என் மலர்tooltip icon

    சேலம்

    • தற்போது ஏற்காட்டில் பனிப்பொழிவுடன் கடுங்குளிர் நிலவிவருகிறது.
    • நகரில் போக்குவரத்து நெரிசலும் அதிகரித்து காணப்பட்டது.

    ஏற்காடு:

    அரையாண்டுத் தேர்வு முடிந்து தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு அரசு விடுமுறை.

    இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் புதுச்சேரி, கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்தும் நேற்று மாலை முதல் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஏற்காட்டுக்கு வந்தனர்.


    இதனால் நேற்று மாலை மற்றும் இன்று காலை முதல் மலைப்பாதையில் வாகனங்கள் அணிவகுத்து வந்து கொண்டு இருக்கிறது. தற்போது ஏற்காட்டில் பனிப்பொழிவுடன் கடுங்குளிர் நிலவிவருகிறது. இந்த சீதோஷ்ண நிலையை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனர்.

    மேலும் அவர்கள் அண்ணாபூங்கா, லேடீஸ் சீட் காட்சி முனை, பக்கோடா பாயிண்ட் உள்ளிட்ட இடங்களை சுற்றிபார்த்தனர். மேலும் படகு சவாரி செய்தும் உற்சாகம் அடைந்தனர்.

    சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியதால் படகுகள் தொடர்ந்து இயங்கி கொண்டே இருந்தது. படகு சவாரி செய்ய சுற்றுலா பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர். சுற்றுலா பயணிகள் வருகை காரணமாக ஏற்காடு நகரில் போக்குவரத்து நெரிசலும் அதிகரித்து காணப்பட்டது.

    இன்று முதல் புத்தாண்டு வரை ஏற்காட்டுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும் என்பதால் வியாபாரிகள் உற்சாகம் அடைந்துள்ளனர். நீண்ட இடைவெளிக்கு பிறகு சுற்றுலா தலங்கள் களைகட்டியுள்ளது. கூட்டம் அதிகரித்து வருவதால் மலைப்பாதையில் போலீசார் ரோந்து சென்று வருகிறார்கள்.

    • தண்ணீர் வரத்தை விட குறைந்த அளவிலேயே பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
    • நடப்பாண்டில் 3-வது முறையாக மேட்டூர் அணை நிரம்பும் தருவாயில் உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    சேலம்:

    கர்நாடக, தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையை பொறுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் வந்து கொண்டு இருக்கிறது.

    இந்த நிலையில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழையின் தீவிரம் காரணமாக மேட்டூர் அணை இந்த ஆண்டில் 2 முறை நிரம்பியது. பின்னர் மழை நின்று தண்ணீர் வரத்து குறைந்ததாலும், தொடர்ந்து நீர்வரத்தை விட அதிகளவில் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வந்ததாலும் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்தது.

    இதற்கிடையே வடகிழக்கு பருவமழையின் தீவிரம் காரணமாக மீண்டும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. கடந்த 50 நாட்களுக்கும் மேலாக அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. மேலும் டெல்டா மாவட்டத்திலும் பலத்த மழை பெய்ததால் அங்கு பாசனத்துக்கு தண்ணீர் தேவை குறைந்தது. இதன் காரணமாக மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவும் குறைக்கப்பட்டது.

    தொடர்ந்து தண்ணீர் வரத்தை விட குறைந்த அளவிலேயே பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி நீர்மட்டம் 119.41 அடியாக இருந்தது. எனவே இந்த ஆண்டில் 3-வது முறையாக அணை நிரம்பும் தருவாயில் உள்ளது. தொடர்ந்து அணைக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 701 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு 500 கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 300 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 92.53 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. நடப்பாண்டில் 3-வது முறையாக மேட்டூர் அணை நிரம்பும் தருவாயில் உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • கடந்த சில நாட்களாக அங்கு பனிப்பொழிவுடன் கடுங்குளிர் நிலவி வருகிறது.
    • பெரும்பாலான பொதுமக்கள் இந்த உறைபனி நேரத்தில் வீடுகளிலேயே முடங்கி கிடக்கிறார்கள்.

