என் மலர்tooltip icon

    சேலம்

    • ஏற்காட்டில் கனமழை பெய்ததால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
    • ஏற்காட்டிற்கு செல்லும் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

    பெஞ்சல் புயல் வட தமிழ்நாட்டையே வெள்ளக்காடாக்கியுள்ளது. புதுச்சேரி, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரியில் வரலாறு காணாத அளவிற்கு கனமழை பெய்ததால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    குறிப்பாக சேலம் மாவட்டத்தில் உள்ள பிரபல சுற்றுலா தளமான ஏற்காட்டில் கனமழை பெய்ததால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்காட்டிற்கு செல்லும் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில், சேலத்தில் இருந்து ஏற்காடு செல்லும் முக்கிய சாலைகளில் நிலச்சரிவு ஏற்பட்டு வெள்ளநீர் அடித்து செல்லப்படும் வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • வினாடிக்கு 1568 கன அடி தண்ணீர் வசிஷ்டநதியில் திறக்கப்பட்டுள்ளது.
    • கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே புழுதிக்குட்டை கிராமத்தில் வசிஷ்டநதிதியின் குறுக்கே, 67.25 அடி உயரத்தில், 267 மில்லியன் கனஅடி தண்ணீர் தேங்கும் வகையில் 263.86 ஏக்கர் பரப்பளவில் ஆனைமடுவு அணை அமைந்துள்ளது. இந்த அணையால் சுற்றுப்புற கிராமங்களில் 5,011 ஏக்கர் பாசன வசதி பெறுகின்றன.

    பேளூர், குறிச்சி, கொட்டவாடி, அத்தனூர்பட்டி ஏரிகளும், 20-க்கும் மேற்பட்ட ஆற்றுப்படுகை கிராமங்களும், நிலத்தடி நீர் ஆதாரமும், பாசன வசதியும் பெறுகின்றன.

    செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதத்தில் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான சித்தேரி, பெரியகுட்டி மடுவு, சந்தமலை, அருநூற்றுமலை பகுதியில் பெய்த பருவ மழையால், அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதிகளில் உள்ள நீரோடைகளில் நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து கடந்த ஆக்டோபர் மாதம் 23-ந் தேதி அணையின் நீர்மட்டம் 60 அடியாக உயர்ந்து, 197 மில்லியன் கன அடி தண்ணீர் தேங்கியது.


    இந்த நிலையில், எதிர்பாராத விதமாக அக்டோபர் மாதம் 24-ந் தேதி மாலை முதல் இரவு வரை தொடர்ந்து 4 மணி நேரம் 15 சென்டிமீட்டர் மழை கொட்டித் தீர்த்தது. இதனால் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்ந்தது.

    26-ந்தேதி அதிகாலை அணையின் நீர்மட்டம் 65.29 அடியை எட்டி 3 ஆண்டுகளுக்கு பின் நிரம்பியது. அணையில் 240 மில்லியன் கன அடி தண்ணீர் தேங்கியது. இதனையடுத்து, அணையில் இருந்து வசிஷ்டநதியில் வினாடிக்கு 85 கன அடி தண்ணீர் உபரி நீராக திறக்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில் புயல் காரணமாக நேற்று மாலை முதல், இன்று அதிகாலை விடிய விடிய இடைவிடாது கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் அணைக்கு நீர்வரத்து பல மடங்கு அதிகரித்துள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 1568 கன அடி தண்ணீர் வசிஷ்டநதியில் திறக்கப்பட்டுள்ளது.

    இதனால் 3 ஆண்டுகளுக்கு பிறகு பெருமளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே வசிஷ்ட நதி ஆற்றுப்படுகை கரையோர கிராம மக்களுக்கு பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறை வாயிலாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

    • காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
    • நீர்வரத்து வினாடிக்கு 5,195 கன அடியாக அதிகரித்துள்ளது.

