search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 3,367 கன அடியாக அதிகரிப்பு
    X

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 3,367 கன அடியாக அதிகரிப்பு

    • கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் 4,674 கன அடி திறப்பு
    • கர்நாடக-தமிழக எல்லையில் உள்ள பிலிகுண்டு பகுதியில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

    சேலம்:

    தமிழகம்-கர்நாடகா இடையே பல ஆண்டுகளாக காவிரி நீர் பிரச்சினை நீடித்து வருகிறது. குறிப்பாக போதிய மழை பெய்யாத காலக்கட்டத்தில் இந்த பிரச்சினை ஏற்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை பொய்த்து போனதால் கர்நாடக அணைகளுக்கு நீர் வரத்து குறைந்துவிட்டது.

    இந்நிலையில் தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடக அரசுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீர் 15 நாட்களுக்கு திறந்து விடவேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால் கர்நாடக அரசு தண்ணீரை முழுமையாக வழங்க தொடர்ந்து மறுத்து வருகிறது.

    ஏற்கனவே இதுபோல் தண்ணீர் திறந்து விட அறிவுறுத்தியும் கர்நாடக அரசு கண்டு கொள்ளவில்லை. கர்நாடக அரசு பெயரளவுக்கு கிருஷ்ண ராஜசாகர், கபினி அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விட்டு வருகிறது.

    அதன்படி தமிழகத்திற்கு நேற்று முன்தினம் முதல் இரு அணைகளில் இருந்தும் வினாடிக்கு 3,834 கனஅடி நீர் திறந்து விடப்பட்டது. 2-வது நாளாக நேற்று 2 அணைகளில் இருந்தும் தண்ணீர் திறப்பு 4 ஆயிரத்து 674 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.

    இன்றும் அதே அளவு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அதாவது மண்டியா மாவட்டம் கண்ணம்பாடியில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கே.ஆர்.எஸ் அணையில் இருந்து வினாடிக்கு 2,674 கன அடி நீர் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டு உள்ளது. அணைக்கு வினாடிக்கு 5,336 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் 124.80 அடி கொள்ளளவு கொண்ட அணையின் நீர்மட்டம் 97.02 அடியாக உள்ளது.

    அதேபோல மைசூரு எச்.டி.கோட்டையில் உள்ள கபினி அணையில் இருந்து வினாடிக்கு 2,000 கன அடி நீர் தமிழகத்திற்கு திறந்துவிடப்பட்டு உள்ளது. கபினி அணையின் நீர்மட்டம் 75.70 அடியாக உள்ளது. இந்த அணைக்கு நீர் 2,799 கன அடி வந்து கொண்டிருக்கிறது.

    இந்த நீர்வரத்தை கர்நாடக-தமிழக எல்லையில் உள்ள பிலிகுண்டு பகுதியில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

    இந்நிலையில் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான பிலிகுண்டு, ஒகேனக்கல், கொளத்தூர், மேட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை கொட்டுகிறது. இந்த மழை மேட்டூர் அணைக்கு கைகொடுத்துள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தபடி உள்ளது.

    மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் 2 ஆயிரத்து 844 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று சற்று அதிகரித்து 2 ஆயிரத்து 938 கன அடி நீர் வந்தது. இன்று காலையில் நீர்வரத்து மேலும் அதிகரித்து வினாடிக்கு 3,367 கன அடி நீர் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து கடந்த சில நாட்களாக காவிரியில் 6 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.

    நேற்று முன்தினம் 39.75 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் நேற்று 39.13 அடியாக சரிந்தது. இன்று காலை 8 மணி அளவில் நீர்மட்டம் மேலும் சரிந்து 38.57 அடியானது.

    Next Story
    ×