என் மலர்tooltip icon

    சிவகங்கை

    மானாமதுரை அருகே கார் மோதி சிறுவம் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மானாமதுரை:

    மானாமதுரை அருகே உள்ள சங்கமங்கலத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவரது மகன் பாரதிதாசன் (வயது 5). இந்த சிறுவன் சங்கமங்கலம் அருகே உள்ள 4 வழிச்சாலையை கடக்க முயன்ற போது மதுரையிலிருந்து ராமநாதபுரம் சென்ற கார் மோதியதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தான். உடனே அக்கம், பக்கத்தினர் சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் பரிதாபமாக இறந்தான். இது குறித்து மானாமதுரை போலீசார் கார் டிரைவரான மதுரையைச் சேர்ந்த வேலுச்சாமி மகன் கணேஷ்பாண்டியை கைது செய்தனர்.
    இளையான்குடி அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலியானார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    இளையான்குடி:

    இளையான்குடி அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலியானார். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

    இளையான்குடி அருகே உள்ள மெய்யனேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகன்கள் சாய்ராம்(வயது 18), சாய் லட்சுமணன்(18). இரட்டையர்கள். இவர்கள் இருவரும் அதே ஊரில் ஒலிப்பெருக்கி வைத்து நடத்தும் ஜாகிர்உசேன்(57) என்பவரிடம் வேலை பார்த்தனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் பக்கீர்ராவுத்தர் தெருவில் வசிக்கும் இஸ்மாயில் என்பவரது வீட்டில் மின்சாரம் தடைப்பட்டு உள்ளது. இது பற்றி அறிந்த சாய்லட்சுமணன் மின்சாரத்தை சரி செய்வதற்காக அங்குள்ள ஒரு மின்கம்பத்தில் ஏறினார்.

    அப்போது லேசாக மழை தூறிக்கொண்டே இருந்தது. இதனால் மின்கம்பம் ஈரத்தன்மையுடன் காணப்பட்டது. மின்கம்பத்தில் ஏறிய சாய் லட்சுமணன் மின்பழுதை சரி செய்யும் போது எதிர்பாராதவிதமாக மின்கம்பி அவர் மீது பட்டது. இதில் மின்சாரம் தாக்கியதில் அவர் தூக்கி வீசப்பட்டார்.

    படுகாயம் அடைந்த அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த போது ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இது குறித்து சாய்ராம் இளையான்குடி போலீசில் புகார் செய்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மானாமதுரை அருகே ஒரே நாளில் 3 இடங்களில் பெண்களிடம் நகை பறிப்பு சம்பவங்கள் நடந்து உள்ளன. மர்ம ஆசாமிகளை பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
    மானாமதுரை:

    மானாமதுரை அருகே அரியனேந்தல் மெயின் ரோடு பக்கம் எஸ்.காரைக்குடியைச் சேர்ந்த சந்திரனின் மனைவி ஜோதி (வயது 56) என்பவர் மாடு மேய்த்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத 2 பேர் ஜோதி அணிந்திருந்த கவரிங் நகையை பறித்து கொண்டு தப்பி ஓடினார்கள். செல்லும் வழியில் வேதியரேந்தல் அருகே பூக்குளம் பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்த இளையாநாயக்கன் கிராமத்தைச் சேர்ந்த ராசுவின் மனைவி முத்துலெட்சுமி அணிந்திருந்த 7 பவுன் தங்கச்சங்கிலியை பறிக்க முயன்றனர். அப்போது அவர் நகை பறிப்பதை தடுத்தார். உடனே அதில் ஒரு ஆசாமி அவரது கையில் கத்தியால் குத்தி விட்டு நகை பறித்து விட்டு தப்பி சென்றனர்.

    இதே போன்று செய்யாலூர் விலக்கு ரோடு அருகே நடந்து சென்ற செல்வத்தின் மனைவி பாண்டியம்மாளிடமும் 3 பவுன் நகையை பறித்து கொண்டு தப்பி சென்றுள்ளனர். ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில் 3 பெண்களிடம் நகை பறிப்பு சம்பவம் நடந்துள்ளதால் மானாமதுரை பகுதியில் நேற்று பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டது. போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். நகை பறித்து சென்ற ஆசாமிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
    தேவகோட்டையில் பட்டப்பகலில் பூட்டிய வீட்டை உடைத்து 51 பவுன் நகைகள் திருடப்பட்டன. இந்த துணிகர திருட்டில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

    தேவகோட்டை:

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தி.ஊரணி பகுதியில் வசித்து வருபவர் பாலாஜி (வயது.43). இவர் பெங்களூருவில் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். தற்சமயம் விடுமுறை காரணமாக ஊருக்கு வந்திருந்தார். இந்த நிலையில் அவர் நேற்று காலை வீட்டை பூட்டி விட்டு தனது குடும்பத்துடன் அரியக்குடியில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றிருந்தார். அங்கு சாமி கும்பிட்டு விட்டு அவர்கள் வீட்டிற்கு புறப்பட்டனர்.