    மேட்டூர்:

    கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி உள்ளிட்ட அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறந்து விடப்படும் உபரி தண்ணீர் மற்றும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை ஆகியவற்றை பொறுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாகவும் உள்ளது. தற்போது காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

    இதனால் இன்று காலை மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 4,528 கன அடியில் இருந்து 5,195 கன அடியாக அதிகரித்துள்ளது. நீர்மட்டம் 110.58 அடியாகவும், நீர் இருப்பு 79.23 டி.எம்.சி.யாகவும் உள்ளது.

    தமிழக காவிரி டெல்டா பாசனத்துக்கு அணையிலிருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 1,000 கன அடியும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 500 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டு வருகிறது.

    • மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 110.37 அடியாக இருந்தது.
    • தற்போது அணையில் 78.93 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    மேட்டூர்:

    மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 110.37 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு நேற்று 3,976 கனஅடிதண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அது இன்று 4,528 கனஅடியாக அதிகரித்து காணப்படுகிறது.

    அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 1000 கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 500 கனஅடி தண்ணீரும் திறக்கப்பட்டு வருகிறது.

    தற்போது அணையில் 78.93 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    • வணிக கட்டிடங்கள் வாடகை மீது 18 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி இன்று முதல் அமல்.
    • வணிகர்களுக்கு மேலும் பெரிய சுமை ஏற்படும்.

    சேலம்:

    மத்திய அரசின் ஜி.எஸ்.டி. கவுன்சில் நாடு முழுவதும் உள்ள வணிக நிறுவனங்களின் கட்டிடங்கள் வாடகை மீது 18 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதித்துள்ளது. இந்த வரி உயர்வு இன்று முதல் அமுலுக்கு வருகிறது. இதனால் பதிவு பெற்ற சிறிய வணிக நிறுவனங்கள், கடை உரிமையாளர்கள் பாதிக்கப்படுவார்கள்.

    இதனால் வாடகை மீதான 18 சதவீத வரி விதிப்பை திரும்ப பெற வேண்டும் என்று வணிகர்கள் மத்திய அரசை வலியுறுத்தினர். ஆனால் இந்த வரி விதிப்பை மத்திய அரசு திரும்ப பெற வில்லை.

    மேலும் மாநில அரசு தொடர்ந்து உயர்த்தி வரும் சொத்துவரி, குப்பை வரி, பாதாள சாக்கடை வரி மற்றும் மின் கட்டண உயர்வால் கடும் அவதிப்படுவதாகவும், அதனை திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று தமிழகம் முழுவதும் உள்ள வணிக நிறுவனங்கள், கடைகளை அடைத்து போராட்டம் நடத்தப்போவதாக வியாபாரிகள் அறிவித்து இருந்தனர்.


    அதன் படி சேலம் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கடைகளை அடைத்து வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக சேலம் பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலைய பகுதிகளில் உள்ள ஜவுளி கடைகள், நகை கடைகள், செவ்வாய்ப்பேட்டையில் உள்ள பாத்திர கடைகள், இரும்பு கடைகள், பெயிண்ட் கடைகள், மளிகை கடைகள், மரக்கடைகள், அரிசி கடைகள் உள்பட பல்வேறு கடைகள் முற்றிலும் அடைக்கப்பட்டிருந்தன.

    சேலம் மாநகர் மற்றும் புறநகரில் உள்ள ஜவ்வரிசி ஆலைகள், அரிசி ஆலைகள், பருப்பு மில்கள் மூடப்பட்டிருந்தன. சேலம் லீ பஜாரில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.

    இதனால் சேலம் கடை வீதி, லீ பஜார் மற்றும் செவ்வாய்ப்பேட்டை பகுதிகளில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

    இதே போல சேலம் புறநகர் பகுதிகளான ஆத்தூர், வாழப்பாடி, ஓமலூர், மேட்டூர், எடப்பாடி, சங்ககிரி உள்பட பல பகுதிகளிலும் உள்ள நகை கடைகள், ஜவுளி கடைகள், இரும்பு கடைகள், சிமெண்ட் கடைகள், பெயிண்ட் கடைகள், மரக்கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.


