என் மலர்
ராமநாதபுரம்
- சூறாவளி காற்றால் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த படகுகள் ஒன்றோடு ஒன்று பயங்கரமாக மோதிக்கொண்டன.
- விண்ணரசு, ராஜூவ், கென்னடி, கிருபை, சவரிமுத்து, ஜோசுவா ஆகியோரின் படகுகள் பகுதி வாரியாக சேதம் அடைந்தன.
ராமேசுவரம்:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதையடுத்து மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடலோர மாவட்டங்களில் சூறாவளி காற்று வீசுவதால் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது.
ராமேசுவரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த மீனவர்கள் தங்களது விசைப்படகுகளை ராமேசுவரம் துறைமுகத்தில் நேற்று நங்கூரமிட்டு நிறுத்தி இருந்தனர்.
நேற்று மாலை முதல் ராமேசுவரம், பாம்பன், தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று வீசியது. இதன் காரணமாக கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது.
சூறாவளி காற்றால் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த படகுகள் ஒன்றோடு ஒன்று பயங்கரமாக மோதிக்கொண்டன. இதில் விண்ணரசு, ராஜூவ், கென்னடி, கிருபை, சவரிமுத்து, ஜோசுவா ஆகியோரின் படகுகள் பகுதி வாரியாக சேதம் அடைந்தன. இதையடுத்து மற்ற மீனவர்கள் தங்களது படகுகளை பாதுகாப்பான இடத்தில் நிறுத்தினார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட மீனவர்கள் கூறுகையில், சூறாவளி காற்றால் எங்களது படகுகள் சேதமடைந்துள்ளன. இதனை சரி செய்ய அதிக செலவாகும். எனவே தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றனர்.
- பரமக்குடி அருகே மழை நீர் சூழ்ந்த வீடுகளை முருகேசன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.
- மழைச்சேதம் ஏற்பட்டால் அந்த பகுதி மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லுமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
பரமக்குடி
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி, சத்திரக்குடி, கமுதக்குடி, பார்த்திபனூர் உள்பட சுற்றுப்புற பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் காலை வரை கனமழை கொட்டியது.
பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சி அளித்தது. பரமக்குடி அருகே உள்ள கீழப் பார்த்திபனூர், இடையர் குடியிருப்பு, சூடியூர் உட்பட பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கணக்கான வீடுகளை மழைநீர் சூழ்ந்தது. சில வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
அங்கு வசிக்கும் மக்கள் வீடுகளுக்குள் புகுந்த மழைநீரை பாத்திரங்களில் அள்ளி வெளியேற்றினர். வீடுகளை விட்டு வெளியே வராமல் பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கினர்.
இதுகுறித்து பரமக்குடி எம்.எல்.ஏ. முருகேசனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அதன்படி எம்.எல்.ஏ. முருகேசன், தாசில்தார் தமிம்ராஜா ஆகியோர் அந்த பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டு பொது மக்களுக்கு ஆறுதல் கூறினர்.
மேலும் மின் வாரிய அதிகாரிகளை அழைத்து இந்த பகுதியில் ஆபத்து ஏற்படாத வகையில் மின் விநியோகம் செய்யவேண்டும் என எம்.எல்.ஏ. உத்தரவிட்டார். மழைச்சேதம் ஏற்பட்டால் அந்த பகுதி மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லுமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
- பரமக்குடி வார்டுகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை என பகுதி சபை கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
- ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகராட்சியில் உள்ள 36 வார்டுகளிலும் பகுதி சபை கூட்டம் நடந்தது.
பரமக்குடி
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகராட்சியில் உள்ள 36 வார்டுகளிலும் பகுதி சபை கூட்டம் நடந்தது. 24-வது வார்டில் நகர மன்ற தலைவர் சேது கருணாநிதி தலைமையில் கூட்டம் நடந்தது. இதில் பரமக்குடி எம்.எல்.ஏ. முருகேசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். 31-வது வார்டில் நகர் மன்ற துணைத் தலைவர் குணசேகரன் தலைமையில் பகுதி சபை கூட்டம் நடந்தது.
