என் மலர்tooltip icon

    ராமநாதபுரம்

    • ராமேசுவரம் பகுதியில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வரும் 5 ஆயிரம் மீனவர்கள் வேலை நிறுத்தத்தால் வருமானத்தை இழந்துள்ளனர்.
    • மீன்பிடி சார்ந்த தொழிலில் ஈடுபடும் 15 ஆயிரம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் மற்றும் பாம்பன் பகுதிகளில் வசிக்கும் மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். 820 விசைப்படகுகள் மூலம் மீனவர்கள் இந்த தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்க செல்லும்போது இலங்கை கடற்படை அத்துமீறி வந்ததாக கைது செய்து வருவது வாடிக்கையாக உள்ளது.

    இந்த நிலையில் கடந்த 5-ந்தேதி 2 படகுகளில் ராமேசுவரத்தைச் சேர்ந்த 15 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் கச்சத்தீவு அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்து மன்னார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    மீனவர்கள் சென்ற விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்து வைத்துள்ளது.

    ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு 6 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றபோது அவர்களையும் இலங்கை கடற்படை சிறைபிடித்துச் சென்றது. தொடர்ந்து ராமேசுவரம் மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்து வருவதால் அச்சத்துடன் மீன்பிடிக்கச் செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

    தற்போது இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ள 29 விசைப்படகுகள் மீட்கப்படாமல் உள்ளது. இதனால் அந்த விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இது தொடர்பாக ராமேசுவரம் மீனவர் சங்கத்தினர் நேற்று ஆலோசனை கூட்டம் நடத்தினர். அதில் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி இன்று (7-ந்தேதி) முதல் வேலை நிறுத்த போராட்டம் நடத்துவது என்றும், நாளை (8-ந் தேதி) தங்கச்சிமடத்தில் ஆர்ப்பாட்டம் செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி இன்று ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரிய விசைப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை. சின்ன விசைப்படகுகள் மட்டும் அனுமதி பெற்று மீன்பிடிக்க சென்று வருகின்றன.

    ராமேசுவரம் பகுதியில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வரும் 5 ஆயிரம் மீனவர்கள் இந்த வேலை நிறுத்தத்தால் வருமானத்தை இழந்துள்ளனர். மேலும் மீன்பிடி சார்ந்த தொழிலில் ஈடுபடும் 15 ஆயிரம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று வேலை நிறுத்தம் காரணமாக ரூ.6 கோடி வரை மீன் வர்த்தகம் பாதிக்கப்படும் என்று மீனவர்கள் தெரிவித்தனர்.

    இந்த போராட்டம் தொடர்பாக பெரிய விசைப்படகு மீனவர் சங்கத்தினர் கூறும்போது, இலங்கை கடற்படை ஏற்படுத்தும் தடை காரணமாக ஆண்டுக்கு 20 நாட்கள் முதல் 30 நாட்கள் வரையில் தான் மீன்பிடிக்க செல்கின்றோம். இதனால் எங்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக மாறியுள்ளது.

    எனவே எங்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் வகையிலும், சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுவிக்கவும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை பெற்றுத்தரவும் மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • முதுகுளத்தூர் பஜாரில் ஆக்கிரமிப்புகள் அகற்றிய அதிகாரியை பொதுமக்கள் பாராட்டினர்.
    • நெடுஞ்சாலைத்துறை மற்றும் பேரூராட்சி இணைந்து தண்டோரா மூலம் நடை பாதை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என அறிவிப்பு செய்யப்பட்டது.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பஜாரில் அடிக்கடி விபத்து ஏற்படுவதை தடுக்க ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

    முதுகுளத்தூர் பஜாரில் ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டத்தில் ரூ.5 கோடியே 42 லட்சம் செலவில் சாலை அகலப்படுததும் பணி 2 மாதங்களாக முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. பொதுமக்களின் நடைபாதைகள் ஆக்கிர மிக்கப்பட்டுள்ள நிலையில் நெடுஞ்சாலைத்துறை மற்றும் பேரூராட்சி இணைந்து தண்டோரா மூலம் நடை பாதை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என அறிவிப்பு செய்யப்பட்டது. அதன் பிறகும் நடை பாதை முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டதால் போலீஸ் உதவியுடன் ஆக்கிர மிப்புகள் அகற்றப்பட்டன.

