என் மலர்
ராணிப்பேட்டை
- போலீசார் ரோந்து பணியில் சிக்கினார்
- 200 பாட்டில்கள் பறிமுதல்
காவேரிப்பாக்கம்:
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த சிறுணமல்லி பகுதியில் நெமிலி சப்இன்ஸ்பெக்டர் லோகேஷ் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது புத்தேரி கிராமத்தில் சந்தேகப்படும்படி நின்ற வாலிபரை பிடித்து விசாரித்தனர்.
அவர் சிறுணமல்லி கிராமத்தை சேர்ந்த முனுசாமி என்பவரின் மகன் அருண் (வயது 23) என்பதும், அனுமதி இன்றி மது பாட்டில்கள் விற்றதும் தெரிய வந்தது.
போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்த 200 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
- 3 முறை முழு கொள்ளளவைவும், 4 முறை 75 சதவீத கொள்ள ளவையும் எட்டியுள்ளது.
- சுற்றுலா மாளிகை சிதலமடைந்து தற்போது சமூக விரோதிகள் கூடாரமாக மாறி உள்ளது
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி வட்டத்தில் உள்ள காவேரிப்பாக்கம் ஏரியானது, தமிழகத்திலேயே 3-வது பெரிய ஏரியாக உள்ளது. இந்த ஏரி 650 ஆண்டுகளுக்கு முன் பல்லவ மன்னன் 3-ம் நந்திவர்மனால் விவசாயிகள் நலன் கருதி உருவாக்கப்பட்டது.
இது சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் காவேரிப்பாக்கத்தில் இருந்து சோளிங்கர் செல்லும் சாலையில் அமைந்துள்ளது.
பார்ப்பதற்கு அழகாக காட்சியளிக்கும் இந்த ஏரி 3968 ஏக்கர் பரப்பளவும்,1474 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்டது. ஏரியின் உயரம் 30.65 அடி, கரையில் நீளம் 9 கிலோமீட்டர் ஆகும். தற்போது இந்த ஏரி பொதுப்பணித்துறையின் பராமரிப்பில் உள்ளது.
இந்த ஏரியின் மூலம் நேரடியாக 6200 ஏக்கர் நிலங்களும், அதன் உபரி நீரின் மூலமாக 41 ஏரிகள் நிரம்பி,10 ஆயிரம் ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன.
கடந்த 10 ஆண்டுகளில் 3 முறை முழு கொள்ளளவைவும், 4 முறை 75 சதவீத கொள்ள ளவையும் எட்டியுள்ளது.
மேலும் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரன் முதலமைச்சராக இருந்த காலகட்டங்களில் அடிக்கடி காவேரிப்பாக்கம் ஏரிக்கு வந்து அங்கிருந்த கலை நுட்பத்துடன் கட்டப்பட்ட சுற்றுலா மாளிகையில் தங்கி ஓய்வெடுத்து செல்வது வழக்கமாக இருந்தது.
கலை நுட்பத்துடன் கம்பீரமாக காட்சி அளித்த அந்த சுற்றுலா மாளிகை சிதலமடைந்து தற்போது சமூக விரோதிகள் கூடாரமாக மாறி உள்ளது.
கடல் போல் காட்சி அளித்து கொண்டிருக்கும் இந்த காவேரிப்பாக்கம் ஏரியின் அழகை மேலும் அழகு படுத்தும் விதமாக ஏரியை சுற்றி பூங்கா, படகு இல்லம் போன்றவை அமைக்க வேண்டும்.
மேலும் சிதலமடைந்திருக்கும் சுற்றுலா மாளிகையை மறு சீரமைத்து சிறந்த சுற்றுலா தலமாக மாற்றட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இதன் மூலம் 10 கிலோமீட்டர் சுற்றளவிலுள்ள திருப்பாற்கடல் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில், சோளிங்கர் யோகநரசிம்ம பெருமாள் கோவில், வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடம், ஓச்சேரி சித்தஞ்சி சிவகாளி சித்தர் பீடம் மற்றும் ரத்னகிரி பால முருகன் கோவில், வேலூர் ஜலகண்டேசுவரர் கோவில், ஸ்ரீபுரம் பொற்கோவில் ஆகியவற்றை காணவரும் சுற்றுலா பயணிகளுக்கு, காவேரிப்பாக்கம் ஏரி ஒரு சிறந்த சுற்றுலா தலமாக இருப்பதுடன் அங்குள்ள பொதுமக்களின் வாழ்வாதாரமும் மேம்படும்.