28-வது வார்டில் கவுன்சிலர் தனலட்சுமி ராஜீ, 33-வது வார்டில் நகரமன்ற துணை தலைவர் குணசேகரன், 13-வது வார்டில் கவுன்சிலர் அப்துல் மாலிக் தலைமையில் பகுதி சபை கூட்டம் நடந்தது. வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தொற்று நோய் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும், தினமும் தெருக்களை சுத்தம் செய்து, பிளீச்சிங் பவுடர் தெளிக்க வேண்டும், மின் மோட்டார் பயன்படுத்தி குடிநீர் எடுப்பதை தடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை பொதுமக்கள் முன் வைத்தனர். இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என நகர்மன்ற தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
- ஏர்வாடி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் செய்யது அப்பாஸ் தலைமையில் நடந்தது.
- பிளாஸ்டிக் இல்லாத நகராக மாற்றுவோம் என கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முதுகுளத்தூர்
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி ஊராட்சியில் உள்ளாட்சி தின கிராம சபை கூட்டம் பிச்சை மூப்பன்வலசை கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் செய்யது அப்பாஸ் தலைமையில் நடந்தது.
இதில் ஊராட்சி துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், கடலாடி ஊராட்சி ஒன்றிய அலுவலக பணியாளர், கிராம மக்கள் கலந்துகொண்டனர்.ஏர்வாடி ஊராட்சியில் சிறப்பாக பணிபுரிந்த தூய்மைப் பணியாளர்களுக்கு பாராட்டும், பரிசுகளும் வழங்கப்பட்டன.
ஏர்வாடியை பிளாஸ்டிக் இல்லாத நகரமாக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும், ஏர்வாடி பகுதியில் சிறந்த சேவை செய்த மகளிர் சுயஉதவிக்குழுவினரை பாராட்டுவது, பேரிடர் காலத்தில் விழிப்பு ணர்வுடன் செயல்பட்டு முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஊராட்சி செயலாளர ஜெயராம கிருஷ்ணன் நன்றி கூறினர். ஏர்வாடி ஊராட்சி மன்ற தலைவர் செய்யது அப்பாஸ் கூறுகையில், ஏர்வாடி ஊராட்சியில் 15 கிராமங்கள் உள்ளதால், தூய்மைப் பணியாளர்கள் பற்றாக்குறையால் தூய்மை பணி செய்வதில் மிகுந்த சிரமத்துடன் செய்து வருகிறோம்.
துப்புரவு பணிக்கு டிராக்டர் வாங்க அனுமதி அளிக்க வேண்டும். ஏர்வாடியை பேரூராட்சியாக்க வேண்டும் என முதலமைச்சர் மற்றும் கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளோம். பள்ளி அருகில் அமைந்துள்ள மதுக்கடையையும், மனநல காப்பகம் அருகில் அமைந்த மதுக்கடையையும் மூடிவிட்டு நகருக்கு வெளிப்புறத்தில் அமைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
- பரமக்குடி பகுதியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் முருகேசன் எம்.எல்.ஏ. பங்கேற்றார்.
- செவ்வூர் கிராம ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் சாந்தா சின்னார் தலைமை தாங்கினார்
பரமக்குடி
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி,போகலூர், நயினார் கோவில் ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிராமங்களில் கிராம சபை கூட்டம் நடந்தது. பரமக்குடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட நெல்மடூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் சுகன்யா சதீஷ்குமார் தலைமையில் கிராம சபை கூட்டம் நடந்தது.
பொது மக்களின் கோரிக்கைகள் பெறப்பட்டு அரசின் மூலம் நலத்திட்ட பணிகள் குறித்த கணக்கு வழக்குகள் பொதுமக்களிடம் காண்பிக்கப்பட்டது.இதில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ராமு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலர் பெத்துக்காளை நன்றி கூறினார்.
புட்டிதட்டி ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் சரவணகுமார் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் கோவிந்தராஜ் உள்ளிட்ட ஊராட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலர் ரவீந்திரன் நன்றி கூறினார்.
செவ்வூர் கிராம ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் சாந்தா சின்னார் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் காளீஸ்வரர் உள்ளிட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலர் முருகேசன் நன்றி கூறினார்.
மஞ்சூர் கிராம ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்மணி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் கலைச்செல்வி உள்ளிட்ட வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலர் வடிவேல் நன்றி கூறினார்.
போகலூர் கிராம ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் கலையரசி பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் லலிதா உள்ளிட்ட வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலர் பழனி நன்றி கூறினார்.
