என் மலர்
சேலம்
- பெரியசாமி உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம்:
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள புத்திரகவுண்டம்பாளையம் ஊராட்சி 6-வது வார்டு பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 67). நிலத்தரகர். இவருடைய தம்பி சிகாமணியின் மகன் செல்வராஜ் (30). பி.எஸ்சி பட்டதாரியான இவர் கடந்த சில ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.
மது அருந்தும் பழக்கம் இருந்த செல்வராஜ், அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள், வீட்டில் உள்ளவர்களிடம் பணம் வாங்கி மது அருந்தி வந்ததாக கூறப்படுகிறது. நேற்று மாலை தன்னுடைய பெரியப்பா பெரியசாமியிடம், மது அருந்த பணம் கேட்டார். அவர் பணம் கொடுக்க மறுத்ததுடன், செல்வராஜை கண்டித்தார். அப்போது பெரியசாமிக்கும், செல்வராஜூக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது.
தகராறு முற்றவே ஆத்திரம் அடைந்த செல்வராஜ், பெரியப்பா பெரியசாமியை தாக்கினார். இதனை தடுக்க சென்றவர்களை கத்தியை காட்டி மிரட்டினார்.
பின்னர் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து பெரியசாமியின் தலையை ஆட்டை அறுப்பது போன்று கொடூரமாக அறுத்து தலையை துண்டித்தார். ரத்த வெள்ளத்தில் பெரியசாமி துடி துடித்து பரிதாபமாக சம்பவ இடத்திலேயே இறந்தார். கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பெரியப்பாவை கொலை செய்த செல்வராஜ், கத்தியுடன் பெரியப்பா உடல் அருகிலேயே எதுவும் தெரியாதது போல் அமர்ந்து இருந்தார். அதேநேரத்தில் அங்கிருந்த குடும்பத்தினர் கதறி அழுதனர். தகவல் அறிந்த ஏத்தாப்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள், செல்வராஜை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தியை மீட்டனர்.
பெரியசாமி உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவரது உடல் இன்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. தொடர்ந்து செல்வராஜை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
- யானை தந்தம் கடத்தல் கும்பலை சேர்ந்த ஒருவர் சிக்கினார்.
- வனப்பகுதியில் இறந்து கிடந்த யானைகளிடம் இருந்து வெட்டி எடுக்கப்பட்டதாக விசாரனையில் தெரிவித்தனர்.
மேட்டூர்:
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள கொளத்தூர் பகுதியில் யானை தந்தங்கள் விற்பனைக்கு பதுக்கி வைத்திருப்பதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து மேட்டூர் வனச்சரகர் சிவானந்தம் தலைமையில் வனத்துறையினர் சோதனை சாவடி, வனப்பகுதியையொட்டியுள்ள பகுதிகளில் மாறுவேடத்தில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தினர். அதில் யானை தந்தம் கடத்தல் கும்பலை சேர்ந்த ஒருவர் சிக்கினார். அவர் யானை தந்தம் கடத்தல் குறித்து திடுக்கிடும் தகவல் வனத்துறையினரிடம் தெரிவித்தார். இதையடுத்து ஒட்டு மொத்த கும்பலையும் பிடிக்க வனத்துறையினர் திட்டம் தீட்டினர்.
அதன்படி அவர் மூலமாக வனத்துறையினர் தந்தங்களை விலைக்கு வாங்குவது போல் பேசி கடத்தல் கும்பலை கொளத்தூரை அடுத்த ஏழரை மரத்துக்காடு என்ற இடத்திற்கு வரவழைத்தனர்.
இதையடுத்து சொகுசு காரில் யானை தந்தங்களை எடுத்துக்கொண்டு 3 பேர் ஏழரை மரத்துக்காடு பகுதிக்கு வந்து கொண்டிருந்தனர். அவர்களுக்கு பாதுகாப்பாக காருக்கு முன்னும் பின்னும் நோட்டமிட்டபடி 2 பேர் மோட்டார் சைக்கிளில் வந்தனர். குறிப்பிட்ட இடத்திற்கு சொகுசு கார் வந்தவுடன் மாறுவேடத்தில் நின்ற வனத்துறையினர் காரை நிறுத்தி யானை தந்தங்களை கொண்டு வருமாறு சைகை காட்டினர். இதையடுத்து யானை தந்தங்களுடன் காரும், மோட்டார் சைக்கிளில் வந்தவர்களும் அருகில் வந்தனர்.