    அதன்பிறகு மதியம் 2 மணிக்கு அவர்கள் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர். அப்போது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதை பார்த்து பாலாஜி அதிர்ச்சி அடைந்தார். அதன்பிறகு உள்ளே சென்று பார்த்தனர். வீட்டுக்குள் இருந்த பீரோ கதவு உடைக்கப்பட்டு அதில் இருந்த 51 பவுன் நகைகள், வெள்ளிப்பொருட்கள் திருடு போய் இருந்தது. யாரோ மர்ம ஆசாமிகள் இவர்கள் கோவிலுக்கு செல்வதை கண்காணித்து திருட்டை அரங்கேற்றி இருக்கிறார்கள்.

    இது குறித்து தேவகோட்டை நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். பாலாஜி குடும்பத்துடன் கோவிலுக்கு செல்வது பற்றி வேறு யாரிடமாவது கூறினாரா? எனவும் அவரிடம் விசாரித்தனர்.

    இது குறித்து தேவகோட்டை நகர் பகுதி போலீசில் புகார் செய்யப்பட்டது. இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.
    டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக சிவகங்கை மாவட்ட தி.மு.க. சார்பில் நாளை காலை 10 மணி அளவில் சிவகங்கை அரண்மனை வாயில் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்ட தி.மு.க.செயலாளர் பெரியகருப்பன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மத்திய அரசின் வேளாண்மை சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் கடந்த 10 தினங்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த போராட்டத்திற்கு ஆதரவாக நாளை (சனிக்கிழமை) மாவட்ட தலைநகரங்களில் தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.

    சிவகங்கை மாவட்ட கழகத்தின் சார்பில் நாளை காலை 10 மணி அளவில் சிவகங்கை அரண்மனை வாயில் முன்பாக எனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தினை சிறப்பாக நடத்திட வருகை தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
    ரூ.14,500 கோடி மதிப்பிலான காவிரி-குண்டாறு திட்டத்திற்கு ஜனவரியில் அடிக்கல் நாட்டப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
    சிவகங்கை:

    சிவகங்கையில் கொரோனா தடுப்பு, வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-

    சிவகங்கை மருத்துவக் கல்லூரியில் மருத்துவ இடங்களை 100 லிருந்து 150ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.

    ரூ.14,500 கோடி மதிப்பிலான காவிரி-குண்டாறு திட்டத்திற்கு ஜனவரியில் அடிக்கல் நாட்டப்படும்.

    தமிழக சட்டமன்றத்தில் செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரம் மற்றும் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் ஆகியோரின் முழு உருவப்படம் வைக்கப்படும். மேலும் மோகன் குமாரமங்கலத்தின் முழு உருவப்படம் சட்டசபையில் வைக்கப்படும்.

    7 உட்பிரிவுகளை இணைத்து தேவேந்திர குல வேளாளர் என அழைக்க மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று(வெள்ளிக்கிழமை) சிவகங்கைக்கு வருகை தருகிறார். 7,557 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதுடன், கொரோனா தடுப்பு பணிகளையும் ஆய்வு செய்கிறார்.
    சிவகங்கை:

    கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு நடத்துவதற்காக சிவகங்கைக்கு இன்று(வெள்ளிக்கிழமை) முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிறார். இதற்காக அவர் இன்று காலை 10 மணி அளவில் மதுரை நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு, கார் மூலம் புறப்பட்டு சிவகங்கை வருகிறார். பகல் 11 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் ஆய்வு கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.

    அதன்பின்னர் கலெக்டர் அலுவலகம் முன்பு பல்வேறு புதிய திட்டப்பணிகள், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக மேடை அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரூ.29.32 கோடி மதிப்பில் 7 ஆயிரத்து 557 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். பின்னர் ரூ.27.46 கோடி மதிப்பில் 30 புதிய திட்ட பணிகளுக்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார். ரூ.36.43 கோடி செலவில் முடிவடைந்த 27 புதிய திட்டப்பணிகளை காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கிறார். அங்கு அமைக்கப்பட்டு உள்ள பல்வேறு அரங்குகளின் கண்காட்சிகளை பார்வையிடுகிறார். அதன்பிறகு அவர் சிவகங்கை வேலுநாச்சியார் பயணிகள் விடுதியில் தங்கி ஓய்வெடுக்கிறார். பின்னர் மாலை 5 மணிக்கு கார் மூலம் புறப்பட்டு மதுரை செல்கிறார்.