அரிய குடிபுத்தூர் கிராம ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் காயத்ரி கார்த்திக் பாண்டியன் தலைமையில் கிராம சபை கூட்டம் நடந்தது. துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி செயலர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பரமக்குடி ஒன்றியம் கலையூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் சுபேகா தலைமையில் நடந்த கிராமசபை கூட்டத்தில், பரமக்குடி எம்.எல்.ஏ. முருகேசன் கலந்து கொண்டு, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
- உச்சிப்புளி போலீஸ் நிலையத்தில் கடந்த 30-ந்தேதி களஞ்சியம் புகாா் கொடுத்தாா்.
- அதன் பேரில் செந்தில்மாரி குடும்பத்தினரை விசாரணைக்கு வருமாறு போலீசார் அழைத்துள்ளனர். ஆனால் அவர்கள் வரவில்லை.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே நாகாச்சி கிராமத்தை சோ்ந்த முனியாண்டி மகன் செந்தில்மாரி(வயது31). இவா் தஞ்சை மாவட்டத்தில் கிராம நிா்வாக அலுவலராக பணியாற்றி வருகிறாா்.
இவருக்கும், ஆக்கடா வலசை கிராமத்தை சோ்ந்த களஞ்சியம் என்பவரின் மகளுக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. பெண்ணின் வீட்டாா் 40 பவுன் தங்க நகைகள், ரூ.2 லட்சம் ரொக்கம் உள்ளிட்ட சீா்வரிசை தருவதாக பேசப்பட்டதாக தெரிகிறது.
இதனிடையே வீட்டு வேலை நடப்பதாக கூறி முன்பணமாக ரூ.1.07 லட்சத்தை செந்தில்மாரி, அவரது உறவினா்கள் காயத்திரி(34), ராணி(35) ஆகியோா் பெற்றதாக கூறப்படுகிறது. நிச்சயித்த படி அவர்களது திருமணம் கடந்த மாதம் 28-ந் தேதி நடந்திருக்க வேண்டும். ஆனால் திருமணத்துக்கு மாப்பிள்ளை செந்தில்மாரி மற்றும் அவரது குடும்பத்தினா் வரவில்லை.
இதுகுறித்து உச்சிப்புளி போலீஸ் நிலையத்தில் கடந்த 30-ந்தேதி களஞ்சியம் புகாா் கொடுத்தாா். அதன் பேரில் செந்தில்மாரி குடும்பத்தினரை விசாரணைக்கு வருமாறு போலீசார் அழைத்துள்ளனர். ஆனால் அவர்கள் வரவில்லை.
இதையடுத்து கிராம நிா்வாக அலுவலா் செந்தில்மாரி, அவரது உறவினா்கள் காயத்திரி, ராணி ஆகியோா் மீது 3 பிரிவுகளில் உச்சிப்புளி சப்-இன்ஸ்பெக்டர் நாகநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.
- ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலத்தில் 10.6 சென்டிமீட்டர் மழை பதிவானது.
- இங்கு நெல் விவசாயம் என்பது மற்ற மாவட்டங்களை விட குறைவு தான்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டத்தை பொருத்த வரை வானம் பார்த்த பூமி என்று தான் சொல்ல வேண்டும். இங்கு நெல் விவசாயம் என்பது மற்ற மாவட்டங்களை விட குறைவு தான். இதனால் ஆண்டு தோறும் வடகிழக்கு பருவமழை சீசனை எதிர்பார்த்து தான் நெல் விவசாயமே நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை சீசன் கடந்த 29-ந்தேதி தொடங்கியது. சீசன் தொடங்குவதற்கு முன்பே ராமநாதபுரம் மாவட்டத்தில் பரவலாக நல்ல மழை பெய்து வந்தது. வடகிழக்கு பருவமழை சீசன் தொடங்கி 5 நாட்களுக்கு மேலாகியும் இதுவரையிலும் ராமநாதபுரம் நகர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் எதிர்பார்த்த அளவு மழை பெய்யாததால் விவசாயிகள் வருணபகவான் கருணை கிடைக்குமா என்ற ஏக்கத்தில் இருந்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று இரவு இடி மின்னலுடன் பலத்த மழை பெய்ததால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மாவட்டத்தில் அதிகபட்சமாக ஆர்.எஸ்.மங்கலத்தில் 10.6 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்ட த்தில் நேற்று இரவு முதல் இன்று காலை 6 மணி வரை பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
கடலாடி- 14.60, வாலிநோக்கம்-29.40 கமுதி- 76.20 பள்ளமோர்க்குளம் - 22 முதுகுளத்தூர்-25 பரமக்குடி -57.80 ஆர்.எஸ்.மங்கலம்-106.80 மண்டபம் -27.70 ராமநாதபுரம்-25.20 பாம்பன்-32.40 ராமேசுவரம்-40.20 தங்கச்சிமடம்-25.40 தீர்த்தாண்டத்தனம் -35 திருவாடானை -29.80 தொண்டி-53.70 வட்டாணம் -38 மாவட்டம் முழுவதும் 639.20 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
விவசாயிகள் மகிழ்ச்சி
தொண்டி பகுதியில் நேற்று இரவு முழுவதும் மழை கொட்டியது. நள்ளிரவு 11 மணிக்கு பெய்யத் தொடங்கிய மழை இடைவிடாமல் தொடர்ந்து பெய்தபடி இருந்தது.