அப்போது அங்கு தயார் நிலையில் இருந்த வனத்துறையினர் கடத்தல் கும்பலை சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்களிடம் இருந்து 7 கிலோ எடை கொண்ட 4 யானை தந்தம், ஒரு சொகுசு கார், 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில் தந்தங்களை காரில் கடத்தி வந்தவர்கள் மேட்டூர் அருகே உள்ள கோவிந்தபாடியை சேர்ந்த பழனி (வயது 48), தலைவாசல் பகுதியை சேர்ந்த செல்வகுமார் (40), குரும்பனூரை சேர்ந்த பெருமாள் (50), ஏழரை மரத்துக்காடு பகுதியை சேர்ந்த ஒண்டியப்பன் (59), வாழப்பாடியைச் சேர்ந்த அருணாசலம் (45) ஆகிய 5 பேர் என்பது தெரியவந்தது. அவர்களை வனத்துறையினர் கைது செய்து மேட்டூர் வனத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
பறிமுதல் செய்யப்பட்ட தந்தங்கள் அனைத்தும் 20 ஆண்டுகளுக்கு முன்பு மேட்டூர் அருகே அடர்ந்த வனப்பகுதியில் இறந்து கிடந்த யானைகளிடம் இருந்து வெட்டி எடுக்கப்பட்டதாக விசாரனையில் தெரிவித்தனர்.
இந்த வனப்பகுதியில் வீரப்பன் கும்பல் யானை தந்தம் கடத்தியதாக கூறுவது உண்டு.
வீரப்பனுக்கு அடுத்து தற்போது மீண்டும் யானை தந்தம் கடத்தல் தலை தூக்கியுள்ளதால் வனத்துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட யானை தந்தங்களை எத்தனை ஆண்டுகளுக்கு முற்பட்டது என கண்டுபிடிக்க ஆய்வுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
- பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகளும் ஸ்வெட்டர், ஜர்கின் போன்ற உடை அணிந்து செல்கின்றனர்.
- பை-பாஸ் சாலையில் வந்த வாகன ஓட்டிகள் காலை நேரத்திலும் முகப்பு விளக்குகளை ஒளிர விட்டபடி சென்றனர்.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 2-வது வாரத்தில் வடகிழக்கு பருவமழை கனமழையாக கொட்டியது. இதனால் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய நிலையில் நீர் நிலைகளில் தண்ணீர் அதிக அளவில் தேங்கி உள்ளது. இதனால் வழக்கத்தை விட இந்தாண்டு அதிக அளவில் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது.
இந்த நிலையில் மார்கழி மாதம் பிறந்ததில் இருந்தே பனிப்பொழிவும் அதிகமாக உள்ளதால் குளிரின் தாக்கம் மேலும் அதிகரித்தது. மேலும் பனி பொழிவு அதிகரிப்பால் மரங்கள், செடி, கொடிகளில் பனிகள் படர்ந்து வெள்ளை நிறத்தில் முத்துக்கள் போல காட்சி அளிக்கிறது.
குறிப்பாக ஏற்காட்டில் ஏற்கனவே கடும் குளிர் நிலவி வந்த நிலையில் தற்போது பனிப்பொழிவு மேலும் அதிகரித்து அது காலை 11 மணி வரை நீடிப்பதால் குளிரின் தாக்கம் மேலும் அதிகரித்துள்ளது. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் குளிரில் நடுங்கி வருகிறார்கள். குளிரில் இருந்து தப்பிக்க குளிர் தாங்கும் உடைகளை அணிந்து நடமாடுகின்றனர்.
மேலும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகளும் ஸ்வெட்டர், ஜர்கின் போன்ற உடை அணிந்து செல்கின்றனர். ஆனாலும் வழக்கத்தை விட குளிரின் தாக்கம் நடப்பாண்டில் அதிக அளவில் உள்ளதால் ஏற்காட்டில் வசிக்கும் மக்கள் மற்றும் தொழிலாளர்கள், மாணவ-மாணவிகள், சுற்றுலா பயணிகள் என அனைத்து தரப்பினரும் குளிரில் தவித்து வருகிறார்கள்.
