என் மலர்tooltip icon

    சிவகங்கை

    காரைக்குடி பகுதியில் சிறுவர்களை பணியில் அமர்த்திய நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி உத்தரவின்பேரில் சிவகங்கை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக் கம்) ராஜ்குமார் தலைமையில் குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் விஜயா, சிவகங்கை, முத்திரை ஆய்வாளர் ராம்மோகன், காரைக்குடி, முத்திரை ஆய்வாளர் கதிரவன், சிவகங்கை, தொழிலாளர் உதவி ஆய்வாளர் பிரியதர்சினி, ஐ.ஆர்,சி.டி.எஸ். தொண்டு நிறுவன இயக்குநர் ஜீவானந்தம், மனிதம் சாரி டபிள் டிரஸ்ட் இயக்குநர் வனராஜன், மாவட்ட குழந்தைகள் நல குழு உறுப் பினர் ரசீந்திர குமார் மாவட்ட குழந்தை கள் பாதுகாப்பு அலகு அலுவலர்கள் மணிமேகலை, முத்துலட்சுமி, அனைவருக்கும் கல்வி இயக்கக வட்டார வளமைய மேற்பார்வையாளர் கண்ணன், தொழிலக பாதுகாப்பு இயக்கக உதவியாளர் ஜெய்சங்கர், சைல்டு லைன் உறுப்பினர்கள் கார்த்திகேயன்,  சரவணன் ஆகியோர் அடங்கிய மாவட்ட குழந்தை தொழிலாளர் முறை தடுப்பு குழு மூலம் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி தாலுகா, புதுவயல் பகுதிகளில் உள்ள கடைநிறுவனங்கள் மற்றும் அரிசி ஆலைகளில் சோதனை நடத்தினர்.  

    இந்த ஆய்வில் 14 வயதிற்குட்பட்ட குழந்தை தொழிலாளர்கள்  கண்டறி யப்படவில்லை. மேலும் 14 வயதிற்கு மேற்பட்ட 18 வயதிற்குட்பட்ட வளரிளம் பருவத்தினரை பணியில் அமர்த்திய 4 கடை நிறுவனங்கள் மற்றும் 1 அரிசி ஆலை ஆகிய 5 நிறுவன உரிமையாளர்கள் மீது குழந்தை மற்றும் வளரிளம் பருவத்தொழிலாளர் சட்டத்தின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    கடந்த 2021-ம் ஆண்டில் சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை மாவட்ட குழந்தை தொழிலாளர் முறை தடுப்பு குழு மூலம் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, 14 வயதிற்குட்பட்ட குழந்தைத் தொழிலாளர்களை பணிக்கமர்த்திய 12 கடை நிறுவன உரிமையாளர்கள் மீது சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர், சிங்கம்புணரி, தேவகோட்டை ஆகிய நீதிமன்றங்களில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  அவற்றில் தேவகோட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் 14 வயதிற் குட்பட்ட குழந்தைத் தொழிலாளியை பணிக்கமர்த்திய கடை நிறுவன உரிமை யாளருக்கு ரூ.20 ஆயிரம் அபராத தொகை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்தில் மற்ற நீதிமன்றங்களில் 11 வழக்குகள் நடைபெற்று வருகிறது.

    மேலும், 14 வயதிற்கு மேல் 18 வயதிற்குட்பட்ட வளரிளம் பருவத்தினரை பணிக்கமர்த்திய 21 கடை நிறுவன உரிமையாளர்கள் மீது மாவட்ட குற்றவியல் நடுவர்  மற்றும் சிவகங்கை மாவட்ட கலெக்டரால் ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.  4 கடை நிறுவன உரிமையாளர்கள் மீது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