எனவே காவேரிப்பாக்கம் ஏரியை சீரமைத்து ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒரு சிறந்த சுற்றுலா தலமாக அமைக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.
- நண்பரைப் பார்த்துவிட்டு வீடு திரும்பியபோது பரிதாபம்
- தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்
ஆற்காடு:
ஆற்காடு குட்டைக்கரை தெருவை சேர்ந்தவர் முனுசாமி மகன் சதீஷ்(வயது37). இவர் அப்பகுதியில் உள்ள பைக் விற்பனை கடையில் வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று இரவு ராணிப்பேட்டையில் உள்ள தனது நண்பரை பார்ப்பதற்காக பைக்கில் சென்றுள்ளார்.
பின்னர் நண்பரைப் பார்த்துவிட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.
அப்போது அவர் ஆற்காடு பழைய மேம்பாலம் அருகே வந்தபோது சென்னையிலிருந்து-வேலூர் நோக்கி சென்று கொண்டிருந்த டேங்கர் லாரி சதீஷின் பைக்கின் மீது மோதியது.
இதில் சதீஷ் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஆற்காடு டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் லாரியை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.
- பிளாட்பாரத்தின் அருகே நேற்று இரவு பிராங்கிளின் நடந்து சென்றார்.
- அரக்கோணம் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
அரக்கோணம்:
சென்னை ஆழ்வார்பேட்டையை சேர்ந்தவர் பிராங்கிளின் (வயது 25). இவரது பெரியம்மா வீடு அரக்கோணம் ரெயில் நிலையம் அருகே உள்ள ஏ.வி.எம். சர்ச் பகுதியில் உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பிராங்கிளின் அவரது பெரியம்மா வீட்டுக்கு வந்திருந்தார்.
அரக்கோணம் ரெயில் நிலையத்தில் பழைய 8-வது பிளாட்பாரம் உள்ளது. செங்கல்பட்டு வழியாக செல்லும் ரெயில்கள் நிற்கும் இந்த பிளாட்பாரம் தற்போது பயன்படுத்தப்படாமல் உள்ளது.
இந்த பிளாட்பாரத்தின் அருகே நேற்று இரவு பிராங்கிளின் நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் பிராங்கிளினை திடீரென சரமாரியாக வெட்டினர்.
அவர்களிடம் இருந்து தப்பி ஓடினார். கும்பல் ஓட ஓட விரட்டி கத்தியால் சரமாரியாக வெட்டினர். உடலில் பலத்த காயம் ஏற்பட்டதால் பிராங்கிளின் சரிந்து விழுந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அதிர்ச்சடைந்த பயணிகள் அலறியடித்துக் கொண்டு அங்கிருந்து சிதறி ஓடினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த அரக்கோணம் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
மேலும் படுகாயம் அடைந்தவரை மீட்டு சிகிச்சைக்காக அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
சிகிச்சை பெற்று வந்த நிலையில் பிராங்கிளின் இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
பிராங்கிளின் அரக்கோணம் ஏ.வி.எம். சர்ச் பகுதியில் வசித்து வரும் தன்னுடைய பெரியம்மா வீட்டுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வந்தார்.
தற்போது பெரியம்மா வீட்டிலேயே தங்கி வேலை செய்து வந்தார். இவருக்கும் சென்னையை சேர்ந்த சில பேருக்கும் முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக அவர் தனது பெரியம்மா வீட்டில் தங்கி இருந்தார்.
இதனை நோட்டமிட்ட சென்னை கும்பல் திட்டமிட்டு கொலை செய்திருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறோம். அரக்கோணம் ரெயில் நிலையம் அருகே உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகிறோம் என்றனர்.
