என் மலர்tooltip icon

    சிவகங்கை

    தேவகோட்டையில் ஓட்டல் உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தேவகோட்டை:

    தேவகோட்டை தியாகிகள் சாலை பகுதியை சேர்ந்தவர் ராமசிவா (வயது 42). இவரது மனைவி ஈஸ்வரி. இவர்களுக்கு மதிபாலன் என்ற மகனும் ராஜேஸ்வரி என்ற மகளும் உள்ளனர். ராமசிவா திருப்பத்தூர் சாலையில் ஓட்டல் நடத்தி வந்தார். கொரோனா காலம் என்பதால் வியாபாரம் நஷ்டத்தில் ஓடியது.இதனால் கடனாளி ஆனார். வாங்கிய கடனையும் திருப்பி கொடுக்க முடியவில்லை என்ற கவலையுடன் காணப்பட்டார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அறைக்கு சென்று சலவை எந்திரம் வயரால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தேவகோட்டை நகர் காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. புகாரின்பேரில் போலீசார் ராமசிவாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காரைக்குடியில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட ஒரு மாத குழந்தை மீட்கப்பட்டது.
    காரைக்குடி:

    காரைக்குடி செக்காலை முதல் வீதியை சேர்ந்தவர் அருண் ஆரோக்கியம் (வயது 27). கட்டிட காண்டிராக்டர். இவருடைய மனைவி தைனிஸ்மேரி (25). இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களது திருமணத்திற்கு அருண் ஆரோக்கியத்தின் பெற்றோர் வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. எதிர்ப்பை மீறி இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

    இந்த நிலையில் தைனிஸ்மேரிக்கு ஆண் குழந்தை பிறந்தது. பிறந்து 30 நாளே ஆன அந்த குழந்தையை பார்க்க அருண் ஆரோக்கியத்தின் தாயார் ராஜேஸ்வரி அவரது வீட்டுக்கு வந்தார். அங்கு மருமகளிடம் பேரனை பார்க்க வேண்டும் என்று கூறி குழந்தையை வாங்கிக்கொண்டு சென்றார். மதியம் வாங்கிக்கொண்டு சென்றவர் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.

    இதையடுத்து மாமியார் தனது குழந்தையை தூக்கி சென்றவர் நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு வரவில்லை என்று தைனீஸ்மேரி தனது கணவரிடம் தெரிவித்தார். இதன்பின்னர் இருவரும் குழந்தையை தேடி சென்றனர். அப்போது ராஜேஸ்வரி பக்கத்து தெருவில் குழந்தையோடு அமர்ந்திருந்தேன்.

    அப்போது காரில் வந்த யாரோ சிலர் குழந்தையை பறித்துச் சென்றுவிட்டனர் என்று கவலையுடன் கூறியுள்ளார். இதுகுறித்து தைனிஸ்மேரி காரைக்குடி வடக்கு போலீசில் புகார் செய்தார்.

    இந்த புகாரின்பேரில் வடக்கு போலீசார் ராஜேஸ்வரியிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் ராஜேஸ்வரி தஞ்சையில் வசிக்கும் தனது தோழி பாத்திமா என்பவரிடம் குழந்தையை கொடுத்து வைத்திருப்பது தெரியவந்தது. அதையொட்டி இன்ஸ்பெக்டர் சுந்தரமகாலிங்கம், சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ் ஆகியோர் தொடர் விசாரணை நடத்தி குழந்தையை மீட்டனர்.

    இது தொடர்பாக அவரது மாமியார் ராஜேஸ்வரியிடம், இனிமேல் இது போன்ற சம்பவங்கள் நடந்ததால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.
    இளையான்குடியில் போலீஸ் நிலையத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    இளையான்குடி:

    இளையான்குடி அருகே உள்ள நாக முகுந்தன்குடி ஊராட்சி மன்றத்தில் தலைவராக தமிழ்ச்செல்வி பாலசுப்பிரமணியன் உள்ளார். இந்த கிராமத்தில் பல்வேறு சமுதாய மக்கள் ஒற்றுமையுடன் வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் ஊராட்சிக்கு உட்பட்ட கொடிமங்கலம், புதுக்குளம், பெரியவண்டாளை ஆகிய கிராம மக்கள் திரண்டு இளையான்குடி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த முற்றுகை குறித்து கிராம மக்கள் கூறியதாவது:-