    சிவகங்கை மாவட்டத்தில் குழந்தைத் தொழிலாளர் எவரும் பணிபுரிவது கண்டறியப்பட்டால், கீழ்க்கண்ட இணையதள முகவரி, தொலைபேசி எண் மற்றும் கீழ்க்காணும் அலுவலர்களுக்கு தெரிவிககலாம்

    pencil.gov.in  என்ற இணையதளத்திலும், தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந் திட்ட வளாகம், அரசினிப் பட்டி ரோடு, காஞ்சிரங்கால், சிவகங்கை 04575-240521 என்ற முகவரியிலும், இலவச தொலைபேசி எண் 1098-லும் தெரிவிக்கலாம்
    மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி, சிவகங்கை தொழி லாளர் உதவி ஆணையர் ராஜ்குமார் ஆகியோர் தெரிவித்துள்ளார்.
    சிவகங்கை மாவட்டத்தில் பாலியல் வழக்கில் சிக்கிய 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
    சிவகங்கை 

    சிவகங்கை மாவட்டம் எஸ்.வி.மங்கலம் போலீஸ் சரகம், சூடானிபட்டி கிராமத்தில் கடந்த ஆண்டு வீட்டில் இருந்த சிறுமி பாலியல் தொந்தரவு  செய்யப்பட்டதாக  புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக திருப்பத்தூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கணபதி(வயது28),  பிரபு(35) ஆகியோரை கைது செய்தனர். 

    இந்தநிலையில் அவர்களை  குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் அடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரை செய்ததின்பேரில், கலெக்டர் மசூதுதன்ரெட்டி அதற்கான உத்தரவை பிறப்பித்தார். இதனைத்தொடர்ந்து கணபதி, பிரபு ஆகியோர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 

    இது தொடர்பாக  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் கூறுகையில், இது போன்று சிறுமிகளை பாலியல் தொந்தரவு செய்பவர்கள், கல்லூரி பெண்களிடம் தவறாக நடந்து கொள்பவர்கள் ஆகியோர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள்.

    மேலும் இது போன்று புகார்கள் இருப்பின் புகார்தாரர்கள் காவல் நிலையத்திற்கு செல்லாமலே 1098 மற்றும் 181 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார்களை அளிக்கலாம். அவ்வாறு அளிக்கப்படும் புகார்தாரர்கள் ரகசியம் காக்கப்படும் என்றார்.
    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் வியாபாரி உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    தேவகோட்டை:

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை மாந்தோப்பு வீதியைச் சேர்ந்தவர் ராமதாஸ். இவரது மகன் சரவணன் (வயது 45).

    இவர் அங்குள்ள சரஸ்வதி வாசக சாலை தெருவில் மீன்கடை நடத்தி வருகிறார். கடைக்கு தேவையான மீன்களை ராமநாதபுரம் மாவட்டம், தொண்டிக்கு நேரடியாகச் சென்று சரவணன் வாங்கி வருவது வழக்கம்.

    தினமும் ஆம்னி வேனை அவரே ஓட்டிச் சென்று மீன் வாங்கிக் கொண்டு வருவார். இன்று காலை தொண்டி சென்று மீன்களை வாங்கிக் கொண்டு சரவணன் தேவகோட்டை புறப்பட்டார்.

    காலை 9 மணியளவில் திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் புளியால் அருகே வேன் வந்து கொண்டிருந்தது. அப்போது சாணான்வயல் கிராமத்தைச் சேர்ந்த முருகன் (54), ஆறுமுகம் மகன் கண்ணதாசன் (27) ஆகியோர் மோட்டார் சைக்கிளில் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றனர்.

    அப்போது எதிர்பாராத விதமாக மீன்பாரம் ஏற்றி வந்த வேன், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.

    இந்த விபத்தில் வேனை ஓட்டிவந்த சரவணன், மோட்டார்சைக்கிளில் வந்த முருகன் ஆகிய 2பேர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்கள். கண்ணதாசன் படுகாயமடைந்து கிடந்தார். அவர் அங்கிருந்து மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் தேவகோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு ரமேஷ், தாலுகா இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    பலியான சரவணன், முருகன் உடல்களை மீட்டு தேவகோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
    சிவகங்கை மாவட்டத்தில் நெல் அறுவடை எந்திரங்களுக்கு வாடகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:-
     