சேலம் மாநகரில் கடந்த சில நாட்களாக குளிர்ச்சி யான சீதோஷ்ண நிலை நிலவி வந்த நிலையில் நேற்று இரவு பனிப்பொழிவு மேலும் அதிகரித்தது. இதனால் குளிரின் தாக்கம் மேலும் அதிகரித்து பொதுமக்களை வாட்டியது. இதனால் பெரும்பாலான வீடுகளில் நேற்றிரவு மின் விசிறிகளை நிறுத்தி விட்டு போர்வைகளை போர்த்தியபடியே மக்கள் தூங்கினர். மேலும் இன்று அதிகாலை முதல் இரு சக்கர வாகனங்களில் வெளியில் சென்றவர்கள் கடும் குளிரால் நடுங்கினர்.
இதே போல மாவட்டத்தின் புறநகர் பகுதிகளான ஆத்தூர், வாழப்பாடி, ஓமலூர், எடப்பாடி, மேட்டூர், சங்ககிரி, வீரபாண்டி என மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் குளிச்சியான சீதோஷ்ண நிலை நிலவியதால் பொதுமக்கள் காலை நேரங்களில் வீடுகளில் முடங்கும் நிலை ஏற்பட்டது. வெயில் அடித்த பிறகும் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலையே நிலவியதால் மக்கள் தவித்தனர். மாவட்டம் முழுவதும் கடும் பனிமூட்டமும் நிலவியது. இதனால் பை-பாஸ் சாலையில் வந்த வாகன ஓட்டிகள் காலை நேரத்திலும் முகப்பு விளக்குகளை ஒளிர விட்டபடி சென்றனர்.
- இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119.76 அடியாக இருந்தது.
- தற்போது அணையில் 93.08 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
சேலம்:
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் தீவிரத்தை பொறுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் வந்து கொண்டு இருக்கிறது. மேட்டூர் அணையின் மூலம் காவிரி டெல்டாவில் 13 மாவட்டங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இதுதவிர பல்வேறு கூட்டு குடிநீர் திட்டப்பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டில் தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழையால் நீர்வரத்து அதிகரித்து கடந்த ஆண்டில் மேட்டூர் அணை 3 முறை நிரம்பியது. இதனால் அணையில் தண்ணீர் கடல் போல் தேங்கி நிற்கிறது.
இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119.76 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு நேற்று 1871 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அது இன்று 1992 கனஅடியாக அதிகரித்து வந்து கொண்டுஇருக்கிறது. இது தவிர நேற்று இரவு டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை முதல் 12 ஆயிரம் கனஅடியாக அதிகரித்து திறக்கப்பட்டு வருகிறது. கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு தொடர்ந்து 300 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 93.08 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
- 19 ரெயில்களின் இயக்க நேரம் 15 நிமிடம் முதல் 30 நிமிடம் வரையில் மாற்றம்.
- புதிய ரெயில்வே கால அட்டவணை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
கோவை:
தெற்கு ரெயில்வே சேலம் கோட்டம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
2025-ம் ஆண்டுக்கான புதிய ரெயில்வே கால அட்டவணை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி சேலம் ரெயில்வே கோட்டத்தில் 19 ரெயில்களின் இயக்க நேரம் 15 நிமிடம் முதல் 30 நிமிடம் வரையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
புதிய அட்டவணையின் படி கரூர்-சேலம் ரெயில் சேலத்துக்கு காலை 9.45 மணிக்கும், ராஜ்கோட்-கோவை ரெயில் கோவைக்கு இரவு 8.55 மணிக்கும், பொள்ளாச்சி-கோவை ரெயில் கோவைக்கு இரவு 10.50 மணிக்கும், பொள்ளாச்சி-கோவை ரெயில் கோவைக்கு காலை 9.25 மணிக்கும், திருச்சி-கரூர் ரெயில் கரூருக்கு இரவு 8 மணிக்கும், கட லூர் துறைமுகம்-சேலம் ரெயில் சேலத்துக்கு காலை 9.10 மணிக்கும், சென்னை எழும்பூர்-சேலம் எக்ஸ்பிரஸ் ரெயில் சேலத்துக்கு காலை 6.15 மணிக்கு வந்து சேரும்.
சொரனூர்-கோவை ரெயில் கோவைக்கு மாலை 5.35 மணிக்கும், மங்க ளூரு-கோவை ரெயில் கோவைக்கு மாலை 6.25 மணிக்கும், சில்சார்-கோவை எக்ஸ்பிரஸ் ரெயில் கோவைக்கு முற்பகல் 11.55 மணிக்கும், பெங்க ளூரு-கோவை ரெயில் கோவைக்கு இரவு 9.05 மணிக்கும், சேலம்-கரூர் ரெயில் கரூருக்கு காலை 7.15 மணிக்கும் வந்தடையும்.