    இந்த பணியின்போது உதவிகோட்டப் பொறியாளர் பிரேமானந், நெடுஞ்சாலை துறை உதவிப்பொறியாளர் மகேஸ்வரன், பேரூராட்சி செயல் அலுவலர் மாலதி, பேரூராட்சி பணியாளர்கள் ராஜேஷ், குமார், முருகேசன் உள்பட தூய்மைப் பணியாளர்கள் திரளாக கலந்து கொண்டனர். நடைபாதை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதால் அதிகாரிகளை பொதுமக்கள் பாராட்டினர்

    • தேவர் ஜெயந்தி விழாவில் மதுரை விமான நிலைய பெயர் பலகை அகற்றப்பட்டது.
    • போலீஸ் டி.எஸ்.பி. மீது கவர்னர், டி.ஜி.பி.யிடம் முக்குலத்தோர் புலிப்படை கட்சி நிர்வாகி புகார் தெரிவித்தார்.

    பரமக்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் தேவர் ஜெயந்தி விழா நடந்தது. இதையொட்டி நடிகர் கருணாசின் முக்குலத்தோர் புலிப்படை கட்சி சார்பில் அமைக்கப்பட்டிருந்த 'பசும்பொன் முத்துராம லிங்க தேவர் மதுரை விமான நிலையம்' என்ற பிரமாண்ட கட்-அவுட்டின் பெயர் பலகை கடந்த 29-ந் தேதி இரவு கமுதி காவல் துறையினரால் அகற்றப்பட்டது.

    இதை கண்டித்து பசும்பொன்னில் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் நிறுவனரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான நடிகர் கருணாஸ் அறிவித்தார். இதற்கிடையே மீண்டும் பெயர் பலகை பொருத்தப்ப ட்டிருந்தது.

    அதனால் காவல்துறை யினருக்கு நன்றி தெரிவித்து, உண்ணாவிரதத்தை வாபஸ் பெறுவதாக கருணாஸ் அறிவித்தார்.

    இந்த நிலையில் தேவர் ஜெயந்தி விழவையொட்டி பசும்பொன்னில் வைக்கப்பட்டிருந்த மதுரை விமான நிலைய கட்-அவுட்டை சுதந்திர போராட்ட தியாகியும், அனைத்து சமுதாய மக்களா லும் போற்றப்படும் தேசிய தலைவரின் பெயரை கமுதி காவல் துணை கண்காணிப்பாளர், வருவாய்த்துறை அதிகாரி களின் உத்தரவின்றி, தன்னிச்சையாக உள்நோக்க த்துடன் அகற்றி உள்ளார்.

    அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் மாநில செயலாளர் முத்துராமலிங்கம் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, டி.ஜி.பி. சைலேந்திரபாபு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், டி.ஐ.ஜி., மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அகியோருக்கு புகார் மனு அனுப்பி உள்ளார்.

    • கீழக்கரை இஸ்லாமியா பள்ளி சாலை பாதாள பள்ளங்கள் நிறைந்து காணப்படுகிறது.
    • இதனால் மாணவ, மாணவிகள் நடந்து செல்ல முடியாமல் அவதியடைந்தனர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியில் கடந்த மூன்று நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் நகரின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கி மக்கள் நடந்து செல்ல முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர். கீழக்கரை தெற்கு தெரு பள்ளிவாசல் மற்றும் இஸ்லாமியா பள்ளி வழியாக தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் நடந்து செல்கின்றனர்.

    தொழுகைக்காக ஏராளமான மக்கள் பள்ளிவாசல் வந்து செல்கின்றனர்.நூற்றுக்கணக்கான வாகனங்கள் இந்த வழியாக செல்கிறது, இந்த நிலையில் ஜும்மா பள்ளிவாசல் செல்லும் வழியில் உள்ள சாலை பள்ளங்களுடன் சகதி நிறைந்த தண்ணீர் தேங்கியுள்ளதால் மக்கள் நடந்து செல்ல முடியாமல் அவதியடைகின்றனர்.

