என் மலர்
ராணிப்பேட்டை
- குடும்ப தகராறு
- போலீசார் விசாரணை
ராணிப்பேட்டை:
திருச்சி மாவட்டம், டால்மியாபுரத்தை சேர்ந்தவர் தன்ராஜ் (வயது 53) இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வேலைக்காக வந்து ராணிப்பேட்டை அடுத்த நரசிங்கபுரத்தில் சர்ச் அருகில் உள்ள குடியிருப்பில் தங்கி வசித்து வந்தார்.
தன்ராஜ் சிப்காட்டில் உள்ள தனியார் தொழிற்சாலையில் காவலாளியாக வேலை செய்தார். நேற்று முன்தினம் தன்ராஜ் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த அவர் வீட்டை விட்டு வெளியேறி அக்ராவரம் அருகே மூடப்பட்டிருந்த தொழிற்சாலைக்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதை பார்த்த அப்பகுதியினர் சிப்காட் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் தன்ராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- டிரைவர் சிறு காயத்துடன் உயிர் தப்பினார்
- போக்குவரத்து பாதிக்கப்பட்டது
காவேரிப்பாக்கம்:
சித்தூரில் இருந்து மோட்டார் உதிரி பாகங்களை ஏற்றிக்கொண்டு ஸ்ரீ பெரம்பத்தூருக்கு இன்று காலை தனியார் கம்பெனி கன்டெய்னர் லாரி சென்று கொண்டிருந்தது.
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் சென்னை- பெங்களூர் நெடுஞ்சாலையில் வரும்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தடுப்பு சுவர் மீது மோதி கவிழ்ந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு ஹைவே பெட்ரோல் ஊழியர்கள் வந்தனர். பின்னர் 2 கிரேன் வரவழைக்கப்பட்டு சாலையில் கவிழ்ந்து கிடந்த கன்டெய்னரை அப்புறப்படுத்தினர்.
இதில் டிரைவர் சிறு காயத்துடன் உயிர் தப்பினார். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- ஒன்றிய அளவில் மண்டல அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்
- கலெக்டர் உத்தரவு
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் வருகிற 15-ந் தேதி சுதந்திர தினத்தன்று 288 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என கலெக்டர் உத்தவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது -
ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள 288 கிராம ஊராட்சிகளிலும் சுதந்திர தினத்தன்று கிராமசபைக் கூட்டங்கள் நடத்த வேண்டும்.
கிராம சபைக்கூட்டங்களில், கிராம ஊராட்சி நிர்வாகம், பொதுநிதி செலவினம், ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, சுத்தமான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்து விவாதித்தல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், பிரதம மந்திரி அரசுக் குடியிருப்புத் திட்டம்,
அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு, பிரதம மந்திரி கிராம சாலை திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்),ஜல் ஜீவன் இயக்கம்,வறுமை குறைப்புத் திட்டம், மாற்றுத்திறனாளி களுக்கான கணக்கெடுப்பு உரிமைகள் திட்டம் மற்றும் இதர பொருட்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
மேற்படி கிராம சபைக்கூட்டங்களில் தாசில்தார்கள் பார்வையாளர்களாக கலந்து கொள்ள வேண்டும். மேலும் கிராம சபைக்கூட்டங்கள் நடைபெறுவதை கண்காணிக்க ஒன்றிய அளவில் மண்டல அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- சாமிகளை டிராக்டர் வாகனத்தில் கொக்கி போட்டு ஊர்வலமாக இழுத்து வந்தனர்
- பக்தர்கள் அந்தரத்தில் பறந்த நிலையில் அம்மனுக்கு மாலை அணிவித்தனர்
கலவை:
ராணிப்பேட்டை மாவட்டம்,கலவை அருகே உள்ள மாம்பாக்கம் கிராமத்தில் சுமார் 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த எட்டியம்மன் கோவில் உள்ளது.
இங்கு ஆடிமாதத்தை முன்னிட்டு எட்டியம்மனுக்கு திருவிழா நடைபெற்றது.முன்னதாக காலையில் ஊர் பொதுமக்கள் அனைவரும் பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்று அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்தனர்.
அதனை தொடர்ந்து தங்களது நிலத்தில் விளைந்த தானியங்களை கொண்டு அம்மனுக்கு பொங்கல் வைத்தும்,பழங்களை படையலிட்டும் கால்நடைகள் நோய் நோடியின்றி வாழவும், விவசாயம் செழிக்கவும், உலக நன்மைக்காகவும், தொற்று நோய்கள் வராமல் தடுக்கவும் எட்டியம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.