    ஏற்காடு:

    சுற்றுலா தலமான ஏற்காட்டில் பெய்த கனமழை காரணமாக சுற்றுலா தலங்கள் அனைத்தும் பசுமையாக காணப்படுகிறது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அங்கு பனிப்பொழிவுடன் கடுங்குளிர் நிலவி வருகிறது. இதன் காரணமாக மாலையில் இருந்து காலை வரை பொதுமக்கள் நடமாட்டமின்றி நகரமே வெறிச்சோடி காணப்படுகிறது.

    மேலும் பனிப்பொழிவின் காரணமாக எதிரே யார் நிற்கிறார்கள் என்று கூட தெரியாத சூழல் நிலவியது. மேலும் மலைப்பாதையில் சென்று வந்த வாகனங்கள் அனைத்தும் பகல் நேரத்திலேயே முகப்பு விளக்குகளை ஒளிரவிட்ட படி வந்து சென்றன.

    இதற்கிடையே கடந்த சில நாட்களாக கடும் உறைபனி நிலவி வருகிறது. மாலை 3 மணிக்கு தொடங்கும் இந்த உறைபனி மறுநாள் காலை 11 மணி வரை நீடிக்கிறது. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்லும் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகிறார்கள். மேலும் பெரும்பாலான பொதுமக்கள் இந்த உறைபனி நேரத்தில் வீடுகளிலேயே முடங்கி கிடக்கிறார்கள்.

    இன்று காலையும் கடும் உறைபனி நிலவியது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் சாலை ஓரங்களில் பொதுமக்கள் தீ மூட்டி குளிர்காய்ந்தனர். மேலும் கம்பளி ஆடைகளை அணிந்து கொண்டு பொதுமக்கள் வந்து செல்கின்றனர். தொடர் பனி மற்றும் குளிரின் காரணமாக பொதுமக்கள் சளி, காய்ச்சலால் அவதிப்பட்டு வருகிறார்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பெற்றோர், பள்ளி நுழைவாயிலில் திரண்டு பள்ளி தொடர்ந்து செயல்பட வலியுறுத்தி முற்றுகையிட்டனர்.
    • பா.ம.க எம்எல்ஏ அருள் பள்ளி தாளாளரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    சேலம் பழைய சூரமங்கலம் பகுதியில் அரசு உதவிப் பெறும் தனியார் பள்ளி இயங்கி வருகிறது.

    இந்த பள்ளியில் அருகில் உள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். தனியார் பள்ளி, விளையாட்டு மைதானம் ஏற்கனவே விற்கப்பட்டதாக கூறப்பட்டு வரும் நிலையில், பள்ளி கட்டிடம் வேறு ஒரு தனியாருக்கு விற்கப்பட்டதாக தகவல் வெளியானது.

    இதனை அறிந்த பெற்றோர், பள்ளி நுழைவாயிலில் திரண்டு பள்ளி தொடர்ந்து செயல்பட வலியுறுத்தி முற்றுகையிட்டனர்.

    இந்நிலையில், இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பா.ம.க எம்எல்ஏ அருள் பள்ளி தாளாளரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    அப்போது பாமக எம்எல்ஏ அருள் திடீரென பள்ளி தாளாளர் காலில் விழுந்து, "பள்ளியை மூடும் எண்ணத்தை தயவு செய்து கைவிடுங்க.. பள்ளியை மூடாதீங்கம்மா" என்று கெஞ்சினார்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • உழவர் சந்தைகள் வெள்ளி விழாவை கொண்டாடி வருகின்றன.
    • தி.மு.க. அரசு விவசாயிகளின் நலன் காக்கும் அரசாக உள்ளது.

    சேலம்:

    உழவர் சந்தை தொடங்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக வெள்ளி விழா சேலம் சூரமங்கலம் உழவர் சந்தையில் நடைபெற்றது.