    இதனால் மாவட்டம் முழுவதும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பல்வேறு கடைகள், அரிசி, பருப்பு, ஜவ்வரிசி ஆலைகள் மூடப்பட்டன. வணிகர்களின் இந்த போராட்டத்தால் ரூ.500 கோடிக்கும் அதிகமாக வர்த்தகம் பாதிக்கப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    இது குறித்து வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் கூறுகையில், வாடகை மீதான ஜி.எஸ்.டி. வரியால் வணிகர்களுக்கு மேலும் பெரிய சுமை ஏற்படும். இதனால் இந்த ஜி.எஸ்.டி. வரி விதிப்பை மத்திய அரசு உடனே திரும்பி பெற வேண்டும், மேலும் மாநகராட்சி பல மடங்கு உயர்த்தியுள்ள சொத்து வரி, குப்பை வரி மற்றும் மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.


    போடி

    போடி வர்த்தக சங்கம் சார்பாக முழு கடையடைப்பு போராட்டம் நடைபெறுவதாக அறிவித்துள்ள நிலையில் மத்திய, மாநில அரசுகள் விதித்துள்ள வணிக வளாக பயன்பாட்டு கட்டிடத்திற்கான வாடகையில் 18 சதவீதம் உயர்த்தி நிறைவேற்றிய தீர்மானத்தை ரத்து செய்யக் கோரியும், வணிகர்களை நேரடியாகவும் பொதுமக்களை மறைமுகமாகவும் பாதிக்கும் இந்த ஜி.எஸ்.டி. வரி உயர்வு உத்தரவை திரும்ப பெற வலியுறுத்தியும் முழு கடை அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

    போடி வர்த்தக சங்கத்தில் சார்புடைய தினசரி காய்கறி மார்க்கெட் கடைகள், உணவு விடுதிகள், ஜவுளிக் கடைகள், பலசரக்கு கடைகள், தேநீர் விடுதிகள் மற்றும் பல்பொருள் அங்காடிகள் அனைத்தும் கடையடைப்பில் ஈடுபட்டுள்ளன.


    விருதுநகர்

    தமிழகத்தின் வணிக நகரமான விருதுநகரில் இன்று மத்திய, மாநில அரசுகள் இணைந்து வணிக பயன்பாட்டிற்குள்ள அனைத்து கட்டிடங்களுக்கும் வாடகையில் 18 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிப்பை கண்டித்து கடையடைப்பு போராட்டம் நடந்தது.

    விருதுநகரில் மெயின் பஜார் வியாபாரிகள் சங்கம் சார்பில் தமிழ்நாடு வணிக சங்கங்களின் பேரவை, மெயின் பஜார் வியாபாரிகள் சங்கம், விருதுநகர் வியாபார தொழில்துறை சங்கம் உள்ளிட்ட 32 சங்கங்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டன.

    நகரின் மெயின் பஜார், பழைய பேருந்து நிலையம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகள், மதுரை ரோடு, தெப்பம் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு பஜார் பகுதி கடைகள், முனி சிபல் ஆபீஸ் ரோடு, நகைக் கடை பஜார் கடைகள் உள்பட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன.

    ஸ்ரீவில்லிபுத்தூரில் இன்று பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. பஸ் நிலைய பகுதி, பென்னிங்டன் காய்கறி மார்க்கெட், சின்னக்கடை வீதி, நேதாஜி ரோடு, நகைக்கடைகள் அதிகம் நிறைந்துள்ள சின்னக்கடை பஜார், 4 ரதவீதிகள், ராமகிருஷ்ணாபு ரம், தேர வீதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சுமார் 1,200-க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டிருந்தன.

    ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள ஏராள மான கிராமங்களின் காய்கறி தேவையை பூர்த்தி செய்யும் பென்னிங்டன் காய்கறி மார்க்கெட் மூடப் பட்டதால் சிறிய கடை வியா பாரிகள் மற்றும் பொதுமக் கள் பெரிதும் அவதிப்பட்ட னர்.