    முதல்-அமைச்சர் வருகையையொட்டி ராமநாதபுரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. மயில்வாகனன் தலைமையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரோஹித்நாதன் மேற்பார்வையில் 1,700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இதைத்தொடர்ந்து சிவகங்கை நகர் முழுவதும் 3 அடுக்கு பாதுகாப்பு பணிகள் செய்யப்பட்டுள்ளன. விழாவிற்கான ஏற்பாடுகளை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி நேரில் பார்வையிட்டார்.

    முன்னதாக சிவகங்கைக்கு வரும் முதல்-அமைச்சருக்கு கதர் கிராம தொழில்கள் துறை அமைச்சர் பாஸ்கரன், அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் செந்தில்நாதன், மானாமதுரை தொகுதி எம்.எல்.ஏ. நாகராஜன் ஆகியோர் தலைமையில் மாவட்ட எல்லையான மணலூரில் பிரமாண்ட வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    தொடர்ந்து அ.தி.மு.க. சார்பில் பூவந்தி, திருமாஞ்சோலை, படமாத்தூர், முத்துப்பட்டி ஆகிய இடங்களிலும் வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. மேலும் சிவகங்கை நகர் எல்லையான ரிங் ரோடு பகுதியில் இருந்து கலெக்டர் அலுவலகம் வரை சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவிற்கு சாலையின் இருபுறத்திலும் அ.தி.மு.க. தொண்டர்கள் உள்பட ஏராளமானோர் திரண்டு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை வழிநெடுகிலும் நின்று வரவேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இன்று அதிகாலை மின்சாரம் தாக்கி பெண் உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம், காரைக்குடி சத்யா நகரைச் சேர்ந்தவர் பழனியப்பன். இவரது மனைவி பூமா தேவி (வயது 60).

    இன்று அதிகாலை இவர் பால் வாங்குவதற்காக கடைக்கு சென்றார். அவருடன் வளர்ப்பு நாயும் உடன் சென்றது.

    அப்போது ரோட்டில் அறுந்து கிடந்த மின் கம்பியை அவர் தெரியாமல் மிதித்து விட்டார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்தார். இதேபோல் அவருடன் சென்ற வளர்ப்பு நாயும் மின்சாரம் தாக்கி இறந்தது.

    இந்த சம்பவம் தொடர்பாக காரைக்குடி தெற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காரைக்குடி பகுதியில் நேற்று இரவு விடிய, விடிய மழை தூறிக்கொண்டே இருந்தது. லேசான காற்றும் அடித்தது. இதில் மின் வயர் அறுந்து விழுந்திருக்கலாம் என தெரிகிறது.

    அடுத்தடுத்து பெண் மற்றும் நாய் மின்சாரம் தாக்கி இறந்த சம்பவம் அந்தப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
    சாக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காரைக்குடி:

    சாக்கோட்டை அருகே உள்ள வீரசேகரபுரத்தை சேர்ந்தவர் கருப்பையா (வயது 70). இவர் அழகாபுரியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று கருப்பையா திருமண மண்டபத்தில் இருந்த குப்பைகளை வெளியே சென்று கொட்டிவிட்டு மீண்டும் மண்டபத்திற்கு திரும்பினார். அதற்காக சாலையை கடக்கும் போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் கருப்பையா மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் கீழே விழுந்த கருப்பையாவின் தலையில் கல் குத்தியது. காதிலும் ரத்தம் வழிந்தது. சிறிது நேரத்தில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து பள்ளத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் திலகா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    மகன்கள் வீட்டை விட்டு விரட்டியதால் கலெக்டர் அலுவலகத்தில் மூதாட்டி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை அடுத்த கொத்தரி கிராமத்தை சேர்ந்தவர் வள்ளியம்மை (வயது 70). இவர் நேற்று காலையில் சிவகங்கையில் உள்ள கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். பின்னர் திடீரென்று கையில் வைத்திருந்த பாட்டிலில் இருந்த மண்எண்ணெயை எடுத்து தன் உடல் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதை பார்த்து அங்கு பாதுகாப்பிற்கு நின்றிருந்த போலீசார் பதறி அடித்து கொண்டு ஓடி வந்தனர். தீக்குளிக்க முயன்றவரை தடுத்து நிறுத்தினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    அப்போது மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் மனு வாங்கி கொண்டு இருந்தார். போலீசார் அவரிடம் இந்த தகவலை தெரிவித்தனர். உடனே அவர் கூட்டத்தில் இருந்து வெளியே வந்தார். தீக்குளிக்க முயன்ற அந்த மூதாட்டியிடம் பரிவுடன் விசாரித்தார்.