    இந்த வெள்ளி விழாவில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு சூரமங்கலம் உழவர் சந்தையில் வெள்ளி விழாவை தொடங்கி வைத்து விவசாயிகள் விற்பனை செய்யும் காய்கறிகளின் தரத்தை நேரடியாக ஆய்வு செய்தனர்.

    தொடர்ந்து அமைச்சர் எ.வ.வேலு நிருபர்களிடம் கூறியதாவது:-

    விவசாயிகளின் நலன் கருதி கடந்த கலைஞர் ஆட்சியில் 1999 ஆம் ஆண்டு முதன்முதலாக 100 உழவர் சந்தைகள் திறக்கப்பட்டது. சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் அமைச்சராக இருந்தபோது 9 உழவர் சந்தைகள் சேலம் மாவட்டத்தில் தொடங்கப்பட்டது.

    இன்று 25-வது ஆண்டு நிறைவடைந்ததை யொட்டி, வெள்ளி விழாவை இந்த உழவர் சந்தைகள் கொண்டாடி வருகின்றன.

    அதாவது விவசாயிகள் இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக லாபம் ஈட்ட வேண்டும் என்பதற்காக இந்த உழவர் சந்தைகள் தமிழகத்தில் கொண்டுவரப்பட்டது.

    சேலத்தில் உள்ள சூரமங்கலம் உழவர் சந்தையில் 170 முதல் 200 வரை கடைகள் உள்ளன. அந்த விவசாயிகளுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு, அவர்கள் தங்கள் விற்பனையை தொடர்ந்து செய்து வருகிறார்கள். இந்த உழவர் சந்தைகளுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் வருகிறார்கள்.

    அவர்களிடம் கேட்ட போது, உழவர் சந்தைகளில் தரமான, புதிய காய்கறிகள் கிடைப்பதாக பெருமை யோடு சொல்லுகிறார்கள்.

    அந்த வகையில் உழவர் நலன் காக்கும் அரசாக இந்த அரசு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் உழவர் சந்தைகளை மேம்படுத்த 27.50 கோடி ரூபாய் அளவில் ஒதுக்கீடு செய்து, சீரமைக்கப்பட்டு வருகிறது.

    அதேபோல விவசாயத்திற்கு என தனி நிதிநிலை அறிக்கையை கொண்டு வந்தவர் ஸ்டாலின். அதாவது தனி நிதிநிலை அறிக்கையில் கடந்த 21- 22 ம் ஆண்டில் 32.75 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்தார்.

    அதனை தொடர்ந்து 2022 -2023 -ல் 33 ஆயிரம் கோடியும், 2023 -2024- ம் ஆண்டில் ரூ.38 ஆயிரத்து 904 கோடி அளவில் நிதி ஒதுக்கீடு செய்து விவசாயம் சார்ந்த பல்வேறு திட்டங்களை சிறப்பாக செய்து வருகிறார்.

    அது மட்டுமில்லாமல் நீர் வளத் துறையை உருவாக்கி அதற்காக மூத்த அமைச்சர் துரைமுருகனை நியமித்து, நீர் மேலாண்மை பாதுகாக்கப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் இந்த அரசு, விவசாயிகளின் நலன் காக்கும் அரசாக உள்ளது. தொடர்ந்து அமைச்சர் எ.வ. வேலுவிடம் திருவண்ணாமலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் விவசாயிகளுக்கு தமிழக அரசு எதும் செய்யவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளாரே? என்று கேட்டதற்கு பதிலளித்து அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது:-

    தோழமைக் கட்சிகளைப் பொறுத்தவரை இந்த ஆட்சியை பாராட்டி வருகிறார்கள்.

    ஆனால் எதிர்க்கட்சியாக இருக்கிறோம் என்பதற்காக பா.ம.க. தற்போது மனசாட்சியை மறந்து பேசி வருகிறது. வேளாண்மைக்கு தனியாக நிதி ஒதுக்குகிறோம், அதற்கான செலவு செய்யப்படுகிறது.