பின்னர் மாலை போட்டு விரதம் இருந்த பக்தர்கள் பல்வேறு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட எட்டியம்மன், ரேணுகாம்பாள் ஆகிய சாமிகளை டிராக்டர் வாகனத்தில் கொக்கி போட்டு ஊர்வலமாக இழுத்து வந்தனர்.
அப்போது பூங்கரகம், தீ சட்டி, அலகு குத்தி கொண்டு மேளதாளம் முழங்க ஊர்வலமாக சென்றனர்.
எட்டியம்மனுக்கு மாலை போட்ட பக்தர்கள் அந்தரத்தில் பறந்த நிலையில் மாலை அணிவித்து நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.
திருவிழாவில் மாம்பாக்கத்தை சுற்றியுள்ள ஆரூர், பொன்னமங்கலம், சஞ்சீவிபுரம், சொரையூர், மேல்பதுப்பாக்கம், பென்னகர், அக்கூர், குப்படிசாத்தம் என பல்வேறு கிராமங்களில் இருந்து 1000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- ரெயில் நிலையத்தில் போலீசார் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.
- போலீசார் மெத்தனமாக செயல்படுவது பயணிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
அரக்கோணம்:
சென்னையில் இருந்து அரக்கோணத்திற்கு நேற்று மின்சார ரெயில் சென்று கொண்டிருந்தது.
அரக்கோணம் அருகே ரெயில் வந்து கொண்டிருந்தபோது, போதையில் இருந்த வாலிபர் ஒருவர் பெண்களிடம் சில்மிஷம் செய்தார். பெண்கள் அவரை எச்சரித்தனர்.
இருப்பினும் போதை வாலிபர் பெண்களின் மீது கை வைத்தும், உரசியபடி தொடர்ந்து சில்மிஷத்தில் ஈடுபட்டார். இதனை தாங்க முடியாத பெண்கள் அருவெறுப்போடு முகம் சுளித்தனர்.
இதனை பார்த்த கல்லூரி மாணவர்கள், போதை வாலிபரை தட்டி கேட்டனர். அப்போது மாணவர்களுக்கும், போதை வாலிபருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த கல்லூரி மாணவர்கள், போதை வாலிபரை அடித்து உதைத்தனர். அரக்கோணம் ரெயில் நிலையம் வந்தடைந்ததும் கல்லூரி மாணவர்கள், போதை வாலிபரை அரக்கோணம் ரெயில்வே போலீசாரிடம் நிலையத்திற்கு ஒப்படைக்க பிடித்து வந்தனர்.
ரெயில் நிலையத்தில் போலீசார் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. சுமார் ஒரு மணி நேரம் போதை வாலிபருடன், கல்லூரி மாணவர்கள் காத்திருந்தனர். ஆனால் போலீசார் யாரும் வரவில்லை. இதனால் அங்கு மேலும் பதட்டம் அதிகரித்தது.
இதனையடுத்து கல்லூரி மாணவர்கள் போதை வாலிபரை எச்சரிக்கை செய்து அரக்கோணத்திலேயே விட்டு விட்டு ரெயிலில் ஏறி சென்றனர்.
இது போன்ற சம்பவங்கள் அரக்கோணம் ரெயில் நிலையத்தில் அடிக்கடி நடப்பது வாடிக்கையாகிவிட்டது. எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்த அரக்கோணம் ரெயில் நிலையத்தில், ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் சரிவர ரோந்து பணியில் ஈடுபடுவதில்லை. அடிதடி, திருட்டு போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வரும் நிலையில், ரோந்து பணியில் இல்லாமல் ரெயில்வே போலீசார் அலட்சியமாக செயல்படுகின்றனர்.
அங்கு நடக்கும் அசம்பாவிதங்களையும் அவர்கள் கண்டு கொள்வதில்லை என்று குற்றச்சாட்டுகளை பயணிகள் முன்வைக்கின்றனர். ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் சரிவர பணி செய்யாமல், பிளாட்பாரத்தில் உள்ள இருக்கைகளில் ஆங்காங்கே அமர்ந்து செல்போன் பேசுவது, வீடியோ பார்ப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு மெத்தன போக்கை கடைபிடித்து வருகின்றனர்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு அரக்கோணம் ரெயில் நிலையத்தில் வாலிபர் ஒருவர் ஓட ஓட விரட்டி கொலை செய்த சம்பவம் நிகழ்ந்தது. இருப்பினும் போலீசார் மெத்தனமாக செயல்படுவது பயணிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
- ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
- விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக வருகிற 12-ந்தேதி சனிக்கிழமை பள்ளி, கல்லூரிகள் இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் பிரசித்தி பெற்ற முருகன் கோவில்களில் ஆடிக்கிருத்திகை திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும்.