    அப்போது வள்ளியம்மை, கலெக்டரிடம் கண்ணீர்மல்க கூறியதாவது, தன்னுடைய கணவர் குமரப்பன் இறந்து 8 ஆண்டுகள் ஆகிவிட்டது. தன்னுடைய 2 மகன்களும் என்னை வீட்டை விட்டு விரட்டி விட்டனர். தற்போது என்னுடைய 2-வது மகள் சோலை அழகு வீட்டில் தான் இருந்து வருகிறேன். வயதான காலத்தில் மகளுக்கு பாரமாக இருக்க விரும்பவில்லை. மகன் வீட்டில் இருந்தால் தானே தாய்க்கு பெருமை. இது குறித்து பள்ளத்தூர் போலீசில் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் தீக்குளித்து சாக முடிவு செய்ததாக கூறினார்.

    இதை தொடர்ந்து கலெக்டர் மதுசூதன்ரெட்டி உடனடியாக பள்ளத்தூர் போலீசாருக்கு தகவல் கொடுத்து மூதாட்டி கொடுத்த புகாரை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்தினார்.

    பின்னர் அந்த மூதாட்டியிடம், கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து தற்கொலைக்கு முயற்சிப்பது தவறு என்றும் குறைகள் இருந்தால் அதை என்னிடம் வந்து தயங்காமல் தெரிவியுங்கள் என்றார். பின்னர் அவரது மகள் சோலை அழகுவிடம் தாயாரை பத்திரமாக பார்த்து கொள்ளுங்கள் என்று அறிவுரை கூறி அனுப்பி வைத்தார். தீக்குளிக்க முயன்ற பெண் இருந்த இடத்திற்கே வந்து அவரிடம் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட கலெக்டரை அங்கிருந்த பொதுமக்கள் பாராட்டினார்கள்.
    தேவகோட்டை அருகே மனைவி இறந்த துக்கத்தில் மெக்கானிக் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    தேவகோட்டை:

    தேவகோட்டை ஒத்தக்கடை 6-வது வார்டு பள்ளி எதிரே டி.வி. மெக்கானிக் கடை வைத்து நடத்தி வந்தவர் சிவா (வயது 42). கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது மனைவி இறந்து விட்டார்.இந்த நிலையில் நேற்று முன்தினம் கடையை மூடி விட்டு வீட்டுக்கு சிவா வரவில்லை.

    இதனால் சந்தேகம் அடைந்த அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடி வந்தனர்.இதற்கிடையே நேற்று காலை பக்கத்து கடைக்காரர் கடை பூட்டு திறந்து கிடப்பதை கண்டு வீட்டிற்கு தகவல் கொடுத்தார். குடும்பத்தினர் வந்து கதவைத் திறந்து பார்த்தபோது சிவா கடைக்குள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. 

    இதுகுறித்து தேம்வகோட்டை நகர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவி இறந்த துக்கத்தில் அவர் தற்கொலை செய்து இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். இருப்பினும் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
    கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வரும் 4-ந்தேதி சிவகங்கை மாவட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு மேற்கொள்கிறார்.
    சிவகங்கை:

    தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் அரசு தீவிரமாக இறங்கியுள்ளது. மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அதிகாரிகளுடன் நேரடியாக சென்று ஆய்வு செய்து வருகிறார்.

    அந்த வகையில், டிசம்பர் 4-ந்தேதி சிவகங்கை மாவட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொள்கிறார்.

    சென்னையில் இருந்து 4-ந்தேதி மதுரைக்கு செல்லும் முதலமைச்சர் அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில், மதுரை மாநகர் மக்களுக்கு 24 மணி நேரமும் குடிநீர் கிடைத்திடும் வகையில் முல்லைப்பெரியாற்றில் இருந்து மதுரைக்கு குடிநீர் கொண்டு வரும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டவுள்ளார்.

    இதையடுத்து சிவகங்கை மாவட்டத்திற்கு வரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெறும் ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்று கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்கிறார்.
    ×