    எங்கள் கிராமத்தில் ஒரு தரப்பினர் தங்களது சுயநலத்துக்காக மக்களிடம் பிரிவினை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள். ஊராட்சி நிர்வாகம் மூலம் குடிநீர், வீட்டுவசதி, மின்சாரம், பாசன வாய்க்கால் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் செய்து கொடுக்கப்பட்டு உள்ளன. இருப்பினும் எங்கள் கிராமத்தின் ஒற்றுமையை சீர்குலைக்க ஒரு தரப்பினர் முயற்சிக்கிறார்கள்.

    எனவே அந்த தரப்பினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கள் ஒற்றுமையை காண்பிப்பதற்காக தான் இந்த முற்றுகை போராட்டம்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    முற்றுகையில் ஈடுபட்ட பொதுமக்களிடம், போலீஸ் இன்ஸ்பெக்டர் பரணிதரன், இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றார்கள்.
    காரைக்குடியில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட ஒரு மாத ஆண் குழந்தையை போலீசார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
    காரைக்குடி:

    காரைக்குடி செக்காலை முதல் வீதியை சேர்ந்தவர் அருண் ஆரோக்கியம் (வயது 27). கட்டிட காண்டிராக்டரான இவர் தைனீஸ்வரி (25) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

    இந்த திருமணத்திற்கு அருண் ஆரோக்கியத்தின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதையடுத்து அருண் ஆரோக்கியம் தனது மனைவியுடன் அதே பகுதியில் தனிக்குடித்தனம் நடத்தி வந்தார். கடந்த மாதம் இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது.

    குழந்தை பிறந்தவுடன் அருண் ஆரோக்கியத்தின் குடும்பத்தினர் சமரசம் ஆகி விடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

    அதன்படி சம்பவத்தன்று தனது பேரனை பார்க்க அருண் ஆரோக்கியத்தின் தாயார் ராஜேஸ்வரி மகன் வீட்டுக்கு சென்றார்.

    அங்கு பேரனை கையில் எடுத்து ராஜேஸ்வரி ஆசையுடன் கொஞ்சினார். பின்னர் வெளியில் அழைத்துச் சென்று வருவதாக கூறிவிட்டு குழந்தையை எடுத்துச் சென்றார்.

    ஆனால் அதன் பிறகு அவர் நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு வரவில்லை. இதையடுத்து தைனீஸ்வரி குழந்தை எங்கே என்று மாமியாரிடம் கேட்டார்.

    அதற்கு அவர் 2-வது வீதியில் விளையாடிக் கொண்டிருந்தபோது காரில் வந்த சிலர் குழந்தையை தூக்கிச் சென்று விட்டதாக கூறினார். இதனால் தைனீஸ்வரி அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்த புகாரின்பேரில் காரைக்குடி வடக்கு போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்

    அப்போது மாமியார் ராஜேஸ்வரி குழந்தையை அதே பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம் கொடுத்தது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ராஜேஸ்வரியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிவகங்கை மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் தேர்தலில், அதிமுகவைச் சேர்ந்த பொன்மணி பாஸ்கர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டத்தில் மொத்தமுள்ள 16 மாவட்ட ஊராட்சி வார்டுகளில், அ.தி.மு.க. கூட்டணி 8 இடங்களிலும், தி.மு.க. கூட்டணி 8 இடங்களிலும் (தி.மு.க. 5, காங்கிரஸ் 2, இந்திய ஜனநாயக கட்சி 1) வென்றன. இதனால் அ.தி.மு.க., தி.மு.க. கூட்டணி சமபலத்தில் இருக்கிறது. கடந்த ஜனவரி 11, ஜனவரி 30, மார்ச் 4 ஆகிய தேதிகளில் அறிவிக்கப்பட்ட மாவட்ட ஊராட்சி தலைவர், துணைத் தலைவர் தேர்தலை அ.தி.மு.க. கவுன்சிலர்கள் தொடர்ந்து புறக்கணித்தனர். பெரும்பான்மை இல்லாமல் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. 

