என் மலர்tooltip icon

    சிவகங்கை

    • மானாமதுரை அருகே நடந்த மக்கள் தொடர்பு முகாமில் தமிழரசி எம்.எல்.ஏ. நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
    • மாங்குளம் ஊராட்சி தலைவர் முருகவள்ளி தேசிங்கு ராஜா வரவேற்றார்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஊராட்சி ஒன்றியம். மாங்குளம் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது. இதில் தலைமை தாங்கி பேசிய மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசி, பொதுமக்களுக்கு பட்டா மாறுதல்களையும், புதிய குடும்ப அட்டை, உதவித்தொகை, வேளாண் விளைபொருட்கள், மக்களை தேடி மருத்துவ பெட்டகங்களை பயனாளிகளுக்கு வழங்கினார். மாங்குளம் ஊராட்சி தலைவர் முருகவள்ளி தேசிங்கு ராஜா வரவேற்றார். ஒன்றியகுழு துணை தலைவர் முத்துசாமி மற்றும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர்-சிறுபான்மை நல அலுவலர், வட்டாட்சியர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • தேவகோட்டை அருகே கோவில் நிலத்தை அபகரிக்க முயன்றதாக ஊராட்சி கிளார்க் மீது புகார் அளிக்கப்பட்டது.
    • நடவடிக்கை எடுக்காவிட்டால் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்துவோம் என்று கிராம மக்கள் தெரிவித்தனர்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே இளங்குடி கிராமத்தில் ஊர் மத்தியில் கிராம தெய்வமாக விளங்கும் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் முளைப்பாரி திருவிழா விமரிசையாக நடைபெறும்.

    இந்த கிராமத்தில் பஞ்சாயத்து கிளர்க்காக இருப்பவர் சித்ரா (வயது40) இவரது வீடு கோவில் அருகே உள்ளது. இவர் தனது வீட்டின் செப்டிக் டேங்க் அமைக்க வேறு பகுதியில் இடமிருந்தும் அங்கு அமைக்காமல் கிராமக் கோவிலுக்கு எதிரில் உள்ள கோவில் நிலத்தில் அமைப்பதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதுதொடர்பாக திருவேம்பத்தூர் போலீஸ் நிலையத்திலும், தேவகோட்டை கோட்டாட்சியரிடம் மனு கொடுத்தனர். அதில், சித்ரா கோவிலுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்து இருப்பதாகவும், சர்சைக்குரிய இடத்தில் சர்வேயர், கிராம நிர்வாக அலுவலர் சர்வே செய்து அந்த இடத்தை நீங்கள் பயன்படுத்தக்கூடாது என்று தெரிவித்திருந்தனர்.இதையும் மீறி அவர் செப்டிக் டேங்க் அமைக்க முயற்சி செய்தார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டிருந்தது.

    இதுதொடர்பாக கிராம மக்கள் கூறும்போது, கோவில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த ஊராட்சி கிளார்க் சித்ரா மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், மாவட்ட கலெக்டரிடம் முறையிட்டு கவன ஈர்ப்பு போராட்டம் நடத்துவோம் என்று தெரி வித்தனர்.

    • இளையான்குடியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்ட கணக்கெடுப்பு முகாம் நடந்தது.
    • இதில் கல்லூரி மாணவிகள் பங்கேற்றனர்.

     மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பகுதியில் உள்ள பேரூராட்சி மற்றும் கிராம பகுதியில் சிவகங்கை கலெக்டர் மதுசூதன்ரெட்டி அறிவுறுத்தலின்படி, இளையான்குடி பேரூராட்சி அலுவலகம், சாகிர் உசேன் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் உன்னத் பாரத் அபியான் இணைந்து மக்கள் குறைதீர்க்கும் கூட்ட கணக்கெடுப்பு முகாமை நடத்தியது. முள்ளியரேந்தல், நெடுங்குளம் மற்றும் கிருஷ்ணாபுரம் ஆகிய ஊராட்சிகளில் இந்த முகாம் நடந்தது. மாணவிகள் வீடு, வீடாக சென்று மக்களின் குறைகளை பதிவு செய்து பேரூராட்சி அலுவலர்களிடம் மனுக்களாக வழங்கினர். இதில் இளையான்குடி பேரூராட்சி அலுவலர்களுடன் இணைந்து கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் அஸ்மத்து பாத்திமா, அப்ரோஸ், சேக் அப்துல்லா மற்றும் உன்னத் பாரத் அபியான் ஒருங்கிணைப்பாளர் சுல்தான் செய்யது இப்ராஹிம், இணை ஒருங்கிணைப்பாளர் ஜெயமுருகன் ஆகியோர் உடன் சென்றனர். இந்த பணியில் ஈடுபட்ட மாணவிகளை கல்லூரி முதல்வர் அப்பாஸ்மந்திரி பாராட்டினார்.

