search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொன்மணி பாஸ்கர்
    X
    பொன்மணி பாஸ்கர்

    சிவகங்கை மாவட்ட ஊராட்சி குழு தலைவர் தேர்தலில் அதிமுக வெற்றி

    சிவகங்கை மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் தேர்தலில், அதிமுகவைச் சேர்ந்த பொன்மணி பாஸ்கர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டத்தில் மொத்தமுள்ள 16 மாவட்ட ஊராட்சி வார்டுகளில், அ.தி.மு.க. கூட்டணி 8 இடங்களிலும், தி.மு.க. கூட்டணி 8 இடங்களிலும் (தி.மு.க. 5, காங்கிரஸ் 2, இந்திய ஜனநாயக கட்சி 1) வென்றன. இதனால் அ.தி.மு.க., தி.மு.க. கூட்டணி சமபலத்தில் இருக்கிறது. கடந்த ஜனவரி 11, ஜனவரி 30, மார்ச் 4 ஆகிய தேதிகளில் அறிவிக்கப்பட்ட மாவட்ட ஊராட்சி தலைவர், துணைத் தலைவர் தேர்தலை அ.தி.மு.க. கவுன்சிலர்கள் தொடர்ந்து புறக்கணித்தனர். பெரும்பான்மை இல்லாமல் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. 

    இதனால் தி.மு.க.வை சேர்ந்த மாவட்ட கவுன்சிலர்கள் சிலர் தேர்தலை நடத்த வலியுறுத்தி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணையின்போது இரு வாரத்திற்குள் தேர்தல் நடத்தப்படும் என தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்தது. கடந்த 4-ந் தேதி தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக முதலமைச்சர் வந்ததால் தேர்தல் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.

    இவ்வாறு நான்கு முறை ஒத்திவைக்கப்பட்ட மாவட்ட ஊராட்சி தலைவர், துணை தலைவர் தேர்தல் இன்று நடைபெற்றது. சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கான போட்டியில் அ.தி.மு.க. சார்பில் 1-வது வார்டு கவுன்சிலர் பொன்மணி பாஸ்கரும், தி.மு.க. சார்பில் 7-வது வார்டு கவுன்சிலர் செந்தில்குமாரும் போட்டியிட்டனர். 

    இருவருக்கும் 8 வாக்குகள் கிடைத்ததால் குலுக்கல் முறையில் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதில், அதிமுகவைச் சேர்ந்த பொன்மணி பாஸ்கர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மாலையில் துணைத்தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெறுகிறது. 
    Next Story
    ×