    கீழக்கரை நகராட்சிக்கு புதிய சாலை அமைக்கும் பணிக்காக அரசு பல்வேறு நிதிகள் ஒதுக்கீடு செய்த நிலையிலும் முக்கியமான சாலை நீண்ட நாட்களாக மோசமான நிலையில் காட்சியளித்து, எவ்வித நடவடிக்கையும் இல்லாமல் இருப்பது இந்த பகுதி மக்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

    சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போர்க்கால நடவடிக்கையில் இந்த பகுதியில் தரமான முறையில் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

      ராமேசுவரம்:

      இலங்கையில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக இதுவரையிலும் தமிழகத்திற்கு 150-க்கும் மேற்பட்டோர் அகதிகளாக வந்துள்ளனர்.

      இந்த நிலையில் தலைமன்னார் பகுதியில் இருந்து ஒரு படகில் குழந்தைகள் உள்பட சிலர் புறப்பட்டு நேற்று முன்தினம் நள்ளிரவு தனுஷ்கோடி எம்.ஆர்.சத்திரம் அருகே உள்ள கடற்கரை பகுதியில் வந்து இறங்கினர். பின்னர் அவர்களை அழைத்து வந்த படகோட்டிகள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.

      இதுகுறித்த தகவல் கிடைத்து ராமேசுவரம் கடலோர போலீசார் விரைந்து சென்று, அங்கு நின்று கொண்டு இருந்த 2 குழந்தைகள் உள்பட 10 அகதிகளையும் வாகனத்தில் ஏற்றி மண்டபம் கடலோர காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

      விசாரணையில் அவர்கள், மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும், 3 குடும்பங்களை சேர்ந்த 3 ஆண்கள், 5 பெண்கள், 2 குழந்தைகள் எனவும் தெரிய வந்தது.

      மேலும் விசாரணையில் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் மக்களுக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் பல மடங்கு உயர்ந்துவிட்டதாகவும், எனவே தமிழகத்தில் குழந்தைகளுடன் வாழ்வதற்காக இங்கு தப்பி வந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

      மேலும் அவர்கள் கூறியபோது, இலங்கையில் தற்போதும் ஒரு கிலோ சீனி ரூ.200, அரிசி ரூ.450, பால் பவுடர் ரூ.200, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.1,200, ஒரு லிட்டர் மண்எண்ணெய் மற்றும் டீசல் ரூ.500, காய்கறிகள் ஒரு கிலோ ரூ.400 என விலைவாசி உள்ளதாக தெரிவித்தனர். விசாரணைக்கு, பின்னர் 10 அகதிகளும் மண்டபம் முகாமில் ஒப்படைக்கப்பட்டனர்.

      • ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
      • அவர்களின் 2 விசைப்படகையும் இலங்கை கடற்படை சிறை பிடித்துள்ளது.

      ராமேஸ்வரம்:

      ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்குச் சென்றனர்.

      இந்நிலையில் கச்சத்தீவு- தலைமன்னார் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினரால் 15 ராமேஸ்வரம் மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர்களின் 2 விசைப்படகையும் இலங்கை கடற்படை சிறை பிடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

      எல்லை தாண்டி வந்ததாக கைது செய்யப்பட்ட மீனவர்களை மன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்ற இலங்கை கடற்படையினர், அவர்களிடம் விசாரணை நடத்தியதாக தகவல்கள் வெளியாகின.

      • மத்திய இணை அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
      • அமைச்சர் கபில் மோரே ஷ்வர் பாட்டீல் ராமநாதபுரம் வந்திருந்தார்.

      பனைக்குளம்

      ராமநாதபுரம் மாவட்ட த்தில் மத்திய அரசின் வளர்ச்சித் துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக மத்திய பஞ்சாயத்து ராஜ் இணை அமைச்சர் கபில் மோரே ஷ்வர் பாட்டீல் ராமநாதபுரம் வந்திருந்தார்.

      மத்திய அமைச்சரை வரவேற்கும் வகையில் ராமநாதபுரம் பா.ஜ.க. தலைவர் இ.எம்.டி. கதிரவன் தலைமையில் உயர் நீதிமன்ற வழக்கறிஞரும் பாஜக பிரமுகருமான சண்முகநாதன் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளித்து பட்டணம்காத்தான் ஊராட்சிக்கு உட்பட்ட கலெக்டர் வளாகத்தில் அமைந்துள்ள விருந்தினர் மாளிகைக்கு அழைத்து வந்தனர்.