    • சிங்கம்புணரி பேரூராட்சி அலுவலகத்தில் புதிய அலுவலக கட்டிடம் கட்ட இடம் தேர்வு செய்வது குறித்து அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.
    • அதன் அருகிலேயே இடம் கொடுத்து அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பேரூராட்சி அலுவலகத்தில் புதிய அலுவலக கட்டிடம் கட்ட இடம் தேர்வு செய்வது குறித்து அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ.க., கம்யூனிஸ்டு, தே.மு.தி.க., ம.தி.மு.க. உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    பேரூராட்சி தலைவர் அம்பலமுத்து, துணை சேர்மன் இந்தியன் செந்தில் தலைமையில் செயல் அலுவலர் ஜான்முகமது முன்னிலையில் கூட்டம் நடந்தது.

    இதில் பேரூராட்சியின் தற்போதைய கட்டிடம் பழைமையான கட்டிடம் என்பதாலும், அங்கு போதிய இடவசதி இல்லாத கார ணத்தாலும் புதிய கட்டிடம் கட்டுவதற்கான இடம் சீரணி அரங்கம் பகுதியில் தேர்வு செய்யப்படுவதாக பேரூராட்சி தலைவர் தெரிவித்தார்.

    இது சம்பந்தமாக நடைபெற்ற ஆேலாசனை கூட்டத்தில் அனைத்து கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். பின்னர் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

    அ.தி.மு.க. நகர செயலாளர் வாசு பேசும்போது, புதிய பேரூராட்சி கட்டிடத்தை தவிர வர்த்தக பயன்பாட்டிற்காக வேறு எந்த ஒரு கட்டிடமும் கட்டக் கூடாது என்று கேட்டுக் கொண்டார். அதனைத்தொடர்ந்து காங்கிரஸ், பா.ஜ.க., கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சி நிர்வாகி களும் பேசினர்.

    கூட்டத்தில் சிறுவர் பூங்கா அருகே மஞ்சு விரட்டு மணி செய்யும் தொழிலாளர்களை மாற்று இடத்திற்கு மாற்றவேண்டும் என்ற கோரிக்கையை பா.ஜ.க. நிர்வாகி விடுத்தார். அதற்கு தி.மு.க. கவுன்சிலர் மணிசேகரன் கூறும்போது, சிங்கம்புணரி நகருக்கான கோவில் ஊழியம் செய்யும் சிறு தொழில் செய்யும் அவர்களின் வாழ்வா தாரத்தை நசுக்ககூடாது. அவர்களுக்கு அதன் அருகிலேயே இடம் கொடுத்து அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தினார். உடனே பேரூராச்சி தலைவர் அவர்களுக்கு நல்ல இடம் தேர்வு செய்யப்பட்டு வழங்கப்படும் என உறுதி அளித்தார்.

    • சிவகங்கை உழவர் சந்தை அருகே புதிய நூலக கட்டிடத்தை செந்தில்நாதன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
    • சட்டமன்றத்தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 10 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டது.