    இதனால் தி.மு.க.வை சேர்ந்த மாவட்ட கவுன்சிலர்கள் சிலர் தேர்தலை நடத்த வலியுறுத்தி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணையின்போது இரு வாரத்திற்குள் தேர்தல் நடத்தப்படும் என தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்தது. கடந்த 4-ந் தேதி தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக முதலமைச்சர் வந்ததால் தேர்தல் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.

    இவ்வாறு நான்கு முறை ஒத்திவைக்கப்பட்ட மாவட்ட ஊராட்சி தலைவர், துணை தலைவர் தேர்தல் இன்று நடைபெற்றது. சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கான போட்டியில் அ.தி.மு.க. சார்பில் 1-வது வார்டு கவுன்சிலர் பொன்மணி பாஸ்கரும், தி.மு.க. சார்பில் 7-வது வார்டு கவுன்சிலர் செந்தில்குமாரும் போட்டியிட்டனர். 

    இருவருக்கும் 8 வாக்குகள் கிடைத்ததால் குலுக்கல் முறையில் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதில், அதிமுகவைச் சேர்ந்த பொன்மணி பாஸ்கர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மாலையில் துணைத்தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெறுகிறது. 
    காரைக்குடியில் காங்கிரஸ் பிரமுகர் வீட்டுக்குள் வெடிகுண்டுடன் புகுந்து ரூ.1 கோடி கேட்டு மிரட்டியவர் கைது செய்யப்பட்டார்.
    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கற்பக விநாயகர் நகரை சேர்ந்தவர் மாங்குடி (வயது 50). காங்கிரஸ் கட்சியின் சிவகங்கை மாவட்ட துணை தலைவராக இருக்கிறார். நேற்று காலை 6.30 மணி அளவில் அவரது வீட்டுக்கு, தமிழ் தேச மக்கள் என்ற கட்சியில் இருந்து வருவதாக தமிழ்குமரன் (40) என்பவர் வந்தார். எங்களது கட்சியை நடத்துவதற்கு பணம் தேவைப்படுகிறது. அதற்காக நீங்கள் 1 கோடி ரூபாய் தரவேண்டும்” என மாங்குடியிடம் கூறியுள்ளார். இதற்கு மாங்குடி மறுத்து உள்ளார்.

    உடனே தமிழ்குமரன், தான் கொண்டு வந்த பையில் இருந்து ஒரு பைப் வெடிகுண்டு, ஒரு நாட்டு வெடிகுண்டு, இரண்டு கத்திகள், ஒரு சுத்தியல் ஆகியவற்றை எடுத்துக் காண்பித்து, பணம் தராவிட்டால் அரசியல் முன்விரோதத்தை வைத்து கொன்றுவிடுவேன் என்று மிரட்டியதாக தெரிகிறது. அதோடு முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் வீட்டில் வெடிகுண்டு வைத்ததும் நாங்கள் தான் என்று கூறியதாகவும் கூறப்படுகிறது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த மாங்குடி, பணத்துக்கு ஏற்பாடு செய்வதாக அவரிடம் கூறி விட்டு வெளியே வந்து தனது நண்பர்களுக்கு செல்போனில் தகவலை தெரிவித்து வரவழைத்தார். அவர்கள் வந்ததும் தமிழ்குமரனை மடக்கி பிடித்து விட்டு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே காரைக்குடி போலீசார் அங்கு விரைந்து வந்து தமிழ்குமரனை கைது செய்தனர். அவரிடம் இருந்த ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
    4 முறை ஒத்திவைக்கப்பட்ட சிவகங்கை மாவட்ட ஊராட்சி தலைவர், துணைத்தலைவர் தேர்தல் நாளை நடக்கிறது.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டத்தில் மொத்தமுள்ள 16 மாவட்ட ஊராட்சி வார்டுகளில், அ.தி.மு.க. கூட்டணி 8 இடங்களிலும், தி.மு.க. கூட்டணி 8 இடங்களில் (தி.மு.க. 5, காங்கிரஸ் 2, இந்திய ஜனநாயக கட்சி 1) வென்றன. இதனால் அ.தி.மு.க., தி.மு.க. கூட்டணி சமபலத்தில் இருக்கிறது. இந்தநிலையில் கடந்த ஜனவரி 11, ஜனவரி 30, மார்ச் 4 ஆகிய தேதிகளில் அறிவிக்கப்பட்ட மாவட்ட ஊராட்சி தலைவர், துணைத் தலைவர் தேர்தலை அ.தி.மு.க. கவுன்சிலர்கள் தொடர்ந்து புறக்கணித்ததால் பெரும்பான்மை இல்லாமல் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