    சிவகாசியில் இன்று வர்த்தக சங்கம் சார்பில் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. நகரில் உள்ள 4 ரதவீதிகளில் பெரிய நகைக்கடைகள், ஓட்டல்கள் தவிர மற்ற அனைத்து கடை களும் அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் பொது மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க பெரிதும் சிரமப்பட்டனர்.


    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி பகுதியில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தது. வாடகை மீதான ஜி.எஸ்.டி. வரியை நீக்க மாநில அரசை வலியுறுத்தி உசிலம்பட்டி வட்டார வர்த்தகர்கள் சங்கம் சார்பாக போராட்டம் நடைபெற்றது.

    உசிலம்பட்டி நகராட்சி பகுதியில் உள்ள ஜவுளிக் கடைகள், நகைக்கடைகள், பேரையூர் ரோடு, மதுரை ரோடு, தேனி ரோடு, வத்தலக்குண்டு ரோடு ஆகிய பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. தினசரி காய்கறி வியாபாரிகள் சங்கத்தினரும் கடை களை அடைத்து போராட்டம் நடத்தினர்.

    சோழவந்தானில் உள்ள 90 சதவீத கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது.

    மதுரை மாவட்டம் திரு மங்கலம் நகர் பகுதியில் தமிழ்நாடு உணவுப் பொருள் வியாபாரி சங்க கடைய டைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இரண்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் இன்று அடைக்கப்பட்டன.

    நகரில் முக்கிய வியாபார தளங்களான சின்ன கடைவீதி, பெரிய கடை வீதி, உசிலம்பட்டி ரோடு, விருதுநகர் ரோடு, மதுரை ரோடு, திருமங்கலம் பேருந்து நிலையம் வணிக வளாகம் உள்ளிட்ட பல் வேறு பகுதிகளிலும் சிறு கடைகள், வணிக நிறுவனங்கள், உணவுகள் என அனைத்து கடைகளும் காலை 6 மணி முதல் அடைக்கப்பட்டு கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. 

    • மேட்டூர் அணைக்கு நீர்வரத்து இன்று காலை வினாடிக்கு 5,110 கன அடியிலிருந்து 3,976 கன அடியாக சரிந்தது.
    • 8 மணி நிலவரப்படி அணை நீர்மட்டம் நீர்மட்டம் 110.20 அடியாக உயர்ந்தது.

    மேட்டூர்:

    கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்துள்ளது. இதனால் கர்நாடக மாநிலத்தில் உள்ள கே.ஆர்.எஸ். அணை மற்றும் கபினி அணைகளில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது

    இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து இன்று காலை வினாடிக்கு 5,110 கன அடியிலிருந்து 3,976 கன அடியாக சரிந்தது. இன்று காலை 8 மணி நிலவரப்படி அணை நீர்மட்டம் நீர்மட்டம் 110.20 அடியாக உயர்ந்தது. நீர் இருப்பு 78.69 டி.எம்.சி.யாக உள்ளது.

    மேட்டூர் அணையிலிருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 1,000 கன அடியும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 600 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது.

    • அணைக்கு நேற்று வினாடிக்கு 4,427 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் இன்று அது 5110 கனஅடியாக அதிகரித்து காணப்பட்டது.
    • தற்போது அணையில் 78.50 டி.எம்.சி.தண்ணீர் இருப்பு உள்ளது.

    சேலம்:

    தமிழக, கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக கடந்த 2 வாரத்துக்கும் மேலாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தும், குறைந்தும் வந்து கொண்டு இருக்கிறது.

    இதே போல் நீர்வரத்தை விட குறைந்த அளவிலேயே பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.

    இந்த நிலையில் அணைக்கு நேற்று வினாடிக்கு 4,427 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் இன்று அது 5110 கனஅடியாக அதிகரித்து காணப்பட்டது. இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டமும் 110.07 அடியாக உயர்ந்தது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 1000 கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 600 கனஅடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 78.50 டி.எம்.சி.தண்ணீர் இருப்பு உள்ளது. அணையில் 110 அடிக்கு தண்ணீர் உயர்ந்து காணப்படுவதால் அணை கடல் போல் காட்சியளிக்கிறது.