    சிவகங்கை

    சிவகங்கை சட்டமன்றத்தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 10 லட்சம் மதிப்பில் சிவகங்கை உழவர் சந்தை அருகே புதிய நூலக கட்டிடம் அமைக்கப்பட்டு திறப்பு விழா நடந்தது. இதில் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு நூலக கட்டிடத்தை திறந்து வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜா, நகர்மன்ற தலைவர் துரை ஆனந்த், நகராட்சி பொறியாளர் பாண்டீஸ்வரி, ஒப்பந்ததாரர் முருகன், நகர் மன்ற உறுப்பினர்கள் ராபர்ட், கிருஷ்ணகுமார், தாமு, ராமதாஸ், விஜயக்குமார், தகவல் தொழில்நுட்ப மண்டல இணை செயலாளர் தமிழ்செல்வன், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் செல்வமணி, கோபி, பாசறை மாவட்ட பொருளாளர் சரவணன், வட்டசெயலாளர் அருண்குமார் தங்கவேலு, நகர் மாணவரணி செயலாளர் ராஜபாண்டி மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • சிவகங்கை மாவட்டத்தில் சிறப்பு கல்வி கடன் முகாம் வருகிற 29-ந் தேதி நடக்கிறது.
    • முகாமில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் வங்கியின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு பரிசீலனை செய்து உடனடி கடன் ஆணைகளும் வழங்கப்படும்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் வகையில் சிவகங்கை மாவட்டத்தில் இயங்கிவரும் அனைத்து வங்கிகளின் சார்பில் சிறப்பு கல்வி கடன் முகாம் அனைத்து வட்டாரங்களிலும் வருகிற 29-ந்தேதி (செவ்வாய்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.

    சிவகங்கை, காளையார்கோவில், மானாமதுரை, இளை யான்குடி, திருப்பு வனம், திருப்பத்தூர், தேவ கோட்டை, கல்லல், கண்ணங்குடி, சிங்கம்புணரி, எஸ்.புதூர் வட்டாரத்தை சேர்ந்த மாணவர்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெறும் முகாமிலும், சாக்கோட்டை வட்டாரத்தை சேர்ந்த மாணவர்கள் காரைக்குடி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள கவியரசு கண்ணதாசன் மணிமண்டபத்தில் நடைபெறும் முகாமிலும் பங்கேற்கலாம்.

    விண்ணப்ப நகல், மாணவ-மாணவி மற்றும் பெற்றோரின் 2 புதிய புகைப்படம், வங்கி ஜாயிண்ட் அக்கவுண்ட் பாஸ்புத்தக நகல், இருப்பிட சான்று நகல், வருமான சான்று நகல், ஜாதி சான்று நகல், பான் கார்டு நகல், ஆதார் அட்டை நகல், கல்லூரியிலிருந்து பெறப்பட்ட Bonafide சான்றிதழ் மற்றும் கல்விக்கட்டண விவரம், எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 வகுப்பு மற்றும் இள நிலை பட்டப்படிப்பின் மதிப்பெண் சான்றிதழ்கள், முதல் பட்டதாரியாக இருப்பின் அதற்கான சான்று மற்றும் கலந்தாய்வு மூலமாக பெறப்பட்ட சேர்க்கைக்கான ஆணை ஆகிய ஆவணங்களுடன் கலந்து கொள்ள வேண்டும்.

    கல்விக்கடன் பெற விரும்பும் மாணவர்கள் www.vidyalakshmi.co.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை தேவைப்படும் ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்து முகாம் நடைபெறும் நாளன்று விண்ணப்பத்தின் நகல் மற்றும் குறிப்பிட்ட ஆவணங்களுடன் கலந்து கொள்ளலாம். முகாமில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் வங்கியின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு பரிசீலனை செய்து உடனடி கடன் ஆணைகளும் வழங்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மானாமதுரை அருகே 20 ஆண்டுகளுக்கு பிறகு 4 கண்மாய்களுக்கு தண்ணீர் செல்கிறது.
    • தண்ணீர் செல்லும் கால்வாய் முகப்பு மேடாகியதால் குறிப்பிட்ட கண்மாய்களுக்கு தண்ணீர் செல்ல இயலாதநிலை இருந்து வருகிறது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை 20 ஆண்டுகளாக தண்ணீர் செல்லாத கண்மாய்களுக்கு வைகை ஆற்றில் இருந்து பொதுப்பணித்துறை அதிகாரிகளின் தொடர் முயற்சியின் காரணமாக 4 கண்மாய்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

    வைகை ஆற்றில் கடந்த 6 மாத காலமாக தண்ணீர் நிற்காமல் சென்று கொண்டிருப்பது வரலாற்று உண்மையாகும். கடந்த கால வரலாற்று நிகழ்வுகளில் இது போன்று வைகை ஆற்றில் தண்ணீர் சென்றது கிடையாது என்று பெரிய வர்கள் பெருமிதத்தோடு கூறுகிறார்கள்.

