என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    மின்சார ரெயிலில் பெண்களிடம் வாலிபர் சில்மிஷம்- கல்லூரி மாணவர்கள் அடித்து உதைத்தனர்
    X

    மின்சார ரெயிலில் பெண்களிடம் வாலிபர் சில்மிஷம்- கல்லூரி மாணவர்கள் அடித்து உதைத்தனர்

    • ரெயில் நிலையத்தில் போலீசார் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.
    • போலீசார் மெத்தனமாக செயல்படுவது பயணிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

    அரக்கோணம்:

    சென்னையில் இருந்து அரக்கோணத்திற்கு நேற்று மின்சார ரெயில் சென்று கொண்டிருந்தது.

    அரக்கோணம் அருகே ரெயில் வந்து கொண்டிருந்தபோது, போதையில் இருந்த வாலிபர் ஒருவர் பெண்களிடம் சில்மிஷம் செய்தார். பெண்கள் அவரை எச்சரித்தனர்.

    இருப்பினும் போதை வாலிபர் பெண்களின் மீது கை வைத்தும், உரசியபடி தொடர்ந்து சில்மிஷத்தில் ஈடுபட்டார். இதனை தாங்க முடியாத பெண்கள் அருவெறுப்போடு முகம் சுளித்தனர்.

    இதனை பார்த்த கல்லூரி மாணவர்கள், போதை வாலிபரை தட்டி கேட்டனர். அப்போது மாணவர்களுக்கும், போதை வாலிபருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரமடைந்த கல்லூரி மாணவர்கள், போதை வாலிபரை அடித்து உதைத்தனர். அரக்கோணம் ரெயில் நிலையம் வந்தடைந்ததும் கல்லூரி மாணவர்கள், போதை வாலிபரை அரக்கோணம் ரெயில்வே போலீசாரிடம் நிலையத்திற்கு ஒப்படைக்க பிடித்து வந்தனர்.

    ரெயில் நிலையத்தில் போலீசார் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. சுமார் ஒரு மணி நேரம் போதை வாலிபருடன், கல்லூரி மாணவர்கள் காத்திருந்தனர். ஆனால் போலீசார் யாரும் வரவில்லை. இதனால் அங்கு மேலும் பதட்டம் அதிகரித்தது.

    இதனையடுத்து கல்லூரி மாணவர்கள் போதை வாலிபரை எச்சரிக்கை செய்து அரக்கோணத்திலேயே விட்டு விட்டு ரெயிலில் ஏறி சென்றனர்.

    இது போன்ற சம்பவங்கள் அரக்கோணம் ரெயில் நிலையத்தில் அடிக்கடி நடப்பது வாடிக்கையாகிவிட்டது. எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்த அரக்கோணம் ரெயில் நிலையத்தில், ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் சரிவர ரோந்து பணியில் ஈடுபடுவதில்லை. அடிதடி, திருட்டு போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வரும் நிலையில், ரோந்து பணியில் இல்லாமல் ரெயில்வே போலீசார் அலட்சியமாக செயல்படுகின்றனர்.

    அங்கு நடக்கும் அசம்பாவிதங்களையும் அவர்கள் கண்டு கொள்வதில்லை என்று குற்றச்சாட்டுகளை பயணிகள் முன்வைக்கின்றனர். ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் சரிவர பணி செய்யாமல், பிளாட்பாரத்தில் உள்ள இருக்கைகளில் ஆங்காங்கே அமர்ந்து செல்போன் பேசுவது, வீடியோ பார்ப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு மெத்தன போக்கை கடைபிடித்து வருகின்றனர்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு அரக்கோணம் ரெயில் நிலையத்தில் வாலிபர் ஒருவர் ஓட ஓட விரட்டி கொலை செய்த சம்பவம் நிகழ்ந்தது. இருப்பினும் போலீசார் மெத்தனமாக செயல்படுவது பயணிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×