என் மலர்tooltip icon

    சேலம்

    • கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணைக்கு நீர்வரத்து இன்று காலை 7 ஆயிரத்து 7 கன அடியாக உள்ளது.
    • ஒகேனக்கல் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்தது.

    சேலம்:

    காவிரியில் தண்ணீர் திறந்து விடுவது தொடர்பாக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நாளை மறுநாள் விசாரணைக்கு வருகிறது.

    இதையொட்டி காவிரி மேலாண்மை அவசர கூட்டம் டெல்லியில் உள்ள காவிரி மேலாண்மை ஆணையத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மேலாண்மை ஆணையத்தின் தலைவர் ஹால்தார் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் தமிழ்நாடு சார்பில் சந்தீப்சக்சேனா தலைமையில் அதிகாரிகள் பங்கேற்றனர்.

    ஆனால் கர்நாடகா தரப்பில் அதிகாரிகள் யாரும் பங்கேற்கவில்லை. இதில் தமிழக அதிகாரிகள் தரப்பில் 12 ஆயிரத்து 500 கன அடி வீதம் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என அதிகாரிகள் வற்புறுத்தினர். ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை கர்நாடக அரசு செயல்படுத்தவில்லை என்றும் குற்றம்சாட்டினர்.

    இதைத்தொடர்ந்து ஆணைய தலைவர் ஹல்தார் ஒழுங்காற்று குழு பரிந்துரைத்தபடி தமிழ்நாட்டிற்கு வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி வீதம் 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என கர்நாடகத்திற்கு உத்தரவிட்டார். ஆனால் கர்நாடகாக தண்ணீர் திறக்குமா? என்ற எதிர்பார்ப்பு தமிழக விவசாயிகளிடையே எழுந்தது.

    இந்த நிலையில் கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணைக்கு நீர்வரத்து இன்று காலை 7 ஆயிரத்து 7 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து 2 ஆயிரத்து 171 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 97.06 அடியாக உள்ளது.

    கபினி அணைக்கு இன்று காலை நீர்வரத்து 3 ஆயிரத்து 525 கன அடியாக இருந்தது. அணையில் இருந்து 1663 கன அடி தண்ணீர் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 76.18 அடியாக உள்ளது.

    2 அணைகளில் இருந்தும் நேற்று தண்ணீர் திறப்பு 2 ஆயிரத்து 769 னஅடியாக இருந்த நிலையில் இன்று காலை 3 ஆயிரத்து 834 கன அடியாக தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    ஒகேனக்கல் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்தது. தற்போது அந்த பகுதிகளில் மழை குறைந்துள்ளது. இதனால் ஒகேனக்கல்லில் தண்ணீர் வரத்து குறைந்துள்ளது. ஒகேனக்கல்லில் நேற்று முன்தினம் 5 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்த நிலையில் நேற்று முதல் 4 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    மேட்டூர் அணைக்கு நேற்று காலை 2 ஆயிரத்து 556 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று சற்று அதிகரித்து 2 ஆயிரத்து 844 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து கடந்த சில நாட்களாக காவிரியில் 6 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. நேற்று 40.38 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மேலும் சரிந்து 39.75 அடியாக சரிந்தது.

    இனி வரும் நாட்களில் நீர்வரத்து சரியும் பட்சத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் சரிய வாய்ப்புள்ளது. இதனால் காவிரி டெல்டா விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    • இருவரின் சடலங்களையும் போலீசர் கைப்பற்றியுள்ளனர்.
    • இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேலம் மேட்டூர் அருகே காவிரியில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.

    மேட்டூர் அருகே தொட்டில்பட்டி பகுதியில் அணையின் உபரி நீர் கால்வாயில் விநாயகர் சிலையை கரைக்கச் சென்ற இரு சிறுவர்கள் தண்ணீரில் மூழ்கி இறந்துள்ளனர்.

    செந்தில் என்பவரின் மகன் சந்தோஷ் (14), சிவராமன் என்பவரின் மகன் நந்தகுமார் (14) இருவரின் சடலங்களையும் போலீசர் கைப்பற்றியுள்ளனர்.

    விநாயகர் சிலை கரைப்பதற்காக காவிரியில் இறங்கியபோது இந்த விபரீதம் நேர்ந்துள்ளது.

    இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஜனனி (வயது 21). இவர் சேலம் அம்மாப்பேட்டையில் உள்ள தனியார் கல்லூரி விடுதியில் தங்கி பி.எஸ்.சி மைக்ரோபயாலஜி படித்து வந்தார்.
    • கடந்த 16-ந் தேதி விடுமுறைக்கு ஊருக்கு சென்று விட்டு நேற்று மாலையில் மாணவி கல்லூரி விடுதிக்கு வந்தார்.

    சேலம்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள கெலமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ஜனனி (வயது 21). இவர் சேலம் அம்மாப்பேட்டையில் உள்ள தனியார் கல்லூரி விடுதியில் தங்கி பி.எஸ்.சி மைக்ரோபயாலஜி படித்து வந்தார். கடந்த 16-ந் தேதி விடுமுறைக்கு ஊருக்கு சென்று விட்டு நேற்று மாலையில் மாணவி கல்லூரி விடுதிக்கு வந்தார். இன்று காலை வெகுநேரம் ஆகியும் அறை கதவு திறக்காததால் சந்தேகம் அடைந்த சக மாணவிகள் வார்டனிடம் கூறினர். அவர்கள் அறை கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது சேலையால் மின்விசிறியில் தூக்குப் போட்டு ஜனனி தற்கொலை செய்து செய்தது தெரியவந்தது. இது பற்றி தகவல் அறிந்த அம்மாப்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் இன்று காலை முதல் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
    • விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சேலம் மாவட்டம் முழுவதும் 1,915 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.

    சேலம்:

    இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் இன்று காலை முதல் ெவகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    அதுபோல் சேலம் மாவட்டம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக தொடங்கியது.

    1915 ஆயிரம் விநாயகர் சிலைகள்

    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சேலம் மாவட்டம் முழுவதும் 1,915 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.

    அதன்படி சேலம் புறநகர் பகுதியில் உள்ள ஆத்தூர், சங்ககிரி, மேட்டூர், ஓமலூர், வாழப்பாடி ஆகிய 5 உட்கோட்டங்களில் 1050 சிலைகளும், சேலம் மாநகரில் 865 சிலைகளும் வைக்கப்பட்டுள்ளது.

    விநாயகர் சதுர்த்தியைெயாட்டி 1,915 ஆயிரம் விநாயகர் சிலைகள் வைத்து இன்று அதிகாலை வழிபாடு தொடங்கியது. இதில் அழகு மிகுந்த சிறிய சிலைகள் முதல் வியக்க வைக்கும் வகையில் மிக பிரமாண்டமான சிலைகள் வரை இடம் பிடித்துள்ளன. இதற்காக பெரிய பந்தல் அமைத்து மின் விளக்குகள் அலங்காரம், ரேடியோ செட், வாழைதார்கள், பூக்கள் அலங்காரம் செய்துள்ளனர்.

    எருக்கம் பூ அலங்காரம்

    விநாயகருக்கு பிடித்தமான எருக்கம்பூ, அருகம்புல் உள்ளிட்ட மாலைகளை அணிவித்து விதவிதமான கொழுக்கட்டை, சுண்டல், பாயாசம், பழம், அவில், கரும்பு உள்ளிட்டவைகளை படையலிட்டும் விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடைபெற்று வருகிறது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    விநாயகர் சதுர்த்தியையொட்டி கோவில்களிலும் விநாயகருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    ராஜகணபதி

    சேலத்தில் பிரசித்தி பெற்ற ராஜகணபதி கோவிலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. இதையடுத்து கோவிலில் கணபதி ஹோமம் நடந்தது. அதைத்தொடர்ந்து ராஜகணபதிக்கு 108 லிட்டர் பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், திரவியம், மஞ்சள், சந்தனம், விபூதி உள்பட மங்கள பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள், தீபாராத னைகள் நடைபெற்றது.

    தொடர்ந்து ராஜகணபதிக்கு தங்ககவசம் சாத்தப்பட்டது. அதிகாலை முதலே திரளான பக்தர்கள் கோவிலுக்கு வந்து நீண்ட வரிசையில் நின்று ராஜகணபதியை தரிசனம் செய்து வழிபட்டனர். இதையொட்டி சேலம் டவுன் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    தென்னந்தோப்புக்குள் விநாயகர்

    அதனை தொடர்ந்து நெடுஞ்சாலை நகர் சித்தி விநாயகர் கோயில், செவ்வாய்ப்பேட்டை சித்தி, மேயர் நகர் வரசித்தி விநாயகர், ராஜாராம் நகர் விநாயகர் அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. செவ்வாய்பேட்டை அப்பு செட்டி தெரு அரச மரம் பகுதியில் ஸ்ரீ சித்தி புத்தி சமேத கல்யாண கணபதி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. கன்னங்குறிச்சி பெருமாள் கோவில் திடலில் 10 அடி உயரத்தில் சிறப்பு விநாயகர் சிலை அமைத்து பூஜை நடந்தது.