அந்த வகையில் ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தினகிரியில் உள்ள முருகன் கோவிலுக்கு அதிகளவில் மக்கள் செல்வார்கள் என்பதால், அம்மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக வருகிற 12-ந்தேதி சனிக்கிழமை பள்ளி, கல்லூரிகள் இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்தார்
- போலீசார் விசாரணை
கலவை:
வேலூர் முள்ளிப்பாளையம் திடீர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் இளமதி மகன் கோகுல்நாத் (வயது 17).
வேலூர் கஸ்பாவை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் சுதாகர் (18). எலக்ட்ரீஷியன் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் 2 பேரும் ஆற்காடு அருகே கட்டப்பட்டு வரும் திருமண மண்டபத்தில் நேற்று எலக்ட்ரீசியன் வேலை செய்துள்ளனர்.
பின்னர் வேலை முடிந்து மாலை 3 மணியளவில் ஆற்காட்டில் இருந்து கண்ணமங்கலம் சாலை வழியாக வேலூர் நோக்கிச் சென்றனர். பைக்கை கோகுல்நாத் ஓட்டியுள்ளார். ஆற்காடு- கண்ணமங்கலம் சாலையில் திமிரி அடுத்த கரடிமலை வளைவில் சென்றபோது பைக் நிலைதடுமாறி கீழே விழுந்தது.
இதில் தலையில் பலத்த காயம் அடைந்த கோகுல்நாத் சம்பவ இடத்திலேயே பலியானார். சுதாகர் படுகாயம் அடைந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த திமிரி இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி, சப்-இன்ஸ்பெக்டர் கோபிநாத், முதன்மை காவலர் சிலம்பரசன் மற்றும் போலீசார் விரைந்து சென்று படுகாயம் அடைந்த சுதாகரை மீட்டு ஆற்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கோகுல்நாத்தின் சடலத்தை மீட்டு பிரேதபரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
- பின்னோக்கி வந்து வாலிபர் மீது ஏறியது
காவேரிப்பாக்கம்:
காவேரிப்பாக்கம் அடுத்த பாணாவரம் பகுதியில் சென்னை- பெங்களூர் அதிவிரைவு சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இப்பணிகளில் வட மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான கூலி தொழிலாளிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று வழக்கம் போல் விரைவு சாலை அமைக்கும் பணிகளில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். இதில் ரோடு ரோலர் மெக்கானிக்காக பணியாற்றி வந்த மத்தியபிரதேச மாநிலம், மொரனா மாவட்டத்தை சேர்ந்த ரஞ்சித் (வயது 34). ரோடு ரோலர்களுக்கு ஆயில் கிரீஸ் அடிக்கும் பணிகளை மேற்கொண்டார்.
அப்போது எதிர்பாராத விதமாக ரோடு ரோலர் ஒன்று பின்னோக்கி வந்து ரஞ்சித் மீது ஏறியது.
இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு ராணிப்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இந்நிலையில் அங்கு அவர் சிகிக்சை பலனின்றி நேற்று மாலை இறந்தார். இதுகுறித்து பாணாவரம் போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- போலீசார் விரைந்தனர்
- 4 தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்
அரக்கோணம்:
சென்னை ஆழ்வார்பேட்டையை சேர்ந்தவர் பிராங்கிளின் (வயது 25). இவரது பெரியம்மா வீடு அரக்கோணம் ரெயில் நிலையம் அருகே உள்ள ஏ.வி.எம். சர்ச் பகுதியில் உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பிராங்கிளின் அவரது பெரியம்மா வீட்டுக்கு வந்திருந்தார். அரக்கோணம் ரெயில் நிலையத்தில் பழைய 8-வது பிளாட்பாரம் உள்ளது.
செங்கல்பட்டு வழியாக செல்லும் ரெயில்கள் நிற்கும் இந்த பிளாட்பாரம் தற்போது பயன்படுத்தப்படாமல் உள்ளது.
இந்த பிளாட்பாரத்தின் அருகே நேற்று இரவு பிராங்கிளின் நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் பிராங்கிளினை திடீரென சரமாரியாக வெட்டினர். அவர்களிடம் இருந்து தப்பி ஓடினார்.