    இதனால் தி.மு.க.வை சேர்ந்த மாவட்ட கவுன்சிலர்கள் சிலர் தேர்தலை நடத்த வலியுறுத்தி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணையின்போது இருவாரத்திற்குள் தேர்தல் நடத்தப்படும் என தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதற்கிடையே கடந்த 4-ந் தேதி சிவகங்கை மாவட்ட ஊராட்சி தலைவர், துணைத் தலைவர் தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

    அப்போது கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக கடந்த 4-ந் தேதி முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிவகங்கை வந்தார். இதன் காரணமாக மாவட்ட ஊராட்சி தலைவர், துணை தலைவர் தேர்தல் 4-வது முறையாக ஒத்திவைக்கபட்டது

    இந்தநிலையில் அந்த தேர்தல் நாளை(வெள்ளிக்கிழமை) சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. இதில் தலைவர் பதவிக்கு காலையிலும், துணைத் தலைவர் பதவிக்கு மாலை யிலும் தேர்தல் நடக்கிறது.

    இந்த தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் 1-வது வார்டு கவுன்சிலர் பொன்மணி பாஸ்கரனும், தி.மு.க. சார்பில் 7-வது வார்டு கவுன்சிலர் செந்தில்குமாரும் போட்டியிடுகின்றனர்.
    ஆயுர்வேத டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்யலாம் என்ற மத்திய அரசின் உத்தரவை ரத்து செய்யக்கோரி சிவகங்கை மாவட்டத்தில் அரசு டாக்டர்கள் போராட்டம் நடத்தினார்கள்.
    சிவகங்கை:

    ஆயுர்வேத டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்யலாம் என்ற மத்திய அரசின் உத்தரவை ரத்து செய்யக்கோரி சிவகங்கை மாவட்டத்தில் நேற்று அரசு டாக்டர்கள் போராட்டம் நடத்தினார்கள். சிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பு இந்திய மருத்துவ கழகம் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் டாக்டர்கள் திரண்டு நின்று தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினார்கள்.

    காரைக்குடி இந்திய மருத்துவ சங்கம் காரைக்குடி காவேரி கிளை சார்பில், மத்திய அரசின் புதிய மருத்துவமனை கொள்கையினை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.ஆர்ப்பாட்டத்திற்கு டாக்டர் மைதிலி தலைமை தாங்கினார். டாக்டர் சலீம் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் புதிய மருத்துவ கொள்கையினால் பாதுகாப்பான, தரமான சேவைகளை வழங்குவதில் சிக்கல் ஏற்படும் என்பதால் அதனை திரும்பப் பெறக்கோரி வலியுறுத்தப்பட்டது. இதில் டாக்டர்கள் காமாட்சி சந்திரன், சந்திரமோகன் உள்ளிட்ட ஏராளமான டாக்டர்கள் கலந்து கொண்டனர்.

    தேவகோட்டை அரசு மருத்துவமனை வளாகத்தில் தனியார் டாக்டர்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் டாக்டர்கள் அனைவரும் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு டாக்டர் பெரியசாமி தலைமை தாங்கினார்.இந்த ஆர்ப்பாட்டம் குறித்து டாக்டர்கள் செங்கதிர், ஏழுமலை, சரவணன், கணியன் பூங்குன்றன் ஆகியோர் விளக்கி பேசினார்கள்.