    ஆனந்த சயன அலங்காரம்

    அய்யந்திருமாளிகை பகுதியில் உள்ள விநாயகர் கோவிலில் ஆனந்த சயன அலங்காரத்தில் விநாயகர் அருள் பாலித்தார். செவ்வாய்பேட்டை வாசவி மஹாலில் தென்னந்தோப்புக்குள் விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

    தாதுபாய்குட்டை வேம்பரசர் விநாயகர் கோவிலில் மகா கணபதி ஹோமம் நடைபெற்றது. கந்தாஸ்ரமம் மற்றும் சிவன், பெருமாள் கோவிலில்களிலும் விநாயகருக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. அரிசிப்பாளையம் தெப்பக்குளம் அருகே உள்ள சித்தி விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    சேலம் சங்கர் நகரில் உள்ள வரசித்தி விநாயகர், பெரமனூரில் உள்ள சிதம்பர விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு விநாயகரை வழிபட்டனர்.

    பிரசித்தி பெற்ற எல்லைப்பிடாரியம்மன் கோவில் அருகே வைக்கப் பட்டுள்ள விநாயகர் சிலைக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதேபோல் சேலம் மாநகரில் ஜங்சன், அஸ்தம்பட்டி, குகை, செவ்வாய்பேட்டை, ரத்தினசாமிபுரம், சங்கர் நகர், பெரமனூர், கிச்சிப்பாளையம், அம்மாபேட்டை, கொண்டலா ம்பட்டி, சூரமங்கலம் உள்பட பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது.

    இேதா போல் ஆத்தூர், தலைவாசல், பெத்தநாயக்கன் பாளையம், வாழப்பாடி, அயோத்தியப்பட்டணம், கெங்கவல்லி, நங்கவள்ளி, மேட்டூர், கொளத்தூர், மேச்சேரி, தாரமங்கலம், ஓமலூர், காடையாம்பட்டி, ஏற்காடு, எடப்பாடி, சங்ககிரி, தேவூர், மகுடஞ்சாவடி, காகாபாளையம், இடங்கணசாலை, வீராணம், வீரபாண்டி உள்பட அனைத்து பகுதிகளிலும் உள்ள விநாயகர் கோவிலில்களிலும் இன்று விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இக்கோவில்களில் பக்தர்கள், பொதுமக்கள் குடும்பம் குடும்பமாக வந்து வழிப்பட்டனர். ஒரு சில கோவில்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து விநாயகரை தரிசனம் செய்தனர்.

    பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.

    3500 போலீஸ் பாதுகாப்பு

    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில் சேலம் மாநகர், மாவட்டம் முழுவதும் 3500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • வட்டார அளவிலான 14 வயதோருக்கான வட்டெறிதல் போட்டியில் துக்கியாம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவர் மு. சந்தோஷ்குமார் முதலிடம் பெற்றார்.
    • இந்த மாணவர்கள் அனைவரும் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டியில் பங்கு பெற தகுதி பெற்றனர்.

    வாழப்பாடி:

    தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை சார்பில் வாழப்பாடியில் நடைபெற்ற வட்டார அளவிலான 14 வயதோருக்கான வட்டெறிதல் போட்டியில் துக்கியாம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவர் மு. சந்தோஷ்குமார் முதலிடம் பெற்றார்.

    எட்டாம் வகுப்பு மாணவர் இ. தோர்னேஷ் மூன்றாமிடம் பிடித்தார். நீளம் தாண்டுதலில் ஒன்பதாம் வகுப்பு செ. சூரியா மூன்றாமிடமும், 14-வயதுக்குட்பட்ட மாணவிகளுக்கான குண்டு எறிதல் போட்டியில் ஒன்பதாம் வகுப்பு மு.தீபிகா முதலிடமும், வட்டெறிதல் போட்டியில் இரண்டாமிடமும் பிடித்தார். இந்த மாணவர்கள் அனைவரும் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டியில் பங்கு பெற தகுதி பெற்றனர்.