கும்பல் ஓட ஓட விரட்டி கத்தியால் சரமாரியாக வெட்டினர். உடலில் பலத்த காயம் ஏற்பட்டதால் பிராங்கிளின் சரிந்து விழுந்தார். ஆஸ்பத்தரியில் சேர்க்கபட்ட அவர் இறந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த ராணிப்பேட்டை போலீஸ் சூப்பிரண்டு கிரண் சுருதி, அரக்கோணம் ஏ.எஸ்.பி. அசோக் கிரீஸ் யாதவ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
மேலும், குற்றவாளிகளை பிடிக்க இன்ஸ்பெக்டர்கள் பாரதி, விநாயகமூர்த்தி, பார்த்தசாரதி, சப்-இன்ஸ் பெக்டர் நாராயணசாமி ஆகியோர் தலைமையில் 4 தனிப்படை அமைத்து எஸ்.பி. உத்தரவிட்டார்.
இதையடுத்து, தனிப்படை போலீசார் சம்பவம் நடந்த பகுதி, ரெயில் நிலையம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட் சிகளை ஆய்வு செய்தனர்.
அதில் பல்வேறு முக்கிய தடையங்கள் கிடைத்து ள்ளது. குற்றவாளிகள் அங்க அடையாளங்கள் மற்றும் அவர்கள் வந்த பாதையின் விவரங்களை சேகரித்து வருகின்றனர்.
பிராங்கிளினுக்கும் சென்னையை சேர்ந்த சில பேருக்கும் முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக அவர் தனது பெரியம்மா வீட்டில் தங்கி இருந்தார்.
இதனை நோட்டமிட்ட சென்னை கும்பல் திட்டமிட்டு கொலை செய்திருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ளது. பிராங்கிளின் எதிரிகள் குறித்த விவரங்களை சேகரிக்க தனிப்படை போலீசார் சென்னை விரைந்துள்ளனர்.
குற்றவாளிகளை நெருங்கி விட்டதாகவும், விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் தெரிவித்தனர்.
- விசைத்தறியால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக புகார்
- தேசிய கைத்தறி தினத்தையொட்டி நடந்தது
கலவை:
ராணிப்பேட்டை மாவட்டம்,கலவை அடுத்த வாழைப்பந்தல் கிராமத்தில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளர்கள் உள்ளனர்.
இவர்கள் கைத்தறிக்காக ஒதுக்கப்பட்ட 11 ரகங்களை விசைத்தறியில் நெய்வதால், தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே விசைத்தறியில் நெய்வதை தடைசெய்யவேண்டும், கைத்தறிச்சட்டம் 1985-ஐ அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தேசிய கைத்தறி தினத்தையொட்டி, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நெசவாளர்கள் தங்கள் வீடுகளில் கருப்புக் கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- திருவண்ணாமலை இல்லத்தில் ஒப்படைப்பு
- கலெக்டர் தகவல்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டையில் சந்தை மைதானத்தின் அருகே உள்ள முதியோர் ஆதரவற்றோர் இல்லத்தில் கடந்த 2-ந் தேதி ஆதரவற்ற நிலையில் 1 வயது மதிக்கத்தக்க ஆண் குழந்தை மீட்கப்பட்டது.
அந்த குழந்தை ராணிப்பேட்டை குழந்தைகள் நலக்குழுமத்தின் மூலம் திருவண்ணாமலை, அடி அண்ணாமலை கிராமத்தில் உள்ள தத்து நிறுவனத்திடம் தற்காலிக பராமரிப்பிற்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த குழந்தையை உரிமம் கோரும் பெற்றோர்கள் உரிய ஆதாரங்களுடன் அறிவிப்பு வழங்கப்பட்ட 15 நாட்களுக்குள் ராணிப்பேட்டை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், நன்னடத்தை அலுவலர், குழந்தைகள் நலக்குழுமம் ராணிப்பேட்டை என்ற முகவரியில் அணுகுமாறு தெரிவிக்கப்படுகிறது.
மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் வளர்மதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
- படுகாயம் அடைந்த சுதாகரை அங்கிருந்தவர்கள் மீட்டனர்
- போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை
ஆற்காடு:
வேலூர் முள்ளிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கோகுல் நாத் (வயது 18). இவர் ஆற்காடு அருகே உள்ள தாஜ் புரா பகுதியில் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வந்துள்ளார். இவரது நண்பர் வேலூர் கஸ்பா பகுதியைச் சேர்ந்த சுதாகர்.
இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு ஆற்காட்டில் இருந்து வேலூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர்.
ஆற்காடு அருகே உள்ள கரடிமலை பகுதியில் சென்றபோது மோட்டார் சைக்கிள் நிலைத்தடுமாறி சாலையின் ஓரம் இருந்தமைல் கல் மீது மோதியுள்ளது. இதில் தூக்கி வீசப்பட்ட கோகுல்நாத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த சுதாகரை அங்கிருந்தவர்கள் மீட்டு 'வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்த புகாரின் பேரில் திமிரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