    மானாமதுரை மருத்துவ சங்க தலைவர் செல்வராஜ், செயலாளர் முத்துராமலிங்கம், பொருளாளர் ஜெகன் ஆகியோர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் டாக்டர்கள் சுந்தராஜன், முத்துபாண்டி, சுரேஷ் ஹெர்பர்ட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    காரைக்குடி அருகே தொடர் மழையால் மண்சாலை துண்டிக்கப்பட்டது. இதனால் அந்த கிராம மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள்.
    காரைக்குடி:

    காரைக்குடி அருகே உள்ள சாக்கோட்டை யூனியனுக்கு உட்பட்டது பெரியகொட்டக்குடி ஊராட்சி. இந்த ஊராட்சிக்குட்பட்ட நெம்மேனி கிராமத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள மக்கள் பெரும்பாலும் விவசாய தொழிலை நம்பி வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக சிவகங்கை மாவட்டம் முழுவதும் நிவர் மற்றும் புரெவி புயல் காரணமாக தொடர்ந்து பலத்த மழை பெய்தது.

    இதையொட்டி காரைக்குடி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியில் உள்ள கண்மாய்கள் நிரம்பி மறுகால் பாய்ந்து வருகிறது. இந்நிலையில் இந்த பலத்த மழை காரணமாக பல்வேறு இடங்களில் உள்ள சாலைகள் பெயர்ந்தும், சாலையோரங்களில் அரிப்பும் ஏற்பட்டு உள்ளது.

    இந்நிலையில் நெம்மேனி கிராமத்தில் நடுவே உள்ள மண் சாலை ஒன்று மழை வெள்ளத்தினால் நடுவில் துண்டிக்கப்பட்டது. இதையடுத்து அந்த பகுதியில் உள்ள 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் காரைக்குடி, சாக்கோட்டை, புதுவயல் உள்ளிட்ட பகுதிகளுக்கு வாகனங்களில் செல்ல முடியாமல் தவித்தனர்.

    இதுகுறித்து பெரியகொட்டக்குடி ஊராட்சி மன்ற தலைவர் தனபால் சாக்கோட்டை யூனியன் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து துண்டிக்கப்பட்ட சாலையை சரி செய்ய வலியுறுத்தினார். இதைத்தொடர்ந்து துண்டிக்கப்பட்ட சாலை பகுதியை சாக்கோட்டை யூனியன் தலைவர் சரண்யாசெந்தில், யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர் திருப்பதிராஜன், ஊராட்சி தலைவர் தனபால் ஆகியோர் பார்வையிட்டனர். மேலும் துண்டிக்கப்பட்ட சாலை விரைவில் சீரமைக்கப்பட்டு விரைவில் தார்ச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கிராம மக்களிடம் உறுதியளித்தனர்.

    இதற்கிடையே மண்சாலை துண்டிக்கப்பட்டதால் அத்தியாவசிய பொருட்கள் கூட நகரத்துக்கு சென்று வாங்கி வர முடியவில்லை என பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். துண்டிக்கப்பட்ட சாலையை விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர்.
    சிவகங்கையில் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக பல்வேறு கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. பஸ் போக்குவரத்தில் பாதிப்பு இல்லை.
    சிவகங்கை:

    மதுரை மாவட்டத்தில் வணிகர்கள் மற்றும் பல்வேறு தொழிற்சங்க பிரமுகர்கள் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து இருந்தனர். இதனால் மதுரை மாவட்டம், ஒத்தக்கடை, சமயநல்லூர், ஊமச்சிக்குளம், சோழ வந்தான், உசிலம்பட்டி, திருமங்கலம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன.

    மதுரை நகர் பகுதிகளில் ஒரு சில கடைகள் அடைக்கப்பட்டன. பெரும்பாலான கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் திறந்து இருந்தன. மதுரை நகர் பகுதிகளை தவிர்த்து புறநகர் பகுதிகளில் அதிகளவில் கடைகள் அடைக்கப்பட்டது. பல்வேறு இடங்களில் தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் வணிகர்கள், விவசாயிகள் மறியல், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    விருதுநகரில் இன்று காலை 6 மணிக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. நகரில் 100 சதவீத கடைகள் திறக்கப்பட்டிருந்தன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை.