    சிவகங்கை மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்தில் நெல் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சிவகங்கை மாவட்டத்திற்கு அறுவடை எந்திரங்களின் தேவை அதிகமாக இருப்பதால் மற்ற மாவட்டங்களில் இருந்து அரசு மற்றும் தனியார் நெல் அறுவடை எந்திரங்கள் வரவழைக்கப்பட்டு அறுவடை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

     தனியாருக்கு சொந்தமான நெல் அறுவடை எந்திரங்கள் அதிக வாடகையில் இயக்குவதாக விவசாயிகளிடம் இருந்து கலெக்டரிடம் புகார் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து சக்கர வகை நெல் அறுவடை எந்திரங்களை மணிக்கு ரூ.1600 என்ற வாடகையும், செயின் வகை அறுவடை எந்திரங்களை மணிக்கு ரூ.2,200 என்ற வாடகையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    விவசாயிகளிடம் இருந்து கூடுதலாக வாடகை வசூல் செய்யப் படுவதாக புகார் பெறப்பட்டால் விவசாயிகள் வருவாய் கோட்ட அலுவலர்கள், வட்டாட்சியர்கள், வேளாண்மைப் பொறியியல் துறை மற்றும் வேளாண்மைத் துறை அலுவலர்களிடம் புகார் தெரிவிக்கலாம். 

    வேளாண்மைப் பொறியியல் துறையின் சக்கர வகை நெல் அறுவடை எந்திரங்களை மணிக்கு ரூ.1010- என்ற வாடகையிலும், செயின் வகை அறுவடை எந்திரங்களை மணிக்கு ரூ.1,630/- என்ற வாடகையிலும் விவசாயிகள் வேளாண்மைப் பொறியியல் துறையினை அணுகி பயனடையலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
    தேவகோட்டை பகுதிகளில் பனங்கிழங்கு விற்பனை அதிக அளவில் நடந்து வருகிறது.
    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சுற்றியுள்ள கிராமங்களில் பனை மரங்கள் அதிக அளவில் உள்ளன. கிராமங்களிலிருந்து அதிக அளவில் ஆண்கள் மற்றும் பெண்கள் வேக வைத்து மற்றும் வேக வைக்காத பனங் கிழங்குகளை தேவகோட்டை நகரில் வியாபாரம் செய்து வருகின்றனர். 

    பனங்கிழங்கில் மருத்துவ குணங்கள் உள்ளன. இவை குளிர்ச்சிதன்மை உடையது. மலச்சிக்கலை தீர்க்கக்கூடியது. உடலுக்கு வலு சேர்க்கும்.பனங் கிழங்கில் நார் சத்தும் அதிகம் இருப்பதால், இதை உண்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். 

    பூமியில் இருந்து பனங் கிழங்கை பிரித்தெடுக்கும்போது, விதையில் இருந்து தவின் கிடைக்கும். தவின் சாப்பிட்டால் வயிற்று வலி, ஒற்றை தலைவலி உள்ளிட்ட  நோய்கள் குணமாகும். மேலும்வயிறு, மற்றும், சிறுநீர் பாதிப்பு பிரச்சினை உள்ளவர்கள், பனங்கிழங்கு மாவை உணவில் சேர்த்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும். பனங்கிழங்கை அரைத்து மாவு செய்து அதில் கஞ்சி அல்லது கூழ் செய்து காலையில் சாப்பிட்டு வந்தால், பசி நீங்குவதுடன் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்.

    பனங்கிழங்கை வேக வைத்து சிறு, சிறு துண்டாக நறுக்கி காய வைத்து அதனுடன் கருப்பட்டி சேர்த்து இடித்து மாவாக்கி சாப்பிட்டால், உடலுக்கு தேவையான இரும்பு சத்து கிடைக்கும்.பனங்கிழங்குடன் தேங்காய்ப் பால் சேர்த்து சாப்பிட்டால், உடல் உறுப்புகள் பலம் பெறும். 

    பெண்களின் கர்ப்பப்பை பலம் அடையும். பனங் கிழங்கு வாயு தொல்லை உடையது. இதை தவிர்க்க பனங்கிழங்குடன் பூண்டு, மிளகு, உப்பு சேர்த்து இடித்து மாவாக்கி சாப்பிடலாம். இனிப்பு தேவைப் படுகிறவர்கள் கருப் பட்டி சேர்த்து இடித்து சாப்பிடலாம்.