      அங்கு பாஜக கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஹேமா மாலினி, தேசிய பொதுக்குழு உறுப்பி னர் மற்றும் சிவகங்கை மாவட்ட பார்வை யாளர் சண்முகராஜா, பாஜக மாவட்ட பொதுச் செயலாளர் ஆத்மா கார்த்தி, மாவட்ட துணை தலைவர் விஜய ராணி கருணாநிதி, மாவட்ட செயலாளர் கலை யரசி அசோக், மாவட்ட துணைத் தலைவர் சங்கீதா, தரவு மேலாண்மை பிரிவு மாவட்ட செயலாளர் கலைவாணி, மண்டபம் ஒன்றிய தலைவர் விக்ராத் சந்துரு, மண்டபம் ஒன்றிய செயலாளர் இளசு என்ற இளையராஜா, வெளிநாடு வாழ் தமிழ்மக்கள் பிரிவு மாவட்ட தலைவர் சரண்யன், ராமநாதபுரம் ஒன்றிய செயலாளர் சண்முகநாத சேதுபதி, தங்கச்சிமடம் பேக்கரும்பு சந்திரகுமார் உள்பட மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் பலரும் மத்திய அமைச்சருக்கு மரியாதை செய்து உற்சாக வரவேற்பு அளித்து வரவேற்றனர்.

      • இந்தி திணிப்பை எதிர்த்து தி.மு.க.வினர் துண்டுபிரசுரம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
      • தமிழகத்தில் இந்தி திணிக்கப்படுவதை எதிர்த்து கோஷம் எழுப்பினர்.



      பரமக்குடி நகர் பகுதியில் நகர்மன்ற தலைவர் சேது.கருணாநிதி தலைமையில் இந்தி திணிப்புக்கு எதிராக துண்டு பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது.

      பரமக்குடி

      ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகர் பகுதியில் தி.மு.க. நகர செயலாளர்கள் சேது.கருணாநிதி, ஜீவரத்தினம் ஆகியோர் தலைமையில் 36 வார்டுகளில் இந்தி திணிப்புக்கு எதிராக தி.மு.க. அரசு கொண்டு வந்த தீர்மானங்கள் மற்றும் இந்தி திணிப்பால் தமிழகத்துக்கும் தமிழ் மொழிக்கும் ஏற்படும் தீமைகள் குறித்த துண்டு பிரசுரங்களை பொது மக்களுக்கு விநியோகம் செய்தனர்.

      மேலும் சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் தலைமையில் தெருக்களில் தி.மு.க.வினர் கொடிகளை ஏந்தி தமிழகத்தில் இந்தி திணிக்கப்படுவதை எதிர்த்து கோஷம் எழுப்பினர். இதில் மாவட்ட துணைச் செயலாளர் கருப்பையா, மாவட்ட இலக்கிய அணி செயலாளர் செந்தில் செல்வானந்த் மற்றும் கவுன்சிலர்கள், கட்சியினர் கலந்து கொண்டனர்.

      போகலூர் மேற்கு ஒன்றியம் பொட்டிதட்டி கிராம சாலையில் போக லூர் மேற்கு ஒன்றிய செயலாளர் குணசேகரன் தலைமையில் அவைத் தலைவர் அப்பாஸ் கனி பொதுக்குழு உறுப்பினர் பூமிநாதன், ஒன்றிய துணைச் செயலாளர் முதலூர் ரவி, மஞ்சூர் கனகராஜ், கலைச்செல்வி முன்னிலையில் இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

      இந்த நிகழ்ச்சியில் மாவட்ட உறுப்பினர் தனிக்கொடி, ராமகிருஷ்ணன், கார்த்திக் பாண்டியன், பொட்டிதட்டி ஊராட்சி மன்ற தலைவர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் பங்கேற்று நோட்டீசுகளை பொதுமக்களுக்கு விநியோகம் செய்தார்.

       


      • போகலூர் யூனியன் கூட்டத்தில் பங்கேற்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றுதலைவர் கூறினார்.
      • மேலாளர் ராமநாதன் நன்றி கூறினார்.