- ரூ.99 லட்சத்தில் நிதி ஒதுக்கீடு
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
சோளிங்கர்:
சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட காமராஜர் நகர், கொண் டபாளையம், அண்ணாநகர், எசையனூர், மோட்டூர் உள் ளிட்ட 18 தெருக்களுக்கு நகர்ப்புற சாலை மேம்பாட்டுத்திட்டத்தின்கீழ் ரூ.99 லட்சம் மதிப்பில் சிமெண்டு சாலை அமைக் கும் பணிக்கான பூமிபூஜை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு 21-வது வார்டு உறுப்பினர் ராதா வெங்கடேசன் தலைமை தாங்கி னார். நகராட்சிபொறியாளர் ஆசீர்வாதம், நகராட்சிபொதுப் பணி மேற்பார்வையாளர் ஆனந்தன், நகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் சரத்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளர்களாக நகராட்சி தலைவர் தமிழ்ச் செல்வி, துணைத் தலைவர் பழனி, தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் சிவானந்தம், தலைமை செயற்குழு உறுப்பினர் அசோகன் ஆகியோர் கலந்து கொண்டு பூமிபூஜை செய்து சிமெண்டு சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தனர்.
இதில் நகராட்சி கவுன்சிலர் அருண்ஆதி, அன்பரசு, மோகனா சண்முகம், பணி ஆய்வாளர் மனோஜ்குமார், நகர செயலாளர் கோபி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒதுக்கீடு
- பூமி பூஜையுடன் நடந்தது
சோளிங்கர்:
சோளிங்கரை அடுத்த போலிப்பாக்கம் கிராமத்தில் சிமெண்டு சாலை அமைக்க முனிரத்தினம் எம்.எல்.ஏ. தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.3 லட்சம் ஒதுக்கினார்.
அந்த நிதியின்கீழ் சிமெண்டு சாலை அமைக்கும் தொடக்க நிகழ்ச்சி திரவுபதி அம்மன் கோவில் அருகில் பூமி பூஜையுடன் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் முன்னாள் தி.மு.க. ஒன்றிய செயலாளர் இ.செல்வம் தலைமை தாங்கினார். இதில் ஊராட்சி மன்ற தலைவர் எம்.கார்த்திக், நிர்வாகிகள் ஆறுமுகம், பார்த்திபன், கடிகாசலம் பாரதி, ரவி, முரளிதரன், பரந்தாமன், பாக்யராஜ் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- 2 நாட்களாக சரிவர சாப்பிடாமல் மன அழுத்தமுடன் இருந்ததார்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை நவல்பூர் கிரேட் நகர் பகுதியை சேர்ந்தவர் அமுதா இவரது மகள் ராஜஸ்ரீ (வயது 23). ராஜஸ்ரீ பி.காம் படித்துவிட்டு வேலூரில் உள்ள தனியார் ஹெல்த் கேர் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தவர்.
கடந்த 2 நாட்களாக ராஜஸ்ரீ சரிவர சாப்பிடாமல் மன அழுத்தமுடன் இருந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில் நேற்று முன்தினம் இரவில் அமுதா காய்கறி வாங்க சந்தைக்கு சென்றுள்ளார்.
பின்னர் அமுதா வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ராஜஸ்ரீ வீட்டின் பூஜை அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இது தொடர்பாக ராணிப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கலெக்டர் வளர்மதி எச்சரிக்கை
- 11 இரகங்கள் கைத்தறிக்கென ஒதுக்கப்பட்டுள்ளது
ராணிப்பேட்டை:
கைத்தறி ரகங்களை விசைத்தறிகளில் உற்பத்தி செய்தால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நம் நாட்டின் கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாக்கவும், கைத்தறி தொழில் நலிவடையாமல் பாதுகாக்கவும். கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையிலும் மத்திய அரசால் 1985-ம் ஆண்டு கைத்தறி ரக ஒதுக்கீடு சட்டம் இயற்றப்பட்டு 1998ஆம் ஆண்டு முதல் 11 இரகங்கள் கைத்தறிக்கென ஒதுக்கப்பட்டுள்ளது.