    தண்ணீர் செல்லும் கால்வாய் முகப்பு மேடா கியதால் குறிப்பிட்ட கண்மாய்களுக்கு தண்ணீர் செல்ல இயலாத நிலை இருந்து வருகிறது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டியிடம் சங்க பொறுப்பாளர் காசிராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் தண்டியப்பன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் வீரபாண்டி, செயலாளர் மோகன், மானாமதுரை ஒன்றிய தலைவர் பரமாத்மா, செயலாளர் முத்துராமலிங்கம், கீழமேல்குடி வெள்ளமுத்து, கீழமேல்குடி ஊராட்சி மன்றததலைவர் தர்மராமு மற்றும் கிராம பெரியவர்கள் வைகை ஆற்றில் வெள்ளமாக தண்ணீர் சென்று கொண்டிருக்கும் போது கீழ்மேல் குடி கண்மாய், மானாமதுரை கண்மாய், கால்பிரவு கண்மாய், கிருங்காகோட்டை கண்மாய் ஆகிய 4 கண்மாய்களுக்கும் தண்ணீர் செல்லாத அவல நிலையை எடுத்து கூறி இந்த கண்மாய்களுக்கு தண்ணீர் விட நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து கலெக்டரின் உத்தரவின் பேரில் பொதுப்பணித்துறை அதிகாரிகளின் முயற்சியால் தற்போது அதற்கான வழிவகை ஏற்பட்டுள்ளது. வைகை ஆற்றில் இருந்து ஒரு கால்வாய் செல்கிறது. தூர்ந்து போயுள்ள அந்த கால்வாயை சீரமைத்து அதன் வழியாக தற்போது தண்ணீர் சென்று கொண்டி ருக்கிறது.

    இதற்காக பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கும், கலெக்டருக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினருக்கும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் காசிராஜன் நன்றி தெரிவித்தார்.

    • தேவகோட்டை அருகே பூட்டியிருந்த வீட்டில் கொள்ளையர்கள் புகுந்தனர்.
    • நகை-பணம் கிடைக்காததால் டி.வி.யை திருடிச்சென்றனர்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ராம்நகர் பகுதியில் வசிப்பவர் சூசை அருள். இவரது மனைவி அன்னம்மாள் மேரி (வயது 65). இவரது வீடு ராம்நகர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி எதிர்ப்புறம் உள்ளது.

    இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணம் நடைபெற்று ஒருவர் அமெரிக்காவிலும், மற்றொருவர் கோவையிலும் வசித்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கணவரை இழந்த அன்னம்மாள் மேரி தனியாக வசித்து வருகிறார்.

    அவர் கடந்த 15 நாட்களுக்கு முன்பு கோவையில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்று விட்டார். அவர் இன்று காலை 4 மணியளவில் தனது வீட்டிற்கு திரும்பி வந்தார். அப்போது அவரது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு கொள்ளை நடந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    இதுபற்றி அறிந்த அக்கம் பக்கத்தினர் தேவகோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் டி.எஸ்.பி. கணேஷ்குமார், இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதில் வீட்டில் இருந்த ரூ. 30 ஆயிரம் மதிப்புள்ள எல்.சி.டி.டி.வி. திருடப்பட்டு இருந்தது.

    மேலும் வீட்டில் உட்புறம் உள்ள பீரோக்கள் உடைக்கப்பட்டு பொருள்கள் சிதறி கிடந்தன. ஆனால் அதில் நகைகள்-பணம் எதுவும் வைக்கப்படாததால் கொள்ளையர்கள் டி.வி.யை மட்டும் திருடிச் சென்றுள்ளனர்.