    ஆனால் காழ்புணர்ச்சி காரணமாக மனசாட்சியை மறந்து பேசுகின்றனர். மனசாட்சியோடு இருப்பவர்கள் இவ்வாறு பேச மாட்டார்கள் என பா.ம.க.விற்கு காட்டமான பதில் அளித்தார்.

    • எந்திரங்கள், மின் மோட்டார்கள், பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்தன.
    • 180 மெகாவாட் மட்டுமே மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

    மேட்டூர்:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கு சொந்தமான மேட்டூர் அனல் மின் நிலையத்தில் 2 பிரிவுகள் உள்ளன. முதல் பிரிவில் தலா 210 என 840 மெகாவாட், 2-வது பிரிவில் 600 மெகாவாட் என மொத்தம் 1,440 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

    இதில் முதல் பிரிவின் 3-வது அலகில் கடந்த 19-ந்தேதி மாலை பங்கர் டாப் எனப்படும் நிலக்கரி சேமிப்பு தொட்டி திடீரென உடைந்து விழுந்தது. இதில் ஒப்பந்த தொழிலாளர்கள் 2 பேர் உயிரிழந்தனர். 5 பேர் படுகாயம் அடைந்தனர். சுமார் 42 மீட்டர் உயரத்தில் 3-வது தளத்தில் இருந்த 165 டன் எடைகொண்ட பங்கர் டாப் 500 டன் நிலக்கரியுடன் விழுந்ததால் 2-ம் தளத்திலும், முதல் தளத்திலும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. எந்திரங்கள், மின் மோட்டார்கள், பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்தன.

    பங்கர் டாப் வழுவிழந்து விழுந்ததா?அல்லது சதி வேலை காரணமாக விழுந்ததா? என்பது இதுவரை கண்டுபிடிக்க ப்படவில்லை. இந்த பகுதியில் எப்போதும் தொழிலாளர்களும், கண்காணிப்பாளர்களும் நடமாட்டம் இருக்கும் பகுதியாகும். விபத்து நடந்தபோது மாலையில் தேநீருக்கான நேரம் என்பதால் அங்கு குறைந்த எண்ணிக்கையிலான தொழிலாளர்களே பணி யில் இருந்தனர். இதனால் தொழிலாளர்கள் உயிரிழ ப்பும், காயமும் குறைந்து ள்ளது.

    இதனால் 3-வது அலகில் முழுமையாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு, பணியாளர்கள் அப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என தடைவிதிக்கப்பட்டுள்ளது.

    3-வது அலகில் இருந்து 4-வது அலகுக்கு செல்லும் குடிநீர் குழாய், ஆயில் குழாய் உள்ளிட்டவை உடைந்துள்ளன. இதன் காரணமாக 4-வது அலகிலும் மின் உற்பத்தி முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் முதல் அலகில் 180 மெகாவாட் மின் உற்பத்தி மட்டுமே நடந்து வருகிறது.

    இந்த நிலையில் 600 மெகாவாட் திறன் கொண்ட அனல் மின் நிலையத்தின் '2-வது பிரிவில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு கொதிகலன் டியூப் வெடித்ததன் காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. அதை சரி செய்த பிறகு கடந்த 3 நாட்களுக்கு முன்பு மீண்டும் மின் உற்பத்தி தொடங்கப்பட்டது. மீண்டும் 2-வது பிரிவில் நேற்று காலை கொதிகலன் டியூப் வெடித்ததையடுத்து மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    2 அனல் மின் நிலையங்களின் மொத்த மின்உற்பத்தி திறன் 1,440 மெகாவாட் என்ற நிலையில், தற்போது 180 மெகாவாட் மட்டுமே மின் உற்பத்தி செய்யப்படுகிறது. 87 சதவீத உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

    • சில இடங்களில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது.
    • சேலம் மாநகர் முழுவதும் குளிர்ந்த நிலையில் காணப்பட்டது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த வாரம் புயல் காரணமாக தொடர்ந்து மழை பெய்தது. இதனால் பல்வேறு பகுதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு குளங்கள், ஏரிகள் நிரம்பியது. மேலும் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. சில இடங்களில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். இதையடுத்து கடந்த சில தினங்களாக மழை பெய்யாமல் வெயில் வாட்டியது.