      பரமக்குடி

      ராமநாதபுரம் மாவட்டம் போகலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் போகலூர் யூனியன் கூட்டம் தலைவர் சத்யா குணசேகரன் தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் வக்கீல் பூமிநாதன் முன்னிலை வகித்தார். ஆணையாளர் சிவசாமி வரவேற்றார்.

      இதில் துணைத் தலைவர் பூமிநாதன் பேசுகை யில், அரியகுடி, முத்துசெல்லா புரம், அ. புத்தூர், முஸ்லிம் குடியிருப்பு உட்பட பல்வேறு பகுதிகளில் ஒரு வரு டத்திற்கும் மேலாக காவிரி கூட்டுக் குடிநீர் வரவில்லை. இதனால் அந்த பகுதி மக்கள் குடிநீருக்காக சிரமப்பட்டு வருகின்றனர். விசேஷ நிகழ்ச்சிகளுக்கு கூட நாங்கள் ஊர்களுக்குள் நுழைய முடியவில்லை என்றார்.

      அதற்கு பதில் அளித்த காவிரி கூட்டுக் குடிநீர் திட்ட உதவி பொறியாளர், சாலை அமைக்கும் பணியின் போது காவிரி குடிநீர் குழாய் உடைந்துள்ளது. அதை சீரமைப்பதற்காக டெண்டர் விடப்பட்டு முடி யும் நிலையில் உள்ளது. கூடிய விரைவில் சரி செய்யப்படும் என்றார்.

      தலைவர் சத்யா குணசேகரன் பேசுகையில், 15-வது நிதி குழு மூலம் ரூ.49 லட்சம் மதிப்பீட்டில் அத்தியாவசிய பணிகள் நடைபெற உள்ளது. யூனி யன் கூட்டத்திற்கு பள்ளி கல்வித்துறை, மின்வாரிய துறையில் இருந்து அதி காரிகள் வருவது கிடை யாது. பலமுறை வலியுறுத்தியும் அலட்சியமாக உள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டருக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்றார்.

      கவுன்சிலர் காளிதாஸ் பேசுகையில், உரத்தூர் முதல் எஸ்.கொடிக்குளம் செல்லும் சாலை, அனுமனேரி முதல் கோரைக்குளம் செல்லும் சாலை மிகவும் சேதம் அடைந்துள்ளது. இதனால் பள்ளி மாணவர்கள் சிரமப்படுகின்றனர். இருசக்கர வாகன ஓட்டிகளும் அவதிப்படுகின்றனர். ஆகவே அந்த சாலையை சீரமைத்து கொடுக்க வேண்டும் என்றார்.

      இந்த கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் தேன்மொழி, முருகேஸ்வரி, காளிஸ்வரி ஆகியோர் கலந்து கொண்ட னர், மேலாளர் ராமநாதன் நன்றி கூறினார்.

      • தண்ணீர் தேங்கிய பகுதியில் நகர்மன்ற தலைவர் நேரில் ஆய்வு செய்தார்.
      • மொத்த அளவு-235.90, சராசரி-14.74 மி. மீ, மழை பதிவாகியுள்ளது.

      ராமநாதபுரம்

      ராமநாதபுரம் மாவட்ட த்தில் வடகிழக்கு பருவ மழை கடந்த 4 நாட்களாக பெய்து வருகிறது. இந்த நிலையில் மாவட்டத்தின் பல இடங்களில் நேற்று சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால், சாலையில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதியில் குளம் போல தேங்கிய தண்ணீரை வெளியேற்றும் பணியில் நகராட்சிப் பணியாளா்கள் ஈடுபட்டனா்.

      ராமநாதபுரத்தில் 9-வது வார்டு செய்யதுஅம்மாள் பள்ளியின் பின்புறம் பலத்த காற்றுடன் பெய்த கனமழையில் மின்கம்பம் சாய்ந்தது. நகர்மன்ற தலைவர் கார்மேகம் உடனடி நடவடிக்கை மேற்கொண்டனர்.