    பனங்கிழங்கு சாப்பிடுவதால் உடலுக்கு வலு சேர்ப்பதுடன் ஆரோக் கியத்துடன் வாழ வழிவகை செய்கிறது. இதனால் குறிப்பிட்ட பருவ காலத்தில் கிடைக்கும் பனங்கிழங்கை பொதுமக்கள் அதிக அளவில் விரும்பி வாங்கி செல்கின்றனர்.

    பனைமர தொழிலாளி களை ஊக்குவிக்கும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    சிவகங்கை மாவட்டத்தில் பனை மரங்கள் அதிக அளவில் உள்ள போதும் அதை சார்ந்த தொழில் முன்னேற்றம் காண மாவட்ட நிர்வாகம் நட வடிக்கை எடுத்து விவசாயி களின் வாழ்வாதாரத்தை மேலும் உயர்த்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
    போலீஸ்காரருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து சிவகங்கையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணிபுரியும் காவலருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதனால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட பொது இடங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப் படுத்தப்பட்டு வருகிறது.

    சிவகங்கை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது என சுகா தாரத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் பொது மக்கள் விழிப்புணர்வின்றி கூட்டம் கூடுதல், முக கவசம் அணியாமலும் சுற்றி வருகின்றனர்.

    மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணியாற்றும் சைபர் கிரைம் காவலர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணியாற்றும் அனைவருக்கும் பரிசோதனை செய்யப்படுகிறது. மேலும் அலுவலகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
    சிவகங்கையில் இணைய தள சேவை பாதிக்கப்பட்டதால் தபால் நிலைய பணிகள் முடங்கின. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.
    சிவகங்கை

    சிவகங்கையில் செயல்பட்டு வரும் தலைமை தபால் நிலையத்தில் இணைய சேவை பாதிப்பால் பணிகள் முழுவதுமாக பாதிக்கப்பட்டு முடங்கியது. இதனால் அங்கு வரும் வாடிக்கையாளர்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

    மாவட்டத்தின் தலைநகரான சிவகங்கையில் ஆட்சியர் அலுவலகம், காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம், மாவட்ட ஒருங்கினைந்த நீதிமன்றம், 38 துறை சார்ந்த தலைமை அலுவலகம் என பல்வேறு அரசு அலுவலகங்கள் செயல்பட்டுவருகிறது. 

    இந்த அலுவலகங்கள் அனைத்திற்கும் அரசு சார்பில் அனுப்பபடும் முக்கிய தபால்கள் அனைத்தும் சிவகங்கை போஸ் சாலையில் உள்ள தலைமை தபால் நிலையம் மூலமாகவே அனுப்பப்படுகிறது. மேலும் இந்த தபால் நிலையத்தில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வங்கி கணக்குகளும் கையா ளப்படுகிறது. 

    முதியோர் உதவி தொகை, விதவை உதவி தொகை என பல்வேறு பண பரிமாற்றங்களும் நடைபெற்று வருகிறது. தற்சமயம் முழுவதுமாக கணினி மயமாக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த ஒரு வார காலமாகவே இந்த தபால் நிலையத்தில் இணைய சேவை பாதிப்பால் எந்த ஒரு பணிகளும் நடைபெறாமல் முடங்கியுள்ளது. மேலும் பணம் அனுப்ப வரும் வாடிக்கையாளர்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர். 

    மேலும் தபால்களை கையாள்வதிலும் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் தினசரி 5 ஆயிரத்திற்கும் மேலான மக்கள் வந்துசெல்லும் இந்த தபால்நிலையம் தற்சமயம் வாடிக்கையாளர்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்ப1டுகிறது. 