    சிவகங்கையில் இருந்து கைரேகை நிபுணர் குழுவினர் வரவழைக்கப்பட்டு வீட்டில் பதிவாகியிருந்த கொள்ளையர்களின் கைரேககைளை பதிவு செய்தனர். மேலும் அந்தப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சி பதிவுகளை போலீசார் கைப்பற்றி பார்வையிட்டு வருகின்றனர்.

    ராம்நகர் பகுதிகளில் நடைபெற்று வரும் தொடர் திருட்டு சம்பவத்தால் அந்தப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர். தேவகோட்டை நகரில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது. மேலும் பொதுமக்கள் தாமாக முன்வந்து அவரவர் பகுதிகளில் கண்காணிப்பு காமிராக்களை பொருத்த வேண்டும் என்று டி.எஸ்.பி. கணேஷ்குமார் கேட்டுக் கொண்டார்.

    • சிவகங்கையில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
    • பல்வேறு துறைகளின் சார்பில் 69 பயனாளிகளுக்கு ரூ.40.84 லட்சம் மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடந்தது.

    இலவச வீட்டுமனைப் பட்டா, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித் தொகை, மாவட்ட ஊனமுற்றோர் மற்றும் மறு டிவாழ்வுத்துறை உதவித் தொகை, மாற்றுத்திறனா ளிகளுக்கான உபக ரணங்கள், புதிய மின்னணு குடும்ப அட்டை போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பொது மக்களிடம் இருந்து 376 மனுக்கள் பெறப்பட்டன.

    தகுதியுடைய மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தி, விரைந்து நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

    இதில் மாவட்ட பிற்படு த்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, சமூக பாதுகாப்பு திட்டம், மாவட்ட தொழில் மையம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் 69 பயனாளிகளுக்கு ரூ.40.84 லட்சம் மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் மதுசூதன் ரெட்டி வழங்கினார். மேலும், தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் ஜவகர்லால் நேரு பிறந்த நாளையொட்டி மாவட்ட அளவில நடத்தப்பட்ட பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற 5 பள்ளி மாணவிகளுக்கும், 3 கல்லூரி மாணவிகளுக்கும் பரிசுத்தொகை மற்றும் பாராட்டு

    சான்றிதழ்களையும் கலெக்டர் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், தமிழ்வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் நாகராசன், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை கலெக்டர் காமாட்சி, மாவட்ட வழங்கல் அலுவலர் ரத்தினவேல், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் தனலட்சுமி, மாவட்ட மாற்றுத்தி றனாளிகள் நலத்துறை அலுவலர் கதிர்வேலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சிவகங்கையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் 30-ந் தேதி நடக்கிறது.
    • சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் இந்த சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:-

    சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திற னாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில், அவா்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட அளவில் நடைபெற உள்ளது.

    வருகிற 30-ந் தேதி(புதன்கிழமை) காலை 10 மணியளவில் சிவகங்கை மாவட்ட கலெக்டர் தலைமையில் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்ள வளா்ச்சி மன்ற கூட்ட அரங்கில் (தரைதளத்தில்) மாற்றுத்திறனா ளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.

    இதில் மாற்றுத்திற னாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்குதல், UDID பதிவு செய்தல், ஆதார் அட்டை பதிவு, முதலமை ச்சாின் விரிவான மருத்துவ க்காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு, பிறதுறைகளில் செயல்படுத்தப்படும் திட்ட ங்களுக்கான கோரிக்கை மனுக்கள் பெறுதல், உதவி உபகரணங்கள் வழங்கு வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளுதல், வங்கி கடனுதவி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுதல், வேலைவாய்ப்பு பயிற்சி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுதல், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் பராமரிப்பு உதவித்தொகை வழ ங்க நடவடிக்கை மேற்கொள்ளுதல், வருவாய்துறையின் மூலம் உதவித்தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுதல், 18-வயது குறைவுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு வருவாய்துறையின் மூலம் உதவித்தொகை வழங்க நடவடிக்கை ஆகியவை மேற்கொள்ளப்படும்.