    வட்டார அளவிலான விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களையும், பயிற்சி அளித்த உடற்பயிற்சி ஆசிரியர் பெ.மணிகண்டனையும், பள்ளி தலைமையாசிரியர் கு. வெங்கடாசலம் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் பரிசுகள் வழங்கி பாராட்டினர்.

    • அணைக்கு வரும் நீரின் அளவை விட திறப்பு அதிகமாக உள்ளதால் மேட்டூர் அணை நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.
    • வருண பகவான் கருணை காட்ட வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

    சேலம்:

    மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் டெல்டா பாசனத்திற்காக ஜூன் மாதம் 12-ந்தேதி தண்ணீர் திறப்பது வழக்கம்.

    அதன்படி நடப்பாண்டு மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு கடந்த ஜூன் மாதம் 12-ந்தேதி முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதனால் டெல்டாவில் உள்ள 12 மாவட்டங்களில் விவசாயிகள் 3 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி மேற்கொண்டனர்.

    இந்நிலையில் கர்நாடக அரசு கிருஷ்ணராஜசாகர், கபினி உள்ளிட்ட அணைகளில் இருந்து காவிரியில் தமிழகத்திற்கு திறந்து விட வேண்டிய உரிய தண்ணீரை திறந்து விடாமல் தொடர்ந்து மறுத்து வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வெகுவாக சரிந்தது.

    இந்நிலையில் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தற்போது பெய்து வரும் தென்மேற்கு பருவமழை மேட்டூர் அணைக்கு கைகொடுத்து வருகிறது. பிலிகுண்டு, ஒகேனக்கல், கொளத்தூர், மேட்டூர் உள்ளிட்ட காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு சாரல் மழை பொழிந்து வருவதால் மேட்டூர் அணைக்கு ஓரளவு நீர்வரத்து அதிகரித்தப்படி உள்ளது.

    நேற்று காலையில் 2,244 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலையில் வினாடிக்கு 2,556 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு வினாடிக்கு 6,500 கன அடி வீதம் நீர் பாசனத்திற்கு திறக்கப்பட்டு வருகிறது.

    அணைக்கு வரும் நீரின் அளவை விட திறப்பு அதிகமாக உள்ளதால் மேட்டூர் அணை நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. நேற்று காலையில் 41.05 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று 40.38 அடியாக சரிந்தது. அணையில் 12.28 டி.எம்.சி. நீர் இருப்பு உள்ளது. இதில் 6 டி.எம்.சி.தண்ணீர் குடிநீர் மற்றும் மீன்வளத்துக்கு பயன்படுத்தப்படும்.

    நீர் திறப்பு தொடர்ந்து 6,500 கன அடி அளவில் நீடித்தால் இன்னும் 5 நாட்களுக்கு மட்டுமே அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்க முடியும் சூழல் உருவாகி உள்ளது.

    தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்தால் மட்டுமே மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே வருண பகவான் கருணை காட்ட வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

    • தமிழக பகுதி நேர சிறப்பாசிரியர்கள் சங்கத்தின் வட்டார ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
    • இக்கூட்டத்திற்கு வாழப்பாடி ஓவிய ஆசிரியர் ஓ.ப.முருகன் தலைமை வகித்தார். பேளூர் சுரேஷ் வரவேற்றார்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடியில் தமிழக பகுதி நேர சிறப்பாசிரியர்கள் சங்கத்தின் வட்டார ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு வாழப்பாடி ஓவிய ஆசிரியர் ஓ.ப.முருகன் தலைமை வகித்தார். பேளூர் சுரேஷ் வரவேற்றார். பகுதி நேர சிறப்பாசிரியர்கள் செல்வம், நந்தகுமார், கிரேசி குமாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாவட்ட செயலாளர் ராமகேசவன், பொருளாளர் காதர் மொய்தீன், உயர்மட்டக்குழு உறுப்பினர் சங்கீதா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பாசிரியர்களின் பணி நிரந்தர கோரிக்கை போராட்டம் குறித்து ஆலோசனை வழங்கினர்.

    பகுதி நேர சிறப்பாசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி வருகிற 25-ந் தேதி சென்னையில் நடைபெறும் காலவரையற்ற காத்திருப்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் அனைவரும் தவறாமல் கலந்து கொள்வதென இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நிறைவாக சிறப்பாசிரியர் சங்கர் கணேஷ் நன்றி கூறினார்.