இன்று காலை வரை தொண்டியில் 53.7 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. திருவாடானை பகுதியிலும் நீண்ட நேரம் மழை பெய்தது. இந்த மழை தற்போதைய விவசாயத்திற்கு ஏற்றதாக உள்ளதால் திருவாடானை பகுதியில் 26 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் நெற்பயிர் விவசாயம் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
- ராஜஸ்தான் அறக்கட்டளை சார்பில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமிற்கு அனுவ்ராட் புரஷ்கார் விருது வழங்கப்பட்டது.
- இந்த விருதை அவரது பேரன்கள் பெற்றுக்கொண்டனர்.
ராமேசுவரம்
ராஜஸ்தானைச் சேர்ந்த சுவாமி ஆச்சார்யா துளசி, அனுவ்ராட் என்ற தனியார் சேவை மையத்தை 1949ம் ஆண்டு தொடங்கி நடத்தி வருகிறார். உலக அமைதி, சமநிலை தன்மை, பூமி பாதுகாப்பு, சாதி மத பேதமின்மை உலகம் முழுவதும் வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த அமைப்பை ஜெயின் சமூகத்தார்கள் இணைந்து வழி நடத்தி வருகிறார்கள்.
ஆண்டுதோறும் பொது சேவைகளில் சிறந்து விளங்கும் முக்கிய தலைவர்களை கவுரவிக்கும் விதமாக 200 நபர் கொண்ட குழு உலகம் முழுவதும் உள்ள பல்வேறு தொண்டு நிறுவனம், முக்கிய நபர்களை தேர்வு செய்து அவர்களை கவுரவப்படுத்துகிறது.
இந்த அமைப்பு முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் சேவைகளை கவுரவிக்கும் வகையில் அவருக்கு 2022-ம் ஆண்டிற்கான அனுவ்ராட் புரஷ்கார் விருதை அறிவித்து இருந்தது. இதைத்தொடர்ந்து ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அனுராட் அறக்க ட்டளை அலுவலகத்தில் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் அப்துல் கலாம் அண்ணன் மகன் ஜெயினுலாபுதீன், பேரன்கள் சேக்தாவூது மற்றும் சேக்சலீம் ஆகியோர்கள் கலந்து கொண்டு விருதை பெற்று கொண்டனர்.
- கீழக்கரை நகராட்சியில் கிராம சபை கூட்டம் கண்துடைப்பாக நடந்தது.
- விடுதலை சிறுத்தைகள் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
கீழக்கரை
உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு கீழக்கரை நகராட்சியில் 21 வார்டுகளில் நகர் மன்ற தலைவர் தலைமையில் துணைத்தலைவர் ஹமீது சுல்தான், ஆணையாளர் செல்வராஜ் முன்னிலையில் கிராம சபை கூட்டம் நடந்தது. இதில் ஒவ்வொரு வார்டுக்கும் குறைவான நேரம் ஒதுக்கப்பட்டதால் பொதுமக்கள் குறைகளை தெரிவிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். 3,17,18 ஆகிய வார்டுகளில் சாமியானா பந்தல் அமைக்கப்பட்டு பொதுமக்களின் குறைகள், கோரிக்கைகள் கேட்கப்பட்டது.
