என் மலர்
செய்திகள்

கோப்பு படம்.
காரைக்குடியில் கடத்தப்பட்ட ஒரு மாத குழந்தை மீட்பு
காரைக்குடியில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட ஒரு மாத குழந்தை மீட்கப்பட்டது.
காரைக்குடி:
காரைக்குடி செக்காலை முதல் வீதியை சேர்ந்தவர் அருண் ஆரோக்கியம் (வயது 27). கட்டிட காண்டிராக்டர். இவருடைய மனைவி தைனிஸ்மேரி (25). இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களது திருமணத்திற்கு அருண் ஆரோக்கியத்தின் பெற்றோர் வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. எதிர்ப்பை மீறி இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
இந்த நிலையில் தைனிஸ்மேரிக்கு ஆண் குழந்தை பிறந்தது. பிறந்து 30 நாளே ஆன அந்த குழந்தையை பார்க்க அருண் ஆரோக்கியத்தின் தாயார் ராஜேஸ்வரி அவரது வீட்டுக்கு வந்தார். அங்கு மருமகளிடம் பேரனை பார்க்க வேண்டும் என்று கூறி குழந்தையை வாங்கிக்கொண்டு சென்றார். மதியம் வாங்கிக்கொண்டு சென்றவர் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.
இதையடுத்து மாமியார் தனது குழந்தையை தூக்கி சென்றவர் நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு வரவில்லை என்று தைனீஸ்மேரி தனது கணவரிடம் தெரிவித்தார். இதன்பின்னர் இருவரும் குழந்தையை தேடி சென்றனர். அப்போது ராஜேஸ்வரி பக்கத்து தெருவில் குழந்தையோடு அமர்ந்திருந்தேன்.
அப்போது காரில் வந்த யாரோ சிலர் குழந்தையை பறித்துச் சென்றுவிட்டனர் என்று கவலையுடன் கூறியுள்ளார். இதுகுறித்து தைனிஸ்மேரி காரைக்குடி வடக்கு போலீசில் புகார் செய்தார்.
இந்த புகாரின்பேரில் வடக்கு போலீசார் ராஜேஸ்வரியிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் ராஜேஸ்வரி தஞ்சையில் வசிக்கும் தனது தோழி பாத்திமா என்பவரிடம் குழந்தையை கொடுத்து வைத்திருப்பது தெரியவந்தது. அதையொட்டி இன்ஸ்பெக்டர் சுந்தரமகாலிங்கம், சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ் ஆகியோர் தொடர் விசாரணை நடத்தி குழந்தையை மீட்டனர்.
இது தொடர்பாக அவரது மாமியார் ராஜேஸ்வரியிடம், இனிமேல் இது போன்ற சம்பவங்கள் நடந்ததால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.
Next Story