கைத்தறிக்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட குறிப்பிட்ட தொழில்நுட்ப குறிப்பீடுகளுடைய ரகங்களான கரை பாவுபோட்டு டிசைனுடன் கூடிய காட்டன் வேட்டி இரகம், பாவு பேட்டு மற்றும் ஊடை பேட்டு மற்றும் புட்டா மற்றும் பட்டு சேலை ரகம், கரை மற்றும் முந்தியுடன் கூடிய காட்டன் துண்டு ரகம், கரை பாவு பேட்டு டிசைன் மற்றும் முந்தியுடன் கூடிய கிரே அங்கவஸ்திரம், லுங்கி, பெட்சீட், ஜமுக்காளம், சட்டை துணிகள், கம்பளி, சால்வை, உல்லன்ட்வீட் மற்றும், சத்தார்க் உள்ளிட்ட 11 ரகங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கைத்தறிக்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட ரகங்களை விசைத்தறிகளில் உற்பத்தி செய்வது கைத்தறி ரக ஒதுக்கீடு சட்டம் 1985 சட்டப்பிரிவு (5)-ன்படி சட்டத்தை மீறிய செயலாகும். இது கைத்தறி ரக ஒதுக்கீடு சட்டம் பிரிவு 10(ஏ)- ன்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.
கைத்தறிக்கென ஒதுக்கப்பட்ட இந்த ரகங்கள் விசைத்தறிகளில் உற்பத்தி செய்யப்படுகின்றதா என்பது குறித்து அமலாக்கப்பிரிவு அலுவலர்கள் விசைத்தறி கூடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து வருகின்றனர்.
கைத்தறிக்கென ஒதுக்கப்பட்ட ரகங்கள் விசைத்தறிகளில் உற்பத்தி செய்யப்படுவது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட விசைத்தறியாளர் மீது காவல் துறை மூலம் சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு நீதிமன்றத்தின் மூலம் அதிகபட்சமாக 6 மாதகால சிறை தண்டனையோ அல்லது அதிகபட்சமாக விசைத்தறி ஒன்று ரூ.5ஆயிரம் /- வரை அபராதமோ அல்லது இரண்டும் சேர்ந்தோ தண்டனையாக வழங்கப்படும்
கைத்தறிக்கென ஒதுக்கப்பட்ட 11 வகை ரகங்கள் குறித்து விளக்கம் பெற சென்னை குறளகத்தில் இயங்கி வரும் கைத்தறி துணை இயக்குநர் அமலாக்க பிரிவு - அலுவலகத்ததை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
- ரூ.3,000 பணத்தை எடுத்து சென்றுவிட்டனர்
- போலீசார் விசாரணை
காவேரிப்பாக்கம்:
பாணாவரம் அருகே உள்ள கீழ்வீராணம் அடுத்த சூரைகுளம் ரோட்டு தெருவை சோ்ந்தவா் சரோஜா (75). இவர்களுக்கு 2 பெண்பிள்ளைகள். இருவருக்கும் திருமணம் முடித்து வெவ்வேறு இடங்களில் குடும்பத்தி னருடன் வசித்து வருகின்றனா்.
இந்நிலையில் கடந்த 6 மாதத்திற்க்கு முன் சரோஜாவின் கணவா் இறந்துவிட்டார். சரோஜா மட்டும் தனியாக வசித்து வருகின்றாா்.
இந்நிலையில் தனியாக இருப்பதால் அதே பகுதியில் உள்ள உறவினா் வீட்டுக்கு நேற்று இரவு தூங்க சென்றுள்ளாா்.
நள்ளிரவில் வீடு புகுந்த திருட்டு கும்பல் பீரோவில் இருந்த 1½ பவுன் தங்க நகை, ரூ.3,000 பணத்தை கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.
இதுகுறித்து பாணாவரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மகளிர்களுக்கு உரிமைத் தொகை திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது
- அமைச்சர் தகவல்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை அடுத்த நவ்லாக் ஊராட்சியில் உள்ள சிப்காட், வ.உ.சி நகர், திருவள்ளுவர் நகர், புளியங்கண்ணு ஆகிய இடங்களில் எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதி, மாவட்ட ஊராட்சி நிதி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம்,ஒன்றிய பொது நிதி, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் ஆகிய நிதிகளிலிருந்து மொத்தம் ரூ.97 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பில் 7 வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ள ப்பட்டுள்ளது.
இதன்படி கட்டி முடிக்கப்பட்டுள்ள நியாய விலைக் கடை கட்டிடங்கள், பள்ளி வகுப்பறை கட்டிடங்கள், காரிய மேடை, அங்கன்வாடி மைய கட்டிடம், நெற்களம், நாடக மேடை ஆகியவற்றிற்கான திறப்பு விழா நேற்று மாலை நடைபெற்றது.