    • ஏற்காட்டில் வழக்கத்தை விட கடும் குளிர் நிலவி வருகிறது.
    • வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.

    சேலம்:

    தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. தொடர்ந்து நேற்று டெல்டா மாவட்டங்களில் கன மழை பெய்தது.அதன் தொடர்ச்சியாக சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று காலை முதலே பனி மூட்டம் நிலவியதுடன் சாரல் மழையும் பெய்தது.

    குறிப்பாக ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக பனிப்பொழிவும் அதிகமாக உள்ளதால் ஏற்காட்டில் வழக்கத்தை விட கடும் குளிர் நிலவி வருகிறது.


    ஏற்காட்டில் நேற்று பகல் தொடங்கிய மழை இரவு முழுவதும் சாரல் மழையாக நீடித்த நிலையில் இன்று காலையும் சாரல் மழையாக பெய்தது. ஏற்காடு பஸ் நிலையம் , ரவுண்டானா, அண்ணா பூங்கா, படகு இல்லம் உள்பட பல்வேறு பகுதிகளில் நேற்று மதியம் முதலே பனி மூட்டத்துடன் சாரல் மழை பெய்து வருகிறது.

    இரவு முழுவதும் விடிய விடிய சாரல் மழை பெய்த நிலையில் பனி பொழிவும் அதிக அளவில் உள்ளதால் கடும் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது. இதனால் இன்று காலை பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்வோர் கடும் அவதி அடைந்தனர்.

    ஏற்காட்டில் நிலவி வரும் பனிமூட்டம் மற்றும் சாரல் மழை காரணமாக அதிக குளிர் வாட்டி வதைக்கிறது. மேலும் ஏற்காட்டில் பனி பொழிவு அதிக அளவில் உள்ளதால் அருகில் நிற்பவர்கள் கூட கண்ணுக்கு தெரியாத நிலை உள்ளது.

    மேலும் மலைப்பாதை யில் நிலவிவரும் பனிமூட்டம் மற்றும் சாரல் மழை காரணமாக வாகன ங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டவாறு ஊர்ந்த படி சென்று வருகின்றன. இதனால் ஏற்காட்டில் வசிக்கும் பொது மக்களின் இயல்பு வாாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.


    குளிரின் தாக்கம் அதிகமாக இருப்பதால் காபி தோட்ட தொழிலாளர்கள் வீட்டில் முடங்கி உள்ளதால் உள்ளூர் வாசிகளின் வருமானமும் பாதிக்கப்ப ட்டுள்ளது. குறிப்பாக காப்பி தோட்ட பணிகளும் முடங்கி உள்ளது. தொடர் மழை மற்றும் பனியால் மிளகு கொடிகள் அழுகும் நிலையில் உள்ளது.

    சேலம் மாநகரில் நேற்று மாலை பனி மூட்டத்துடன் சாரல் மழை பெய்தது. இதனால் சற்று தூரத்தில் எதிரே வரும் வாகனங்கள் கூட சரியாக தெரியாத நிலை இருந்தது. இதனால் 4 வழிச்சாலைகளில் முகப்பு விளக்கை எரியவிட்டபடியே வாகனங்களும் சென்றன. மேலும் விட்டு விட்டு சாரல் மழை பெய்ததுடன் கடும் குளிர் நிலவியது.

    குறிப்பாக பாதசாரிகள், வாகன ஓட்டிகள் குளிரில் நடுங்கிய படி சென்றனர். மேலும் பள்ளி, கல்லூரிக்கு சென்ற மாணவ-மாணவிகள், அலுவலகங்களுக்கு சென்று விட்டு நேற்று மாலை வீட்டிற்கு திரும்பியவர்கள் சிறு தூரலுடன் கடும் குளிர் நிலவியதால் கடும் அவதி அடைந்தனர்.

    இதே போல சேலம் மாநகரில் இன்று காலையும் பனி மூட்டத்துடன் கடும் குளிர் நிலவி வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.

    நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்று அதிகாலை பனிப்பொழிவு இருந்தது. திருச்செங்கோடு, கொல்லிமலை மலை பகுதியில் பனிப்பொழிவுன் தாக்கம் அதிகமாக இருந்தது. தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் சாரல் மழையும் பெய்து வருகிறது.

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், தாளவாடி, திம்பம் மலைப்பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால் அந்த வழியாக வந்த செல்லும் வாகனங்கள் பகல் நேரத்திலேயே முகப்பு விளக்கை ஒளிரவிட்டப்படி வந்து செல்கின்றது.

    நாள் முழுவதும் நீடிக்கும் பனிப்பொழிவு காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அவ்வப்போது சாரல் மழையும் பெய்து வருவதால் குளிர்ந்த காற்றும் வீசி வருகிறது.

    நீலகிரி மாவட்டத்திலும் கடுமையான உறைபனி நிலவி வருகிறது. இதனால் காலை நேரத்தில் புல்வெளிகளில் பனிபடர்ந்து காணப்படுகிறது. மேலும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், தொழிலாளர்கள் கம்பளி ஆடைகளை அணிந்தப்படி வெளியே வந்து செல்கின்றனர்.

    பனிப்பொழிவு அதிக அளவில் நிலவி வருவதால் சுற்றுலா பயணிகளும் அவதியடைந்து வருகின்றனர். இதே போல் கோவை மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இன்று காலையும் பனிப்பொழிவு அதிகளவில் இருந்தது.

    திருப்பூர் மாவட்டத்திலும் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் அமைந்துள்ள உடுமலைப்பேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு நிலவியது. இன்றும் பனிப்பொழிவு அதிகளவில் இருந்தது. இதனால் வாகனங்கள் முகப்பு விளக்கை ஒளிரவிட்டப்படி சென்றது.

    இதேபோல் திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்களிலும் இன்று காலை கடும் பனிப்பொழிவு நிலவியது. இதனால் பொதுமக்களின் இயல்வு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    • லாரி உரிமையாளர்களுக்கு அதிக அளவில் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது.
    • டிசம்பர் மாத இறுதியில் லாரி உரிமையாளர் சங்க பொதுக்குழு கூட்டம்.

    சேலம்:

    தமிழகத்தில் 5 லட்சத்திற்கும் அதிகமாக லாரிகள் இயக்கப்படுகின்றன. இதில் 4 லட்சம் லாரிகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், 1 லட்சம் லாரிகள் வட மாநிலங்களுக்கும் சென்று வருகின்றன.

    டிரைவர்கள், கிளீனர்கள், பாரம் ஏற்றி இறக்கும் தொழிலாளர்கள் 8 லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் இதனை நம்பி உள்ளனர்.

    இந்தநிலையில் டீசல் மற்றும் உதிரி பாகங்கள் விலை உயர்வு, சுங்க சாவடி கட்டண உயர்வு உள்பட பல்வேறு காரணங்களால் லாரி உரிமையாளர்களுக்கு அதிக அளவில் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது.

    மேலும் டிரைவர், கிளீனர் தட்டுப்பாட்டால் லாரிகளை தொடர்ந்து இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    இதற்கிடையே போக்குவரத்து போலீசார் விதி முறைகளை மீறி விதிக்கும் ஆன்லைன் அபாராதத்தால் லாரி தொழில் மேலும் பாதிப்படையும் நிலை ஏற்பட்டுள்ளதாக லாரி உரிமையாளர்கள் கூறி உள்ளனர். இதனால் விரைவில் லாரிகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.

    இது குறித்து தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர் சம்மேளன தலைவர் தன்ராஜ் கூறுகையில், டீசல் விலை உயர்வு உள்பட பல்வேறு காரணங்களால் லாரி தொழில் முடங்கி உள்ளது. இதனால் லட்சக்கணக்கான லாரிகளை இயக்க முடியாமல் சாலை யோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    அனைத்து லாரிகளும் ஆண்டுதோறும் எப்.சி. காட்டி தான் சாலையில் ஓட்டுகிறோம். ஆனால் ஏதாவது ஒரு காரணத்தை கூறி லாரிகளுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதிக்கிறார்கள்.