பொதுமக்கள் அளித்த மனுக்களை 3-வது வார்டு கவுன்சிலரும், நகர்மன்ற துணைத் தலைவருமான ஹமீது சுல்தான் பெற்றுக் கொண்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இருப்பினும் நகராட்சி தரப்பில் கூட்டம் குறித்த முறையான அறிவிப்பு இல்லாததால் பெரும்பாலான வார்டுகளில் மக்கள் குறைந்த எண்ணிக்கையில் பங்கேற்றனர்.
இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி நகர் தலைவர் பாசித் இலியாஸ் கூறுகையில், இந்த கிராம சபை கூட்டத்தில் சில வார்டுகளில் மட்டுமே மக்களின் குறைகள் கேட்கப்பட்டது. பெரும்பாலான வார்டுகளில் கூட்டம் கண்துடைப்பாக நடத்தப்பட்டு உடனடியாக முடிக்கப்பட்டது, இது மக்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. முதலமைச்சர் அறிவித்த இந்த கூட்டத்தை கீழக்கரையில் முறையாக நடத்தப்படவில்லை. பல கவுன்சிலர்கள் முறையாக பதிலளிக்கவில்லை. நகராட்சி ஆணையளர், துறை அதிகாரிகள் எந்த விளக்கமும் கொடுக்கவில்லை. இது பொதுமக்களுக்கு வருத்தத்தை அளித்துள்ளது என்றார்.
- கனடாவில் நர்சு வேலை வாங்கி தருவதாக மெயில் மூலம் ரூ.1.40 லட்சம் மோசடி நடந்துள்ளது.
- பணத்தை பெற்று கொண்டவர்கள் மீண்டும் சில காரணங்களை குறிப்பிட்டு ரூ.1லட்சத்து 8ஆயிரத்து 517-ஐ அனுப்பி வைக்கும்படி கேட்டனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள சித்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரியதர்ஷினி (வயது23). இவர் நர்சிங் படித்து முடித்து மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வேலை செய்து வருகிறார்.
கடந்த 2022 செப்டம்பர் மாதம் பிரியதர்ஷினி தனியார் வேலைவாய்ப்பு இணையதளத்தில் வேலைக்காக பதிவு செய்து வைத்திருந்தார். இந்த நிலையில் 25.9.2022-ந் தேதி இவரது மெயில் முகவரிக்கு கனடாவில் நர்சு வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்கிறார்கள் என்று குறிப்பிட்டு விவரத்தினை கேட்டு அனுப்பி உள்ளனர்.
அவர்கள் தெரிவித்த விதிமுறைகளை தெரிந்து கொண்டு, கொடுக்கப்பட்ட வங்கி கணக்கு எண்ணுக்கு தனது உறவினரான மதன் என்பவரது வங்கி கணக்கில் இருந்து 2 தவணைகளாக முதலில் ரூ.57 ஆயிரத்து 400 மற்றும் ரூ.82ஆயிரத்து 979 மொத்தம் ரூ.1 லட்சத்து 40ஆயிரத்து 379 அனுப்பினார்.
பணத்தை பெற்று கொண்டவர்கள் மீண்டும் சில காரணங்களை குறிப்பிட்டு ரூ.1லட்சத்து 8ஆயிரத்து 517-ஐ அனுப்பி வைக்கும்படி கேட்டனர். சந்தேகம் அடைந்த பிரியதர்ஷினி இவ்வளவு பணம் தன்னால் அனுப்ப இயலாது, தனக்கு வேலை வேண்டாம் என்று குறிப்பிட்டு அவர்களால் கொடுக்கப்பட்ட திரும்ப பணம் பெறும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வாட்ஸ்ஆப் மற்றும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைத்தார்.
தொடர்ந்து எந்த வித தகவலும் தெரிவிக்க வில்லை. இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பிரியதர்ஷினி இது குறித்து ராமநாதபுரம் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ராமேசுவரத்தில் சூறாவளி காற்று வீசியதால் மீனவர்கள் குடிசைகளுக்குள் கடல் நீர் புகுந்து சேதமடைந்துள்ளன.