விழா நிகழ்ச்சிகளுக்கு மாவட்ட கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி கலந்து கொண்டு புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார்.
அவர் பேசியதாவது:-
தமிழ்நாடு முதல்அமைச்சர் ஆட்சிப் பொறுப்பேற்று கிட்டத்தட்ட இரண்டே கால் ஆண்டுகளில் பல்வேறு துறைகளில் புதுமையான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதி ஆட்சிப் பொறுப்பேற்கும் பொழுதெல்லாம் மக்களை கேட்காமலேயே மக்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்துவார்.
அதே வழியில் நமது முதல் அமைச்சரும் மக்களைத் தேடி மருத்துவம், நான் முதல்வன், புதுமைப் பெண், காலை உணவு, இன்னுயிர் காப்போம், நம்மைக் காக்கும் 48 போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளதால் மகளிர்கள், பொதுமக்கள், குழந்தைகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பயனடைந்து வருகின்றனர்.
செப்டம்பர் முதல் மகளிர்களுக்கு உரிமைத் தொகை மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
இந்த நவ்லாக் ஊராட்சியில் கடந்த இரண்டரை ஆண்டுகளில் மட்டும் ரூ.11 கோடி மதிப்பில் வளர்ச்சி திட்டப்பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை பொதுமக்கள் ஒற்றுமையுடன் செயல்பட்டு பயன்பெற வேண்டும் .
இவ்வாறு அமைச்சர் ஆர்.காந்தி பேசினார்.
இதில் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி,ஒன்றியக் குழு தலைவர் வெங்கட்ரமணன், துணைத் தலைவர் இராதாகிருஷ்ணன், மாவட்ட கவுன்சிலர் செல்வம், ஒன்றிய குழு உறுப்பினர்கள் பக்தவச்சலம், கோமதி விஜயகுமார், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் தியாகராஜன், வாலாஜா கிழக்கு ஒன்றிய செயலாளர் சண்முகம், தலைமை செயற்குழு உறுப்பினர் சுந்தரம், நவ்லாக் ஊராட்சி மன்றத் தலைவர் சரஸ்வதி குமார், நரசிங்கபுரம் ஊராட்சி மன்ற தலைவர் மனோகரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவராமன், சிவப்பிரகாசம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- போலீஸ் சூப்பிரண்டு வழங்கினார்
- குற்ற ஆய்வு கூட்டம் நடந்தது
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் குற்ற ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி தலைமை தாங்கி பேசினார்.
கூட்டத்தில் கடந்த ஜூலை மாதத்தில் சிறப்பாக பணியாற்றிய போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சாலமன் ராஜா,காண்டீபன், பாரதி, சப் இன்ஸ்பெக்டர்கள் மகாராஜன், சீனிவாசன், தினேஷ் ரகு, சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் லோகநாதன்,சுப்பிரமணி, மதிவாணன்,சதாசிவம், ஜான்சி, போலீஸ் ஏட்டுகள் மாறன், அப்துல் முஜீர், மீனா, ஜானகி தேவி போலீசார் கோபிகிருஷ்ணா, வெங்கடேசன், தாமோதரன், அமித் பாஷா திவாகர் ஆகியோரை பாராட்டி ஊக்குவிக்கும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.
இதில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விஸ்வேசுவரய்யா, அரக்கோணம் உதவி சூப்பிரண்டு யாதவ் கிரிஷ் அசோக், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் பிரபு, ரவிச்சந்திரன், ராஜா சுந்தர் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
- குடும்ப தகராறில் விபரீதம்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
காவேரிப்பாக்கம்:
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த கீழ்வெண்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகவேல். இவரது மனைவி மாலதி (வயது 43). ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வந்தார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.
கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவத்தன்று மீண்டும் இவர்களுக்கு தகராறு ஏற்பட்டது.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மாலதி நேற்று அதே பகுதியில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அப்பகுதிமக்கள் நெமிலி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மாலதி உடலை மீட்டு பிரேத பரிசோ தனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக நெமிலி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