    வரக்கூடிய ஒன்றிரண்டு வாடிக்கையாளர்களும் இணைய சேவை துண்டிப் பால் திரும்ப செல்கின்றனர். எனவே இணைய சேவையை சரி செய்து மீண்டும் இயங்க செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    திருப்பத்தூரில் சாலையில் வாளுடன் திரிந்து மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்திய வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில்  உள்ள தியேட்டர்  அருகில்  கஞ்சா போதையில் முகமது ரியாஸ் (வயது 22), காஜாமைதீன் (20) என்ற சகோதரர்கள் வாளுடன் நடந்து சென்று அந்த பகுதியில் உள்ள கடைகளில் தாக்குதல் நடத்தினர். 

    சாலையில் சென்றவர்களை கையில் வைத்திருந்த வாளை காட்டி மிரட்டினர். இதனால் அந்த பகுதியில் பதற்றம் நிலவியது.  அண்ணன்-தம்பி நடத்திய தாக்குதலில் 2 பேர் காயமடைந்தனர்.  

    இதுகுறித்து தகவல் அறிந்த   போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜானகிராமன், சிவாஜி, காவலர்கள் அய்யனார், குணசேகரன் ஆகியோர் விரட்டி சென்று முகமது ரியாஸ், காஜா மைதீனை மடக்கி பிடித்தனர்.

    அவர்களை திருப்பத்தூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இருவரும் கஞ்சா போதையில் இருந்தது தெரியவந்தது. முகமது ரியாசை பிடிக்கும்போது பீட்டர் என்ற போலீஸ்காரருக்கு கையில் லேசான காயம் ஏற்பட்டது. 

    அய்யனார் என்ற போலீஸ்காரரின் செல்போன் உடைந்து சேதம் அடைந்தது.தொடர்ந்து அண்ணன்-தம்பி  இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
    சிங்கம்புணரி அருகே குடும்ப தகராறில் இளம்பெண் தற்கொலை செய்தார். அவரது உடலை போலீசாருக்கு தெரியாமல் எரிக்க முயன்றனர்.
    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி ஒன்றியம் வடவன்பட்டியை சேர்ந்தவர் அருள்செல்வம். இவர்  5 ஆண்டுகளுக்கு முன்பு கல்லம்பட்டியை சேர்ந்த வைஷ்ணவி (வயது25) என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகன் உள்ளான்.

    அருள்செல்வம் வெளிநாடு சென்ற நிலையில் வைஷ்ணவி தாயார் வீட்டி லேயே இருந்தார்.

    ஒரு மாதத்திற்கு முன் வெளிநாட்டில் இருந்து அருள்செல்வம் திரும்பிய நிலையில் 15 நாட்களுக்கு முன் வைஷ்ணவியை   தாயார் வீட்டில் இருந்து அழைத்து வந்தார். 

    இந்த நிலையில், கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இதில் மனவேதனை அடைந்த வைஷ்ணவி எலி மருந்தை தின்று தற்கொலை செய்து கொண்டார்.

    இதை அறிந்த கிராம மக்கள் உடனடியாக  வைஷ்ணவியின் உடலை மயானத்திற்கு கொண்டு சென்று எரிக்க முயன்றனர். 

    இந்த  தகவல் எஸ்.எஸ்.கோட்டை காவல் நிலையத்திற்கு கிடைத்தது. போலீசார் அங்கு  சென்று   உடலை  கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    இதுகுறித்து  போலீசார் வழக்குப்பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    சிங்கம்புணரி அருகே போலீசார் நடத்திய வாகன சோதனையில் செயின் பறிப்பு கொள்ளையன் சிக்கினான்.
    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி ஒன்றியம் எஸ்.எஸ்.கோட்டை காவல் நிலையம் அருகே உள்ள சோதனைச் சாவடியில் காவல் சார்பு ஆய்வாளர் நடராஜன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அந்த வழியாக வந்த சிங்கம்புணரி வட்டம் எஸ்.புதூர் ஒன்றியம் குளத்துப்பட்டி பகுதியை சேர்ந்த கணேஷ் மகன் பாரதிராஜா (வயது 20) என்பவரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்தனர். 

    அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார்.  காவல் துறையினர் விசா ரணையை தீவிரபடுத்தியபோது பாரதிராஜாவுக்கு கடந்த ஆண்டு மல்லா கோட்டையில் நடந்த   செயின் பறிப்பு சம்பவத்தில் தொடர்பு இருந்தது தெரிய வந்தது.  அவரை எஸ்.எஸ்.கோட்டை போலீசார் கைது செய்து திருப்பத்தூர்  ஜெயிலில் அடைத்தனர்.
    தாய், தந்தை, சகோதரர் மீது கொலை வழக்கு பதிவு செய்ததால் விரக்தியில் இருந்த 2 இளம்பெண்கள் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் காரைக்குடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள கீழே ஊரணியை சேர்ந்தவர் கணேசன். இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செய்தி தொடர்பாளராக உள்ளார்.

    இவரது மனைவி தேன்மொழி. இவர்களுக்கு நிஷாந்த் (21), என்ற மகனும் அஸ்மிதா (23), நிவேதா (20) என்ற 2 மகள்களும் உள்ளனர்.

    நிஷாந்த் தேவகோட்டை பகுதியில் இறைச்சி கடை நடத்தி வருகிறார்.

    கடந்த சில மாதங்களாக அமராவதிபுதூர் சமத்துவபுரத்தை சேர்ந்த குமார் என்ற ராஜ்குமார் (44) என்பவர் நிசாந்தை மிரட்டி பணம் பறித்து வந்துள்ளார்.அவரின் தொந்தரவு அதிகரிக்கவே நிஷாந்த் இதுகுறித்து தனது தந்தையிடம் தெரிவித்துள்ளார்.

    இதையடுத்து கணேசன் மற்றும் அவரது நண்பர் சுந்தரமூர்த்தி ஆகியோர் பணம் பறித்தது தொடர்பாக குமாரை கண்டித்துள்ளனர். இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த கணேசன் குமாரை கத்தியால் குத்தி கொலை செய்தார்.

    இந்த சம்பவம் தொடர்பாக சோமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கணேசன், சுந்தர மூர்த்தியை கைது செய்தனர். தலைமறைவான நிஷாந்தை தேடி வந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கணேசனின் மனைவி தேன்மொழி மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    தாய் தந்தை மீது கொலை வழக்கு பதிவு செய்ததால் விரக்தி அடைந்த மகள்கள் அஸ்மிதா, நிவேதா ஆகியோர் இன்று காலை வீட்டில் வி‌ஷம் குடித்து மயங்கினார். உயிருக்கு போராடிய 2 பேரை உறவினர்கள் மீட்டு காரைக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்கள் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    தாய், தந்தை, சகோதரர் மீது கொலை வழக்கு பதிவு செய்ததால் விரக்தியில் இருந்த 2 இளம்பெண்கள் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் காரைக்குடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதனிடையே 2 பேரும் சிகிச்சை பெற்று வரும் அரசு ஆஸ்பத்திரி முன்பு அவர்களது உறவினர்கள் மற்றும் கட்சியினர் ஏராளமானோர் திரண்டனர். இதையடுத்து பாதுகாப்புக்காக அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.
    காளையார்கோவில் அருகே குண்டும் குழியுமான சாலையால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அதனை சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
    சிவகங்கை


    சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் யூனியனுக்கு உட்பட்ட ராகினிபட்டி கிராமத்தில் குண்டும், குழியுமான சாலை  உள்ளது. ஆபத்து நேரத்தில் உயிர் காக்கும் ஆம்புலன்ஸ் கூட இங்கு வந்து செல்ல முடியாத அளவுக்கு  இந்த ரோடு சேதமடைந்து கிடக்கிறது. 

    இதை சீரமைக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 20 ஆண்டுகளாக இந்த ரோடு குண்டு குழியுமாக உள்ளது. ஆபத்து மற்றும் அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ் இந்த கிராமத்திற்குள் வந்து செல்ல முடியவில்லை. 

    அரசியல் கட்சியினர், அதிகாரிகள் உள்ளிட்டோரிடம் பலமுறை மனுக்கள் அளித்தும் நடவடிக்கை இல்லை.  தொடர்ந்து கலெக்டரிடமும்  மனு கொடுத்துள்ளோம் என்று கிராமமக்கள் தெரிவித்தனர்.

    ×