அதேபோல 7 ரெயில்களின் புறப்படும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஈரோடு-ஜோலார்பேட்டை ரெயில் மாலை 5.35 மணிக்கும், மேட்டுப்பாளையம்-போத்தனூர் ரெயில் மதியம் ஒரு மணிக்கும், கோவை-சொரனூர் ரெயில் மாலை 4.25 மணிக்கும், கோவை-ராஜ்கோட் எக்ஸ்பிரஸ் நள்ளிரவு 12.45 மணிக்கும், கரூர்-சேலம் ரெயில் இரவு 8.05 மணிக்கும், ஈரோடு-பாலக்காடு டவுன் ரெயில் காலை 7 மணிக்கும், மேட்டுப்பாளையம்-தூத்துக்குடி ரெயில் இரவு 7.45 மணிக்கும் புறப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- நீர்மட்டம் 120 அடியை எட்டி 3-வது முறையாக நிரம்பி உள்ளது.
- நீர் இருப்பு 93.47 டி.எம்.சி.யாக உள்ளது.
மேட்டூர்:
மேட்டூர் அணை மொத்த நீர்மட்டம் 120 அடி ஆகும். மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் மூலம் சேலம் ,ஈரோடு, நாமக்கல், கரூர் ,திருச்சி ,தஞ்சை, திருவாரூர் உள்பட 12 மாவட்டங்களில் 17 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் வேலூர், சென்னை உள்பட தமிழகத்தின் பெருபாலான மாவட்டங்களின் குடிநீர் ஆதாரமாக திகழ்கிறது.
மேட்டூர் அைணயில் இருந்து டெல்டா பாசனத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந்தேதி தண்ணீர் திறக்கப்படும். இவ்வாறு திறக்கப்படும் தண்ணீர் ஜனவரி மாதம் 28-ந் தேதியுடன் நிறுத்தப்படும்.
இதேபோன்று கால்வாய் பாசன தேவைக்காக ஆகஸ்டு மாதம் 1-ந் தேதி தண்ணீர் திறக்கப்படும். இவ்வாறு திறக்கப்படும் தண்ணீர் தொடர்ந்து 137 நாட்களுக்கு வழங்கப்படும்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் மேட்டூர் அணையில் நீர் இருப்பு குறைவாக இருந்ததால் குறித்த நேரத்தில் ஜூன் மாதம் 12-ந் தேதி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. இதற்கு மாறாக ஜூலை 28-ந் தேதி காவிரி டெல்டா பாசனத்திற்காக அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.
கேரளா, கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.
இதன் காரணமாக ஜூலை 30-ந் தேதி மேட்டூர் அணை 120 அடியை 43-வது முறையாக எட்டி கடந்த ஆண்டு (2024) முதன்முறையாக நிரம்பியது. இதைத்தொடர்ந்து நீர்வரத்து குறைந்ததன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைய தொடங்கியது.
இதனைத் தொடர்ந்து ஒரு சில வாரங்களில் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரித்தது. இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் மீண்டும் உயர்ந்து ஆகஸ்டு மாதம் 12-ந் தேதி 120 அடியை எட்டி 2-வது முறையாக நிரம்பியது.
ஒரு சில வாரங்களுக்கு பிறகு அணைக்கு நீர்வரத்து தண்ணீர் திறப்பைவிட குறைந்ததால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் மீண்டும் குறையத் தொடங்கியது.
இந்த நிலையில் கடந்த 2 மாதங்களாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்ததன் காரணமாக டெல்டா பாசன பகுதியில் தண்ணீர் தேவை குறைந்தது. மேலும் கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் மழை பெய்தது. இதனால் அங்குள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்ததை அடுத்து உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது.
இதன் காரணமாக மேட்டூர் அணை நீர்மட்டம் மீண்டும் உயர்ந்து கொண்டே வந்தது. நேற்று இரவு 10 மணிக்கு அணையின் நீர்மட்டம் 120 அடியை எட்டி 3-வது முறையாக நிரம்பி உள்ளது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதற்கு முன்னதாக மேட்டூர் அணை கடந்த 2022-ல் ஒரே ஆண்டு 3 முறை முழுகொள்ளளவான 120 அடியை எட்டி நிரம்பியது குறிப்பிடத்தக்கது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வந்த மழையின் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் அணை வரலாற்றில் 43-வது முறையாக கடந்த ஜூலை மாதம் 30-ந்தேதி முதல் முறையாக நிரம்பியது.