    மேற்குறிப்பிட்ட உதவிகளைப் பெறுவதற்கு ஒவ்வொரு பதிவிற்கும் தனித்தனியாக பாஸ்போர்்ட் அளவு புகைப்படம் -4, குடும்ப அட்டை நகல் (அல்லது) ஆதார் அட்டை நகல் (அல்லது) இருப்பிடச்சான்று ஆகிய வற்றுடன் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் இந்த சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மானாமதுரையில் பிரதோஷ வழிபாடு நடந்தது.
    • கார்த்திகை சோமவார பிரதோஷ பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம். மானாமதுரை வைகைஆற்று கரையில் உள்ள ஆனந்த வல்லி-சோமநாதர் கோவிலில் கார்த்திகை மாத முதல் சோமவாரத்தை முன்னிட்டு சிறப்பு யாகம், சங்காபிஷேகம் நடந்தது. மாலையில் நந்தி, சோமநாதருக்கு பிரதோஷ காலத்தில் 16 வகை அபிஷேகம் செய்து சிறப்பு தீபாராதனையும், வெள்ளி ரிஷப வாகனத்தில் கோவில் பிரகாரத்தில் வலம் வரும் நிகழ்ச்சியும் நடந்தது.

    இதேபோல் சிருங்கேரி சங்கரமடம் சந்திரமவுலீசுவரர், நாகலிங்கம் நகர் அண்ணாமலையார், ெரெயில் நிலையம் எதிரில் உள்ள பூரணசக்கரவிநாயகர் கோவிலில் உள்ள காசிவிசுவநாதர், இடைக்காட்டூர் மணிகண்டேசுவரர், வேம்பத்தூர் கைலாசநாதர், திருப்புவனம் புஸ்பவனேசுவரர், திருப்பாசேத்தி அழகேசுவரர், மேலெநெட்டூர் சொர்ணவாரீசுவரர், குறிச்சி வழிவிடு பெரிய நாச்சிகோவிலில் உள்ள காசியில் இருந்து கொண்டு வந்து பிரதிஷ்டை செய்த காசிவிசுவநாதர் ஆகிய கோவில்களில் கார்த்திகை சோமவார பிரதோஷ பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

    • திருப்பத்தூரில் ஓ.பி.எஸ். அணி நிர்வாகிகள் பேரணி நடந்தது.
    • அண்ணா சிலைக்கும், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களுக்கும் நிர்வாகிகள் மாலை அணிவித்தனர்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் நகரில் அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணி சார்பில் புதிய மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர பேரூர் மற்றும் சார்பு அணிக்கு நியமிக்கப்பட்டுள்ள புதிய நிர்வாகிகளை அறிமுகப்படுத்தும் வகையில் பேரணி நடந்தது. காந்தி சிலையில் இருந்து நடை பயணமாக புறப்பட்டு அண்ணா சாலை வரை ஊர்வலம் சென்றது. அண்ணா சிலைக்கும், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களுக்கும் நிர்வாகிகள் மாலை அணிவித்தனர். இதில் கொள்கை பரப்புச் செயலாளர் மருது அழகுராஜ் பங்கேற்று பேசினார்.

    மாவட்டச் செயலாளர் கே.ஆர். அசோகன், தொகுதி செயலாளர் பத்மநாபன், பொதுக்குழு உறுப்பினர் செந்தில்வேல், மாவட்ட துணை செயலாளர் தமிழரசி, ஒன்றிய செயலாளர்கள் சிவசுப்பிரமணியன், எஸ்.வி. நாகராஜன், தேவேந்திரன், கணேசன், உதயகுமார், விஜயராஜ், சித்திரை செல்வம், செந்தில்குமார், கண்ணன், முத்துக்குமார், முருகேசன், சுப்பிரமணியன், பாண்டி, பேரூர் செயலாளர்கள் ஜெயராமன், கருப்பையா, ராஜு, ராமகிருஷ்ணன், திருஞானம், ஆனந்தராஜ், விஜயமணி, பவானி, சரவணன், மோகன், கணேசன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை திருப்பத்தூர் நகர செயலாளர் எம்.முருகேசன் செய்திருந்தார்.

    ×