    தற்போது மார்கழி மாதம் என்பதால் இரவு நேரம் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் வங்ககடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக இன்று அதிகாலை சேலம் மாவட்டத்தில் மழை பெய்ய தொடங்கியது. அதிகாலை 5 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை தொடர்ந்து இடைவிடாமல் பெய்தது. இந்த மழை 3 மணி நேரம் நீடித்தது. இதனால் மழைநீர் சாலைகளில் ஓடியது. இதையடுத்து சேலம் மாநகர் முழுவதும் குளிர்ந்த நிலையில் காணப்பட்டது.

    • இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119.12 அடியாக இருந்தது.
    • அணைக்கு நேற்று 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அது இன்று 2938 கனஅடியாக குறைந்து காணப்பட்டது.

    சேலம்:

    மேட்டூர் அணைக்கு கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. மேலும் டெல்டா மாவட்டங்களிலும் மழை பெய்து வந்ததால் அங்கு தண்ணீர் தேவையும் குறைந்து காணப்பட்டது. இதையடுத்து மேட்டூர் அணையில் இருந்து கடந்த சில நாட்களாக வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. அணைக்கு வரும் தண்ணீரை விட குறைந்த அளவிலேயே பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119.12 அடியாக இருந்தது. அணைக்கு நேற்று 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அது இன்று 2938 கனஅடியாக குறைந்து காணப்பட்டது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு வினாடிக்கு 500 கனஅடியாக குறைக்க ப்பட்டது. மேலும் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 300 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையில் தற்போது 92.07 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    • அணையின் பாதுகாப்பு கருதி 120 அடிவரை மட்டுமே தண்ணீர் தேக்கி வைக்கப்படும்.
    • அணைக்கு நேற்று வினாடிக்கு 4266 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அது இன்று 3 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.

    சேலம்:

    தமிழக, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் தீவிரத்தை பொறுத்து மேட்டூர் அணைக்கு கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக நீர்வரத்து கணிசமாக அதிகரித்து காணப்படுகிறது. அணைக்கு வரும் தண்ணீரை விட குறைந்த அளவிலேயே பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டமும் மெதுவாக உயர்ந்து வருகிறது.

    மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 124 அடியாகும். ஆனால் அணையின் பாதுகாப்பு கருதி 120 அடிவரை மட்டுமே தண்ணீர் தேக்கி வைக்கப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு ஏற்கனவே அணை 2 முறை நிரம்பியது. இந்த நிலையில் நீர்வரத்து தொடர்ந்து கணிசமாக வந்து கொண்டு இருப்பதால் அணையின் நீர்மட்டம் இன்று காலை 119 அடியை எட்டியது. எனவே இந்த ஆண்டில் 3-வது முறையாக அணை நிரம்புமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    அணைக்கு நேற்று வினாடிக்கு 4266 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அது இன்று 3 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.

    மேலும் டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 1000 கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 300 கனஅடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 91.91 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    • பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல்.
    • மேட்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் மேட்டூர் அனல் மின் நிலையத்தில் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் சிக்கி பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    மேலும், அனல் மின் நிலையத்தில் பணியாற்றி வந்த தொழிலாளர்கள் சிலர் மாயமடைந்துள்ளதாக தெரிகிறது. மாயமான தொழிலாளர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. விபத்தில் காயமுற்ற ஐந்துக்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மேட்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாயமான தொழிலாளர்களை நிலக்கரிகளை அப்புறப்படுத்தி தேடும் பணி நடைபெற்று வருகிறது. 

    • ரெயில் நிலையம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
    • ரெயில் நிலையம் முன்பு பரபரப்பு நிலவியது.