அதன் பிறகு ஆகஸ்டு மாதம் 12-ந்தேதி 2-வது முறையாக நிரம்பியது. இதையடுத்து வருடத்தின் கடைசி நாளான நேற்று (31-ந்தேதி) அணை 45-வது முறையாக நிரம்பி இருக்கிறது.
இன்று காலை மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2,875 கன அடியிலிருந்து 1,791 கன அடியாக குறைந்துள்ளது. நீர் இருப்பு 93.47 டி.எம்.சி.யாக உள்ளது.
அணையிலிருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 1,000 கன அடியும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 300 கன அடி நீரும் வெளியேற்றப்படுகிறது.
மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவை 120 அடி எட்டி உள்ளதால் மேட்டூர் காவிரி உபரி நீரேற்றும் திட்டத்தின் கீழ் திப்பம்பட்டியில் உள்ள உபரி நீரேற்றும் நிலையத்தில் இருந்து மேட்டூர், மேச்சேரி, நங்கவள்ளி ஆகிய பகுதியில் உள்ள வறண்ட ஏரிகளுக்கு மின் மோட்டார்கள் மூலம் தண்ணீர் வழங்கும் செயல்பாட்டினை இன்று மாலை சேலம் மாவட்ட கலெக்டர் டாக்டர் பிருந்தாதேவி, டி.எம்.செல்வகணபதி எம்.பி., மக்கள் பிரதிநிதிகள் முன்னிலையில் தொடங்கி வைக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை திப்பம்பட்டி நீரேற்றும் நிலையத்தில் நீர்வளத்துறை அதிகாரிகள் செய்துள்ளனர்.
- தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டில் குவிந்துள்ளனர்.
- படகு இல்லத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்தனர்.
ஏற்காடு:
தமிழகத்தின் முக்கிய கோடை வாசஸ்தலமான ஏற்காட்டில் கடந்த ஒரு வாரமாக தொடர் விடுமுறையையொட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதனால் ஏற்காடு களைகட்டியுள்ளது. புத்தாண்டையொட்டி ஏற்காட்டில் உள்ள முக்கிய நட்சத்திர தங்கும் விடுதிகளில் இன்று இரவு சிறப்பு கொண்டாட்டங்கள் நடைபெறவுள்ளது.
இதற்காக நட்சத்திர ஓட்டல்கள், விடுதிகள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு பாட்டு, கும்மாளம் என அனைத்து நிகழ்ச்சிக்கும் தயாராக உள்ளன. இந்த புத்தாண்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டில் குவிந்துள்ளனர்.
ஒரு சில நட்சத்திர ஓட்டல்களில் புத்தாண்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நபர் ஒருவருக்கு ரூ.7 ஆயிரம் முதல் ரூ.10 வரை வசூலிக்கப்படுகிறது. இரவு முழுவதும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட இருக்கின்றன.
ஏற்காடு வந்துள்ள சுற்றுலா பயணிகள் ஏற்காட்டில் உள்ள முக்கிய சுற்றுலா இடங்களில் குடும்பத்துடன் பொழுதை கழித்து வருகின்றனர். படகு இல்லத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்தனர்.
ஏற்காட்டில் தற்போது மூடு பனியுடன், கடும் குளிர் நிலவுகிறது. இந்த குளிரையும் பொருட்படுத்தாமல் புத்தாண்டை கொண்டாட ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.
- பொதுமக்கள் விவசாயத்தையும், கால்நடைகளையும் நம்பியே வாழ்ந்து வருகின்றனர்.
- உண்ணாவிரத போராட்டம் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா இருக்கூர், மாணிக்கநத்தம், கோப்பணம் பாளையம், வீரணம்பாளையம் ஆகிய 4 ஊராட்சிகளின் எல்லையில் பஞ்சபாளையம் பகுதியில் அமைந்துள்ள காலாவதியான கல்குவாரியில் மழை நீர் தேங்கியுள்ளது.
இந்த தண்ணீர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாயத்திற்கும், குடிநீர் தேவைக்கும் நீர் ஆதாரமாக உள்ளது.