    மேலும் லோடு, ஏற்றி இறக்கும் போதும் லாரிகளுக்கு போலீசார் அபராதம் விதிக்கிறார்கள். இதுதவிர வணிக நிறுவனங்கள் முன்பு சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் லாரிகளுக்கு சில நேரங்களில் வாரத்திற்கு இரு முறை கூட ஒரே லாரிக்கு போக்குவரத்து போலீசார் ஏதாவது காரணம் கூறி ஆன்லைனில் அபராதம் விதித்து வருகிறார்கள். இது சென்னையில் தான் அதிக அளவில் நடக்கிறது.

    இது குறித்து போலீஸ் டி.ஜி.பி. மற்றும் போக்குவரத்து துறை அமைச்சரிடமும் பல முறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    மேலும் லாரிகளில் உள்ள ஒளிரும் பட்டைகள் நல்லபடி இருந்தாலும் அடிக்கடி மாற்றும்படி வட்டார போக்குவரத்து அதிகாரிகள் வலியுறுத்துகிறார்கள்.

    புதிதாக டிரைவிங் லைசன்ஸ் எடுக்கும் போது அன்று மாலையே லைசன்ஸ் எடுப்பவரிடம் புதிய லைசன்ஸ் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது லைசன்ஸ் எடுப்பவரின் ஆவணங்களில் உள்ள முகவரிக்கு தான் லைசன்ஸ் செல்கிறது . அதற்கு ஒரு வாரம் ஆகிறது. இதனால் காலவிரயம் ஆகிறது.

    லாரிகளை ஒரு வாரம் இதனால் நிறுத்தி வைக்கும் நிலை உள்ளது. எனவே முன்பு போல லைசன்சை உடனடியாக அவர்களிடமே போக்குவரத்து அதிகாரிகள் வழங்க வேண்டும், இந்த கோரிக்கைகள் குறித்து பல முறை வலியுறுத்தியும் நிறைவேறவில்லை.

    இதனால் ஒரு லாரிக்கு 20 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை கூடுதல் செலவாகிறது. இதனால் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதை தவிர வேறு வழியில்லை.

    இனி வரும் காலங்களிலும் எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாத பட்சத்தில் டிசம்பர் மாத இறுதியில் லாரி உரிமையாளர் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது.

    இந்த கூட்டத்தில் அனைவரின் கருத்தையும் கேட்டு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் தேதி அறிவிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் கடையடைப்பு போராட்டம்.
    • போராட்டத்தால் நாமக்கல்லில் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

    நாமக்கல்:

    நாமக்கல் புதிய பஸ் நிலையத்தில் இருந்து நாமக்கல் நகருக்குள் வரும் வெளியூர் பஸ்கள் பழைய பஸ் நிலையத்திற்குள் வராமல் மெயின் ரோட்டில் நின்று பயணிகளை ஏற்றி இறக்கி விட்டு செல்கிறது.

    இதனால் வியாபாரம் பாதிக்கப்படுவதாகவும், இதற்கு மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தி நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் இன்று ஒரு நாள் நாமக்கல் நகரம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தது.

    இதில் மருந்து வணிகர்கள் சங்கத்தினர் மருந்து கடைகளை காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை கடையடைப்பு செய்வதாகவும், பிற வணிக நிறுவனங்கள் அனைத்தும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கடையடைப்பு செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டது.