    சேலம்:

    மத்திய மந்திரி அமித் ஷா அம்பேத்கரை அவமதித்ததாக கூறி சேலம் ரெயில் நிலையத்தில் ரெயில் மறியல் போராட்டம் நடத்தபோவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அறிவித்திருந்தனர். இது பற்றி தெரியவந்ததும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரெயில் நிலையம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர் காஜா மைதீன் தலைமையில் ரெயில் மறியல் செய்ய ஊர்வலமாக வந்தனர்.

    அப்போது அவர்கள் அமித் ஷாவுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். தொடர்ந்து அவர்கள் ரெயில் நிலையத்திற்குள் நுழைய முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது போலீசாருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கும் இடையே தள்ளு, முள்ளு ஏற்பட்டது. பின்னர் ரெயில் மறியலுக்கு முயன்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ரெயில் நிலையத்திற்கு முன்பு போராட்டம் நடத்தினர். இதனால் ரெயில் நிலையம் முன்பு பரபரப்பு நிலவியது.

    • பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினமும் ஏராளமானோர் சிகிச்சைக்கு வந்து செல்கிறார்கள்.
    • 2-வது நாளாக இன்றும் ஆஸ்பத்திரி கழிவறைகளில் தண்ணீர் வரவில்லை.

    சேலம்:

    சேலம் அரசு தலைமை ஆஸ்பத்திரி மல்டி ஸ்பெசா லிட்டி ஆஸ்பத்திரியாக செயல்பட்டு வருகிறது. இதனால் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, ஈரோடு உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினமும் ஏராளமானோர் சிகிச்சைக்கு வந்து செல்கிறார்கள்.

    இதனால் 1000-த்திற்கும் மேற்பட்டோர் வெளி நோயாளிகளாக தினமும் சிகிச்சை பெற்று செல்லும் நிலையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உள் நோயாளிகளாகவும் இங்கு தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதனால் சேலம் அரசு ஆஸ்பத்திரி எப்போதும் நோயாளிகள் மற்றும் அவர்களை பார்க்க வருபவர்கள் என மக்கள் கூட்டத்தால் பரபரப்பாக காட்சி அளிக்கும்.

    இந்த நிலையில் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் நேற்று மதியம் முதல் கழிவறைகள் மற்றும் கை, பாத்திரங்கள் கழுவும் இடங்களிலும் தண்ணீர் வரவில்லை. இதனால் நோயாளிகள் ஒவ்வொரு அறையாக தண்ணீருக்கு அலைந்தும் அங்கும் தண்ணீர் கிடைக்கவில்லை. இதனால் நேற்றிரவு முதல் கழிவறை செல்பவர்கள் கூட தண்ணீர் இல்லாமல் கடும் அவதிப்பட்டனர். இதனால் கழிவறை அருகில் செல்ல முடியாமல் துர் நாற்றம் வீசுகிறது.

    2-வது நாளாக இன்றும் ஆஸ்பத்திரி கழிவறைகளில் தண்ணீர் வரவில்லை. இதனால் அங்கு தங்கியிரு க்கும் நோயாளிகள் இயற்கை உபாதை கழிக்க முடியாமல் கடும் அவதிப்பட்டனர். மேலும் நோயாளிகளின் உறவினர்கள் வெளியில் சென்று இயற்கை உபாதைகளை கழித்து வருகிறார்கள்

    உள் நேயாளிகள் வெளியிலும் செல்ல முடியாமல், இயற்கை உபாதையும் கழிக்க முடியாமலும் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். சிலரது உறவினர்கள் வெளியில் சென்று பாத்திரங்களில் தண்ணீர் வாங்கி பயன்படுத்தினர். இதே போல சேலம் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள கழிவறையிலும் 2-வது நாளாக இன்றும் தண்ணீர் வராததால் போலீசாரும் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள்.

    எனவே உடனடியாக அரசு ஆஸ்பத்திரியில் சீரான தண்ணீர் வழங்கி நோயாளிகளின் பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுப்பதுடன், தடையற்ற மின்சாரமும் வழங்க வேண்டும் என்பது அங்கு சிகிச்சை பெறுபவர்களின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.

    ×