங்காவில் திடக்கழிவு மேலாண்மை குறித்து கலெக்டர் லதா ஆய்வு மேற்கொண்டார்.
திருப்பத்தூர் பேரூராட்சி அலுவலகத்திற்கு வருகை தந்த கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பணிப்பதிவேடுகள் குறித்து ஆய்வு செய்து குடிநீர், சுகாதாரம், சாலை வசதி, மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து செயல் அலுவலர் சண்முகத்திடம் கேட்டறிந்தார்.
பின்னர் தெருவிளக்கு பராமரிப்பு பதிவேட்டினை ஆய்வு செய்தார். தொடர்ந்து 18 வார்டுகளிலும் மக்கும் மக்கா குப்பைகள் எனப் பிரித்து வாங்கப்படுகிறதா? எனக் கேட்டறிந்தார். தொடர்ந்து பேரூராட்சி அலுவலக வணிக வளாகக் கடைகளிலும் உழவர்சந்தை உள்ளிட்ட இடங்களில் பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுகிறதா? என ஆய்வு செய்து பொதுமக்களிடம் உங்களின் வருங்கால சந்ததிகளுக்காக பிளாஸ்டிக் பயன் படுத்துவதை தவிர்க்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
திடக்கழிவு மேலாண் மைப் பணிகளை ஆய்வு செய்வதற்காக சிவகங்கை சாலையில் உள்ள பேரூராட்சி உரக்கிடங்கு பகுதிக்குச் சென்று அங்கு குப்பைகள் பிரிக்கப்படுவதையும் பிளாஸ்டிக் அரைப்பு எந்திரைத்தையும் பார்வையிட்டு துப்புரவு மேற்பார்வையாளர் தங்கதுரையிடம் உரம் தயாரிக் கப்படும் உரப்படுக்கை முறையினையும் அவற்றை சந்தைப்படுத்துதல் முறை குறித்தும் விளக்கினார்.
பின்னர் அதே பகுதியில் கோழிக்கழிவுகள் உர மாக்கப்படுவதையும் பார்வையிட்ட கலெக்டர் லதா, இந்தப்பகுதியில் காய்கறித் தோட்டம் ஆரம்பிக்கச் செய்து அதனை பயனாளிகளே அனுபவிக்க கேட்டுக் கொண்டார்.
இந்த ஆய்வின் போது பேரூராட்சியின் உதவி இயக்குனர் ராஜா, உதவிப் பொறியாளர் பாலசுப் பிரமணியன், பணி மேற்பார்வையாளர் சந்திரமோகன், உதவி செயற்பொறியாளர் குமரகுரு ஆகியோர் உடனிருந்தனர்.
மானாமதுரை:
மானாமதுரை பேரூராட்சியில் கடந்த 1-ந் தேதி முதல் பிளாஸ்டிக் பைகளை முற்றிலும் ஒழிக்கும் வகையில் தடை செய்யப்பட்டு உள்ளது.
அதைத்தொடர்ந்து பேரூராட்சி செயல் அலுவலர் ஜான் முகமது தலைமையில் பணியாளர்கள் வாரசந்தை, புதிய பஸ் நிலையம், மெயின் பஜார்களில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
மானாமதுரை வர்த்தக சங்கத்தினை அழைத்து பிளாஸ்டிக் ஒழிப்பு பற்றியும் தீமைகள் பற்றியும் விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.
இதில் சிவசங்கை மாவட்ட வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் பாலகுருசாமி தலைமையில் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தக் கூடாது என உறுதிமொழி எடுக்கப்பட்டது.
மானாமதுரை பள்ளிகளிலும் மாணவர்கள் வீடுகளில் யாரும் பயன் படுத்தக்கூடாது என தெரிவிக்கும்படி பிரசாரம் நடந்தது.
காரைக்குடி:
காரைக்குடி அருகே உள்ள ஆத்தங்குடி பகுதியைச்சேர்ந்தவர் காந்தி (வயது 65). இவர் சில நாட்களுக்கு முன்பு வீட்டில் பணியாட்களை வைத்து மராமத்து பணிகளை மேற் கொண்டார். சம்பவத்தன்று வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்று விட்டார்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்ட மர்ம நபர்கள் வீட்டின் ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்தனர்.
பின்னர் பீரோவை திறந்து அதில் இருந்த 2 பவுன் நகை, 5 கிலோ வெள்ளி பொருட்களை திருடிக்கொண்டு தப்பினர். வீடு திரும்பிய காந்தி நகை- வெள்ளி பொருட்கள் திருட்டு போயிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் குன்றக்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணபோஸ் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்.
இதேபோல் காரைக்குடி முடியரசன் சாலையை சேர்ந்தவர் குமாரவேல் (41). இவர் சம்பவத்தன்று தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் வெளியே புறப்பட்டார். திருச்சி ரோட்டில் உள்ள ஹவுசிங்போர்டு பகுதியில் வந்தபோது ஒரே மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த 3 பேர் திடீரென்று குமாரவேல் ஓட்டிவந்த சைக்கிளை எட்டி உதைத்தனர். இதில் நிலைதடுமாறிய அவர் தனது மனைவியுடன் கீழே விழுந்தார்.
பின்னர் அந்த கும்பல் 2 பேரையும் சரமாரியாக தாக்கிவிட்டு குமாரவேல் மனைவி அணிந்திருந்த 2½ பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பியது. இந்த தாக்குதலில் கணவன்- மனைவி இருவரும் படுகாயம் அடைந்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் குன்றக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆத்மநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றார்.