இந்நிலையில் இந்த நீர் நிலை தேக்கத்தில் பரமத்தி மற்றும் வேலூர் பேரூராட்சிகளின் சாக்கடை கழிவு நீரை கொண்டு வந்து தேக்கி சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு தேர்வு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டது.
இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள் அப்பணியை தடுத்து நிறுத்த வலியுறுத்தி தொடர்ந்து போராடி வருகின்றனர்.
இந்த நீர்நிலையை சுற்றியுள்ள இருக்கூர், மாணிக்கநத்தம், வீரணம் பாளையம், கோப்பணம் பாளையம் ஆகிய 4 கிராமங்களில் 20-க்கும் மேற்பட்ட ஊர்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் விவசாயத்தையும், கால்நடைகளையும் நம்பியே வாழ்ந்து வருகின்றனர்.
இந்த நீர்நிலையில் சாக்கடை கழிவுநீரை கொண்டு வந்து தேக்கினால் இப்பகுதி நிலத்தடி நீரும், காற்றும் மாசுபடும். மேலும் விவசாய நிலமும் பாதிக்கும்.
எனவே சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதை நிறுத்த வேண்டும் என கூறி மாணிக்கநத்தம், இருக்கூர், கோப்பணம்பாளையம், வீரணம்பாளையம் ஆகிய 4 கிராமங்களை சேர்ந்த சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் பஞ்சபாளையம் மெயின் ரோட்டில் இன்று காலை முதல் உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உண்ணாவிரத போராட்டம் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.
- பஸ் டிரைவருக்கும், போலீஸ் ஏட்டுகள் செந்தில், சுகவனேஸ்வரனுக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு முற்றியது.
- செந்தில், சுகவனேஸ்வரன் ஆகிய 2 போலீஸ் ஏட்டுகளும் காயம் அடைந்தனர்.
சேலம்:
தமிழக-கர்நாடக எல்லையான மேட்டூர் அடுத்த கொளத்தூர் காரைக்காடு பகுதியில் மதுவிலக்கு சோதனை சாவடி உள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த சிலர் சொகுசு பஸ் ஒன்றில் தென் மாநிலங்களுக்கு ஆன்மிக சுற்றுலா வந்தனர். இவர்கள் தமிழகத்தின் பல்வேறு ஆன்மிக தலங்களை பார்த்து விட்டு கர்நாடக மாநிலத்திற்கு செல்வதற்காக காரைக்காடு மதுவிலக்கு சோதனை சாவடி பகுதிக்கு நேற்று முன்தினம் வந்தனர்.
அப்போது சோதனை சாவடியில் பணியில் இருந்த மதுவிலக்கு போலீஸ் ஏட்டுகள் செந்தில், சுகவனேஸ்வரன், தமிழரசன் ஆகியோர் இந்த சொகுசு பஸ்சின் பெர்மிட் மற்றும் பதிவேடுகளை ஆய்வு செய்தனர். அப்போது அந்த பஸ் டிரைவருக்கும், போலீஸ் ஏட்டுகள் செந்தில், சுகவனேஸ்வரனுக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு முற்றியது. இதில் ஆத்திரம் அடைந்த பஸ் டிரைவர் வண்டியில் இருந்த இரும்புகம்பியை எடுத்து போலீஸ் ஏட்டுகளை தாக்கினார். அவருக்கு ஆதரவாக பஸ்சில் இருந்த பயணிகளும் அங்கு வந்து சோதனை சாவடி போலீசாரை தாக்கினர். இதில் செந்தில், சுகவனேஸ்வரன் ஆகிய 2 போலீஸ் ஏட்டுகளும் காயம் அடைந்தனர்.
அதே நேரத்தில் அவர்களும் தங்களை தற்காத்து கொள்ள சுற்றுலா பயணிகளை தாக்கியதாக கூறப்படுகிறது. இதற்கிடையே அங்கு வந்த அந்த பகுதி மக்கள் சுற்றுலா பயணிகளில் சிலரை சோதனை சாவடியில் பிடித்து வைத்தனர்.
இது குறித்து தகவல் கிடைத்ததும், மேட்டூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆரோக்கியராஜ் மற்றும் போலீசார் பஸ்சில் பயணம் செய்த பயணிகள் சிலரை கொளத்தூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் சுற்றுலா பஸ் டிரைவரான உத்திரபிரதேசத்தை சேர்ந்த சிவநாராயணன் (52), கீளினர் அஜய் (20) ஆகியோர் மீது கொளத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதையடுத்து டிரைவர் மற்றும் கீளீனர் ஆகியோர் ஜாமினீல் விடுவிக்கப்பட்டனர். தொடர்ந்து அந்த பேருந்து மாதேஸ்வரன் மலை கோவிலுக்கு புறப்பட்டு சென்றது.