    வழக்கம்போல் விருதுநகர் மாவட்டம் இன்று சுறுசுறுப்பாக இயங்கியது. ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், விருதுநகரில் வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி தி.மு.க. கூட்டணி கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    சிவகங்கை நகரில் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக பல்வேறு கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. ஆனால் பஸ் போக்குவரத்தில் பாதிப்பு இல்லை. கட்சி சார்ந்த தொழிற்சங்கத்தினர் ஆட்டோக்களை இயக்கவில்லை. எனவே குறைந்த அளவு ஆட்டோக்களே ஓடின. அங்கு இன்று காலை முதல் மழை பெய்துவருவதால் மக்கள் வீட்டிலேயே முடங்கினர்.

    ராமநாதபுரம் நகரில் இன்று வழக்கம் போல் கடைகள் திறந்து இருந்தன. பஸ், ஆட்டோக்கள் இயங்கின. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை. இருப்பினும் தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதே நேரம் மாவட்டத்தில் தொண்டி உள்ளிட்ட பல பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

    காரைக்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் காதல்ஜோடி தஞ்சம் அடைந்தனர். உறவினர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று இரவு ஏராளமானோர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது

    இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், புதுக்கோட்டையைச் சேர்ந்த காதல் ஜோடி தஞ்சம் அடைந்துள்ளதாகவும், அவர்களது உறவினர்கள் திரண்டு வந்ததால் கூட்டம் அதிகமாக இருந்ததாகவும் தெரிவித்தனர்.

    புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவர் சுஜிதா என்பவரை கடந்த 3 வருடங்களாக காதலித்து வந்தனர். இருவரும் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் காதலுக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

    குறிப்பாக பெண் வீட்டில் காதலை ஏற்க மறுத்தனர். இதனால் காதல் ஜோடியினர் யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறி விட்டனர்.

    பின்னர் திருமணம் செய்து கொண்ட ராஜேஷ்- சுஜிதா ஊருக்கு செல்ல பயந்து காரைக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்தனர்.

    இதற்கிடையில் காதல் திருமணம் குறித்த தகவல் கிடைத்ததும் ராஜேஷ்- சுஜிதா உறவினர்கள் ஆத்திரம் அடைந்தனர். அவர்கள் காதல் ஜோடி பற்றி விசாரித்தனர்.

    இதில் ராஜேஷ்- சுஜிதா காரைக்குடி போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்த தகவல் தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து அவர்களும் காரைக்குடி போலீஸ் நிலையம் வந்தனர். இதனால் அங்கு சிறிது பதற்றம் நிலவியது.

    காரைக்குடி போலீசார் இருதரப்பினரிடமும் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் ஏற்கனவே புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து காதல் ஜோடி புதுக்கோட்டை மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
    டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக சிவகங்கை தபால் அலுவலகத்தை முற்றுகையிட்ட 59 பேரை போலீசார் கைது செய்தனர்.
    சிவகங்கை:

    வேளாண் சட்ட மசோதாக்களை ரத்து செய்யக்கோரி டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக இந்திய கம்யூனிஸ்டு மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் இணைந்து சிவகங்கை மாவட்டத்தில் 3 நாட்கள் மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் ்நடத்த போவதாக அறிவித்திருந்தனர். இதையொட்டி நேற்று சிவகங்கை தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.

    இதையொட்டி முன்னாள் எம்.எல்.ஏ.குணசேகரன் தலைமையில் கட்சியினர் சிவகங்கை அரண்மனை வாசலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு மத்திய தலைமை தபால் நிலையத்தை வந்தடைந்தனர். ஆனால் போலீசார் அந்த பகுதியில் கயிறு கட்டி தடுப்பு ஏற்படுத்தி இருந்தனர்.

    ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கயிற்றை தாண்டிக்கொண்டு முற்றுகையிட சென்றனர். அவர்களை போலீசார் தடுத்தனர். இதனால் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளு,முள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அதன் பின்னர் தபால் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து முற்றுகை போராட்டம் நடத்தினார்கள்.

    முற்றுகை போராட்டம் நடத்தியதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் வீரபாண்டி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் மு.கண்ணகி, கோபால் எம்.எஸ்.கண்ணன், விஸ்வநாதன், சந்திரன்,முத்துபாண்டி, முத்துராமலிங்கபூபதி, ஒன்றிய செயலாளர் உலகநாதன், திருநாவுக்கரசு உள்பட 59 பேரை போலீசார் கைது செய்தனர்.

    ×