- இதனால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ராமேசுவரம்
பாக்ஜல சந்தி, மன்னார் வளைகுடா கடல் பகுதியில் பலத்த சூறாவளி காற்று கடந்த 2 நாட்களாக வீசி வருகிறது. இதனால் ராமேசுவரம், தனுஷ்கோடி, பாம்பன், மண்டபம் ஆகிய பகுதிகளில் வடகடல் மற்றும் தென் கடல் பகுதிகளில் கரையோரங்களில் பலத்த அலையுடன் கூடிய காற்று வீசி வருகின்றன. கடற்கரையோரங்களில் கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது.
இதனால் கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பு வேலிகளை தாண்டி ராட்சத அலைகள் அடித்து வருகிறது. இதன் தாக்கமாக பாம்பன் வடக்கு பகுதியில் கடல் கரையோரங்களில் அமைந்துள்ள மீனவர்களின் குடிசைகளில் கடல் நீர் ஏறி கூரையால் அமைக்கப்பட்ட வேலிகள் சேதமடைந்தன.
குடிசை வீட்டிற்குள்ளும் கடல் நீர் சென்றது. இதனால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
- ராமநாதபுரம் மாவட்ட தாசில்தார்களை பணியிட மாறுதல் செய்து கலெக்டர் உத்தரவிட்டார்.
- பரமக்குடி இந்து அறநிலையத்துறை கோவில் நிலங்கள் தனி தாசில்தார் ராஜகுரு, பரமக்குடி கோட்ட ஆய அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட வருவாய் துறையில் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றும் தாசில்தார்களை பணியிட மாறுதல் செய்து கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் உத்தர விட்டுள்ளார்.
இதன்படி ஆர்.எஸ்.மங்கலம் நில எடுப்பு தனி தாசில்தார் பார்த்த சாரதி பரமக்குடி தாசில்தாராகவும், அங்கு பணியாற்றிய தமீம் ராசா, ராமநாதபுரம் சிவில் சப்ளை தனி தாசில்தாராக பணியிட மாறுதல் செய்யப்பட்டனர்.
ராமநாதபுரம் சிவில் சப்ளை தனி தாசில்தார் தமிழ்செல்வி, திருவா டானை தாசில்தாராகவும், அங்கு பணியாற்றிய செந்தில்வேல் முருகன் கடலாடி சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராகவும் பணியிட மாறுதல் செய்யப்பட்டனர்.
ராமநாதபுரம் டாஸ்மாக் குடோன் மேலாளர் சுரேஷ் குமார், ராமநாதபுரம் தாசில்தாராகவும், இங்கு பணியாற்றிய முரு கேசன், ராமநாதபுரம் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராகவும் பணியிட மாறுதல் செய்யப்பட்டனர்.
ராமநாதபுரம் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ஞானசிரோன் மணி, ஆர்.எஸ்.மங்கலம் தாசில்தாராகவும், இங்கு பணியாற்றிய சேகர், பரமக்குடி நகர நிலவரி திட்ட தாசில்தாராகவும் பணியிட மாறுதல் செய்யப்பட்டனர். முதுகுளத்தூர் ஆதிதிராவிட நலத்துறை தனி தாசில்தார் சேதுராமன், ராமநாதபுரம் டாஸ்மாக் குடோன் மேலாளராகவும் பணியிட மாறுதல் செய்யப்பட்டனர்.
கடலாடி சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் மரகதமேரி, கடலாடி தாசில்தாராகவும், இங்கு பணியாற்றிய முருகவேல் உப்பூர் அனல் மின் திட்ட அலகு 2 நில எடுப்பு தாசில்தாராகவும், இங்கு பணியாற்றிய உமா மகேஸ்வரி, ராமேசுவரம் தாசில்தாராகவும் பணியிட மாறுதல் செய்யப்பட்டனர்.
பரமக்குடி இந்து அறநிலையத்துறை கோவில் நிலங்கள் தனி தாசில்தார் ராஜகுரு, பரமக்குடி கோட்ட ஆய அலுவலராகவும், இங்கு பணியாற்றிய சுகுமாறன், பரமக்குடி இந்து அறநிலையத்துறை கோயில் நிலங்கள் தனி தாசில்தாராகவும் பணியிட மாற்றம் செய்து கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் உத்தரவிட்டுள்ளார்.