இந்த நிலையில் இந்த வழக்கை சரியாக கையாளவில்லை என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் சோதனை சாவடியில் பணியாற்றிய போலீசார் செந்தில், சுகவனேஸ்வரன், தமிழரசன் ஆகிய 3 பேரையும் சஸ்பெண்டு செய்து சேலம் மாவட்ட சூப்பிரண்டு கவுதம் கோயல் உத்திரவிட்டுள்ளார். இந்த சம்பவம் போலீசார் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- நாளை மார்கழி அமாவாசை மற்றும் அனுமன் ஜெயந்தி.
- சேலம் மாவட்டம் முழுவதும் தற்போது பனியின் தாக்கம் அதிகளவில் உள்ளது.
அன்னதானப்பட்டி:
சேலம் வ.உ.சி. பூ மார்க்கெட்டுக்கு கன்னங்குறிச்சி, பனமரத்துப்பட்டி, ஓமலூர், மேச்சேரி, மேட்டூர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து டன் கணக்கில் பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. அதே போல் சேலத்தில் இருந்து வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு பூக்கள் விற்பனைக்கும், ஏற்றுமதிக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன.
நாளை (திங்கட்கிழமை) மார்கழி அமாவாசை மற்றும் அனுமன் ஜெயந்தி ஆகும். மற்றும் ஆங்கில புத்தாண்டு இன்னும் சில நாட்களில் பிறக்க உள்ளது. இதனால் தேவை அதிகரித்துள்ளதால் சேலம் பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை உயர்ந்துள்ளது.
இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், சேலம் மாவட்டம் முழுவதும் தற்போது பனியின் தாக்கம் அதிகளவில் உள்ளது. பனிப்பொழிவு அதிகரித்துள்ளதால், பூக்களின் விளைச்சல் பாதிக்கப்படுவது வழக்கம் ஆகும். இதனால் வ.உ.சி. பூ மார்க்கெட்டுக்கு விவசாயிகளிடம் இருந்து பூக்கள் வரத்து குறைந்து விட்டது. இந்த நிலையில் அடுத்தடுத்து அமாவாசை, ஆங்கில புத்தாண்டு ஆகிய விசேஷ நாட்கள் வருவதால் பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. பூக்கள் வரத்தும் குறைவாக இருக்கிறது. இதன் காரணமாக பூக்களின் விலை உயர்ந்துள்ளது என்றனர்.
- வடகிழக்கு பருவமழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரித்தது.
- அணையின் நீர்மட்டம் 119.80 அடியாக உயர்ந்து இருந்தது.
சேலம்:
தென்மேற்கு பருவமழை காரணமாக இந்த ஆண்டு மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நடப்பாண்டில் அணை 2 முறை நிரம்பியது. பின்னர் மழை நின்றதால் நீர்வரத்து குறைந்தது. தொடர்ந்து அணைக்கு வரும் தண்ணீரை விட அதிகளவில் பாசனத்துக்கு திறக்கப்பட்டதால் அணையின் நீர்மட்டமும் குறைய தொடங்கியது.
இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரித்தது. மேலும் டெல்டா மாவட்டங்களில் மழையின் காரணமாக தண்ணீர் தேவை குறைந்தது. அணைக்கு வரும் தண்ணீரை விடகுறைந்த அளவிலேயே தண்ணீர் பாசனத்துக்கு திறக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் மீண்டும் உயரதொடங்கியது.
இன்று காலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 2516 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையின் நீர்மட்டம் 119.80 அடியாக உயர்ந்து இருந்தது. எனவே அணை நடப்பாண்டில் 3-வது முறையாக நிரம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு 500 கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 300 கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையில் தற்போது 93.15 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
- இன்று காலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 2701 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.
- தற்போது அணையில் 93.02 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
சேலம்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் மெதுவாக உயர்ந்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 2701 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையின் நீர்மட்டம் 119.72 அடியாக உயர்ந்து காணப்பட்டது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு 500 கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 300 கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
தற்போது அணையில் 93.02 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.