    • சங்ககிரி கோட்டத்தில் நடந்த கொலை, கொள்ளை, கற்பழிப்பு, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான பதிவேடுகளை பார்வையிட்டு தணிக்கை செய்தார்.
    • மேலும், நீண்ட கால வழக்குகளை விரைந்து முடிக்கவும், பழைய குற்றவாளிகளை உடனடியாக பிடித்து தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும் என்றார்.

    சங்ககிரி:

    சங்ககிரி டி.எஸ்.பி. அலுவலகத்தில் சேலம் சரக டி.ஐ.ஜி ராஜேஸ்வரி ஆய்வு மேற்கொண்டார். அப்போது சங்ககிரி கோட்டத்தில் நடந்த கொலை, கொள்ளை, கற்பழிப்பு, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான பதிவேடுகளை பார்வையிட்டு தணிக்கை செய்தார். மேலும், நீண்ட கால வழக்குகளை விரைந்து முடிக்கவும், பழைய குற்றவாளிகளை உடனடியாக பிடித்து தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும் என்றார்.

    மேலும் திருட்டு வழக்கு நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பண்ணை வீடுகளில் தனியாக வசிப்பவர்கள் மற்றும் வயது முதிர்ந்து தனியாக வசிப்பவர்களின் முகவரிகளை சேகரித்து இரவு நேரங்களில் காவல்துறையினர் கண்காணிப்பு மேற்கொள்ள அறிவுறுத்தினார்.

    தொடர்ந்து, சிறுவர் சிறுமியர் மனமகிழ் மன்றத்தில் நடைபெற்ற மாணவ, மாணவியர்கள் தனித்திறமையை பார்வையிட்டு, புத்தகப்பை, பேனா, பென்சில், டிபன்பாக்ஸ் வழங்கினார். பின்பு அலுவலக வளாகத்தில் மரக்கன்று நட்டார். ஆய்வின்போது டி.எஸ்.பி ராஜா, இன்ஸ்பெக்டர்கள் தேவி(சங்ககிரி), சந்திரலேகா (எடப்பாடி), வளர்மதி(மகளிர் போலீஸ்), ஹேமலதா (போக்குவரத்து போலீஸ்), குமரவேல்பாண்டியன் (கொங்கணாபுரம்), வெங்கடேஸ்பிரபு (மகுடஞ்சாவடி) மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.

    • சேலம் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் நவநீதிகிருஷ்ணன் மகுடஞ்சாவடி வட்டாரத்தில் விதைச்சான்று பணிகள் தொடர்பான களஆய்வு மேற்கொண்டார்.
    • அப்போது விதைச்சான்று பணிக்காக பதிவு செய்யப்பட்டி ருந்த நிலக்கடலை டி.எம்.வி-14 ரகத்தை ஆய்வு செய்தார்.

    சேலம்:

    சேலம் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் நவநீதிகிருஷ்ணன் மகுடஞ்சாவடி வட்டாரத்தில் விதைச்சான்று பணிகள் தொடர்பான களஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது விதைச்சான்று பணிக்காக பதிவு செய்யப்பட்டி ருந்த நிலக்கடலை டி.எம்.வி-14 ரகத்தை ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து உற்பத்தியாளர் மற்றும் சாகுபடியாளர்களுக்கு விதைப் பண்ணை வயல்களை கலவன்கள் இன்றி பராமரித்தலின் அவசியத்தையும் அதன் பொருட்டு புறத்தோற்றத்திலும், குணாதிசயங்களிலும் மாறுபட்டுள்ள பிற ரக மற்றும் இதர செடிகளை நன்கு அடையாளம் கண்டு கலவன்களை நீக்கவும் நோய் தாக்கிய செடிகளை அப்புறப்ப டுத்தவும் அறிவுறுத்தினார்.

    பின்னர் தனியார் விதை சுத்தி நிலையம் உரிமம் வழங்க ஆய்வு மேற்கொண்டு விதைகளை சுத்தம் செய்ய, தரம் பிரிக்க, விதை நேர்த்தி செய்ய, எடையிட, விதைப்பைகளை தைக்க, விதையின் ஈரப்பதத்தை அளக்க உள்ள எந்திரங்கள் சரியாக உள்ளதா என ஆய்வு மேற்கொண்டார்.

    மேலும் மகுடஞ்சாவடி ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மைய வேளாண் கிடங்கில், விதை சுத்தி பணிகளை ஆய்வு செய்து விதை நேர்த்தி செய்யப்பட்டுள்ளதா? உரிய சான்று அட்டை பொருத்தப்பட்டுள்ளதா? என ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த ஆய்வின் போது சங்க கிரி விதைச்சான்று அலுவ லர் செந்தில்குமார், மகுடஞ்சாவடி உதவி விதை அலுவலர் மாணி க்கம் ஆகியோர் உடனிருந்தார்.