    அதன்படி இன்று காலை நாமக்கல் நகரில் கடைகள் திறக்கப்படவில்லை. நாமக்கல் பழைய பஸ் நிலையத்தில் உள்ள கடைகள், நாமக்கல் கோட்டை பகுதியில்உள்ள கடைகள், ஆஞ்சநேயர் கோவில் அருகாமையில் உள்ள கடைகள், பூங்கா ரோடு, தாலுகா அலுவலகம் அருகாமையில் உள்ள கடைகள், மின்சார வாரியம் அருகில் உள்ள கடைகள், மருத்துவமனை அருகில் உள்ள கடைகள், திருச்சி- நாமக்கல் ரோடு, நாமக்கல்- துறையூர் ரோடு, மோகனூர்- சேந்தமங்கலம் ரோடு, சேலம்- நாமக்கல் ரோட்டில் உள்ள கடைகள் மூடப்பட்டிருந்தது. இந்த கடைகளின் உரிமையாளர்கள் தங்களது கடைகளை அடைத்து போராட்டத்தில் பங்கேற்றனர்.

    இதில் மளிகை கடைகள், மருந்து கடைகள், ெஜராக்ஸ் கடைகள், எலக்ட்ரிக்கல் கடை, செல்போன் கடை, நகை கடைகள், பாத்திர கடைகள், ஆட்டோ மொபைல், பழைய இரும்பு கடைகள் என 3000 -க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டு இருந்தன. முட்டை விற்பனை கடைகள், பேக்கரி கடைகள், பழக்கடைகளும் திறக்கப்பட வில்லை.

    இதேபோல் நாமக்கல் தினசரி காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் சங்கத்தினர், மருந்து வணிகர்கள் தங்களது கடைகளை திறக்கவில்லை. இந்த கடையடைப்பு போராட்டத்தால் நாமக்கல்லில் இன்று சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

    பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாமல் தவித்தனர். மேலும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ- மாணவிகள், அரசு மற்றும் தனியார் நிறுவன பணியாளர்கள், கூலி தொழிலாளர்கள் தங்கள் தொழில்களுக்கு தேவையான பொருட்கள் வாங்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்த போராட்டம் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    • மேட்டூர் அணைக்கு கடந்த 2 வாரமாக நீர்வரத்து கணிசமாக அதிகரித்து வருகிறது.
    • இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 109.52 அடியாக உயர்ந்து காணப்பட்டது.

    சேலம்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு கடந்த 2 வாரமாக நீர்வரத்து கணிசமாக அதிகரித்து வருகிறது.

    அதே நேரம் நீர்வரத்தை விட பாசனத்துக்கு குறைந்த அளவிலேயே தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டமும் வெகுவாக உயர்ந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 109.52 அடியாக உயர்ந்து காணப்பட்டது. நீர்வரத்து அணைக்கு வினாடிக்கு 6 ஆயிரத்து 395 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 1000 கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 600 கனஅடியும் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 77.73 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    • சேலம் மேற்கு மாவட்ட செயலாளராக இருந்த ஜெகதீஷ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவிப்பு.
    • என்னோடு களமாடிய உண்மையான களபோராளிகளுக்கும் என்னுடைய புரட்சிகர நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.

    நாம் தமிழர் கட்சியின் சேலம் மேற்கு மாவட்ட செயலாளராக இருந்த ஜெகதீஷ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தாய்த்தமிழ் உறவுகளுக்கு வணக்கம் சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் அ.ஜெகதீஷ் ஆகிய நான் நாம் தமிழர் கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் மற்றும் மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்தும் என்னை விடுவித்துக் கொள்கிறேன்.

    இதுவரை என்னோடு களமாடிய உண்மையான களபோராளிகளுக்கும் என்னுடைய புரட்சிகர நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.

    நான் மிகவும் நேசித்த நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவது கடினமாக இருந்தாலும் சமீப கால செயல்பாடுகள் கட்சியின் உள் கட்டமைப்பில் கவனம் செலுத்தாதது வருத்தத்தை ஏற்படுத்துகிறது.

    அதன் அடிப்படையில் கனத்த இதயத்தோடு இந்த அறிவிப்பை வெளியிடுகிறேன். கொள்கை கோட்பாட்டில் எந்த மாறுதலும் இல்லை என்றும் தலைவர் வே பிரபாகரன் அவர்கள் நினைவில் தமிழ் தேசியப் பாதையில் தொடர்ந்து பயணிப்பேன் நன்றி...

    இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

    ×