      இன்று காலை நகர் மன்ற தலைவர் கார்மேகம், துணைத் தலைவர் பிரவீன் தங்கம், ஆணையாளர் (பொறுப்பு) சுரேந்திரன் ஆகியோர் கேணிக்கரை, புதிய பஸ் நிலையம், அண்ணா நகர், பழைய பஸ் நிலையம் ஆகிய பகுதிகளில் மழை தண்ணீர் தேங்கியுள்ளதா என்பதை பார்வையிட்டு உடனடி நடவடிக்கை மேற்கொண்டனர்.

      ராமநாதபுரம் மாவட்ட த்தில் இன்று காலை 6 மணியுடன் முடிவடைந்த நிலையில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

      கடலாடி - 4.80, வாலிநோக்கம் -4.60,கமுதி - 1.50, பள்ளமோர்க்குளம்-5, மண்டபம்- 11, ராமநாதபுரம்- 41.20, பாம்பன்-40.40, ராமேசுவரம்- 77.60, தங்கச்சிமடம்-35.80, திருவாடானை-9.20, தொண்டி- 4.80,

      மொத்த அளவு-235.90, சராசரி-14.74 மி. மீ, மழை பதிவாகியுள்ளது.

      • ராமநாதபுரத்தில் தி.மு.க.வினர் துண்டு பிரசுரம் விநியோகம் செய்தனர்.
      • மாவட்ட செயலாளா் காதா்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார்.

      ராமநாதபுரம்

      ராமநாதபுரத்தில் அரண்மனை அருகே தி.மு.க. சாா்பில் இந்தி திணிப்பு முயற்சியை கண்டித்து பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.

      இந்த நிகழ்ச்சிக்கு நகா் செயலாளா்கள் காா்மேகம், பிரவீன் தங்கம் ஆகியோா் தலைமை தாங்கினர். இதில் மாவட்ட செயலாளா் காதா்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கினாா்.

      இதில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் இன்பா ஏ.என்.ரகு, தலைமை செயற்குழு உறுப்பினா் அகமது தம்பி மற்றும் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

      மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராம லிங்கம் எம்.எல்.ஏ. அறிவு றுத்தலின்படி பாரதி நகர் பஸ் நிறுத்தத்தில் மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர் கே.ஜே. பிரவின் தலைமை யில் கிளை செயலா ளர்கள் உள்ளிட்ட தி.மு.க. நிர்வாகிகள் பொது மக்களிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கினர்.

      • டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1, காவலர் தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வுகள் நடக்கிறது.
      • ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் இந்த வாய்ப்பை தவறாது பயன்படுத்திக் கொள்ளலாம்.

      ராமநாதபுரம்

      ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

      தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு தொகுதி-1 2022 பணி காலி இடங்களுக்குரிய முதல்நிலை தேர்வு 19.11.2022 மற்றும் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் இரண்டாம் நிலை காவலர் தேர்வு 27.11.2022 அன்று தேர்வு நடத்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

      எனவே ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் பயன்பெறும் வகையில் ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய தன்னார்வ பயிலும் வட்டம் மூலமாக இந்த தேர்வுக்காக இலவச 3 முழு மாதிரி தேர்வுகள் நடத்தப்பட உள்ளது.

      டி.என்.பி.எஸ்.சி. குரூப்- 1 மாதிரி தேர்வு 9.11.2022 (புதன்கிழமை), 15.11.2022 (செவ்வாய்கிழமை), 17.11.2022 (வியாழக்கிழமை) ஆகிய நாட்களிலும் தமிழ்நாடு 2-ம் நிலை காவலர் பணியிடத்திற்கான மாதிரி தேர்வு 18.11.2022 (வெள்ளிக்கிழமை), 23.11.2022 (புதன் கிழமை), 24.11.2022 (வியாழக்கிழமை) ஆகிய நாட்களிலும் காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.

      இந்த மாதிரி தேர்வுகளில் கலந்து கொள்ள விருப்பமும், ஆர்வமும் உள்ளவர்கள் 04567-230160 மற்றும் 9487375737 (காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை) ஆகிய எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.

      மாதிரி தேர்வை எழுத வரும்போது தேர்வுக்கு விண்ணப்பித்த விபரம், நுழைவுச் சீட்டு நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை தவறாது கொண்டு வர வேண்டும்.

      ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் இந்த வாய்ப்பை தவறாது பயன்படுத்திக் கொள்ளலாம்.

      இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

      ×