    • சேலம் லைன்மேட்டை சேர்ந்த வாலிபருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் நேற்று திருமணம் நடைபெற இருப்பதாக அன்னதானப்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • போலீசார் உரிய வயது வரும் வரை சிறுமிக்கு திருமணம் செய்து வைக்கக் கூடாது என்று அறிவுரைகள் கூறி அந்த திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.

    அன்னதானப்பட்டி:

    சேலம் லைன்மேட்டை சேர்ந்த வாலிபருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் நேற்று திருமணம் நடைபெற இருப்பதாக அன்னதானப்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர்.

    இது தொடர்பாக மேல் விசாரணைக்காக அவர்களை சேலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து இருதரப்பினரையும் அழைத்த போலீசார் உரிய வயது வரும் வரை சிறுமிக்கு திருமணம் செய்து வைக்கக் கூடாது என்று அறிவுரைகள் கூறி அந்த திருமணத்தை தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து அவர்களை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

    • முகமது அப்துல் மஜீத் (34). இவரது செல்போன் வாட்ஸ்அப்-க்கு கடந்த மாதம் 17-ந் தேதி குறுச்செய்தி வந்தது.
    • அதில் பேசிய மர்ம நபர் குறிப்பிட்ட இணையதளத்தில் பதிவு செய்து பணம் கட்டினால் அதிக லாபம் கிடைக்கும் என கூறியுள்ளார்.

    சேலம்:

    சேலம் சூரமங்கலம் தர்மநகர் பகுதியை சேர்ந்தவர் முகமது அப்துல் மஜீத் (34). இவரது செல்போன் வாட்ஸ்அப்-க்கு கடந்த மாதம் 17-ந் தேதி குறுச்செய்தி வந்தது.

    அதில் பகுதி நேர வேலை இருப்பதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. இதையடுத்து அதில் வந்த செல்போன் எண்ணை முகமது அப்துல் மஜீத் தொடர்பு கொண்டு பேசினார்.

    அதில் பேசிய மர்ம நபர் குறிப்பிட்ட இணையதளத்தில் பதிவு செய்து பணம் கட்டினால் அதிக லாபம் கிடைக்கும் என கூறியுள்ளார்.

    இதைதொடர்ந்து முகமது அப்துல் மஜீத் பல்வேறு தவணைகளாக ரூ.8 லட்சத்து 10 ஆயிரம் வரை பணம் பட்டியுள்ளார்.

    இதனிடையே கட்டிய பணம் திரும்பி வராததால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த முகமது அப்துல் மஜீத் இதுகுறித்து போலீசில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பழனியம்மாள் வழக்கு பதிவு செய்து அந்த மர்மநபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றார்.

    • சசிக்குமார் (22). ராசிபுரம் அடுத்த பாச்சல் தனியார் கல்லூரியில் பி.இ. 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.
    • இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. மேலும் ஒரே தெருவில் வசித்து வந்ததால் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.

    அன்னதானப்பட்டி:

    சேலம் நெத்திமேடு கே.பி. கரடு பகுதியை சேர்ந்தவர் சசிக்குமார் (22). ராசிபுரம் அடுத்த பாச்சல் தனியார் கல்லூரியில் பி.இ. 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    இவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் ஷாலினி (20). இவர் சேலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. மேலும் ஒரே தெருவில் வசித்து வந்ததால் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.

    நாளடைவில் இந்த பழக்கம் காதலாக மாறியது. இதையடுத்து இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக தீவிரமாக காதலித்து வந்துள்ளனர்.

    இவர்களது காதல் விவகாரம் தெரிந்து இருதரப்பு வீட்டிலும் எதிர்ப்பு கிளம்பியது. இதைத் தொடர்ந்து வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.

    இந்த நிலையில் நேற்று நாமக்கல் நரசிம்மர், ஆஞ்சநேயர் கோவிலில் வைத்து இருவரும் தாலி கட்டி திருமணம் செய்து கொண்டனர். தொடர்ந்து பாதுகாப்பு கேட்டு இரவு அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இது தொடர்பாக அவர்களின் பெற்றோரை அழைத்து போலீசார் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து காதல் ஜோடியை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

    ×